Latest News :

சுபாஷ்கரன் வரலாற்றில் இடம் பிடித்து விட்டார் - ரஜினிகாந்த் பாராட்டு
Thursday September-08 2022

இந்திய சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான லைகா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் சுபாஷ்கரன் பல பிரம்மாண்ட திரைப்படங்களை தயாரித்து வருகிறார். அதில் முக்கியமான திரைப்படம் மணியரத்னம் இயக்கியிருக்கும் ‘பொன்னியின் செல்வன்’. கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை பலர் திரைப்படமாக எடுக்க முயற்சித்து தோல்வியடைந்த நிலையில், இன்று அது சாத்தியமாகியிருப்பதற்கு மிக முக்கிய காரணம் தயாரிப்பாளர் சுபாஷ்கரன்.

 

கற்பனையையும், காட்சியையும் யார் வேண்டுமானாலும் உருவாக்கலாம் ஆனால், அதை திரையில் கொண்டு வர பொருளாதாரம் என்பது மிக முக்கியம். அதுவும் தமிழ் சினிமாவில் இவ்வளவு பெரிய பொருட்ச்செலவில் படம் தயாரிப்பது என்பது முடியாத காரியமாக இருந்த நிலையில், தன்னால் முடியும் என்று நிரூபித்திருக்கிறார் தயாரிப்பாளர் சுபாஷ்கரன்.

 

ஏ.ஆ.ரஹ்மான் இசையமைத்திருக்கும் ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் பாடல்கள் மற்றும் முன்னோட்டம் வெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரம்மாண்டமான முறையில் நடைபெற்றது. இதில் நடிகர்கள் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக்கொண்டார்கள்.

 

நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் பேசும் போது, ‘பொன்னியின் செல்வன்’ படத்தை எடுத்து சுபாஷ்கரன் வரலாற்றில் இடம் பிடித்துவிட்டார், என்று பாராட்டினார். தொடர்ந்து பேசிய அவர், “பொன்னியின் செல்வன் கதையை அப்போது வாங்க பெரிய கூட்டம் இருந்தது. அப்போது இந்த கதையை எடுக்க முடியவில்லை. பார்ட் 1, பார்ட் 2 என்று அப்போது கிடையாது. 

 

சுபாஸ்கரன் இந்த மாதிரி படத்தை எடுத்து வரலாற்றில் இடம் பிடித்துள்ளார். லண்டனில் வசிக்கும் சுபாஸ்கரன், ஒரு கால் செய்து UK பிரதமரை சந்திக்க முடியும். அந்த மாதிரி செல்வாக்கில் உள்ள அவர் இந்த படத்தை இங்கே எடுக்க காரணம் மணிரத்னம் என்னும் அசுரத்தனமான இயக்குநர் என்ற நம்பிக்கை தான்.பாம்பேயில் பெரிய ஜாம்பவான் எல்லாம் மணிரத்னம் வந்தால் எழுந்து நிற்பார்கள். அவரால் மட்டுமே இந்த படத்தை எடுக்க முடியும், முடிந்தது. 

 

தளபதி படம் பண்ணும் போது நடந்த சில விஷயங்களை பகிர்ந்து கொள்கிறேன். அப்போது ஹிந்தி படத்தில் நடித்து கொண்டிருந்தேன். அதன் பிறகு இந்த படத்தில் நடிக்க ஆரம்பித்தேன். மணி சாருடன் முதல் காம்பினேசன். முதல் நாள் படபிப்புக்கு சென்று, நல்லா பளிச்சின்னு மேக்கப் போட சொன்னேன். ஏன்னா..மம்முட்டி ஆப்பிள் நிறம் போல் இருப்பார். நான் கருப்பாக இருந்தேன். 

 

Ponniyin Selvan Audio and Trailer Launch

 

