Latest News :

ஊரை எதிர்த்து கபடி விளையாடும் குடும்பம்! - ‘பட்டத்து அரசன்' சுவாரஸ்யங்கள்
Wednesday November-16 2022

’பொன்னியின் செல்வன் 1’ திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து லைகா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் சுபாஸ்கரன் தயாரிப்பில் வெளியாகும் திரைப்படம் ‘பட்டத்து அரசன்’. 

 

சற்குணம் கதை எழுதி இயக்கியிருக்கும் இப்படத்தில் அதர்வா நாயகனாக நடித்திருக்கிறார். நாயகியாக ஆஷிகா ரங்கநாத் நடித்திருக்கிறார். ராஜ்கிரண் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இவர்களுரன் ராதிகா சரத்குமார், ஜெயப்பிரகாஷ், ஆர்.கே.சுரேஷ், துரை சுதாகர், சிங்கம் புலி, ராஜ் அய்யப்பா, பால சரவணன், ஜி.எம்.குமார், கன்னட நடிகர் காளே, தெலுங்கு நடிகர் சதுரு உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள்.

 

ஜிப்ரான் இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு ‘உஸ்தாத் ஹோட்டல்’ புகழ் லோகநாதன் சீனிவாஸ் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ராஜா முகமது படத்தொகுப்பு செய்ய, ஆண்டனி கலை இயக்குநராக பணியாற்றியுள்ளார்.

 

வரும் நவம்பர் 25 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ள இப்படம் குறித்து இயக்குநர் சற்குணம் கூறுகையில், “இந்த படத்தின் கதை எப்படி உருவானது என்றால், நான் ஒரு கபடி விளையாட்டு போட்டிக்கு சிறப்பு விருந்தினராக சென்றேன். அப்போது அங்கே வந்த அணிகளில் ஒரு அணி மட்டும் என்னை கவர்ந்தது. காரணம், அந்த அணியில் இருப்பவர்கள் அனைவரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள். அதுமட்டும் அல்லா, அந்த அணியில், தாத்தா, அப்பா, மகன் என மூன்று தலைமுறையினர் இருந்தார்கள். அதை பார்த்து எனக்கு வியப்பாக இருந்தது.

 

Pattathu Arasan

 

அப்போது தான் அதை கருவாக வைத்து ஒரு படம் பண்ணலாம் என்று தோன்றியது. அந்த கதைக்கும் திரைப்படத்திற்காக என்னவெல்லாம் சேர்க்க முடியுமோ அந்த விஷயங்களை சேர்த்து, விளையாட்டு திரைப்படமாக மட்டும் அல்லாமல் குடும்ப திரைப்படமாகவும் இந்த படத்தின் கதையை எழுதியிருக்கிறேன்.

 

இந்த படத்தின் கதையை மறைக்க விரும்பவில்லை, ஒரு குடும்பத்தில் உள்ள அனைவரும் கபடி விளையாடுகிறார்கள், அதுவும் அவர்கள் இருக்கும் ஊருக்கு எதிராக கபடி விளையாடுகிறார்கள். அது ஏன்? என்ற காரணம் சுவாரஸ்யமாக இருக்கும். இதனுடன், தஞ்சை மாவட்டத்தில் வழக்கத்தில் இருக்கும் தாரம் பாகம் விஷயத்தையும் கதைக்குள் வைத்து திரைக்கதை அமைத்திருக்கிறேன். தாரம் பாகம் என்பது, ஒருவருக்கு இரண்டு மனைவிகள், ஒரு மனைவிக்கு ஒரு குழந்தை, மற்றொருவருக்கு நான்கு பிள்ளைகள் இருந்தாலும், அவருடைய சொத்துக்களை தாரத்தின் அடிப்படையில் இரண்டாகத்தான் பிரிப்பார்கள். அதனால், பல சிக்கல்கள் ஏற்படும். அந்த விஷயத்தை இந்த படத்தில் வைத்திருக்கிறேன்.

 

முழுக்க முழுக்க குடும்ப படமாக தான் இருக்கும், அதில் கபடி விளையாட்டையும் சொல்லியிருப்பதோடு, தாத்தா பேரன் பாசப்போராட்டத்தையும் சொல்லியிருக்கிறேன். பேரன் தாத்தாவுடன் சேர நினைப்பார், ஆனால் தாத்தா பேரனை தனது குடும்பத்துடன் சேர விடாமல் தடுப்பார், அதற்கான காரணம், பேரனின் பாசப்போராட்டம் எல்லாமே நன்றாக வந்திருக்கிறது.

 

பட்டத்து இளவரசன் என்று தான் சொல்வார்கள், ஆனால் நான் ‘பட்டத்து அரசன்’ என்று தலைப்பு வைத்ததற்கு காரணம், அந்த இடத்திற்கு இளவரசனே கிடையாது, அரசன் தான் என்பதாகும். வாலி சார் கூட ஒரு பாடலில் “பட்டத்து ராசாவும் பட்டாள சிப்பாயும்” என்று குறிப்பிட்டிருப்பார். அதையே நானும் எடுத்துக்காட்டாக வைத்துக்கொண்டு இந்த தலைப்பை வைத்தேன்.

