எஸ்.ஆர்.ஹர்ஷித் பிக்சர்ஸ் சார்பில் பி.ஆர்.தமிழ் செல்வம் தயாரித்திருக்கும் படம் ‘மெய்ப்பட செய்’. அறிமுக இயக்குநர் வேலன் இயக்கியிருக்கும் இப்படத்தில் அறிமுக நடிகர் ஆதவ் பாலாஜி கதாநாயகனாக நடித்துள்ளார். கதாநாயகியாக புதுமுகம் மதுனிகா நடித்துள்ளார். இவர்களுடன் ராஜ்கபூர், ஆடுகளம் ஜெயபால், ஓ.ஏ.கே.சுந்தர், பெஞ்சமின், ஞான பிரகாசம், சூப்பர் குட் சுப்பிரமணி, விஜயகணேஷ், தவசி, அட்டு முத்து, சிவா, ராஜமூர்த்தி, எமில் கணபதி, அனிஷ் உள்ளிட பலர் நடித்துள்ளனர்.
பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் குற்றங்கள் தொடர் கதையாகி வரும் நிலையில், பாதிக்கப்பட்டவர்களை சட்டம் எப்படி பார்க்கிறது, அவர்களுக்கான நியாயம் உடனடியாக கிடைக்கிறதா? என்ற பல கேள்விகளோடு உருவாகியிருக்கும் இப்படம் பாலியல் குற்றம் செய்பவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்துவதோடு, பாலியல் குற்றங்கள் குறைவதற்கான வழியையும் சொல்லியிருக்கிறது.
தற்போது சமூகத்திற்கு தேவையான மிக முக்கியமான மெசஜை கமர்ஷியலாக சொல்லியிருக்கும் இப்படத்தை சமீபத்தில் பார்த்த தணிக்கை குழுவினர் பாராட்டி யு/ஆ சான்றிதழ் வழங்கியுள்ளனர். இதையடுத்து படத்தை வரும் ஜூலை 15 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.
இந்த நிலையில், படத்தின் வெளியீட்டு தேதியை அறிவிப்பதற்காக ‘மெய்ப்பட செய்’ படக்குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்தனர். நிகழ்ச்சியில் பேசிய தயாரிப்பாளர் பி.ஆர்.தமிழ் செல்வம், “’மெய்ப்பட செய்’ உண்மையை செய் என்று அர்த்தம். சமூகத்திற்கு தேவையான ஒரு படமாகத்தான் இந்த படம் இருக்கும். தற்போதைய காலக்கட்டத்தில் பெண்களின் பாதுகாப்பு என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாக உள்ளது. நாட்டின் பல இடங்களில் பல வகையில் பெண்கள் பாலியல் துன்பங்களுக்கு ஆளாவது தொடர்ந்துக்கொண்டே இருக்கிறது. இது ஏன்? என்ற கேள்வியை மையப்படுத்தி தான் இந்த படத்தின் கதை இருக்கும்.
பாலியல் ரீதியாக பாதிக்கப்படும் பெண்களுக்கு சட்ட ரீதியாக சரியான நியாயம் கிடைக்கிறதா? என்றால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். அதேபோல், பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கும் சரியான தண்டனை கிடைப்பதில்லை. அதனால் தான் இதுபோன்ற குற்றங்கள் தொடர் கதையாகி வருகிறது. ‘மெய்ப்பட செய்’ படத்தில் சொல்லப்பட்டிருக்கும் விஷயம் இதுவரை எந்த ஒரு தமிழ் படங்களிலும் சொல்லப்படவில்லை. இந்த படம் வெளியானால் நிச்சயம் பாலியல் குற்றங்கள் குறையும். பாலியல் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பதோடு அந்த தண்டனை எப்படி இருக்க வேண்டும், என்பதையும் இந்த படத்தில் சொல்லியிருக்கிறோம்.
இது நான் தயாரித்த முதல் படம், இயக்குநர், ஹீரோ, ஹீரோயின் என அனைவருக்கும் முதல் படம். இருந்தாலும் சமூகத்திற்கு நல்ல கருத்தை சொல்ல வேண்டும் என்பதற்காகவே இந்த படத்தை எடுத்துள்ளோம். அதே சமயம், பாடல்கள், நகைச்சுவை, காதல் காட்சிகள் என கமர்ஷியலாகவும் படம் இருக்கும். பாலியல் குற்றங்களை மையப்படுத்திய கதை என்பதால் முகம் சுழிக்கும்படியான எந்தவித காட்சிகளும் இல்லாமல், குடும்பத்தோடு பார்க்க கூடிய நல்ல மெசஜ் சொல்லும் படமாக இருக்கும்.
இந்த படத்தை தயாரித்து முடித்து வெளியீட்டு பணியில் ஈடுபட்டிருக்கிறோம். ஆனால், புதுமுகங்கள் என்று பல இடங்களில் புறக்கணிக்கிறார்கள். பெரிய நடிகர்கள் இல்லை என்று சொல்கிறார்கள். இப்போது பெரிய நடிகர்களாக இருப்பவர்களும் ஒரு காலத்தில் ஒரு படத்தில் புதுமுகங்களாக நடித்தவர்கள் தானே. எனவே, படத்தின் கதை மற்றும் மேக்கிங்கை பாருங்கள், நடிகர்களை பார்க்காதீர்கள் என்று நான் இந்த இடத்தில் கேட்டுக்கொள்கிறேன். இன்று ஒடிடி-க்கு அதிகம் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். ஆனால், அவர்கள் கூட இப்போது பெரிய நடிகர்கள் உள்ள படங்களை மட்டும் தான் வாங்குகிறார்கள். இதனால் சினிமாவுக்கு புதிய தயாரிப்பாளர்கள் வருவது பாதிக்கப்படும். எங்கள் படத்தை என் நண்பர்கள் அபிலாஷ் மற்றும் பிரசாத் ஆகியோர் வெளியிடுகிறார்கள். தமிழகத்தில் சுமார் 200-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியிடுவதற்கான பணிகளில் ஈடுபட்டிருக்கும். படம் ஜூலை 15 ஆம் தேதி வெளியாகும்.” என்றார்.
