Latest News :

‘ஓ மை கடவுளே’ படத்தை விட கூடுதல் தாக்கத்தை ‘நித்தம் ஒரு வானம்’ ஏற்படுத்தும் - நடிகர் அசோக் செல்வன் நம்பிக்கை
Monday October-31 2022

நடிகர் அசோக் செல்வனின் திரையுலக பயணத்தில் மிகப்பெரிய வெற்றிப் படமாக மட்டும் இன்றி மிக முக்கியமான படமாக ’ஓ மை கடவுளே’ அமைந்தது. அப்படத்திற்குப் பிறகு அப்படி ஒரு படத்தில் மீண்டும் எப்போது நடிப்பீர்கள் என்று அவரை பலர் பல தருணத்தில் கேட்டதாகவும், தற்போது அதற்கான பதில் தான் ‘நித்தம் ஒரு வானம்’ படம் என்று அவர் கூறியிருப்பதோடு, ‘ஓ மை கடவுளே’ படம் ஏற்படுத்திய தாக்கத்தை விட அதிகமான தாக்கத்தை ‘நித்தம் ஒரு வானம்’ படம் ஏற்படுத்தும் என்று தெரிவித்துள்ளார்.

 

வரும் நவம்பர் 4 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள ‘நித்தம் ஒரு வானம்’ படத்தின் சிறப்பு நிகழ்ச்சி சென்னை நெக்சஸ் மாலில் நேற்று மாலை மக்கள் முன்னிலையில் நடத்தப்பட்டது.  இந்நிகழ்வில் தயாரிப்பாளர் சாகர், நாயகன் அசோக் செல்வன், நாயகிகள் ரிது வர்மா, ஷிவாத்மிகா ராஜசேகர் ,பாடலாசிரியை கிருத்திகா நெல்சன், பின்னணி இசையமைப்பாளர் தரண் குமார், படத்தொகுப்பாளர் ஆண்டனி, ஒளிப்பதிவாளர் விது அய்யன்னா, கலை இயக்குநர் கமலநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 

Nitham Oru Vaanam

 

நிகழ்ச்சியில் பேசிய நடிகர் அசோக் செல்வன், “ நித்தம் ஒரு வானம் என்னுடைய திரையுலக பயணத்தில் ஸ்பெஷலான திரைப்படம். இது ஒரு மோட்டிவேஷனல் கதை. இந்தப் படத்தில் கடுமையாக உழைக்க வேண்டும் என்ற எண்ணத்தை கதை தான் ஏற்படுத்தியது. ‘ஓ மை கடவுளே’ படம் ஏற்படுத்திய தாக்கத்தைப் போல், அதைவிட கூடுதலாக இந்தப் படம் ஏற்படுத்தும்.

 

இந்தப் படத்தின் படப்பிடிப்பின் போது நான் மட்டுமல்ல ஒட்டுமொத்தப் பட குழுவினரும் அதிசயமான அனுபவம் கிடைத்தது. ரோதங் பாஸ் எனுமிடத்தில் பனி படர்ந்திருக்கும். இந்த இடத்தில் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டு, பட குழுவினர் அனைவரும் அங்கு சென்றோம். அங்கு சென்றவுடன், இது பனி விழும் சீசன் இல்லையென்று தெரிய வந்தது. இயக்குநர் உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரின் முகத்திலும் கவலை ஏற்பட்டது.. சென்னையிலிருந்து புறப்பட்டு இவ்வளவு தொலைவு வந்து விட்டோம். இருந்தாலும் படப்பிடிப்பு நடத்துவோம் என்று நடத்தத் தொடங்கினோம். கோடை காலம் போல் வெயில் வெளுத்து வாங்கியது. எனக்கும், ரிது வர்மாவிற்குமான காட்சிகளைப் படமாக்கத் தொடங்கினோம். சில மணி நேரங்களிலேயே மெதுவாக பனி சாரல் தூறத் தொடங்கியது. 10 ,15 நிமிடத்திற்குள் நாங்கள் எதிர்பார்த்த அளவுக்கு பனி பொழியத் தொடங்கியது. நாங்கள் எங்களுக்குள் ஒருவரை ஒருவர் பார்த்து வியந்து கொள்கிறோம். உணர்வு மேலிட, இயக்குநரின் கண்களில் கண்ணீர் துளிகள் எட்டிப் பார்க்கின்றன. அங்குள்ள மக்கள், ‘இந்த சீசனில் பனி பொழிய தொடங்கி பதினெட்டு ஆண்டுகளாகிவிட்டது’ என்ற தகவலை எங்களிடம் பகிர்ந்து கொள்ளும் போது, நாங்கள் உண்மையில் ஆச்சரியப்பட்டு, அந்த அதிசய அனுபவத்தை உணர்ந்து கொண்டே படப்பிடிப்பை நடத்தினோம். சில தருணங்களில் நாம் ஏதாவது ஒன்றை வேண்டும் என்று விரும்பினால், அதனை இந்த பிரபஞ்சம் வழங்கும் என்பார்கள். அதனை நாங்கள் அந்த தருணத்தில் நிஜமாகவே உணர்ந்தோம்.” என்றார்.

