இந்திய சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனமாக திகழும் லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் சுபாஷ்கரன் அல்லிராஜா பல பிரம்மாண்ட திரைப்படங்களை தயாரித்து வருவதோடு, வளரும் நட்சத்திரங்களை வைத்து பல பிரம்மாண்ட வெற்றி படங்களையும் தயாரித்து வருகிறார். அந்த வகையில், சிவகார்த்திகேயன் நடிப்பில், அறிமுக இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் லைகா புரொடக்ஷன்ஸ் சுபாஷ்கரன் தயாரித்த ‘டான்’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது.
சிவகார்த்திகேயன், ப்ரியங்கா மோகன், எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரக்கனி, சூரி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்த ‘டான்’ திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். இப்படம் வெளியான நாள் முதல் வசூலில் பல சாதனைகளை படைத்ததோடு சுமார் ரூ.125 கோடி வசூலித்துள்ளது.
படம் வெளியாகி 25 நாட்களை கடந்தும் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கும் ‘டான்’ வெற்றி விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. சுபாஷ்கரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் உதயநிதி ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொள்ள ‘டான்’ படக்குழுவினர் அனைவரும் கலந்துக்கொண்டார்கள். நிகழ்ச்சியில் ‘டான்’ படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் 25 வது நாள் நினைவு பரிசு வழங்கப்பட்டது.
‘டான்’ படத்தை தமிழகம் முழுவதும் வெளியிட்ட உதயநிதி ஸ்டாலின் நிகழ்ச்சியில் பேசுகையில், “நான் ஆடியோ வெளியீட்டு விழாவில் சொன்னது போல் டான் படம் 100 கோடியை தாண்டி வசூலித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. படம் வெளியாகி வெற்றி பெற்று விட்டதால், படத்தை பற்றிய பல உண்மைகளை இங்கு பேசலாம் என்று நினைக்கிறேன். இந்த படத்தை பார்க்குமாறு தமிழ்குமரன் என்னை அழைத்தார். அப்போது படத்தின் முதல் பாதியை பார்த்து எனக்கு சிரிப்பே வரவில்லை. பிறகு இரண்டாம் பாதியை பார்த்த போது தந்தை செண்டிமெண்ட் பிடித்திருந்தது. எதற்காக படம் ஓடுகிறதோ இல்லையோ, அந்த தந்தை செண்டிமெண்டால் படம் ஓடும் என்று சொன்னேன். சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தின் வசூலையும் தாண்டும் என்றும் சொன்னேன், அதேபோல் படம் மிகப்பெரிய வெற்றி பெற்றிருப்பது மகிழ்ச்சி.
இந்த கதையை சிபி பல பேரிடம் சொன்னதாக சிவகார்த்திகேயன் சொன்னார். ஆனால், முதலில் அவர் என்னிடம் தான் சொன்னார். ஆனால், அதில் இருக்கும் ஸ்கூல் போர்ஷன் என்னால் பண்ண முடியாது, என்பதால் நான் அதில் நடிக்கவில்லை. அதேபோல், இறுதிக்காட்சியில் அப்பா செண்டிமெண்ட் காட்சியிலும் என்னால் சிவா போல் அழுதிருக்க முடியாது. ஸ்கூல் போர்ஷனையும் சிவா ரொம்ப நல்லா பண்ணியிருக்கார். இந்த படம் அவருக்கான சரியான படம், நல்ல வேலை என்னிடம் இருந்து சிபி தப்பித்துவிட்டார்.
