Latest News :

’அக்கா குருவி’ படத்தையும், இளையராஜாவின் இசையையும் பாராட்டிய இயக்குநர் மஜித் மஜிதி
Tuesday April-26 2022

’உயிர்’, ‘மிருகம்’ போன்ற படங்களை இயக்கிய சாமி இயக்கியிருக்கும் படம் ‘அக்கா குருவி’. உலகப்புகழ் பெற்ற ஈரானிய இயக்குநரான மஜித் மஜிதியின் உலகப்புகழ் பெற்ற திரைப்படமான ‘சில்ட்ரென் ஆஃப் ஹெவன்’ (Children of Heaven) படத்தின் தமிழ் ரீமேக்காக உருவாகியிருக்கும் இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார்.

 

இப்படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சி சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது. இதில் இயக்குநரும் நடிகருமான அமீர், பார்த்திபன், நடிகர் ஆதி உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக்கொண்டார்கள்.

 

நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் அமீர், ”இயக்குநர் சாமி அவர்களுக்கும் எனக்கும் தொழில் ரீதியாக பெரிய நட்புறவு என்று எதுவும் கிடையாது. இந்த விழாவிற்கு வருகை தரவேண்டும் என்று கடந்த 5 நாட்களுக்கு முன்னர் அழைத்திருந்தார். அப்போது என்ன படம் இயக்கியுள்ளீர்கள் என்று கேட்டபோது, உயிர், மிருகம் படங்களை இயக்கியுள்ளேன் என்றார். நான் உயிர் படத்தை மட்டும் பார்த்துள்ளேன். மற்ற படங்களை பார்க்கக் கூடிய சூழல் இல்லை. இந்த விழாவிற்கு நான் வந்ததன் காரணம் சாமி என்கின்ற படைப்பாளியை விட சாமி இயக்கியுள்ள படைப்பிற்காக வருவது தான் என்னுடைய முதல் நோக்கம்.

 

’Children of Heaven’ என்ற திரைப்படம், உலகில் இருக்கக்கூடிய அனைத்து சினிமா ரசிகர்களையும் கட்டிப்போட்ட ஒரு திரைப்படம். மஜித் மஜிதி என்ற இயக்குநர் உலகில் இருக்கக்கூடிய அனைத்து சினிமாவையும் தன் காலடியில் கொண்டு வந்து புரட்சி செய்த ஒரு இயக்குநர். Children of Heaven படத்தை பார்க்காதவர்கள் சினிமாவில் இல்லை. அனைவரும் பார்த்திருப்பார்கள்.

 

இந்த படத்தை பற்றி இசைஞானி இளையராஜா இது போன்ற படங்களை ஏன் இங்கு எடுப்பதில்லை என்று ஒரு கேள்வியை கேட்டார். அதில் சில சிக்கல்கள் உள்ளது, இது போன்ற நிறைய திரைப்படங்கள் உள்ளது. அதை எல்லாம் இயக்க வேண்டுமென்றால், இயக்குநரே கதை, வசனம், திரைக்கதை, போன்று என்னவெல்லாம் உள்ளதோ அது அனைத்தையும் பார்ப்பவராக இருக்க வேண்டும். அப்போது தான் தயாரிப்பாளர்கள் வாய்ப்பு தர தயாராகவுள்ளனர். இல்லை கதை வேறு ஒருவருடையது, இயக்கம் மட்டும் தான் நான் என்று சொன்னால், அதற்கு நான் எழுத்தாளரை வைத்தே இயக்கிவிடுவோமே தனியாக இயக்குநர்கள் எதற்கு? என்று இது போன்ற நடைமுறை சிக்கல்கள் உள்ளது.