 

Nitham Oru Vaanam

 

இயக்குநர் ரா கார்த்திக் பேசுகையில், ”நித்தம் ஒரு வானம் படத்தின் கதையை எழுதி, தற்போது படம் நிறைவடைந்திருக்கும் வரை ஏழு ஆண்டுகளாகி இருக்கிறது. ‘வாழ்க்கையில் அதிசயம் நடக்கும் காத்திரு’ என்பார்கள். அது என்னுடைய வாழ்க்கையில் நடைபெற்றது. எந்த நோக்கத்தில் இந்த படத்தின் கதையை எழுதினேனோ.. அதனை முழுவதுமாக.. நேர்த்தியாக படைப்பாக உருவாக்கி இருக்கிறேன். நான் படைப்பாளனாக கதையை சொல்லும்போது அதற்கான பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும் என்று நினைப்பேன். நம்மை சுற்றி இருக்கும் உறவினர்கள், நண்பர்கள் என அனைவரிடத்திலும் ஒரு நெருக்கமான பிணைப்பு இருக்கும். அதனை உணர்வுபூர்வமாக திரையில் சொல்ல வேண்டும் என நினைப்பேன். அதனை சொல்லி இருக்கிறேன். இந்த படத்தை பார்த்த பிறகு உங்களுடைய மனதில் குறைந்தபட்சம் ஒரு நிமிடமாவது நேர் நிலையான தாக்கம் ஏற்படும் என உறுதியாக நம்புகிறேன். படம் பார்க்கும் முன் உங்களுடைய மனதில் அழுத்தங்கள் இருந்தாலும், நெருக்கடிகள் இருந்தாலும், அவற்றையெல்லாம் கடந்து இந்த படம் சிறிய அளவிலான மன நிம்மதியையும், ஒரு புன் சிரிப்பையும் உங்களிடத்தில் உண்டாக்கும் என்றும் உறுதியாக நம்புகிறேன்.

 

கதையை இன்பச் சுற்றுலா செல்வது போல் எழுதி விட்டேன். இதனை காட்சி பூர்வமாக உணரும் தயாரிப்பாளரால் தான் தயாரிக்க இயலும். இதனை தயாரிப்பாளர் சாகர் உணர்ந்து முழு ஒத்துழைப்பு அழைத்து தயாரித்திருக்கிறார். கதை சென்னையில் தொடங்கி கொல்கத்தா, சண்டிகர், மணாலி, கேரளா, பொள்ளாச்சி என நீண்ட தூர பயணத்தைக் கொண்டிருக்கிறது. 

 

நேர்மையாக ஒரு படைப்பை வழங்க வேண்டும் என்ற எண்ணத்தில் ‘நித்தம் ஒரு வானம்’ படத்தை உருவாக்கி இருக்கிறோம். இந்த படத்தை பார்வையிட்ட தணிக்கை துறை அதிகாரிகள் எந்த ஒரு வெட்டும் இல்லாமல் யூ சான்றிதழை வழங்கி பாராட்டினார்கள். இந்தத் திரைப்படத்தில் புகைபிடிக்கும் காட்சிகளோ, மது அருந்தும் காட்சிகளோ இடம்பெறவில்லை. அதனால் குடும்பத்துடன் திரையரங்கத்திற்கு வருகை தந்து இந்த படத்தை பார்த்து ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

 

இந்தப் படத்தை குடும்பத்துடன் ஏன் பார்க்க வேண்டும்? என்றால், கடந்த இரண்டு ஆண்டுகளாக இணையம் முழுவதும் மக்கள் ‘எதிர் நிலையான எண்ணங்களை வெல்வது எப்படி?’ என்பதைத்தான் அதிகளவில் தேடி இருக்கிறார்கள். நம்மில் அனைவருக்கும் ஏதேனும் ஒரு வகையிலான எதிர்மறை எண்ணங்கள் இருக்கிறது. மனிதர்களை மனிதர்களாக பார்ப்பதில்லை. முக கவசம் அணிந்து, அணிந்து அசலான முகத்தை தொலைத்து விட்டோம். இத்தகைய நிலையில் யாரேனும் நம்மை உத்வேகம் படுத்த வேண்டும்... நம் தோளில் தட்டி உற்சாகப்படுத்த வேண்டும்... என்ற ஏக்கம், ஆதங்கம் மனதிற்குள் இருக்கிறது. ‌ பணப்பிரச்சனை, மனப்பிரச்சனை இதற்கு இடையில் இந்தப் படத்தை பார்த்துவிட்டு வெளியே வரும்போது, வாழ்க்கை மீது ஒரு சதவீத அளவிலாவது நேர் நிலையான எண்ணத்தை ஏற்படுத்தும் என உறுதியாக நம்புகிறேன்.” என்றார்.

