Latest News :

ரஜினியை இயக்கும் அளவுக்கு திறமை படைத்தவர் - ஆர்.ஜே.பாலாஜியை புகழ்ந்த பிரபலங்கள்
Sunday June-12 2022

ஆர்.ஜே.பாலாஜி ஹீரோவாக நடித்து, என்.ஜே.சரவணனுடன் இணைந்து இயக்கியிருக்கும் படம் ‘வீட்ல விசேஷம்’. இந்தியில் பிளாக்பஸ்டர் வெற்றி பெற்ற ‘பதாய் ஹோ’-வின் ரீமேக்கான இபப்டத்தை ஜீ ஸ்டுடியோஸ், பேவீவ் புரொஜக்ட்ஸ் நிறுவனம் சார்பில் போனி கபூர் மற்றும் ரோமியோ பிக்சர்ஸ் சார்பில் ராகுல் ஆகியோர் தயாரித்துள்ளனர்.

 

இப்படத்தில் ஆர்.ஜே.பாலாஜிக்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடித்திருக்கிறார். இவர்களுடன் சத்யராஜ், ஊர்வசி, கே.பி.ஏ.சி. லலிதா, பவித்ரா லோகேஷ், விஸ்வேஷ் மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள்.

 

வரும் ஜூன் 17 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமான முறையில் நடைபெற்றது. இதில் இயக்குநர்கள் பி.வாசு, கே.எஸ்.ரவிக்குமார், சுந்தர்.சி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக்கொண்டார்கள். மக்களை மகிழ்விப்பதோடு, திரைத்துறைக்கு லாபகரமான படங்களை இயக்கி வரும் இந்த மூன்று இயக்குநர்களையும் கெளரவிக்கும் வகையில், நிகழ்ச்சியில் அவர்களுக்கு ‘மக்கள் இயக்குநர்’ என்ற பட்டத்தை வழங்கி ‘வீட்ல விசேஷம்’ படக்குழுவினர் மகிழ்ந்தனர்.

 

நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் பி.வாசு, “குடும்பங்களை சென்றடையும் படங்களை அதன் பாணியில் புரோமோஷன் செய்கிறார் பாலாஜி. இது போன்ற படத்திற்கு தயாரிப்பாளரும், அதற்கு உயிர்கொடுக்கும் நடிகர்கள் கிடைத்துவிட்டால் படம் உயிர்பெற்றுவிடும். படத்திற்கு பிளான் என்பது முக்கியமான விஷயம். படத்தின் அனைத்து கூறுகளையும் மனதில் வைத்து படத்தை திட்டமிட்டு எடுக்க வேண்டும். இந்த படத்தில் எனக்கு பிடித்தமான சத்யராஜ் நடித்துள்ளார். அதுபோக நடிப்பு ராட்சசி நடிகை ஊர்வசி நடித்துள்ளார். ஊர்வசி தன்னுடன் நடிக்கும் அனைத்து நடிகர்களின் வசனங்களையும் மனதில் வைத்து அதற்கேற்றார் போல், மற்றவர்க்கு உதவுவார், அத்தோடு சரியாக ரியாக்ட்டும் செய்வார்.  சத்யராஜ் நடிப்பதற்காக பல கஷ்டங்களை அனுபவித்து, பெரிய அர்பணிப்புடன் வேலை செய்வார். அதனால் தான் அவருடைய பல கதாபாத்திரம் இப்போதும் நின்று பேசுகிறது. தமிழகத்திற்கு வந்து இது போன்ற படங்களை தயாரிக்கும் போனி கபூருக்கு நன்றி.  இந்த படத்தின் வெற்றி எங்கள் படத்தை விட மிகப்பெரிய வெற்றியடைய வேண்டும் என்று வாழ்த்துக்கிறேன்.“ என்றார்.

 

இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் பேசுகையில், “நாங்கள் எடுத்த பழைய படங்களை நியாபகம் வைத்து எங்களை அழைத்தது படக்குழுவின் பெருந்தன்மை. பாலாஜியின் உழைப்பு மிகப்பெரியது, பல படங்களில் காமெடியாக நடித்து, பின்னர் ஹீரோவாகி, இயக்குனராகவும் மாறியுள்ளார். ஒரு கதையை பார்வையாளர்களுக்கு எப்படி சொன்னால் பிடிக்கும் என்பதை தெரிந்து செய்பவர் பாலாஜி. இந்த படத்தின் ரீமேக் உரிமயை பல நாள் முன்னாடி நான் கேட்டிருந்தேன், ஆனால் அது நடக்கவில்லை. இந்த படத்தை பார்க்க நான் ஆர்வமாக இருக்கிறேன். படத்தின் பாடல் மற்றும் டிரைலர் நன்றாக இருக்கிறது. படம் பெரிய வெற்றியடைய நான் வாழ்த்துகிறேன்.” என்றார்.