 

இளையராஜா அவர்கள் கேட்ட கேள்வி நியாயமான கேள்வி, இது சாமிக்கு மட்டுமல்ல பல இயக்குநர்களுக்கும் தோன்றியிருக்கும் எனக்கும் தோன்றியது. இந்த படத்தை இயக்குகிறோம் என்று சொன்னால் பருத்திவீரன் என்ற சொந்த ஊர் கதையை இயக்கிவிட்டோம். ராம் என்று சொந்த கதையை இயக்கிவிட்டோம். அது போன்ற படத்தை இயக்கிவிட்டு ஒரு ரீமேக் கதையை இயக்குவதா? என்று வியாபார ரீதியாக பயம் வருகிறது. இதை இயக்கினால் மார்க்கெட் இறங்கிவிடுமோ? மக்கள் மத்தியில் சரியான அங்கீகாரம் கிடைக்காமல் போய்விடுமோ என்ற கேள்விகள் எழுகிறது. இங்கு கலர் சட்டை போட்டுக் கொண்டு விமர்சனம் செய்ய நிறைய பேர் உள்ளனர். அவர்களிடம் யார் சிக்குவது? பத்திரிகையாளர்கள் கேட்கும் கேள்விகளுக்கு யார் பதில் சொல்லுவது? என்று பல சிரமங்கள் உள்ளது.

 

இந்த படத்தை பார்த்துவிட்டு யாரும் குறை கூறவே முடியாது. இந்த படத்தை அவர் எவ்வளவு குறைவாக எடுக்க வேண்டும் என்று நினைத்திருந்தாலும் கூட அந்த படத்தின் தரம் குறையாது. ஏனென்றால், அந்த கதையின் கரு அப்படி. ஆனால் அவர் ஒரு சில மாற்றங்கள் செய்துள்ளேன். கிளைமாக்ஸ் காட்சியில் சிறிய மாற்றம் செய்துள்ளேன் என்று தெரிவித்தார். அது கேட்பதற்கு நன்றாக இருந்தது. பார்ப்பதற்கும் நன்றாக தான் இருக்கும். மிக முக்கியமாக சொல்ல வேண்டிய விஷயம் இந்த படம் திரையரங்குகளில் வெளியாகி வணீக ரீதியாக வெற்றியடைய வேண்டும் என்பது தான். இந்த படத்தில் பணியாற்றிய குழந்தைகள் மற்றும் அனைத்து தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

 

இசைஞானி இளையராஜாவின் பாட்டை கேட்கும்போதே அவர் இப்படத்திற்காக என்ன செய்திருப்பார் என்று தெரிகிறது. முதல் முறை கேட்ட பாடலே எனக்குள் இன்னும் ஒலித்துக் கொண்டிருந்தது. இதையெல்லாம் தாண்டி இசைஞானிக்கான அங்கீகாரம் என்னவென்றால், இயக்குநர் சாமி என்னிடம் ஒரு மின்னஞ்சலை காண்பித்தார். அதாவது இந்த விழாவிற்கு மஜித் மஜிதி வரவேண்டும் என்று ஒரு மின்னஞ்சலை அனுப்பியுள்ளனர். ஆனால், அதற்கான செலவுகள் அதிகம் என்ற காரணத்தால் படக்குழுவினர்களால் அவரை அழைத்து வரமுடியவில்லை. அவரை அழைத்து வர நானும் சில வழிகள் சொன்னேன். மஜித் மஜிதியை அழைத்து வந்த பெருமை இந்த மன்னனிற்கு சேரும் என்பதாலும், அவரை போன்ற இயக்குநர்கள் வரும் பொழுது இன்னும் ஒரு உத்வேகம் பிறக்கும் என்பதற்காகவும், ஆனால் அது சாத்தியமடையவில்லை.

 

