இயக்குநர் சுந்தர்.சி-யின் இயக்கத்தில் கலகலப்பான காமெடி மற்றும் காதல் கலந்த குடும்ப திரைப்படமாக உருவாகியுள்ள ‘காபி வித் காதல்’ வரும் அக்டோபர் 7 ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் இன்று வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா இன்று சென்னையில் உள்ள நட்சத்திர ஒட்டலில் பிரமாண்டமான முறையில் நடைபெற்றது. இதில், புதிய நீதிக்கட்சி தலைவரும் இந்தப்படத்தின் தயாரிப்பாளருமான ஏ.சி.சண்முகம், ரெட் ஜெயண்ட் மூவிஸ் செண்பகமூர்த்தி, இயக்குநர் பேரரசு, கவிஞர் சினேகன்ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சியில் இயக்குநர் சுந்தர்.சி பேசுகையில், “நீண்ட நாட்களாகவே பீல் குட் படம் ஒன்றை இயக்க வேண்டும் என ஆசைப்பட்டேன் படம் பார்க்கும் ரசிகர்கள் அனைவரும் படம் முழுவதும் ஒரு புன்சிரிப்புடன் படத்தை பார்க்க வேண்டும் என நினைத்தேன். உள்ளத்தை அள்ளித்தா படத்தை அப்படித்தான் துவங்கினேன். அதில் முதலில் நக்மா தான் கதாநாயகியாக நடிப்பதாக இருந்தது. பின் கதை வேறு விதமாக மாறிவிட்டது. அதற்கடுத்ததாக தீயா வேலை செய்யணும் குமாரு படத்தையும் அதேபோல் பீல்குட் படமாக எடுக்க வேண்டும் என்று தான் ஆரம்பித்தேன். ஆனால் சந்தானம் வந்ததும் படத்தின் ரூட்டே மாறிவிட்டது. இந்த முறை காபி வித் காதல் படத்தில் என்னுடைய ஆசை நிறைவேறிவிட்டது.
ஊட்டி என்பது எல்லோருக்கும் சுற்றுலா தளம் என்றால் எனக்கு மட்டும் அது வேலை பார்க்கும் இடம் என்பது போல மாறிவிட்டது. மூன்று விதமான குணாதிசயங்களுடன் உள்ள மூன்று சகோதரர்கள், அவர்களுக்கு இடையே ஏற்படும் காதல் மற்றும் குடும்ப பிரச்சினை ஆகியவற்றை மையப்படுத்தி இந்த படத்தை உருவாக்கியுள்ளோம். இந்த படத்தில் ஆறு கதாநாயகிகள் நடித்துள்ளனர். நடிகர் யோகி பாபுக்கு இதில் ஸ்டைலிஷான கதாபாத்திரம். இந்த மூன்று கதாநாயகர்களில் தீயா வேலை செய்யணும் குமாரு என்று சொல்ல வேண்டுமென்றால் ஜீவாவை சொல்லலாம்.
இதுவரை நான் பணியாற்றிய நடிகைகளிலேயே சவாலான நடிகை என்றால் அது சம்யுக்தா தான். இந்த படத்தில் அவர் கண் சிமிட்டாமல் நடிக்க வேண்டிய ஒரு காட்சியை படமாக்குவது மிகப்பெரிய சவாலாக இருந்தது. அதேபோல ரைசாவை பார்க்கும்போது யாரிடமோ அட்ரஸ் கேட்டு வந்தவர் போல காட்சியளிப்பார். ஆனால் கேமரா முன் வந்துவிட்டால் அந்த கதாபாத்திரமாகவே மாறிவிடுவார். அம்ரிதாவை பொருத்தவரை நம்மை விட இன்னொரு நடிகைக்கு அதிக காட்சிகள் கொடுக்கிறார்களோ என்கிற எண்ணம் ஓடிக்கொண்டே இருப்பது போல எந்நேரமும் ஒரு சந்தேகத்திலேயே இருப்பார்.
அதேபோல ஆக்சன் படத்தில் ஹீரோக்களுக்கு அடிபடுவது பற்றி கேள்விப்பட்டு இருக்கிறோம் ஆனால் ரொமாண்டிக் படத்தின் கதாநாயகி அடிபடுவது என்பது புதுசாகத்தான் இருக்கும் அது வேறு யாருமல்ல மாளவிகா சர்மா தான். டேமேஜ் ஹீரோயின் என்று கூட சொல்லலாம். அவர் ஒரு நாள் இருந்தாலும் கூட அதுபற்றி எல்லாம் அலட்டிக்கொள்ளாமல் மிகுந்த ஒத்துழைப்பு கொடுத்து நடித்தார் இந்த படத்தில் நடித்த கதாபாத்திரங்களில் முக்கியமாக இடம் பெற்றுள்ள அந்த குழந்தை நட்சத்திரம் தான் படத்தின் திருப்புமுனை கதாபாத்திரம். நானும் யோகிபாபுவும் பேசிக்கொள்ளும் போது கூட அந்த குழந்தையின் அப்பா அம்மா நமக்காகவே பெத்து விட்டு இருக்காங்களோ என்று பேசிக்கொள்வோம்
படத்தில் வரும் அத்தனை கதாபாத்திரங்களையும் இணைக்கும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கதாபாத்திரத்தை மட்டும் எழுதும்போது டிடியை தவிர வேறு யாரையும் யோசிக்கவில்லை, காலில் அடிபட்டு இருந்த நிலையிலும் கூட கஷ்டப்பட்டு நடனமாடினார்” என்றார்.