 

இயக்குனர் சுந்தர்.சி பேசுகையில், “நான் அறிமுக படுத்திய பாலாஜி நடிகராகி இப்போது இயக்குனராக மாறி இருப்பது எனக்கு சந்தோசமாக இருக்கிறது. பாலாஜியிடம் நல்ல கிரியேட்டிவ் திறமை இருக்கிறது. நான் அவர் திறமையை தான் பயன்படுத்தினேன். அவர் இப்போது அவரது திறமையை வெளிக்காட்டியுள்ளார். இந்தியை விட பல திறமையான நடிகர்கள் இந்த படத்தில் உள்ளனர். அதனால் இந்த படம் மிகப்பெரிய வெற்றியடையும். படத்தின் டிரைலர் மற்றும் பாடல் சிறப்பாக உள்ளது. இந்த படத்திற்கு என் வாழ்த்துக்கள்.” என்றார்.

 

படம் குறித்து ஆர்.ஜே.பாலாஜி பேசுகையில், “நான் இரண்டு, மூன்று வருடங்களாக காத்திருந்த மேடை இது. ஊர்வசி மேடம் இந்தியாவின் சிறந்த நடிகர்களில் ஒருவர். அவர் தொழில்நுட்பம், எதிரில் நடிப்பவர்கள், கதை எல்லாவற்றையும் மனதில் வைத்து நடிப்பை வெளிப்படுத்துபவர். அவருடன் பணிபுரிந்தது மகிழ்ச்சி இந்த படத்தில் ஆடியோ வெளியீட்டுற்கு வந்த அனைவருக்கும் படக்குழு சார்பாக நன்றிகள்.  இந்தியில் பல வெற்றிகளை கொடுத்துவிட்டு, தமிழில் அஜித்குமார் போன்ற பெரிய நடிகர்களை வைத்து தயாரித்துவிட்டு, என்னை வைத்து படம் எடுப்பது மகிழ்ச்சி.  அவருடன் தயாரிப்பாளர் ராகுல் உடைய உழைப்பு அளப்பறியது. இயக்குனர் சரவணன் தான் இந்த படத்தின் முதுகெலும்பு. எங்களுடைய புரிதல் தான் எங்களை இரண்டு படங்களை உருவாக்கவைத்தது. அவர் என்னை பல இடங்களில் தாங்கிபிடித்துள்ளார். நான் தூரத்தில் இருந்து பார்த்த இந்திய சினிமாவின் சிறந்த நடிகர் சத்யராஜ் சாரை இயக்கியது எனக்கு சந்தோசம். அவர் நாம் கேட்பதை அப்படியே கொடுப்பார். தயாரிப்பு நிறுவனத்தில் உள்ள அனைவரும் இந்த படத்தில் பெரிய உழைப்பை கொடுத்துள்ளனர். பா விஜய் சார் பாடலை ஒரே இரவில் எழுதி கொடுப்பவர். அவர் இப்போது வரை என் எல்லா படத்திலும் பாட்டு எழுதுகிறார். மக்கள் மனதில் அதிக நாள் நிற்க கூடிய பாடலை நாங்கள் உருவாக்க விரும்பினோம். கிரிஷ் அப்படிப்பட்ட பாடல்களை கொடுத்துள்ளார். சர்பட்டா, கர்ணன் போன்ற படங்களில் படதொகுப்பாளர் செல்வா, அவர் என் படத்தில் தொடர்ந்து பணியாற்றிவருகிறார். இந்த படம் பலரின் முயற்சியில் உருவாகியுள்ளது. வீட்ல விசேஷம், குடும்பத்தோடு தியேட்டரில் பார்க்கும் படமாக இருக்கும்.“ என்றார்.

