’டி பிளாக்’, ‘தேஜாவு’ என்று ஒரே வருடத்தில் தொடர்ந்து இரண்டு வெற்றிப் படங்களை கொடுத்திருக்கும் அருள்நிதி, நடிப்பில் வெளியாக இருக்கும் அடுத்த படம் ‘டைரி’. இப்படத்தின் மூலம் ஹாட்ரிக் அடிக்கப் போகும் அருள்நிதி, த்ரில்லர் ஜானர் படங்களில் தொடர்ச்சியாக நடித்தாலும், ஒவ்வொரு படமும் வித்தியாசமான கதைக்களங்களை கொண்டிருப்பதால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. அந்த வகையில் ‘டைரி’ திரைப்படமும் சஸ்பென்ஸ் த்ரில்லர் ஜானர் திரைப்படமாக இருந்தாலும், இதுவரை அருள்நிதி நடித்த சஸ்பென்ஸ் த்ரில்லர் ஜானர் படங்களில் இருந்து முற்றிலும் வித்தியாசமான கதையம்சம் கொண்ட படமாக இருப்பதோடு, மிகப்பெரிய பட்ஜெட் படமாகவும் உருவாகியிருக்கிறது.
அறிமுக இயக்குநர் இன்னாசி பாண்டியன் இயக்கியிருக்கும் இப்படத்தை பைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் எல்.எல்.பி நிறுவனம் சார்பில் கதிரேசன் தயாரித்திருக்கிறார். வரும் ஆகஸ்ட் 26 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள இப்படத்தை தமிழகம் முழுவதும் உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடுகிறது. ரெட் ஜெயண்ட் நிறுவனம் வெளியிடும் படங்கள் தொடர்ந்து மிகப்பெரிய வெற்றி பெற்று வருவதால், ‘டைரி’ படத்தின் மீது மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், படம் வெளியீட்டை தொடர்ந்து இன்று பத்திரிகையாளர்களை சந்தித்து பேசிய நடிகர் அருள்நிதி, “தொடர்ந்து நான் சஸ்பென்ஸ் த்ரில்லர் படங்களில் நடிப்பது ஏன்? என்று பலர் என்னிடம் கேட்கிறார்கள். நானே கூட அந்த கேள்வியை என்னிடம் கேட்டுக்கொண்டேன். ஆனால், எனக்கு தொடர்ந்து சஸ்பென்ஸ் த்ரில்லர் ஜானர் கதைகள் வந்தாலும், அவை அனைத்தும் ஒன்றுக்கு ஒன்று வித்தியாசமானதாக இருக்கிறது. அதனால் தான் அந்த கதைகளில் நான் நடிக்கிறேன். அதுமட்டும் அல்லாமல், அவை வெற்றி பெறுவதும் ஒரு காரணம் தான். அதற்காக தொடர்ந்து இப்படியே நடிக்கப்போவதில்லை. இடையில் வேறு ஜானர் படங்களில் நடித்துவிட்டு பிறகு மீண்டும் இதுபோன்ற ஜானரில் வித்தியாசமான கதைகள் வந்தால் நடிப்பேன்.
‘டைரி’ படத்தை பொருத்தவரை பெரியவர்கள், சிறியவர்கள், இளைஞர்கள், சினிமா ரசிகர்கள், பெண்கள் என்று அனைத்து தரப்பினரையும் கவரும் சஸ்பென்ஸ் த்ரில்லர் படமாக இருக்கும். சஸ்பென்ஸ் த்ரில்லர் ஜானர் என்றாலும், காதல், காமெடி, ஆக்ஷன், மாஸ் என அனைத்தும் இந்த படத்தில் இருக்கிறது. எனது சினிமா பயணத்தில் முக்கியமான படமாக மட்டும் இன்றி பெரிய படமாகவும் ‘டைரி’ இருக்கும். இந்த படத்தில் நடித்திருக்கும் அனைத்து நடிகர்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. சிறிய கதாப்பாத்திரத்தில் நடித்தவர்கள் கூட ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் அளவுக்கு கதையும், காட்சிகளும் இருக்கிறது.