என் ஸ்டைலில் மேக்கப் போட்டுக் கொண்டு காஸ்டியுமை கொண்டு வர சொன்னேன். எனக்கு லூசா பேண்ட், பனியன், சப்பல் கொடுத்தார்கள். அதெல்லாம் வேண்டாம் என்று சொல்லி. நான் வழக்கமாக அணியும் பேண்ட், சர்ட் அப்புறம் நான் போட்டிருந்த வாக்கிங் ஷூ அணிந்து கொண்டு படபிடிப்பு தளத்துக்கு போனேன். மணி சார் என்னை பாத்ததும், என்ன இன்னும் டிரஸ் சேஞ்ச் பண்ணலையா, பண்ணிட்டு வந்திருங்ன்னு சொன்னார். மாத்தியாச்சி சார், இதுதான்னு என்று சொன்னேன். அவரும் சரின்னு சொல்லிட்டு, அவர் டெக்னீஷியன்ஸ் கூட டிஸ்கஸ் பண்ணிகிட்டிருந்தார். ரொம்ப நேரமாச்சி, வெயிட் பண்ணிகிட்டே இருந்தேன். ஷூட்டிங் ஆரம்பிக்கவே இல்ல.  முதல் நாள் ஷூட்டிங் ஷோபனா கூட, ஷோபனா எல்லாரையும் கலாய்க்கிற பார்ட்டி. அவர்கிட்ட கேட்டா சரியா தெரியும்ன்னு நினைச்சி, என்ன நடக்குது.. இன்னும் ஒரு காட்சி கூட ஆரம்பிக்கவே இல்லன்னு அவர்கிட்ட கேட்டேன். அவரும் விசாரிச்சிகிட்டு வந்து.. என்னாச்சி.. டைரக்ட்டருக்கும் உங்களுக்கும் ஏதாவது பிரச்னையா..  இன்னைக்கு ஷூட்டிங் முதல் நாள்.. வந்ததுக்கு ஷூட்டிங் முடிச்சி அனுப்பி வைச்சிகிட்டு.. அப்புறம் ஹீரோவா கமல போட்டுடலாம்ன்னு பேசிகிட்டிருக்காங்கன்னு சொன்னதும்.,அப்பதான் புரிஞ்சது.. நம்ம இஷ்டத்துக்கு மேக்கப் டிரஸ், ஷூவெல்லாம் போட்டு கிட்டு வந்ததுன்னு.. தெரிஞ்சது. முதல் நாளே என்ங்கிட்ட இதெல்லாம் சொல்லி எப்படி புரிய வைக்க.. அதுக்கு ஹீரோவை மாத்திடலாம் என்பதை மணி சொல்ல  கேள்விபட்ட பிறகு .. அப்புறம் போய் அவங்க சொன்னபடி எல்லாத்தையும் மாத்தி கிட்டு வந்து நடிச்சேன். அப்படி மணி சார் ஒரு கண்டிஷனான இயக்குநர். 

 

இப்படி மூணு நாள் ஷூட்டிங் போய்கிட்டிருக்கு. நம்ம எப்பவுமே ஒவ்வொரு காட்சியிலுமே எப்படி நடிக்கணும்ன்னு ஒரு 'டெம்ப்ளேட்'  வெச்சுருப்போம். இதிலேயும் அப்படிதான் நடிச்சிகிட்டிருந்தேன். ஒரு காட்சியில் நடித்துக் கொண்டிருந்தேன். இன்னும் பீல்.. கொடுங்கன்னு திரும்ப திரும்ப சொல்லிகிட்டேயிருந்தார். இதுக்கமேல என்ன பீல் பண்ண.. நாம தான் ஒரு டெம்ப்ப்ளேட் வைச்சிருக்கோமே..அப்படிதான் நடித்து முடிச்சேன்.  நான் அப்போ நடிச்சிகிட்டிருந்ததெல்லாம், தூக்குடா.. அடிடா.. அப்படிதான். எப்படியோ அன்னைக்கு ஷூட்டிங் முடிந்தது. 

 

தினமும் இது இப்படியே போய்கிட்டிருந்தா சரியா வராதுன்னு நினைச்சி.. கமலுக்கு போன் பண்ணி.. , 10 டேக்.. 12 டேக்கெல்லாம் எடுக்கிறாரு.. இன்னும் கொஞ்சம் பீல் பண்ணி நடிக்க சொல்றாரு.. அப்படி நடந்ததை எல்லாம் சொன்னேன். 

மணி படம் நீங்க நடிக்கும் போதே நான் நினைச்சேன். சரியா மாட்டுனேங்களா.. மணிகிட்ட நான் எவ்வளவு அனுபவிச்சிருப்பேன்.. அப்படின்னார். சரி இப்போ என்ன பண்ணலாம்ன்னு கேட்டேன். ஒண்ணு பண்ணுங்க.. எப்படி நடிக்கணும்ன்னு அவரையே நடிச்சி காட்ட சொல்லி, அதை அப்படியே மனசுல ஏத்திகிட்ட மாதிரி பொய்யா அதை அப்படியே நடிச்சிருங்க. என்று சொன்னார். நானும் கமல் சொன்னது மாதிரி மணிகிட்ட நடிச்சி காட்ட சொல்லி.. அதை அப்படியே தம்பிடிச்சு கிட்டு அங்க இங்குமா நடந்து கிட்டு.. பெருசா பீல் பண்ணின மாதிரி பொய்ய சொல்லி தான் மணிகிட்ட நடிச்சு முடிச்சேன்.