 

நடிகர் சத்யராஜ் பேசுகையில், “நான் கட்டப்பா போன்ற சீரியஸ் படங்களாக நடித்துகொண்டிருந்த போது, என்னுடைய பழைய கதாபாத்திரத்தை மீண்டும் கொண்டு வர வாய்ப்பில்லாமல் இருந்தது. அதை எனக்கு மீட்டு கொண்டு வர வந்தவர் பாலாஜி. இந்த படத்திற்கு என்னை தேர்ந்தெடுத்த காரணம் என்ன என நான் கேட்ட போது, உங்களுடைய பாவமான நடிப்பு எனக்கு தேவை என்று கூறினார்.  ஊர்வசி மேடம் இந்தியன் சினிமாவிற்கு கிடைத்த வரம். ஊர்வசியை தவிர இந்த கதாபாத்திரத்தை யாராலும் சிறப்பாக செய்துவிடமுடியாது. அவர்களுடைய நடிப்பு அபாரமானது. அபர்ணா பாலமுரளி உடைய நடிப்பு சூரரை போற்று படத்தில் போல் சிறப்பாக இருந்தது. லலிதா போன்ற திறமை மிகுந்த நடிகர்கள் இந்த படத்தில் நடித்துள்ளனர். அவர்களுடன் நடிப்பது எனக்கு சவாலாய் இருந்தது. ஆர் ஜே பாலாஜி, சரவணன் சிறந்த காம்போ, இருவருக்கும் சிறந்த எதிர்காலம் இருக்கிறது. இந்த படத்தில் பணிபுரிந்த தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரும் இளைஞர்கள். தயாரிப்பாளர் ராகுல், மேனேஜர் விக்கி இந்த படம் சிறப்பாக உருவாக காரணம்.  நான் இந்த படம் சூப்பர் ஹிட் ஆக வாழ்த்துகிறேன்.“ என்றார்.

 

நடிகை ஊர்வசி பேசுகையில், “என்னுடைய மதிப்பை எனக்கு அதிகமாக ஞாபகப்படுத்தும் நபர் பாலாஜி. நான் பொதுவாக பல நிகழ்ச்சிகளுக்கு போவதில்லை. பாலாஜி இந்த நிகழ்ச்சிக்கு நான் வந்தே ஆக வேண்டும் என்று உறுதியாக இருந்தார். இந்த படம் பல நாட்களாக தமிழ் சினிமாவில் வராமல் இருந்த குடும்பங்களை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. ஒரு நடிகரை புரிந்துகொண்டு, அவர்கள் மேல் முழு நம்பிக்கையையும் வைப்பவர் ஆர் ஜே பாலாஜி. பழைய சத்யராஜ்யை ஆர் ஜே பாலாஜி இந்தப் படத்தில் கொண்டுவந்துள்ளார். இந்த படத்தில் பழைய நடிகர்கள் பலரை நடிக்கவைத்துள்ளார். இந்த படத்திற்கு பிறகு ரஜினி சாரை இயக்கும் அளவிற்கு திறமை உள்ளவர் ஆர் ஜே பாலாஜி. அபர்ணா பாலமுரளி சிறப்பாக நடிப்பை வெளிப்படுத்தும் நடிகை நன்றாக நடித்துள்ளார். பட்ஜெட்டையும், வசூலையும் மனதில் வைத்து படத்தை இந்த இயக்குனர்கள் உருவாக்குகிறார்கள். படத்திற்கு என் வாழ்த்துகள்.“ என்றார்.

 

இசையமைப்பாளர் கிரிஷ் கோபால கிருஷ்ணன் பேசுகையில், “ஹாரர், திரில்லர் படங்களுக்கு இசையமைத்து கொண்டிருந்த என்னை கமர்சியல் திரைப்படங்களுக்கு இசையமைக்கும் படி மாற்றிய பாலாஜிக்கு நன்றி. எங்களுக்குள் சரியான கனெக்ட் இருந்தது. இந்த தலைமுறைக்கு ரசிக்கும்படியான குரல்களை கொண்ட பாடகர்களை இந்த படத்தில் பாட வைக்க முடிவுசெய்தோம். அதன்படியே உருவாக்கினோம்.  பாலாஜி இந்த படத்தில் பாடியுள்ள பாடல் சிறப்பாக வந்துள்ளது. விஸ்வாசம் படத்தில் வரும் கண்ணான கண்ணே பாடல் போன்ற ஒரு பாடலை சித் ஶ்ரீராம் பாடியுள்ளார். படம் சிறப்பாக வந்துள்ளது. அனைவரும் பார்த்து ரசிக்கும்படியான படமாக இது இருக்கும். “ என்றார்.