நடிகர் ஜீவா பேசும்போது, ”சுந்தர் சி சார் படத்தில் நடிக்கும்போது முதல் நாளே நமது டென்சனை குறைத்து விடுவார். எப்படியிருந்தாலும் 45 நாட்களுக்குள் படத்தை முடித்துவிட வேண்டும் என்பதை மனதில் வைத்து செயல்படுவார். அவரது படப்பிடிப்பிற்கு சென்று திரும்பும்போது 100% சந்தோஷத்துடன் திரும்புவோம். எல்லோரும் அழகாக ஒன்றிணைந்து நடித்தாலும் எங்களுக்குள் நடிப்பில் ஒரு போட்டி இருந்து கொண்டுதான் இருந்தது. எனக்கு நிஜத்தில் சகோதரி இல்லை. ஆனால் அப்படி இருப்பது போல நினைத்துக்கொண்டு படத்தில் நடிப்பது ரொம்பவே கஷ்டம். ஆனாலும் அதை சரியாக செய்துள்ளேன்.” என்றார்.
இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா பேசும்போது, ”இந்த படத்தில் மொத்தம் எட்டு பாடல்கள் இருக்கின்றன. பாடல்கள் அனைத்துமே கதையை நகர்த்தும் விதமாகத்தான் இருக்கும். முக்கியமான ஒரு சூழ்நிலையில் கூட சோகமாக இல்லாமல் எனர்ஜி தரும் விதமாக மாற்றம் ஒன்றே மாறாதது என்ற பாடலை உருவாக்கி உள்ளோம். ஆனால் சில நேரங்களில் தாமதமானாலும் கூட சுந்தர் சி முகம் சுளிக்காமல் என்னை வசதியாக பணியாற்ற வைத்தார்.” என்று கூறினார்.
இந்தப்படத்தின் தயாரிப்பாளரான நடிகை குஷ்பு பேசும்போது, ”நான் ஒரு தயாரிப்பாளராக இங்கே இருக்க எனது கணவர் சுந்தர்.சி தான் காரணம். ஒரு தயாரிப்பாளராக சொல்கிறேன் அவரை நம்பி தாராளமாக காசு போடலாம்.. தயாரிப்பாளர்கள் நிம்மதியாக போய் தூங்கலாம்.. இந்த படத்தை 35 நாட்கள் ஊட்டியில் படமாக்கினார்கள். ஒரு நாள் கூட என்னை படப்பிடிப்பிற்கு வா என சுந்தர்.சி அழைத்ததே இல்லை. என்னுடைய திருமணநாள் வருகிறதே என்று நானாக அவரிடம் போன்செய்து கேட்டபின் மூன்று நாட்கள் ஊட்டிக்குச் சென்று படக்குழுவினருடன் தங்கியிருந்தேன்.
இந்த படத்தில் பிரதாப் போத்தன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவர் இந்த நேரத்தில் இல்லாதது மிகுந்த மன வருத்தத்தை தருகிறது. இந்த படத்தில் நான் நடித்த ரம்பம்பம் பாடலை பயன்படுத்தியுள்ளார்கள், ஆனால் அதில் ஆடுவதற்கு என்னை அழைக்கவில்லை. நாளை பாடலை படமாக்க இருக்கிறார்கள் என்றால் சென்னையில் இருக்கும் என்னிடம் அதற்கு முதல் நாள் இந்த பாடலை படமாக்க போகிறோம் என்று கூறினார் சுந்தர்சி. மற்றவர்கள் இதுபற்றி அவரிடம் கேட்டபோது அவங்க ஆடி ஏற்கனவே அந்த பாடலை எல்லாம் பாத்துட்டாங்கல்ல என்று சமாளித்தார்” என தனது கணவர் சுந்தர்.சி பற்றி ஜாலியாக புகார் பத்திரம் வாசித்தார் குஷ்பு.
அவ்னி சினி மேக்ஸ் சார்பில் குஷ்பு மற்றும் பென்ஸ் மீடியா சார்பில் ஏசிஎஸ் அருண்குமார் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தமிழகம் முழுவதும் வெளியிடுகிறது.
பிளான் 3 ஸ்டுடியோஸ் (Plan3 Studios) சார்பில், ரோஜி மாத்யூ மற்றும் ராஜுசந்ரா தயாரிப்பில், ராஜுசந்ரா இயக்கத்தில், தேசிய விருது நாயகன் அப்புகுட்டி நடிப்பில், கிராமத்து பின்னணியில் ஃபேண்டஸி டிராமாவாக உருவாகியிருக்கும் திரைப்படம் “பிறந்த நாள் வாழ்த்துக்கள்”...
இயக்குநர் ஆறுமுக குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ' ஏஸ்' (ACE) திரைப்படத்தில் விஜய் சேதுபதி, ருக்மணி வசந்த், யோகி பாபு, பி...
இயக்குநர் எஸ்.யு.அருண்குமார் இயக்கத்தில், விக்ரம் நடிக்கும் ‘வீர தீர சூரன் - பாகம் 2’ படத்தின் முதல் பாடல் சமீபத்தில் வெளியானது...