இருப்பினும் இவர்கள் ‘அக்கா குருவி’ படத்தை அவருக்கு அனுப்பி வைத்துள்ளனர். அதை பார்த்த அவர், படம் உங்களின் மண்ணிற்கேற்றவாறு படத்தின் தன்மையும், உணர்வும் குறையாமல் மிக சிறப்பாக உருவாக்கியுள்ளீர்கள். அதிலும் இசை மிகவும் அற்புதம் என்று அவர் தரப்பில் இருந்து படத்தை பாராட்டி மின்னஞ்சலை இந்த குழுவினருக்கு அனுப்பி வைத்துள்ளார். ஒரு இசைக்கலைஞன் தமிழக மக்களை மட்டுமல்ல உலகிலுள்ள தமிழ் பேசும் மக்களை மட்டுமல்ல, பெர்சியன் மொழி பேசும் ஒரு இயக்குநரையும் கூட கட்டிப்போட்ட இளையராஜாவிற்கு பாரத ரத்னா விருது என்பது ஒன்று அல்ல ஐந்து தருவதற்கு கூட தகுதி இருக்கிறது. நாம் தெளிவாக சொல்ல வேண்டியது, ஆளுநர் பதவியோ ஜனாதிபதி பதவியோ பாரத ரத்னா விருதை விட பெரியது இல்லை என்பது தான்.” என்றார்.

 

இராதாகிருஷ்ணன் பார்த்திபன் பேசுகையில், “இங்குள்ள அனைவரும் பேசியதும் வீண், நான் பேசப்போவதும் வீண், இந்த படத்தை பார்த்து அதை பற்றி பேசிய குழந்தைகள் தான் உண்மையை பேசியவர்கள். பெரியவர்கள் அனைவருமே ஒருவர் பேசியதை விட மற்றொருவர் சிறப்பாக பேச வேண்டும் என்று நினைப்பார்கள். நான் உட்பட அப்படித்தான். சமீபத்தில் கூட ஒரு படத்தின் விமர்சனங்களின் போது பெரியவர்கள் அனைவரும் அழகாக பேசினார்கள். ஆனால், சிறுவன் ஒருவன் சொன்ன கேடித்தனமான கருத்து தான் வைரல் ஆனது. ஏனென்றால், அவன் சொன்னது மிகவும் யதார்த்தமாக இருந்தது. எதற்காக இதை சொல்கிறேன் என்றால் அது போன்ற குழந்தைகளின் விமர்சனம் தான் இந்த படத்திற்கான சரியான விமர்சனம்.

 

நான் ஆரம்பத்தில் சொன்னது போல் அனைவர் பேசியதும் வீண் தான். சமீபத்தில் கூட பர்வீன் சுல்தானா அவர்கள் அமீரை ஒரு பேட்டி எடுக்கிறார். அதில் அவர் கேட்ட ஒரு கேள்விக்கு அமீர் ஒரு சிரிப்பை மட்டுமே சிரித்தார். அந்த சிரிப்பில் சுமார் ஒரு 1500 அர்த்தங்கள் அடங்கியிருக்கும் ஒரு பூங்கொத்து போல. நானும் அவரின் பேச்சிற்கு ரசிகன் தான். இன்றும் அழகாக பேசினார். நிறைய தேவையான விஷயங்களை கூறினார். எதற்காக நல்ல படங்களை இயக்குவதற்கு யாரும் முன்வரவில்லை என்பதற்கு அழகாக பேசினார். நான் 'உள்ளே வெளியே' என்று ஒரு படத்தை இயக்கினேன் அதற்கு காரணம் நான் இயக்கிய 'சுகமான சுமைகள்' படம் தான். நான் அதை குடும்பத்துடன் பார்க்க வேண்டும் என்பதற்காக மிகவும் ஒழுக்கமாக இயக்கினேன். ஆனால், அதை என் குடும்பம் மட்டுமே பார்த்தது. அந்த படத்தால் நான் 75 லட்சம் ரூபாய் நஷ்டம் அடைந்தேன். அது நான் சம்பாதித்த பணம் இல்லை. சம்பாதிக்க போகும் பணத்தையும் சேர்த்து போடப்பட்ட பணம். அந்த பொருளாதார பிரச்சனை.. நம் வாழ்க்கையிலேயே விளையாட ஆரம்பித்து விட்டது. எனக்கு தெரிந்து ரஹ்மான் சார் சொல்வது போல் இரண்டு பாதை உள்ளது. ஒன்று காதல் மற்றொன்று வெறுப்பு. அதில் நாம் தேர்தெடுக்க வேண்டியது காதலை தான் என்பார். அது போல, தேர்ந்தெடுத்தலே மிக முக்கியமான ஒன்று என நினைக்கிறேன்.