இசையமைப்பாளர் பரணி பேசுகையில், “’மெய்ப்பட செய்’ நல்ல கருத்து சொல்லும் கமர்ஷியல் படம். மக்களை ரசிக்க வைப்பதோடு அவர்களுக்கு நல்ல விஷயங்கள் சொல்லும் படங்கள் பெரிய வெற்றி பெற்றிருக்கிறது. இந்த படமும் அந்த வகையில் வெற்றி பெறும். படத்தின் பாடல்களோடு பின்னணி இசைக்காகவும் நிறைய நாட்கள் பணியாற்றியிருக்கிறேன். காரணம், படத்தின் காட்சிகள் அந்த அளவுக்கு மிக அழுத்தமாக இருந்தது. படம் நிச்சயம் வெற்றி பெறும்.” என்றார்.
இயக்குநர் வேலன் பேசுகையில், “தயாரிப்பாளர் தமிழ் செல்வம் சார் அனைத்தையும் சொல்லிவிட்டார். அவர் சொன்னது போல் தைரியமாக மனதில் பட்டதை செய்வதுதான் மெய்ப்பட செய். இந்த படத்தில் மிக முக்கியமான விஷயத்தை சொல்லியிருக்கிறோம். அந்த விஷயம் நடந்தால் நாட்டில் நிச்சயம் தவறு நடக்காது. படம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது.” என்றார்.
கதாநாயகன் ஆதவ் பாலாஜி பேசுகையில், “இந்த படம் எனக்கு முதல் படம். படத்தை பற்றி இயக்குநரும் தயாரிப்பாளரும் சொல்லிவிட்டார். நான் சொல்லப் போவது, அறிமுக நடிகர்களின் படம் என்று புறக்கணிக்கிறார்கள். அது ரொம்பவே வருத்தம் அளிக்கிறது. இந்த படத்திற்காக நாங்கள் அனைவரும் கடுமையாக உழைத்திருக்கிறோம். படத்தை பார்த்தாலே உங்களுக்கு தெரியும். அந்த உழைப்பை பார்க்காமல், நடிகர்களை வைத்து புறக்கணிப்பது சரியில்லை. படத்தை பாருங்கள் பிறகு சொல்லுங்கள்.” என்றார்.
கதாநாயகி மதுனிகா பேசுகையில், “இந்த கதை ரொம்பவே இண்டன்ஷாக இருந்தது. இதை இயக்குநர் என்னிடம் சொன்ன போது நான் பயந்துவிட்டேன். இந்த கதையில் என்னால் நடிக்க முடியுமா? என்று தோன்றியது. ஆனால், இயக்குநர் தான் எனக்கு தைரியம் கொடுத்து உங்களால் நடிக்க முடியும், நடியுங்கள் என்றார். இந்த படத்தில் சொல்லப்பட்டிருக்கும் விஷயம் அனைத்து பெண்களுக்கும் நடந்துக்கொண்டு தான் இருக்கிறது. பலர் பாலியல் தொடர்பான இன்னல்களை அனுபவித்து வருகிறார்கள். நானும் கூட பாலியல் ரீதியான பிரச்சனைகளுக்கு ஆளாகியிருக்கிறேன். அதனால், இந்த படம் அனைவரையும் கனெக்ட் செய்யும்.” என்றார்.
இப்படத்தை பார்த்த தணிக்கை குழுவில் இருந்த பெண்கள் படம் எங்களை கனெக்ட் செய்கிறது, என்று கூறி பாராட்டியதோடு படத்தில் சொல்லப்பட்ட விஷயம் தற்போதைய காலக்கட்டத்திற்கு மிக முக்கியமானது என்று தெரிவித்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
வரும் ஜூலை 15 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் ‘மெய்ப்பட செய்’ படத்தை இவானியா பிக்சர்ஸ் மற்றும் ஃபிளிக்ஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனங்கள் சார்பில் அபிலாஷ் மற்றும் பிரசாத் ஆகியோர் தமிழகம் முழுவதும் வெளியிடுகிறார்கள்.
அறிமுக இயக்குநர் தினகரன் சிவலிங்கம் இயக்கத்தில், குரு சோமசுந்தரம் கதையின் நாயகனாக நடித்திருக்கும் படம் ‘பாட்டல் ராதா’...
சினிமாக்காரன் எஸ். வினோத்குமார் தயாரிப்பில் இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில் நடிகர்கள் மணிகண்டன், ஷான்வி நடித்திருக்கும் ‘குடும்பஸ்தன்’ திரைப்படம் இந்த மாதம் 24ஆம் தேதி திரையரங்கில் வெளியாகிறது...
ஏ.வி.ஏ எண்டர்டெயின்மெண்ட் மற்றும் 24 ஃபிரேம் பேக்டரி நிறுவனங்கள் சார்பில் பிரபல நடிகர் மோகன் பாபு தயாரித்திருக்கும் பிரமாண்ட சரித்திர காவியம் ‘கண்ணப்பா’...