Latest News :

’ராக்கெட்ரி : தி நம்பி எஃபெக்ட்’ படத்தின் மூலம் இயக்குநரானது ஏன்? - நடிகர் மாதவன் பதில்
Thursday June-23 2022

இஸ்ரோ ராக்கெட் விஞ்ஞானி ஸ்ரீ நம்பி நாராயணனின் வாழ்க்கையில் நடந்த உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள படம் ‘ராக்கெட்ரி : தி நம்பி எஃபெக்ட்’. நடிகர் மாதவன் விஞ்ஞானி ஸ்ரீ நம்பி நாராயணனின் கதாப்பாத்திரத்தில் நடித்திருப்பதோடு படத்தை இயக்கி இயக்குனர் அவதாரம் எடுத்துள்ளார். 

 

ஏற்கனவே உலகம் முழுவதும் கேன்ஸ் உள்ளிட்ட பல சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பை உலகம் முழுவதும் ஏற்படுத்தியுள்ள இப்படம் வரும் ஜூலை 1 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

 

இந்த நிலையில், ‘ராக்கெட்ரி : தி நம்பி எஃபெக்ட்’ படம் குறித்து சென்னையில் பத்திரிகையாளர்களிடம் பேசிய நடிகர் மாதவன், “விக்ரம் வேதா படம் முடிந்ததும், இஸ்ரோ விஞ்ஞானியின் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவங்களை வைத்து திரைப்படம் எடுக்க கூறி எனது நண்பர் பரிந்துரைத்தார். பாகிஸ்தான் ராணுவத்திற்கு தேசிய ரகசியத்தை தெரிவித்ததாக பொய்யாக குற்றம் சாட்டப்பட்டு சிறையில் சித்திரவதை செய்யப்பட்ட அந்த விஞ்ஞானி, சிறையில் இருந்து  வெளியே வந்த பிறகு தான் குற்றமற்றவர் என்பதை நிரூபித்தார். ஆரம்பத்தில், ஜேம்ஸ் பாண்ட் பாணியிலான கதையாக இருக்கிறதே என்ற தோற்றத்தை எனக்குக் கொடுத்ததால், இந்த கதையை எடுக்க நான் உற்சாகமாக இருந்தேன். 

என் அனுமானங்களுடன், நான் நம்பி நாராயணனைச் சந்தித்தேன், அது என் வாழ்க்கையின் பரிமாணத்தையே மாற்றியது. சரியாகச் சொல்வதானால், நம்பி நாராயணனைச் சந்திப்பதற்கு முன்பு இருந்த மாதவன், பின்பு இருந்த மாதவன் என என் வாழ்க்கையை நான் வகைப்படுத்துவேன். அவர் இந்தியாவின் அறிவார்ந்த மனிதர்களில் ஒருவர் என்று எனக்குத் தெரியும், ஆனால் நான் அவரைச் சந்தித்தபோது, அவரிடம் இருந்து ஒரு உணர்வுபூர்மான ஒளியை என்னால் காண முடிந்தது. அவரது உதடுகள் கோபத்தாலும் கவலையாலும் நடுங்கின, அதில் பேசுவதற்கு நிறைய இருந்தது. அவர் தனக்கு இழைக்கப்பட்ட அநீதியை நினைவுகூரத் தொடங்கியபோது, அவர் கிட்டத்தட்ட கொந்தளித்தார், நான் அவரை சமாதானபடுத்த விரும்பினேன். நான் சொன்னேன், “ஐயா, கடந்த காலங்கள் இருக்கட்டும். அனைத்து குற்றச்சாட்டுகளிலிருந்தும் நீங்கள் விடுவிக்கப்பட்டீர்கள். இப்போது கவலைப்பட ஒன்றுமில்லை என்று நினைக்கிறேன்." என கூறினேன். ஆனால் அவர், "ஆம், நான் குற்றமற்றவன் என்று நீதிமன்றம் மற்றும் காவல்துறையால் நிரூபிக்கப்பட்டது உண்மைதான், ஆனால் நீங்கள் எனது பெயரை கூகுள் செய்து பாருங்கள், அதில் 'ஸ்பை' என குறியிடப்பட்டிருப்பதை காண்பீர்கள். எனது குடும்பமும் அப்படி முத்திரை குத்தப்பட்டுள்ளது, அது மீள முடியாததாகவே உள்ளது. அது தான் எனக்கு ஸ்கிரிப்ட் எழுதும் ஆர்வத்தை உடனடியாக ஏற்படுத்தியது. 

