அறிமுக இயக்குநர் வினோத் டி.எல் இயக்கத்தில் சிபிராஜ் நடித்திருக்கும் படம் ‘ரங்கா’. இதில் சிபி ராஜுக்கு ஜோடியாக நிகிலா விமல் நடித்திருக்கிறார். மோனிஷ் ரஹேஜா என்ற புதுமுக நடிகர் வில்லனாக நடித்திருக்கிறார். இவர்களுடன் சதிஷ், ஷாரா, மனோபாலா, லொள்ளு சபா சுவாமிநாதன், ரேணுகா, ஜீவா ரவி, தமிழ் செல்வி ஆகியோர் நடிக்க, சிறப்பு தோற்றத்தில் பாடகர்கல் செந்தில் - ராஜலட்சுமி நடித்திருக்கிறார்கள்.
பாஸ் மூவிஸ் சார்பில் விஜய் கே.செல்லையா தயாரித்திருக்கும் இப்படம் இதுவரை சிபிராஜ் நடித்த படங்களிலேயே மிகப்பெரிய பொருட்ச்செலவில் உருவாகியுள்ள படமாகும். மேலும், படத்தின் ஒவ்வொரு 25 நிமிடத்திற்கும் ஜானர் மாறும்படி அமைக்கப்பட்டுள்ள திரைக்கதையும், காட்சிகளும் படத்தின் கூடுதல் சிறப்புகளில் ஒன்றாக இருக்கும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.
வரும் மே 13 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் பிரசாத் லேபில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் கலந்துக்கொண்டார்கள்.
நிகழ்ச்சியில் பேசிய நடிகர் சிபிராஜ், “இயக்குநர் வினோத் இந்த கதையை சொன்ன போது எனக்கு மிகவும் பிடித்துவிட்டது. ஆனால், இது மிகப்பெரிய படமாக எடுக்கப்பட வேண்டிய கதை, இதை புதுமுக இயக்குநர் சரியாக கையாள்வாரா, என்ற சந்தேகம் எனக்கு இருந்தது. அதிலும் காஷ்மீரில் படப்பிடிப்பு நடத்த வேண்டும், என்று சொல்கிறாரே, என்று யோசித்தேன். அதனால் தான் தயாரிப்பாளரிடம் முதலில் சென்னையில் எடுக்க வேண்டிய காட்சிகளை எடுத்து விடலாம், அதில் இயக்குநர் எப்படி பணியாற்றுகிறார் என்பதை பார்த்துவிட்டு காஷ்மீர் செல்லலாம் என்று கூறினேன். ஆனால், தயாரிப்பாளர் விஜய் கே.செல்லையா இயக்குநர் மீது நம்பிக்கையோடு இருந்தார். இல்லை காஷ்மீர் இப்போது தான் படப்பிடிப்பு நடத்த வேண்டும் அதற்கான ஏற்பாடுகளை செய்திருக்கிறோம், என்று கூறினார். அதேபோல், காஷ்மீரில் இயக்குநர் வினோத் பணியாற்றிய விதம் என்னை வியக்க வைத்தது. முதல் பட இயக்குநர் போல் இல்லாமல், அனுபவமுள்ள இயக்குநரை போல் சரியான திட்டமிடலோடு பணியாற்றினார். அப்போதே தெரிந்தது இந்த படம் நல்லா வரும் என்று. வினோத் சொன்ன இந்த கதையை வேறு தயாரிப்பாளர்கள் கேட்டிருந்தால் யோசித்திருப்பார்கள், ஆனால் விஜய் செல்லையா எதுவும் யோசிக்காமல் இந்த படத்தை தயாரிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார். நானே சில படங்கள் தயாரித்திருக்கிறேன். நான் இந்த கதையை கேட்டிருந்தால் கூட தயாரித்திருக்க மாட்டேன், அப்படி ஒரு பட்ஜெட் தேவை. குறிப்பாக இயக்குநர் காஷ்மீரில் படமாக்க வேண்டும் என்று என்னிடம் சொல்லி இருந்தால், கொடைக்கானல், ஊட்டி போன்ற இடங்களில் எடுக்கலாமே என்று தான் சொல்லியிருப்பேன். ஆனால், விஜய் செல்லையா அப்படி எந்தவித மாற்றமும் செய்யாமல், இயக்குநர் கேட்டதை கொடுத்தார். இந்த படம் நான் நான் நடித்த படங்களிலேயே மிகப்பெரிய பட்ஜெட் படமாகும். இந்த படத்தில் பணியாற்றிய அனைவரும் ரொம்பவே கஷ்ட்டப்பட்டார்கள். அந்த கஷ்ட்டத்திற்கு படம் நிச்சயம் வெற்றி பெறும்.” என்றார்.