இந்த படத்தின் நிகழ்ச்சிகளில் நான் சிவாவுக்கு டான் பட்டம் கொடுக்க, அவர் எனக்கு திருப்பி கொடுக்க இப்படி நாங்கள் இருவரும் மாறி மாறி டான் பட்டத்தை கொடுத்து வந்தோம். ஆனால், உண்மையில் டான் சுபாஷ்கரன் சார் தான். அவர் இன்னும் பல பிரம்மாண்ட படங்களை தயாரிக்க இருக்கிறார். ‘பொன்னியின் செல்வன்’ படமும் முடிந்துவிட்டது, எப்போது பார்க்கிறீர்கள் என்று என்னிடம் கேட்டார். அந்த படமும் மிகப்பெரிய படமாகவும், மிகப்பெரிய வெற்றியையும் கொடுக்கும். ‘இந்தியன் 2’ படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. அந்த படம் மிகப்பெரிய படமாக உருவாகும். தற்போது கமல் சாரின் விக்ரம் பெரிய வெற்றி பெற்றுள்ளது, அதற்கும் வாழ்த்துகள். சிவகார்த்திகேயன் மற்றும் அனிருத் கூட்டணி தொடர்ந்து வெற்றி பெற வேண்டும். 100 கோடியை தொடர்ந்து 200 கோடி கிளப்பிலும் அவர்கள் இணைய வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.” என்றார்.
சிவகார்த்திகேயன் பேசுகையில், “உதயநிதி சாருக்கு இந்த கதையை சொன்னதாக சிபி இதுவரை சொல்லவில்லை. இந்த படம் ரெட் ஜெயண்ட் வெளியிட்டதால் தான் இவ்வளவு பெரிய வெற்றி பெற்றது. இந்த கதையை என்னிடம் முதலில் சொன்ன போது சில மாற்றங்களை செய்ய சொன்னேன், ஆனால் அதை செய்ய சிபி முன்வரவில்லை. பிறகு ஒரு முறை மாற்றம் செய்திருக்கிறேன், என்று சொன்னார். அப்படி மாற்றம் செய்த கதை தான் டான். பிறகு அதிலும் சில மாற்றங்கள் செய்து லைகா நிறுவனத்திடம் சொன்னோம், அவர்களுக்கு முதலில் பிடிக்கவில்லை. பிறகு இந்த கதையில் இருக்கும் பிளஸ்களை புரிந்துக்கொண்டு தயாரிக்க முன்வந்ததோடு, என்னிடமே தயாரிப்பு பொறுப்பையும் கொடுத்து விட்டார்கள். லைகாவுடன் இணைந்து பண்ணும் முதல் படம் என்பதால் அவர்களுக்கு மிகப்பெரிய வெற்றி படமாக இருக்க வேண்டும், என்று எண்ணியதோடு அதற்காக கடுமையாக உழைத்தோம். அந்த உழைப்புக்கு பெரிய வெற்றி கிடைத்திருக்கிறது.
டான் படம் ரூ.100 கோடிக்கு மேல் வசூல் செய்திருக்கும் இந்த நேரத்தில் என் உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் ஒன்று சொல்லிக்கொள்கிறேன். இந்த 100 கோடி ரூபாய் எனக்கு வராது. இது லைகா மற்றும் ரெட் ஜெயண்ட் நிறுவனத்துக்கு தான் போகும். எனவே ட்ரீட் கேட்பவர்கள் அவர்களிடம் கேளுங்கள், அந்த ட்ரீட்டில் நானும் கலந்துக்கொள்கிறேன். தொடர்ந்து இரண்டு படங்கள் 100 கோடியை வசூலித்ததால், இனி என் படங்கள் அனைத்தும் அதேபோன்று வசூலிக்க வேண்டும் என்று வாழ்த்தினார்கள், நிச்சயம் அதற்கான உழைப்பை நான் தொடர்ந்து கொடுப்பேன்.” என்றார்.
அறிமுக இயக்குநர் தினகரன் சிவலிங்கம் இயக்கத்தில், குரு சோமசுந்தரம் கதையின் நாயகனாக நடித்திருக்கும் படம் ‘பாட்டல் ராதா’...
சினிமாக்காரன் எஸ். வினோத்குமார் தயாரிப்பில் இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில் நடிகர்கள் மணிகண்டன், ஷான்வி நடித்திருக்கும் ‘குடும்பஸ்தன்’ திரைப்படம் இந்த மாதம் 24ஆம் தேதி திரையரங்கில் வெளியாகிறது...
ஏ.வி.ஏ எண்டர்டெயின்மெண்ட் மற்றும் 24 ஃபிரேம் பேக்டரி நிறுவனங்கள் சார்பில் பிரபல நடிகர் மோகன் பாபு தயாரித்திருக்கும் பிரமாண்ட சரித்திர காவியம் ‘கண்ணப்பா’...