Latest News :

’ரூட் நம்பர் 17’ மூலம் மீண்டும் ஹீரோவாக களம் இறங்கும் ஜித்தன் ரமேஷ்!
Tuesday January-03 2023

பிரபல தயாரிப்பாளர் ஆர்.பி.செளத்ரியின் மகனான ரமேஷ், 2005 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற ‘ஜித்தன்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகம் ஆனார். அப்படத்தின் வெற்றியால் ஜித்தன் ரமேஷ், என்று அழைக்கப்பட்டவர் தொடர்ந்து ‘ஜெர்ரி’, ‘மதுரை வீரன்’, ‘புலி வருது’, ‘பிள்ளையார் கோயில் கடைசி தெரு’, ‘ஜித்தன் 2’ என்று பல படங்களில் நாயகனாக நடித்து வந்தார்.

 

இதற்கிடையே திரைப்படத்தில் நடிப்பதோடு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்ற ஜித்தன் ரமேஷ், பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பட்டி தொட்டி எல்லாம் பிரபலமடைந்தார். மேலும், திரைப்பட தயாரிப்பிலும் இறங்கினார். இதனால் நடிப்புக்கு சில வருடம் ஓய்வு விட்டிருந்தவர் தற்போது மீண்டும் நாயகனாக களம் இறங்கியிருக்கிறார்.

 

நேநி புரொடக்‌ஷன்ஸ் சார்பில் டாக்டர் அமர் ராமச்சந்திரன் தயாரிப்பில் உருவாகி வரும் படம் ‘ரூட் நம்பர் 17’. இந்த படத்தை இயக்குநர் அபிலாஷ் ஜி தேவன் இயக்கியுள்ளார். இவர் பிரபல மலையாள இயக்குநர்  தம்பிகண்ணம் தானம் அவர்களிடம் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். அதுமட்டுமல்ல இதே நிறுவனத்தின் தயாரிப்பில் 14 சர்வதேச விருதுகளை வென்ற 'தாய்நிலம்' என்கிற படத்தையும் இயக்கியுள்ளார்.

 

இந்த 'ரூட் நம்பர் 17' படத்தில் கதாநாயகனாக ஜித்தன் ரமேஷ் நடித்துள்ளார். கதாநாயகியாக அஞ்சு பாண்டியா என்பவர் நடித்துள்ளார். இவர் ஏர் இந்தியா நிறுவனத்தில் விமானப் பணிப்பெண்ணாக பணியாற்றுபவர். இந்த படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகிறார்.

 

ஹரிஷ் பேரடி வில்லனாக நடிக்க, அருவி மதன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் அமர் ராமச்சந்திரன், நிஹால், அகில் பிரபாகர், ஜெனிபர், பிந்து, காசி விஸ்வநாதன், டைடஸ் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர்.

 

பிரசாந்த் பிரணவம் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு பிரபல மலையாள இசையமைப்பாளர் அவுசேப்பசன் இசையமைத்துள்ளார். பாடல்களை யுகபாரதி, கு.கார்த்திக், கவிஞர் செந்தமிழ்தாசன் ஆகியோர் எழுதியுள்ளனர். 

 

தெலுங்கில் த்ரிஷ்யம் உள்ளிட்ட படங்களில் பணியாற்றிய ஜாக்கி ஜான்சன் ஆக்சன் காட்சிகளை வடிவமைத்துள்ளார். இந்த படத்தின் சவுண்ட் கிராபிக்ஸ் மற்றும் சவுண்ட் டிசைன் ஆகியவற்றை ராஜ கிருஷ்ணன் உள்ளிட்ட காந்தாரா படத்திற்கு பணியாற்றிய குழுவினர் தான் வடிவமைத்துள்ளார்கள்.

 

படம் பற்றி இயக்குநர் அபிலாஷ் கூறும்போது, “காட்டோடு சேர்ந்த பாதை என்பதுதான் இந்த படத்தின் தலைப்புக்கான அர்த்தம். முப்பது வருடங்களுக்கு முன்பு ஆரம்பித்த ஒரு பாதை இப்போது மூடப்பட்டுள்ளது. இந்த பாதையில் வலுக்கட்டாயமாக நுழைந்தவர்கள் எல்லாம் அன்றிரவே மரணத்தை தழுவுகிறார்கள். இதன் பின்னணியில் நெஞ்சை உருக்கும் காரணம் ஒன்று இருக்கிறது.