இயக்குநர் வினோத் டி.எல் பேசுகையில், “இந்த இடத்தில் நான் பலருக்கு நன்றி சொல்லியாக வேண்டும். முதலில் எனது குடும்பத்துக்கு நன்றி. அவர்கள் கொடுத்த ஒத்துழைப்பால் தான் இந்த இடத்திற்கு வர முடிந்தது. பிறகு இந்த படத்தை இயக்கும் வாய்ப்பு கொடுத்த தயாரிப்பாளர் விஜய் கே.செல்லையா, சிபிராஜ் ஆகியோருக்கு நன்றி. இந்த கதை நான் தயாரிப்பாளிடம் சொன்னதோடு, காஷ்மீரில் தான் படமாக வேண்டும், அந்நிய மாநிலமாக இருந்தால் தான் திரைக்கதைக்கு பலம் சேர்க்கும் என்று சொன்னேன். அதை அவர் புரிந்துக்கொண்டு காஷ்மீரில் படமாக்க எனக்கு ஒத்துழைப்பு கொடுத்தார். இந்த படத்திற்கு என்று ஒரு குறிப்பிட்ட பட்ஜெட் இருக்கிறது. ஆனால், அதுவே மிகப்பெரிய பட்ஜெட்டாக தான் இருக்கும். இதில் ஒரு ஆக்ஷன் ஹீரோவை தான் நடிக்க வைக்க வேண்டும் என்று நினைத்தேன். அப்போது தான் அவர் பத்து பேரை அடித்தால் ஆடியன்ஸ் நம்புவார்கள். அப்போது சிபிராஜ் சாரை எனக்கு தயாரிப்பாளர் சிபாரிசு செய்தபோது, உடனே நான் ஓகே சொல்லிவிட்டேன். அவரும் கதை கேட்டு உடனே நடிக்க சம்மதித்தார். இந்த படம் நிச்சயம் அனைவருக்கும் பிடிக்கும்.” என்றார்.
இப்படத்திற்கு இசையமைத்துள்ள ராம் ஜீவன் பேசுகையில், “ரங்கா படம் இசைக்கு ஸ்கோப் உள்ள படம் என்பது வினோத் கதை சொன்ன போதே தெரிந்தது. அதனால் உடனே சம்மதம் தெரிவித்துவிட்டேன். படத்தில் ஒரு உருது பாடல் இடம்பெறுகிறது. எங்களுக்கு உருது தெரியாது. அதனால் உருது பாடல் எழுதும் கவிஞரை தேடினோம். அப்போது ஏ.ஆர்.ரஹ்மான் பள்ளியில் உருது செக்ஷன் இருப்பதை அறிந்து அங்கு சென்றோம். அப்போது அந்த வகுப்பு எடுக்கும் ஆசிரியர் பற்றி தெரிந்தது. அவர் இந்தியில் பிரபலமான நபர். அவரிடம் பாடல் எழுதும்படி கேட்டோம். அவரும் கதையை கேட்டுவிட்டு எங்களுக்கு பாடல் எழுதினார். அந்த பாடலை யாரை வைத்து பாட வைப்பது என்று யோசித்த போது. ஜாவித் அலி பாடினால் நன்றாக இருக்கும் என்றார்கள். உடனே அவரை மும்பையில் இருந்து வரவைத்து பாட வைத்துள்ளோம். அந்த பாடல் சிறப்பாக வந்திருக்கிறது. இப்படி படத்திற்காக தயாரிப்பாளர் விஜய் கே.செல்லை கேட்டதை எல்லாம் கொடுத்து பெரிய பொருட்ச்செலவில் தயாரித்திருக்கிறார். இந்த படம் நிச்சயம் ரசிகர்களுக்கு பிடிக்கும்.” என்றார்.
படத்தில் வில்லனாக நடித்திருக்கும் மோனிஷ் ரஹேஜா பேசுகையில், “இது தான் எனக்கு முதல் படம். பேஸ்புக் மூகம் என் புகைப்படத்தை பார்த்துவிட்டு இயக்குநர் ஆடிசனுக்கு அழைத்தார். சில நாட்கள் கழித்து நான் தேர்வான செய்தியை சொன்னார்கள், மிகவும் சந்தோஷமாக இருந்தது. சிபிராஜ் நடிப்பில் எனக்கு நிறைய உதவி செய்தார். இது எனது முதல் படம் தொடர்ந்து பல படங்களில் நடிக்க உங்கள் ஆசீர்வாதம் வேண்டும், நன்றி.” என்றார்.
தயாரிப்பாளர் விஜய் கே.செல்லையா பேசுகையில், “ரங்கா படம் இரண்டு வருடங்களுக்கு முன்பு ஆரம்பித்தோம். இடையில் கொரோனா பிரச்சனை வந்ததால் படப்பிடிப்பு தடை பட்டது. இப்போது படத்தை முடித்துவிட்டோம். சில ஒடிடி நிறுவனங்கள் படத்தை கேட்ட போதும் நாங்கள் கொடுக்கவில்லை. காரணம், இந்த படம் தியேட்டருக்கான படம். மிக பிரம்மாண்டமான இந்த படத்தை தியேட்டரில் பார்த்தால் ரசிகரளுக்கு புது அனுபவமாக இருக்கும். படம் நிச்சயம் அனைவருக்கும் பிடிக்கும்.” என்றார்.
அறிமுக இயக்குநர் தினகரன் சிவலிங்கம் இயக்கத்தில், குரு சோமசுந்தரம் கதையின் நாயகனாக நடித்திருக்கும் படம் ‘பாட்டல் ராதா’...
சினிமாக்காரன் எஸ். வினோத்குமார் தயாரிப்பில் இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில் நடிகர்கள் மணிகண்டன், ஷான்வி நடித்திருக்கும் ‘குடும்பஸ்தன்’ திரைப்படம் இந்த மாதம் 24ஆம் தேதி திரையரங்கில் வெளியாகிறது...
ஏ.வி.ஏ எண்டர்டெயின்மெண்ட் மற்றும் 24 ஃபிரேம் பேக்டரி நிறுவனங்கள் சார்பில் பிரபல நடிகர் மோகன் பாபு தயாரித்திருக்கும் பிரமாண்ட சரித்திர காவியம் ‘கண்ணப்பா’...