 

தயாரிப்பாளர் போனி கபூர் பேசுகையில், “நான் தயாரிப்பாளராக அறிமுகமான படம் ஒரு ரீமேக்காக உருவானது தான். நான் தமிழ் திரைப்பட கலைஞர்களுடன் படம் எடுக்க நினைத்தேன். தமிழ் கலைஞர்களுடைய ஒழுக்கங்களை நான் கேட்டு வியந்திருக்கிறேன். நான் தமிழில் வெற்றியடைந்த பல திரைப்படங்களை இந்தியில் ரீமேக் செய்துள்ளேன். என் குடும்ப வாழ்கையும், தொழிலும் எப்போதும் தென்னிந்தியாவுடன் தொடர்பில் இருக்கும். தென்னிந்தியா என் வாழ்வில் எப்போதும் தொடர்பில் இருக்கும். ஶ்ரீதேவி, ஊர்வசி பற்றி எப்போதும் கூறுவார். அவர் சிறந்த நடிகை என்று ஶ்ரீதேவி கூறுவார், நானும் அதை ஒத்துக்கொள்வேன்.  அவர் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். அவர் தான் இந்த படத்தின் முதுகெலும்பு. நான் தமிழ்படங்களை தயாரிப்பதில் மகிழ்ச்சி. நான் நிறைய தமிழ்படங்களை தயாரிக்க ஆர்வமாய் உள்ளேன். பாலாஜி சிறந்த படமாக வீட்ல விஷேசம் படத்தை உருவாக்கியுள்ளார். அவர் சிறந்த நடிகர்களை தேர்ந்தெடுத்துள்ளார். இந்த படம் பெரிய பிளாக்பஸ்டராக மாறும்.“ என்றார்.

 

இயக்குனர் என்.ஜே.சரவணன் பேசுகையில், “எங்களுக்கு இந்த படத்தை இயக்க வாய்ப்பளித்த போனிகபூர், ராகுலுக்கு நன்றி. இந்தி படத்தை பார்த்த பிறகு இதை தமிழில் எப்படி உருவாக்க போகிறோம் என்ற எண்ணத்தை போக்க எங்களுக்கு இருந்தவர் ஊர்வசி. நான் பார்த்து வியந்த சத்யராஜ் அவர்களை இயக்குவது எனக்கு மகிழ்ச்சி. எங்கள் படக்குழு எங்களுக்கு பெரிய ஒத்துழைப்பை கொடுத்துள்ளனர்.நாங்கள் பெருமைப்படும் ஒரு படத்தை உருவாக்கியுள்ளோம் என்ற மகிழ்ச்சியில் இருக்கிறோம்.“ என்றார்.

 

கார்த்திக் முத்துக்குமார் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு கிரிஷ் கோபாகிருஷ்ணன் இசையமைத்துள்ளார். ஆர்.ஜே.பாலாஜி வசனம் எழுத, செல்வா ஆர்.கே படத்தொகுப்பு செய்துள்ளார். விஜயகுமார் கலையை நிர்மாணித்துள்ளார்.

Related News

8306

தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த படமாக ‘பாட்டல் ராதா’ இருக்கும் - இயக்குநர் அமீர் நம்பிக்கை
Sunday January-19 2025

அறிமுக இயக்குநர் தினகரன் சிவலிங்கம் இயக்கத்தில், குரு சோமசுந்தரம் கதையின் நாயகனாக நடித்திருக்கும் படம் ‘பாட்டல் ராதா’...

’குடும்பஸ்தன்’ பார்வையாளர்களுக்கும் பல வழியில் கனெக்ட் ஆகும் - நடிகர் மணிகண்டன்
Sunday January-19 2025

சினிமாக்காரன் எஸ். வினோத்குமார் தயாரிப்பில் இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில் நடிகர்கள் மணிகண்டன், ஷான்வி நடித்திருக்கும் ‘குடும்பஸ்தன்’ திரைப்படம் இந்த மாதம் 24ஆம் தேதி திரையரங்கில் வெளியாகிறது...

’கண்ணப்பா’ படத்தை நியூசிலாந்தில் படமாக்கியது ஏன்? - நடிகர் விஷ்ணு மஞ்சு விளக்கம்
Sunday January-19 2025

ஏ.வி.ஏ எண்டர்டெயின்மெண்ட் மற்றும் 24 ஃபிரேம் பேக்டரி நிறுவனங்கள் சார்பில் பிரபல நடிகர் மோகன் பாபு தயாரித்திருக்கும் பிரமாண்ட சரித்திர காவியம் ‘கண்ணப்பா’...

Recent Gallery