 

அதை இயக்குநர் சாமி அவர்கள் தேர்ந்தேடுத்தது CHILDREN OF HEAVEN. அதை விட சிறந்த தேர்வு இசைஞானி இளையராஜா. ஒரு ஏழு நல்ல இதயங்கள் சாமி அவர்களை இயக்குநர்களாக தேர்வு செய்துள்ளனனர். இதற்கான விளைவு, அமீர் சொன்னது போல் இந்த படத்தை எவ்வளவு குறையாக இயக்கியிருந்தாலும், அது குறையாக இருக்காது. சாமி என்னுடன் பணிபுரிந்தவர் என்பது இந்த படத்தை பார்க்கும்போது பெருமையாக இருக்கிறது. இதற்கு முன்னதாக இவர் இயக்கிய படங்களை பார்க்கும் பொழுது, பொறாமையாக இருக்கும், இவரும் இது போன்ற சர்ச்சையான படங்களை இயக்குகிறார் என்பதனால்.

 

இயக்குநர் எச்.வினோதும் என்னுடன் உதவி இயக்குனராக சில காலங்கள் பணியாற்றியுள்ளார். அவர் அஜித் அஜித் என்று போகும் சமயத்தில், சாமி மஜித் மஜித் என்று போயிருக்கிறார். அவரின் சோர்விற்கு காரணம் அவர் இயக்குநராக மட்டுமல்லாமல், இப்படத்திற்கு தயாரிப்பாளராக இருப்பதும் ஒரு மிக முக்கிய காரணம். ஆனால், அவர் என்னை விட ஒரு படி மேல் தான். நான் ஒரு செருப்பை வைத்து படம் இயக்கினேன், இவர் இரண்டு ஷூவை வைத்து படம் இயக்கியிருக்கிறார்.

 

நான் ஒத்த செருப்பு படத்தை இயக்கும் போது எவ்வளவு கஷ்டப்பட்டேனோ, அது வெளியாகி ஓடிடி தளத்திற்கு சென்றவுடன் உலக பெருமையெல்லாம் கிடைத்தது. இப்போது கூட அமீர், நீங்கள் உங்கள் படத்தை வியாபாரம் செய்துவிட்டீர்களா என்று கேட்டார். யாரும் இது வரை என் வீட்டின் பக்கம் அல்ல தெருவின் பக்கம் கூட வரவில்லை என்று சொன்னேன். இந்த மாற்றங்கள் எப்போது நடக்கும் என்பது யாருக்கும் தெரியாது. இரவின் நிழல் படம் உள்ளே வெளியே படத்தை போன்றிருந்தால் பிரச்சனை இல்லை. ஆனால், எவ்வளவு காலம் தான் இந்த பொருளாதார சிக்கல்களை சமாளிப்பது என்று தெரியவில்லை.

 

இயக்குநர் சாமிக்கு திடம் மிகவும் முக்கியமான ஒன்று. நான் முந்தைய காலத்தில் பல படங்களின் மூலம் சம்பாதித்து இருக்கலாம். ஆனால், நிறைவை தரும் படம் 'இரவின் நிழல்' மட்டும் தான். பாக்யராஜ் சார் படத்தை பார்த்தார். அந்த பாராட்டு என்பது எவ்வளவு கோடி கொடுத்தாலும் கிடைக்காது. அது போன்ற சந்தோஷத்தை சாமி உணருவார். இந்த படம் வெற்றியடையும்.” என்றார்.