 

தஞ்சை மாவட்டத்தை கதைக்களமாக வைத்து படம் எடுத்திருக்கிறேன், இந்த படத்தில் கும்பகோணத்தை கதைக்களமாக வைத்துக்கொண்டு, வெற்றிலைத்தோட்டம் மற்றும் அங்கு நடக்கும் பணிகளை பின்புலமாக வைத்திருக்கிறேன். வெற்றியை தோட்டத்தை இதுவரை எந்த படத்திலும் பெரிதாக காட்டியிருப்பதாக தெரியவில்லை, இந்த படத்தில் வெற்றிலைத்தோட்டம் மற்றும் அங்கு நடக்கும் பணிகளையும் காட்சிப்படுத்தியிருக்கிறோம். அதுவும் மக்களுக்கு புதிதாக இருப்பதோடு, சுவாரஸ்யமாகவும் இருக்கும்.

 

Pattathu Arasan

 

இந்த கதையை எழுதியவுடன் என் மனதில் தோன்றியவர் அதர்வா தான். மிகவும் சுறுசுறுப்பான இயக்குநர்களுக்கு ஏற்ற நடிகராக இருக்கிறார். அவர் நல்ல ஒத்துழைப்பை கொடுத்தார். மேலும், அதர்வா - ராஜ்கிரண் என்ற கூட்டணி மிக சிறப்பாக இருக்கும். ராஜ்கிரண் சார் வந்தவுடன் இந்த படம் பெரிய படமாகிவிட்டது. லைகா புரொடக்‌ஷன்ஸ் சுபாஸ்கரன் சார், கேட்டதை எல்லாம் கொடுத்து மிகப்பெரிய அளவில் படத்தை தயாரித்திருக்கிறார். மிகப்பெரிய நிறுவனம் அவர்கள், அதனால் செலவுக்கு எந்தவித கட்டுப்பாடும் இல்லாமல், படம் சிறப்பாக வருவதற்கு ஒத்துழைப்பு கொடுத்தார்கள்.

 

ஜிப்ரானின் இசை மிகப்பெரிய அளவில் பேசப்படும். நான் படத்தை முடித்து அவரிடம் கொடுத்த போது அவர்கள் நிறைய நாட்கள் எடுத்துக்கொண்டார். ஆனால், பின்னணி இசை மற்றும் பாடல்களில் ஒரு திருத்தத்தை கூட என்னால் சொல்ல முடியவில்லை, அந்த அளவு மிக நேர்த்தியாக செய்திருக்கிறார். அப்போது தான் புரிந்தது அவர் ஏன் இவ்வளவு நாட்கள் எடுத்துக்கொண்டார் என்று. அதுமட்டும் அல்ல, எனக்காகவே அவர் இத்தனை நாட்கள் எடுத்துக்கொண்டு மிக மிக சிறப்பாக செய்து கொடுத்திருக்கிறார்.

 

படம் நன்றாக வந்திருக்கிறது. நிச்சயம் இளைஞர்களுக்கான படமாக மட்டும் இன்றி குடும்பத்தோடு பார்க்க வேண்டிய ஒரு படமாகவும் இருக்கும். குடும்ப செண்டிமெண்ட் ரொம்ப நல்லாவே வந்திருக்கிறது. நிச்சயம் லைகா நிறுவனத்துக்கும், எனக்கும் இந்த படம் வெற்றி படமாக அமையும் என்ற நம்பிக்கை இருக்கிறது.” என்றார்.

Related News

8667

அப்புகுட்டி நடிக்கும் ’பிறந்த நாள் வாழ்த்துக்கள்’ விரைவில் வெளியாகிறது
Friday January-17 2025

பிளான் 3 ஸ்டுடியோஸ் (Plan3 Studios) சார்பில், ரோஜி மாத்யூ மற்றும் ராஜுசந்ரா தயாரிப்பில், ராஜுசந்ரா இயக்கத்தில், தேசிய விருது நாயகன் அப்புகுட்டி நடிப்பில், கிராமத்து பின்னணியில் ஃபேண்டஸி டிராமாவாக உருவாகியிருக்கும் திரைப்படம் “பிறந்த நாள் வாழ்த்துக்கள்”...

விஜய் சேதுபதியின் ‘ஏஸ்’படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியானது
Friday January-17 2025

இயக்குநர் ஆறுமுக குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ' ஏஸ்' (ACE) திரைப்படத்தில் விஜய் சேதுபதி, ருக்மணி வசந்த், யோகி பாபு, பி...

ஐந்து நாட்களில் 5 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‘வீர தீர சூரன் - பாகம் 2’ படத்தின் பாடல்!
Friday January-17 2025

இயக்குநர் எஸ்.யு.அருண்குமார் இயக்கத்தில், விக்ரம் நடிக்கும் ‘வீர தீர சூரன் - பாகம் 2’ படத்தின் முதல் பாடல் சமீபத்தில் வெளியானது...

Recent Gallery