 

ஏழு மாதங்களுக்குப் பிறகு, எனது திரைக்கதையோடு அவரைச் சந்திக்க நான் சென்றேன். அப்போது  அவருடைய மற்றொரு அதிர்ச்சியூட்டும் தகவலினால் நான் ஆச்சர்யமடைந்தேன். அவர் தனது சாதனைகளைப் பற்றி பேச ஆரம்பிதார், அது என்னை வியப்பில் ஆழ்த்தியது. ஒரு கட்டத்தில், அவர் பேசும் போது நான் குறுக்கிட்டு, “சார், இது எல்லாம் உண்மையா?” என்று கேட்டேன். அவர், "ஏன் அப்படிச் சொல்கிறீர்கள்?" என கேட்டார். நான் அவரிடம் ஒரு ஏமாற்றத்துடன் கேட்டேன், "நான் ஏழு மாதங்கள் உங்கள் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட ஒரு ஸ்கிரிப்டை எழுதினேன், ஆனால் உங்கள் குறிப்பிடத்தக்க சாதனைகளைப் பற்றி நீங்கள் என்னிடம் எதுவுமே சொல்லவில்லை." . அவர் அதற்கு ஒரு பதிலைக் கொடுத்தார், "நான் அசாதாரணமான எதையும் செய்யவில்லை. நான் வேலை செய்து சம்பளம் வாங்கினேன். “ என்று சாதாரணமாக கூறிவிட்டார். நாட்டில் தேசபக்தி உள்ளவர்களில் இரண்டு பிரிவுகள் இருக்கிறார்கள்.  ஒருவர், தேசபக்தியை முழக்கமிட்டு, வெளிப்படுத்துகிறார், பரப்புகிறார், ஆனால்  மற்றவர் - எழுதப்படாத மற்றும் யாராலும் அறியப்படாத சாதனை செய்த ஹீரோக்கள். நம்பி நாராயணன் போன்றவர்களின் காவிய வாழ்க்கையைப் பற்றி தேசமும் உலகமும் அறிய வேண்டும் என்று நான் விரும்பினேன். அவர் நாகர்கோவிலில் பிறந்த தமிழர் என்பது நம்மில் பலருக்குத் தெரியாது என்பதும், நாட்டின் முன்னேற்றத்திற்கு அவர் ஆற்றிய பங்களிப்பு மிகவும் மகத்தானது என்பதும், பொதுமக்களின் பார்வையில் படாமல் இருப்பதும் ஏமாற்றமாக இருந்தது. அதனால் தான் இந்த படத்தை எடுக்க முடிவு செய்தேன்.

 

திரைக்கதை முழுவதுமாக முடித்துவிட்டு பாலிவுட்டை சேர்ந்த ஒரு இயக்குநரை அனுகினேன். ஆனால் அவருக்கு வேறு ஒரு கமிட்மெண்ட் இருந்ததால் இந்த படத்தில் உடனடியாக பணியாற்ற முடியாது என்று சொல்லிவிட்டார். ஆனால், இப்படி ஒரு படத்தை மக்களுக்கு கொடுப்பதில் இனியும் காலதாமதம் பண்ணக்கூடாது என்பதற்காக நானே இயக்க முடிவு செய்தேன்.

 

அதேபோல் இப்படி ஒரு படத்தை தயாரிக்கவும் அதிகம் பேர் முன் வர மாட்டார்கள். ஆனால், இந்த கதை மக்களுக்கு தெரிய வேண்டிய அவசியமான ஒன்று என்று எனக்கு தெரியும், அதனால் நானே படத்தை தயாரிக்கவும் முடிவு செய்தேன். என் சக்தி மீறிய பட்ஜெட்டில் படம் தயாரிக்கப்பட்டாலும், இப்படி ஒரு படத்தை தயாரித்திருப்பது எனக்கு பெருமையாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறது.” என்றார்.

 

நடிகர் மாதவன் திரைப்படத்தில் வரும் நம்பி நாராயணன் கதாபாத்திரத்திற்காக  தனது உடலில் உருவாக்கிய மாற்றத்தின் சில படங்கள் மற்றும் காட்சிகளை திரையிட்டு, ஊடகங்கள் மற்றும் பத்திரிகையாளர் கூட்டத்தை ஆச்சரியப்படுத்தினார். அவர் வயதான தோற்றத்தை பெறுவதற்காக தனது பற்களை மறுசீரமைத்தார், மேலும் அவர் அந்த தோற்றத்திற்காக தொப்பை வரவைத்து காட்சிகளை எடுத்ததை பற்றியும் பகிர்ந்துகொண்டார். மேலும், வெறும் 14 நாட்களில் அவர் உடல் எடையைக் குறைத்து புத்துணர்ச்சி அடைந்ததைக் காட்டும் படத்தை காண்பித்து,  கூட்டத்தினரிடம் இருந்து பாராட்டுகளைப் பெற்றார்.