 

இயக்குநர் சாமி பேசுகையில், “இந்த படத்தை நான் இயக்கியதற்கு ஒரு காரணம் உள்ளது. நான் பொறியாளன் என்றாலும் இலக்கியம் பயின்றேன். பார்த்திபன் சார், சேரன் சார் இவர்களிடம் பணியாற்றும் போது நான் சத்ய ஜித் ரே போன்று படம் இயக்கத்தான் வந்தேன். அதற்காக பாரதியாரின் புத்தகங்கள் 20 படித்த பின் எனது ஸ்கிரிப்ட்டை எழுதினேன். அதன்பின் ’உயிர்’ எனும் படத்தை பாசிட்டிவாக தான் எழுதி  கதை சொல்ல போனேன். சென்ற அனைத்து இடத்திலும் நிராகரித்துக் கொண்டே இருந்தார்கள். அப்போது, என்னுடன் உதவியாளராக இருந்த ஒருவர் “சார் ஸ்கிரிப்ட்டை நெகட்டிவாக மாற்றலாம்” என்று கூறினார்.

 

நானும் சரி என்று அண்ணி கதாபாத்திரத்தை நெகட்டிவாக மாற்றிய பின் ஐந்து தயாரிப்பாளர்கள் படத்தை எடுக்க முன் வந்தனர். அதன் பின்னரே உயிர் வந்தது. உயிர் படத்தை போல் அடுத்த படத்தை எடுக்க வேண்டாம் என முடிவு செய்து ’சதம்’ என தந்தை மகனை பற்றிய ஒரு கதை. ஆனால், அது தொடரவில்லை. அதன் பின்னரே ’மிருகம்’ படத்தை இயக்கினேன். அதாவது கதையை தேர்ந்தெடுக்கும் சூழலில் நான் இல்லை. அமீர் சார் பார்த்திபன் சார் அவர்கள் எல்லாம் அவர்களுக்கான கதையை தேர்ந்தெடுக்கும் இடத்தில் உள்ளார்கள்.

 

நேற்று பார்த்திபன் சாரின் ’இரவின் நிழல்’ படத்தை பார்த்தேன். அப்போது என்னிடம் 75 ஸ்கிரிப்ட் உள்ளது என்றார். நான் என்னிடம் 150 கதைகள் உள்ளது. என் அலமாரி முழுவதும் கதை தான் இருக்கிறது என்றேன். ஒவ்வொரு தயாரிப்பாளரிடமும் நான் நான்கு அல்லது ஐந்து கதைகளை கூறுகிறேன். அவர்கள் தான் கதையை தேர்ந்தெடுக்கிறார்கள் நான் இல்லை. அதனால் தான் ’மிருகம்’ இயக்கும் சூழல் உருவானது.

 

அதற்கு பின் ’சரித்திரம்’ என ஒரு ஆவணப்படம் இயக்கினேன். அது சிலம்பத்தை பற்றிய ஒரு ஆவணப்படம். மினி பாகுபலி போன்ற ஒரு படைப்பு அது. அதை ஒரு 11 ரீல்ஸ் எடுத்தோம். அதற்காக நிறைய படிக்க வேண்டியிருந்தது. பல ஆராய்ச்சிகள் மேற்கொண்டு இரண்டு வருடம் கழித்து எடுத்த படம். அதுவும் சரியாக வரவில்லை.

 

அதன்பின், வயிற்று பிழைப்பிற்காக ’சிந்து சமவெளி’ படத்தை இயக்கினேன். அது பிழைப்பையே கெடுத்துவிட்டது. அடுத்தது ’கங்காரு’ படம் இயக்கினேன். என் பசங்களுக்கு நான் எப்போதும் படங்கள் போட்டு காட்டுவது உண்டு. அப்போது என் மகள் கேட்டால், அப்பா நீங்கள் எப்போதும் அனிமேஷன் படத்தை தான் காட்டுகிறீர்கள். சின்ன குழந்தைகள் நடித்த படங்கள் ஏதும் இல்லையா என்று கேட்டால். நானும் ஏன் இல்லை என்று "CHILDREN OF HEAVEN" படத்தை போட்டு காண்பித்தேன். அப்போது என் அக்காவும் வீட்டிற்கு வந்திருந்தார். அவர் மொழி புரியாவிட்டாலும் கூட படத்தை பார்த்து அழுது விட்டார். அவர் தான் "இது போன்ற படங்களை யாரும் இயக்க மாட்டார்களா' என்று கேட்டார். நானும் சரி நான் எடுத்து விடுகிறேன் என்று மஜித் மஜிதி அவர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பி ஆரம்பிக்கப்பட்ட படம் இது. அதற்கு முக்கிய காரணம் என் தயாரிப்பாளர்கள் தான். எட்டு தயாரிப்பாளர்களுக்கும் நன்றி. ஷூவை ஹீரோவாக கொண்ட ஒரு கதையை இயக்க உதவியதற்கு மிக்க நன்றி.

