’தெனாலி’, ‘கூகுள் குட்டப்பா’ ஆகிய படங்களை தொடர்ந்து இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் தனது ஆர்.கே.செல்லூலாய்ட்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிக்கும் மூன்றாவது திரைப்படம் ‘ஹிட் லிஸ்ட்’. இயக்குநர் விக்ரமனின் மகன் விஜய் கனிஷ்கா ஹீரோவாக அறிமுகமாகும் இப்படத்தை அறிமுக இயக்குநர்கள் சூர்யகதிர் மற்றும் காத்திகேயன் இணைந்து இயக்குகிறார்கள்.
சரத்குமார் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தின் துவக்க விழா பூஜையுடன் இன்று சென்னையில் நடைபெற்றது. இதில் தயாரிப்பாளர்கள் ஆர்.பி.செளத்ரி, சத்யஜோதி தியாகராஜன், பி.எல்.தேனப்பன், சுரேஷ் காமாட்சி, இயக்குநர்கள் ஏ.ஆர்.முருகதாஸ், எழில், எஸ்.ஏ.சந்திரசேகர், கார்த்திக் சுப்புராஜ், லிங்குசாமி, சீனு ராமசாமி, வெற்றிமாறன், பிரபு சாலமன், பாண்டியராஜன், ஆர்.கண்ணன், சரண், ரமேஷ் கண்ணா, பேரரசு, ராஜகுமாரன், நடிகை தேவயானி, நடிகர் ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட ஏராளமான சினிமா பிரபலங்கள் கலந்துக்கொண்டார்கள்.
ஆக்ஷன் காமெடி உள்ளிட்ட அனைத்தும் கலந்த அனைத்து தரப்பினரையும் கவரும் வகையில் கமர்ஷியல் படமாக உருவாக உள்ள இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ளது. படத்தின் நாயகி மற்றும் பிற நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் உள்ளிட்ட விவரங்களை படக்குழு விரைவில் அறிவிக்க உள்ளது.
நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் விக்ரமன், “என்னுடைய படத்தின் பூஜையின் போது கூட நான் இவ்வளவு படபடப்பாக இல்லை. ஆனால், இன்று இருக்கிறேன். அதற்கு காரணம் என் மகன் நடிகராக அறிமுகமாவது தான். கே.எஸ்.ரவிக்குமாருக்கு நான் கடமைப்பட்டு இருக்கிறேன். என் மகனை நடிகனாக அறிமுகப்படுத்துகிறார். ஏற்கனவே வேறு ஒரு படத்தில் அவர் அறிமுகமாக இருந்தது. ஆனால், அந்த படம் நடைபெறவில்லை. உடனே கே.எஸ்.ரவிக்குமார் தைரியமாக ஒரு முடிவு எடுத்து இந்த படத்தை தொடங்கி விட்டார். அவருக்கு நன்றி.” என்றார்.
இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் பேசுகையில், “விஜய் கனிஷ்கா நடிகராக நன்றாகவே தயராகியிருக்கிறார். அவரை வைத்து ஒரு போட்டோ ஷூட் எடுத்திருக்கிறார்கள். அப்போது பத்து நிமிடம் ஓடும் காட்சி ஒன்றை வீடியோ எடுத்திருக்கிறார்கள். அதில் மிக சிறப்பாக நடித்திருக்கிறார். நிச்சயம் நல்ல நடிகராக கனிஷ்கா உருவெடுப்பார்.
தெனாலி படத்தை தயாரித்து 20 வருடங்களுக்கு பிறகு தான் ‘கூகுள் குட்டப்பா’ படத்தை தயாரித்தேன். அந்த படம் தியேட்டரில் சரியாக ஓடவில்லை என்றாலும், ஒடிடி தளத்தில் நல்லா போய்க்கொண்டு இருக்கிறது. அதேபோல, இந்தி டப்பிங் உள்ளிட்ட மற்ற விஷயங்களில் அந்த படம் எனக்கு லாபகரமான படமாகத்தான் இருந்தது. அந்த படத்தின் மூலம் என் உதவியாளர்களை இயக்குநராக்கினேன். இந்த படம் மூலமாகவும் எனது இரண்டு உதவியாளர்களை இயக்குநராக்கியுள்ளேன். இந்த கதை மிக நல்ல கதை. நிச்சயம் அனைத்து தரப்பினருக்குமான, தற்போதைய காலக்கட்டத்திற்கு ஏற்ற படமாக இந்த படம் இருக்கும்.” என்றார்.
படத்தின் நாயகன் விஜய் கனிஷ்கா பேசுகையில், “படப்பிடிப்பு இன்னும் தொடங்கவில்லை. அதனால் படத்தை பற்றி என்னால் பேச முடியாது. எல்லோருக்கும் நன்றி கூறும் ஒரு தருணமாக இதை எடுத்துக்கொள்கிறேன். என்னை ஹீரோவாக்கிய இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் சாருக்கு நன்றி. இந்த தருணத்தில் என் அப்பாவும், அம்மாவும் எவ்வளவு மகிழ்ச்சியாக இருப்பார்கள் என்று எனக்கு தெரியும், அதற்கு காரணம் கே.எஸ்.ரவிக்குமார் சார் தான். இதை நான் என்றுமே மறக்க மாட்டேன். இயக்குநர்கள் சூர்யகதிர், கார்த்திக் ஆகியோருக்கு நன்றி.
எனக்கு நடிப்பு சொல்லிக்கொடுத்த கலைராணி மேடமுக்கு நன்றி, நடனம் சொல்லிக்கொடுத்த தினேஷ் மாஸ்டர், சண்டை சொல்லிக்கொடுத்த பாண்டியன் மாஸ்டர் என அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை சொல்லிக்கொள்கிறேன்.” என்றார்.
அறிமுக இயக்குநர் தினகரன் சிவலிங்கம் இயக்கத்தில், குரு சோமசுந்தரம் கதையின் நாயகனாக நடித்திருக்கும் படம் ‘பாட்டல் ராதா’...
சினிமாக்காரன் எஸ். வினோத்குமார் தயாரிப்பில் இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில் நடிகர்கள் மணிகண்டன், ஷான்வி நடித்திருக்கும் ‘குடும்பஸ்தன்’ திரைப்படம் இந்த மாதம் 24ஆம் தேதி திரையரங்கில் வெளியாகிறது...
ஏ.வி.ஏ எண்டர்டெயின்மெண்ட் மற்றும் 24 ஃபிரேம் பேக்டரி நிறுவனங்கள் சார்பில் பிரபல நடிகர் மோகன் பாபு தயாரித்திருக்கும் பிரமாண்ட சரித்திர காவியம் ‘கண்ணப்பா’...