 

‘ராக்கெட்ரி’ திரைப்படத்தை எழுதி இயக்குவது மட்டுமின்றி, சரிதா மாதவன், வர்கீஸ் மூலன், விஜய் மூலன் ஆகியோருடன் இணைந்து ஆர்.மாதவன் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார். சாம் சிஎஸ் பின்னணி இசையமைத்துள்ளார், சிர்ஷா ரே ஒளிப்பதிவு செய்துள்ளார், பிஜித் பாலா படத்தொகுப்பைக் கவனித்துள்ளார்.

 

இஸ்ரோ விண்வெளி விஞ்ஞானி நம்பி நாராயணின் உறுதியான போராட்டம், மற்றும் வெற்றியின் கதையை படம்பிடித்து காட்டும்,  “ராக்கெட்ரி - தி நம்பி எஃபெக்ட்”, இந்தி, தமிழ் மற்றும் ஆங்கிலம் உள்ளிட்ட பல மொழிகளில் ஒரே நேரத்தில் படமாக்கப்பட்டது. ஜூலை 1 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகும் இப்படம் தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளிலும் வெளியாகிறது.

 

பிரம்மாண்டமான அளவில் தயாரிக்கப்பட்டுள்ள இப்படம் இந்தியா, பிரான்ஸ், கனடா, ஜார்ஜியா மற்றும் செர்பியா ஆகிய நாடுகளில் படமாக்கப்பட்டுள்ளது. ஃபிலிஸ் லோகன், வின்சென்ட் ரியோட்டா மற்றும் ரான் டோனாச்சி போன்ற புகழ்பெற்ற சர்வதேச நடிகர்களுடன், இந்திய சூப்பர் ஸ்டார்களான ஷாருக்கான் மற்றும் சூர்யா ஆகியோர் சிறப்புத் தோற்றங்களில் நடித்துள்ளனர்.

 

டிரைகலர் பிலிம்ஸ், வர்கீஸ் மூலன் பிக்சர்ஸ் மற்றும் 27த் இன்வெஸ்ட்மெண்ட்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கும் ’ராக்கெட்ரி : தி நம்பி எஃபெக்ட்’ திரைப்படத்தை இந்தியாவில் யு.எப்.ஓ மூவிஸ் மற்றும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனங்கள் இணைந்து வெளியிட, யாஷ் ராஜ் பிலிம்ஸ் மற்றும் பாரஸ்பிலிம் கோ. ஆகிய நிறுவனங்கள் இப்படத்தை சர்வதேச அளவில் வெளியிடுகிறது.

Related News

8330

தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த படமாக ‘பாட்டல் ராதா’ இருக்கும் - இயக்குநர் அமீர் நம்பிக்கை
Sunday January-19 2025

அறிமுக இயக்குநர் தினகரன் சிவலிங்கம் இயக்கத்தில், குரு சோமசுந்தரம் கதையின் நாயகனாக நடித்திருக்கும் படம் ‘பாட்டல் ராதா’...

’குடும்பஸ்தன்’ பார்வையாளர்களுக்கும் பல வழியில் கனெக்ட் ஆகும் - நடிகர் மணிகண்டன்
Sunday January-19 2025

சினிமாக்காரன் எஸ். வினோத்குமார் தயாரிப்பில் இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில் நடிகர்கள் மணிகண்டன், ஷான்வி நடித்திருக்கும் ‘குடும்பஸ்தன்’ திரைப்படம் இந்த மாதம் 24ஆம் தேதி திரையரங்கில் வெளியாகிறது...

’கண்ணப்பா’ படத்தை நியூசிலாந்தில் படமாக்கியது ஏன்? - நடிகர் விஷ்ணு மஞ்சு விளக்கம்
Sunday January-19 2025

ஏ.வி.ஏ எண்டர்டெயின்மெண்ட் மற்றும் 24 ஃபிரேம் பேக்டரி நிறுவனங்கள் சார்பில் பிரபல நடிகர் மோகன் பாபு தயாரித்திருக்கும் பிரமாண்ட சரித்திர காவியம் ‘கண்ணப்பா’...

Recent Gallery