தயாரிப்பாளர் கதிரேசன் தயாரித்த ‘ஆடுகளம்’ மற்றும் ‘ஜிகர்தண்டா’ படங்கள் எப்படி பெரிய வெற்றி பெற்றதோ அதுபோல் ‘டைரி’ படமும் மிகப்பெரிய வெற்றி பெறும், அந்த அளவுக்கு படத்தை பிரம்மாண்டமாக கதிரேசன் தயாரித்திருக்கிறார். படத்தில் ஏகப்பட்ட கிராபிக்ஸ் காட்சிகள் இருக்கிறது. ஆனால், அவை கிராபிக்ஸ் காட்சிகள் என்று தெரியாது. அந்த அளவுக்கு ஒவ்வொரு காட்சிக்கும் தொழில்நுட்ப ரீதியாகவும் உழைத்திருக்கிறோம்.” என்றார்.
இயக்குநர் இன்னாசி பாண்டியன் படம் குறித்து கூறுகையில், “நான் ஊட்டியில் நான்கு வருடங்கள் படித்தேன். அப்போது அங்கு நடந்த சம்பவம் ஒன்றை வைத்து தான் இந்த படத்தின் திரைக்கதையை எழுதியுள்ளேன். அருள்நிதி சார் சொன்னது போல் இந்த படம் அனைத்து தரப்பினருக்கும் பிடிக்கும் சஸ்பென்ஸ் த்ரில்லர் படமாக இருக்கும். இந்த படத்திற்காக அருள்நிதி சார் கடுமையாக உழைத்திருக்கிறார். பயிற்சி காவலர் வேடத்தில் நடித்திருப்பதால் உடல் எடை குறைத்து நடித்தார். தொடர்ந்து சஸ்பென்ஸ் த்ரில்லர் ஜானர் படங்களில் அருள்நிதி சார் நடித்தாலும், அந்த ஜானருக்கு ஏற்ற சரியான தேர்வாக அவர் இருக்கிறார். அதனால் தான் அவர் நடிக்கும் இதுபோன்ற படங்கள் தொடர் வெற்றியை பெறுகிறது. அந்த வரிசையில் ‘டைரி’ நிச்சயம் அருள்நிதி சாருக்கு பெரிய வெற்றி படமாக அமையும்.” என்றார்.
தயாரிப்பாளர் கதிரேசன் பேசுகையில், “அருள்நிதியை வைத்து படம் எடுக்க வேண்டும் என்று நான் யோசிக்கவில்லை. ஒரு முறை அவருடன் சாதாரணமாக பேசிக்கொண்டிருந்தேன். அவர் மிக சாதாரணமாக பழகினார். எனக்கே அது ஆச்சரியமாக இருந்தது. இவ்வளவு பெரிய குடும்பத்தை சேர்ந்த இவர் இவ்வளவு எளிமையாக பழகுகிறாரே, என்று நினைத்தேன். பிறகு தான் நாம் சேர்ந்து ஒரு படம் பண்ணலாம் என்று பேசினோம். நல்ல கதை அமைந்தால் நிச்சயம் செய்யலாம் என்று சொன்னேன். அதற்காக பல கதைகள் கேட்டு வந்தேன், இறுதியாக இன்னாசி பாண்டியனின் கதை பிடித்திருந்ததால் இந்த படத்தை செய்தோம். இயக்குநரும், ஹீரோவும் சொன்னது போல் வித்தியாசமான் சஸ்பென்ஸ் த்ரில்லர் படம் என்பதை விட பெரியவர், சிறியவர் என அனைத்து தரப்பினருக்கும் பிடித்த சஸ்பென்ஸ் த்ரில்லர் படமாக ‘டைரி’ இருக்கும்.” என்றார்.
இதில் அருள்நிதிக்கு ஜோடியாக பவித்ரா மாரிமுத்து நடித்திருக்கிறார். இவர்களுடன் கிஷோர், ஜெயப்பிரகாஷ், தணிகை, தனம், ஷாரா, ஹரினி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். அரவிந்த் சிங் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு ரோன் ஈத்தன் யோஹன் இசையமைத்திருக்கிறார்.
ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷ்னல் சார்பில் நடிகர் கமல்ஹாசன் தயாரிப்பில், சிவகார்த்திகேயன் நடிப்பில், ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘அமரன்’...
‘கப்பேலா’ படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் முஹம்மது முஸ்தபா, இயக்கத்தில் உருவாகியிருக்கும் ஆக்ஷன் திரில்லர் படம் ‘முரா’...
பி.வி.கே ஃபிலிம் ஃபேக்டரி (PVK FILM FACTORY) சார்பில் பா...