Latest News :

அமானுஷ்ய விசயங்களுடன் கூடிய காதல் கதை! - ‘பனாரஸ்’ படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பு அதிகரிப்பு
Tuesday October-25 2022

’கே.ஜி.எப்’ படத்திற்கு பிறகு வெளியாகும் கன்னட திரைப்படங்கள் அனைத்தும் இந்திய அளவில் மிகப்பெரிய வெற்றி பெற்று வருவதோடு, இந்திய திரையுலகத்தின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது. அந்த வகையில், கன்னட திரையுலகின் மற்றொரு பான் இந்திய திரைப்படமாக உருவாகியிருக்கிறது ‘பனாரஸ்’.

 

காதல் படமாக இதுவரை அடையாளப்படுத்தி வந்த ‘பனாரஸ்’ படத்தின் கதைக்களம் பற்றிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது. காசியை கதைக்களமாக கொண்ட இப்படம் அமானுஷ்ய விசயங்களுடன் கூடிய காதல் கதையாக உருவாகியுள்ளது. ஏற்கனவே படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் மூலம் படத்தின் மீது எதிர்பார்ப்பு ஏற்பட்டிருந்த நிலையில், தற்போது கதைக்களம் பற்றிய தகவல் வெளியானவுடன் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

 

இந்த நிலையில், பட வெளியீட்டிற்கு முன் ரசிகர்களின் முன்னிலையில் படத்தினை விளம்பரப்படுத்தும் நிகழ்வு கடந்த சனிக்கிழமையன்று கர்நாடக மாநிலம் ஹூப்ளியில் உள்ள ரயில்வே விளையாட்டு மைதானத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்நிகழ்வில் கன்னட திரை உலகத்தின் 'சேலஞ்சிங் ஸ்டார்' தர்ஷன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இந்த விழாவில் நடன நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. அதற்கு முன் 'பனாரஸ்' படத்தில் இடம்பெற்ற பாடல்களும், படத்தின் முன்னோட்டமும் வருகை தந்திருந்த பார்வையாளர்களுக்கு திரையிடப்பட்டன.

 

நிகழ்ச்சியில் நடிகர் தர்ஷன் பேசுகையில், "பனாரஸ் படத்தை ஏற்கனவே பார்த்திருக்கிறேன். படத்தின் நாயகனும், நண்பருமான ஜையீத் எனக்கு திரையிட்டு காண்பித்தார். தொடக்கத்தில் ஜையீத் பணக்கார தந்தையின் மகன் என்றும், திறமை இல்லாதவர் என்றும் நினைத்தேன். ஆனால் படத்தைப் பார்த்து ஆச்சரியப்பட்டேன். அவர் அற்புதமாக நடித்திருக்கிறார். மேலும் கதை மற்றும் இயக்கம் சிறப்பாக உள்ளது. அதனால் இந்த படம் நிச்சயமாக மாபெரும் வெற்றியைப் பெறும்" என்றார்.

 

படத்தின் நாயகனான ஜையீத் கான் பேசுகையில், "இன்று என்னுடைய வாழ்க்கையில் மிக முக்கியமான நாள். எனது வாழ்க்கையில் முக்கியமான இரண்டு சக்திகள் இங்கே என்னுடன் உள்ளனர். எனது மூத்த சகோதரர் மற்றும் எனது தந்தையைப் போன்ற தர்ஷன் இங்கே இருக்கிறார். தர்ஷன் தொடக்கம் முதலே எனக்கு உறுதுணையாக இருக்கிறார். இந்த தருணத்தில் என்னுடைய தந்தைக்கு வாக்குறுதி ஒன்றை அளிக்கிறேன். அவரை இழிவுபடுத்தும் செயலை நான் ஒருபோதும் செய்ய மாட்டேன் என உறுதியளிக்கிறேன். மேலும் எனது தந்தையினால் தான் இன்று நான் இங்கு நிற்கிறேன். 'பனாரஸ்' படத்தில் பல சிறப்பம்சங்கள் உள்ளன. இந்த படத்திற்காக நான் மிகவும் கடினமாக உழைத்திருக்கிறேன். இயக்குநர் ஜெயதீர்த்தா எனக்காக ஒரு அற்புதமான படைப்பை உருவாக்கியுள்ளார். நவம்பர் மாதம் 4 ஆம் தேதி நாடு முழுவதும் வெளியாகிறது. இந்த படத்தின் மூலம் மக்களின் இதயங்களை வெல்வோம். ஒவ்வொருவரும் இந்த படத்தைப் பார்த்து என்னை ஆசிர்வதிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.” என்றார்.

 

என் கே ப்ரொடக்ஷன்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் திலகராஜ் பல்லால் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கும் 'பனாரஸ்' திரைப்படம் நவம்பர் நான்காம் தேதி அன்று கன்னடம், தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகிறது. தமிழில் சக்தி ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனம் வெளியிடுகிறது.

 

'பனாரஸ்' படத்தில் புதுமுக நடிகர் ஜையீத் கான் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை சோனல் மோன்டோரியோ நடித்திருக்கிறார். இவர்களுடன் நடிகர்கள் சுஜய் சாஸ்திரி, தேவராஜ், அச்யுத் குமார், பர்க்கத் அலி, சப்னா ராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். அத்வைதா குருமூர்த்தி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு பி அஜனீஷ் லோக்நாத் இசையமைத்திருக்கிறார்.

 

கன்னட திரை உலகின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான ஜெயதீர்த்தா இயக்கத்தில் தயாராகி, ரசிகர்களிடத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் ‘பனாரஸ்’ காசியை கதைக்கள பின்னணியாக கொண்டு அமானுஷ்ய விசயங்களுடன் கூடிய காதல் கதை என்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு பல மடங்கு அதிகரித்துள்ளது. 


Related News

8616

அப்புகுட்டி நடிக்கும் ’பிறந்த நாள் வாழ்த்துக்கள்’ விரைவில் வெளியாகிறது
Friday January-17 2025

பிளான் 3 ஸ்டுடியோஸ் (Plan3 Studios) சார்பில், ரோஜி மாத்யூ மற்றும் ராஜுசந்ரா தயாரிப்பில், ராஜுசந்ரா இயக்கத்தில், தேசிய விருது நாயகன் அப்புகுட்டி நடிப்பில், கிராமத்து பின்னணியில் ஃபேண்டஸி டிராமாவாக உருவாகியிருக்கும் திரைப்படம் “பிறந்த நாள் வாழ்த்துக்கள்”...

விஜய் சேதுபதியின் ‘ஏஸ்’படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியானது
Friday January-17 2025

இயக்குநர் ஆறுமுக குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ' ஏஸ்' (ACE) திரைப்படத்தில் விஜய் சேதுபதி, ருக்மணி வசந்த், யோகி பாபு, பி...

ஐந்து நாட்களில் 5 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‘வீர தீர சூரன் - பாகம் 2’ படத்தின் பாடல்!
Friday January-17 2025

இயக்குநர் எஸ்.யு.அருண்குமார் இயக்கத்தில், விக்ரம் நடிக்கும் ‘வீர தீர சூரன் - பாகம் 2’ படத்தின் முதல் பாடல் சமீபத்தில் வெளியானது...

Recent Gallery