 

Nitham Oru Vaanam

 

படத்தின் தயாரிப்பாளர் சாகர் பேசுகையில், ”கொரோனாத் தொற்றுப் பாதிப்பு முன்னரே இந்த படத்தினைத் தொடங்கத் திட்டமிட்டிருந்தோம். ஆனால் கொரோனாக் காலகட்டத்தின் போது சற்று பயம் ஏற்பட்டது. கடவுளின் அருளால் அனைத்தும் இனிதாக நிறைவடைந்திருக்கிறது. இந்தப் படத்திற்காக இயக்குநர் கார்த்திக் கடுமையாக உழைத்திருக்கிறார். அவருடைய ஏழு ஆண்டு கனவு இது. நாங்கள் பணத்தை மட்டும் முதலீடு செய்திருக்கிறோம். இந்தப் படைப்பை முழுவதும் அவர் தன் தோளில் சுமந்து நிறைவு செய்திருக்கிறார். இந்த திரைப்படம் வெளியாகி வெற்றி பெற்றால், அந்த வெற்றி முழுவதும் இயக்குநர் கார்த்திக்கைத் தான் சாரும். 

 

இந்தப் படத்தில் விளம்பரத்தில் மூன்று கெட்டப்புகளில் நாயகன் அசோக் செல்வன் தோன்றுகிறார். ஆனால் படத்தில் இதை தவிர்த்து நான்காவதாக ஒரு கெட்டப்பில் அசோக் செல்வன் வருகிறார். அது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக இருக்கும். அசோக் செல்வன் படப்பிடிப்பு தளத்தில் வெயில், மழை, பனி என ஒவ்வொன்றிலும் ஈடு கொடுத்து கடுமையாக உழைத்திருக்கிறார். நடிகைகள் ரித்து வர்மா அபர்ணா பாலமுரளி, ஷிவாத்மிகா ராஜசேகர் என மூன்று நடிகைகளும் தங்களது பணிகளை அற்புதமாக வழங்கி இருக்கிறார்கள். ஒளிப்பதிவு, இசை, பின்னனி இசை என அனைத்தும் ரசிக்கும்படி அமைந்திருக்கிறது. காதலும் இசையும் கலந்த ‘நித்தம் ஒரு வானம்’ திரைப்படத்தை திரையரங்குகளில் சென்று ரசிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.” என்றார்.

 

வயாகாம் 18 மற்றும் ரைஸ்ஈஸ்ட் என்டர்ட்டையின்மெண்ட் இணைந்து தயாரித்திருக்கும் திரைப்படம் ‘நித்தம் ஒரு வானம்’. இதில் நடிகர் அசோக் செல்வன் கதையின் நாயகனாக நடிக்க, அவருடன் நடிகைகள் ரிது வர்மா, அபர்ணா பாலமுரளி, ஷிவாத்மிகா ராஜசேகர் ஆகீயோர் இணைந்து நடித்திருக்கிறார்கள். விது அய்யன்னா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு கோபி சுந்தர் மற்றும் தரண் குமார் இணைந்து இசையமைத்திருக்கிறார்கள். 

 

காதலையும், வாழ்வீயலையும் மையப்படுத்தி தயாராகியிருக்கும் இந்த படத்தை அறிமுக இயக்குநர் ரா. கார்த்திக் இயக்கியிருக்கிறார். நவம்பர் 4 ஆம் தேதியன்று வெளியாகும் இந்த படத்தை தமிழகம் முழுவதும் சினிமாக்காரன் எனும் நிறுவனம் வெளியிடுகிறது. 

Related News

8630

சினிமாவில் 20 வருடங்களை கடந்த நகுல் முதல் முறையாக காவலர் வேடத்தில் நடிக்கும் ‘தி டார்க் ஹெவன்’!
Tuesday November-05 2024

‘டி2’ பட புகழ் இயக்குநர் பாலாஜி இயக்கத்தில், நகுல் நாயகனாக நடிக்கும் படம் ‘தி டார்க் ஹெவன்’...

”பட்ஜெட் இல்லை..” - ’விஜய் 69’ படத்திற்கு இப்படி ஒரு நிலையா?
Monday November-04 2024

அரசியல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் விஜய், விரைவில் அரசியல் பணிகளுக்கு ஓய்வு கொடுத்து விட்டு தனது படத்தின் பணிகளில் தீவிரம் காட்ட உள்ளார்...

’அமரன்’ படத்தை பார்த்து பாராட்டிய முதல்வர் மு.க.ஸ்டாலின்!
Thursday October-31 2024

ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷ்னல் சார்பில் நடிகர் கமல்ஹாசன் தயாரிப்பில், சிவகார்த்திகேயன் நடிப்பில், ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘அமரன்’...

Recent Gallery