 

நான் புத்தகம் நிறைய படிப்பேன். ஆனா 300 பக்கங்களுக்கு மேல இருந்தா.. படிக்கவே மாட்டேன். எல்லாரும் பொன்னியின் செல்வன் புத்தகத்தை படித்தீர்களா என்று கேட்டார்கள். நிறைய பக்கம் இருந்தால் படிக்க மாட்டேன். பொன்னியின் செல்வன் கதையில் உள்ள வந்திய தேவன் கதாப்பாத்திரத்தை யார் நடித்தால் நல்லா இருக்கும் என குமுதம் அரசு கேள்வி பதில் ஒன்றில், ஜெயலலிதா அவர்களிடம் ஒரு வாசகர் கேட்டிருந்தார். அதற்கு,  'ரஜினிகாந்த்' என ஒரு வரியில் பதில் சொல்லியிருந்தார், ஜெயலலிதா அவர்கள். அடடான்னு .. எனக்கு ஒரே குஷியாக ஆனது. அன்று தான் படிக்க ஆரம்பித்தேன். கல்கி இன்று இருந்திருந்தால் அவர் வீடு தேடி போய் காலில் விழுந்து வணங்கி இருப்பேன். 

 

இந்த கதையில், நந்தினி தான் எல்லாமே. பொன்னியின் செல்வி என இதற்கு பெயர் வைத்து இருக்க வேண்டும். இதை வைத்து தான், படையப்பா படத்தில் உள்ள நீலாம்பரி கதாபாத்திரம். 

 

இந்த படத்தை முன்பே மணி பிளான் பண்ணும் போது, நான் இந்த பெரிய பழுவேட்டையர் கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என மணியிடம் கேட்டேன். அவர் ஒப்பு கொள்ளவே இல்லை. இதில் நீங்க நடிச்சீங்ன்னா.. உங்க ரசிகர்களிடம் நான் திட்டு வாங்கவா .. உங்களை இந்த மாதிரு யூஸ் பண்ண நான் விரும்பவில்லை.  வேறு யாராக இருந்தாலும் நான் கேட்டதற்கு வேண்டாம் என்று சொல்ல மாட்டார்கள். ஆனால், மணி வேண்டாம் என சொன்னார். அது தான் மணிரத்னம். hats off.. 

 

பழு வேட்டையராக நான், பொன்னியின் செல்வனாக கமல், ஆதித்யா கரிகாலனாக விஜயகாந்த், குந்தவையாக ஶ்ரீதேவி, நந்தினியாக இந்தி ரேகா, பெரிய பழுவேட்டையர் சத்யராஜ் என்று இந்த மாதிரி கதாபாத்திரங்கள் அப்போது நான் பிளான் பண்ணும் போது எனக்கு தோன்றியது.

 

பொன்னியின் செல்வனில் 40வது அத்தியாயத்தில் தான் அருண்மொழிவர்மன் தோன்றுவார். இந்த படத்தில் அவரின் அறிமுகக் காட்சியை மணி ரத்னம் எப்படி வைத்திருப்பார் என்று பார்க்க நான் ஆவலாக உள்ளேன்.” என்றார்.

Related News

8501

தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த படமாக ‘பாட்டல் ராதா’ இருக்கும் - இயக்குநர் அமீர் நம்பிக்கை
Sunday January-19 2025

அறிமுக இயக்குநர் தினகரன் சிவலிங்கம் இயக்கத்தில், குரு சோமசுந்தரம் கதையின் நாயகனாக நடித்திருக்கும் படம் ‘பாட்டல் ராதா’...

’குடும்பஸ்தன்’ பார்வையாளர்களுக்கும் பல வழியில் கனெக்ட் ஆகும் - நடிகர் மணிகண்டன்
Sunday January-19 2025

சினிமாக்காரன் எஸ். வினோத்குமார் தயாரிப்பில் இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில் நடிகர்கள் மணிகண்டன், ஷான்வி நடித்திருக்கும் ‘குடும்பஸ்தன்’ திரைப்படம் இந்த மாதம் 24ஆம் தேதி திரையரங்கில் வெளியாகிறது...

’கண்ணப்பா’ படத்தை நியூசிலாந்தில் படமாக்கியது ஏன்? - நடிகர் விஷ்ணு மஞ்சு விளக்கம்
Sunday January-19 2025

ஏ.வி.ஏ எண்டர்டெயின்மெண்ட் மற்றும் 24 ஃபிரேம் பேக்டரி நிறுவனங்கள் சார்பில் பிரபல நடிகர் மோகன் பாபு தயாரித்திருக்கும் பிரமாண்ட சரித்திர காவியம் ‘கண்ணப்பா’...

Recent Gallery