 

நான் சிந்து சமவெளி படத்தின் இசை வெளியீட்டு விழாவில், நீங்கள் இந்த படத்தை ஓட வைத்தால் நான் இது போன்ற படங்களை மட்டும் தான் இயக்குவேன். இல்லையென்றால், என்னுடைய போக்கை மாற்றிக் கொண்டு வேறு விதமான படைப்பை கொடுப்பேன் என்று கூறினேன். நீங்கள் அந்த படத்தை ஓட வைக்கவில்லை. அதனால் நான் இந்த படத்திற்கு மாறி விட்டேன். நீங்கள் ’அக்கா குருவி’ படத்தை ஓட வைக்கவில்லை என்றால் நான் மீண்டும் உயிர், மிருகம் போன்று மூன்று அல்லது நான்கு மடங்கு சர்ச்சை படத்தை தான் இயக்குவேன். அது எனக்கு கவலை இல்லை உங்களுக்கு தான் கஷ்டம். நான் நல்ல படங்கள் இயக்க வேண்டும் என்று தான் நினைத்துக் கொண்டிருக்கிறேன். ஆனால், நான் என்ன மாதிரியான படத்தை இயக்க வேண்டும் என்று நீங்கள் முடிவு செய்யுங்கள். படத்தில் வேலை பார்த்த அனைவருக்கும் நன்றி. இளையராஜா சார், ஓரிஜினலை விட நீ எடுத்த படம் படம் சிறப்பாக இருக்கிறது என்றார்.

 

நேற்று பார்த்திபன் சார் இயக்கிய இரவின் நிழல் படத்தை பார்த்து திகைத்து போனேன். பத்து படத்திற்கான உழைப்பை ஒரே படத்தில் உழைத்த திருப்தி அவரிடம் உள்ளது. படம் நன்றாக வந்துள்ளது, துணிச்சலாக திரையரங்கில் வெளியிடுகிறோம் அனைவரும் ஆதரவு தாருங்கள்.” என்றார்.

Related News

8197

அரசியல் ஆன்மீகம் சினிமா! - கவனம் ஈர்க்கும் நடிகர் மை. பா. நாராயணன்
Tuesday January-21 2025

தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார் என்று இறைவனைச் சொல்வார்கள்...

’நிறம் மாறும் உலகில்’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது!
Tuesday January-21 2025

இயக்குநரும், நடிகருமான பாரதிராஜா, ஒளிப்பதிவாளரும், நடிகருமான நட்டி என்கிற நட்ராஜ், வளர்ந்து வரும் இளம் நட்சத்திர நடிகர் ரியோ ராஜ், நடன இயக்குநரும், நடிகருமான சாண்டி மாஸ்டர் ஆகியோர் முதன்மையான கதாபாத்திரங்களில் நடிக்கும் ' நிறம் மாறும் உலகில் ' எனும் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்திருப்பதாக படக் குழுவினர் பிரத்யேக காணொளியை வெளியிட்டு உற்சாகத்துடன் அறிவித்துள்ளனர்...

’மிஸ்டர்.ஹவுஸ் கீப்பிங்’ இளைஞர்களுக்குப் பிடித்த ஜாலியான படமாக இருக்கும் - இயக்குநர் பி.வாசு உறுதி
Tuesday January-21 2025

யூடியூப்பில் பொழுதுபோக்குடன் கூடிய சிந்திக்கவைக்கும் படைப்புகளை வழங்கி மக்களிடம் பாராட்டுக்களைப் பெற்ற ஹரி பாஸ்கர் கதாநாயகனாக அறிமுகமாகும் படம் ‘மிஸ்டர்...

Recent Gallery