 

1990 முதல் 2020 வரை மூன்றுவித காலகட்டங்களில் நடக்கும் 30 வருட பழிவாங்கல் கதையாக இந்த படம் உருவாகியுள்ளது.  அதற்கேற்ப ஜித்தன் ரமேஷும் மூன்று வித கெட்டப்புகளில் நடித்துள்ளார். அதில் 90 கிலோ எடையுள்ள  ஒரு வித்தியாசமான கெட்டப்பும் உண்டு. இதற்காக தேசியவிருது பெற்ற ஒப்பனை கலைஞர் ரஷீத் அஹமது இந்த படத்தில் பணியாற்றியுள்ளார்.

 

மலையாளத்தில் பிரித்விராஜ்-மோகன்லால் கூட்டணியில் உருவான ப்ரோ டாடி மற்றும் இதே கூட்டணியில், அடுத்து தயாராக இருக்கும் லூசிபர் 2 ஆகிய படங்களின் படத்தொகுப்பாளரான அகிலேஷ் மோகன் இந்த படத்தின் படத்தொகுப்பை கவனிக்கிறார். இவர் பாலிவுட்டில் நடிகர் ரன்பீர் கபூர் நடிக்கும் படங்களின்  ஆக்ஷன் காட்சிகளை மட்டும் படத்தொகுப்பு செய்து கொடுக்கும் அளவிற்கு தனித்துவம் வாய்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

என்னுடைய முதல் படமான தாய்நிலத்திற்கு ஒளிப்பதிவு செய்த பிரசாந்த் பிரணவம் தான் இந்தப்படத்திற்கும் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த கதை மூன்றுவித காலகட்டங்களில், அதேசமயம் அடர்ந்த காடு, மிகப்பெரிய குகை, வறண்ட சமதள பகுதி என மூன்று விதமான இடங்களில் நடைபெறுகிறது இந்த மூன்றுக்கும் மிகப்பெரிய அளவில் வித்தியாசம் காட்டி உள்ளார் ஒளிப்பதிவாளர் பிரசாந்த் பிரணவம். டிஐ என்கிற கலர் கிரேடிங் செய்வதற்கு முன்பாக படத்தை பார்த்து பலரும் ஒளிப்பதிவு குறித்து தங்களது வியப்பையும் பாராட்டையும் வெளிப்படுத்தினார்கள்.

 

இந்த படத்தில் செந்தமிழ் தாசன் என்கிற கவிஞரை அறிமுகப்படுத்தியுள்ளோம். கவிஞரான இவர் முதன்முறையாக சினிமாவிற்கு பாடல் எழுதியுள்ளார். பின்னாளில் பெரிய பாடலாசிரியராக இவர் வலம் வருவார் என்பது உறுதி. ஸ்வேதா மோகன் ஒரு தாலாட்டு பாடலை பாடியுள்ளார். நிச்சயம் இதற்கு தேசிய விருது கிடைக்கும் என நம்புகிறோம். மேலும் பிராங்கோ மற்றும் லவ் மேகிங் பாடல்களைப் பாடும் ரீத்தா தியாகராஜன் ஆகியோரும் பாடல்களை பாடியுள்ளனர்.

 

இந்த படத்தின் கதை களம் தமிழகம் மற்றும் கர்நாடகா இரண்டுக்கும் இடைப்பட்ட பகுதியில் நிகழ்கிறது. படப்பிடிப்பை கர்நாடக மாநிலம் குண்டல்பேட் மற்றும் தமிழகத்தில் தென்காசி, கடையநல்லூர் ஆகிய பகுதிகளில் நடத்தியுள்ளோம். 

 

அதுமட்டுமல்ல இந்த படத்திற்காக 5500 சதுர அடியில் பூமிக்கு அடியில் ஒரு மிகப்பெரிய செட் அமைத்து 28 நாட்கள் படப்பிடிப்பு நடத்தினோம். இதுவரை சினிமாவில் யாரும் இப்படி ஒரு செட் போட்டது இல்லை. பாகுபலி படத்தின் படப்பிடிப்பு நடைபெற்ற ஆந்திராவில் உள்ள கண்ணவம் என்கிற இடத்தில் இந்த குகை செட்டை அமைத்து படப்பிடிப்பை நடத்தினோம். படப்பிடிப்பு நடக்கும் நாட்களில் இந்த செட்டை பார்ப்பதற்கே பொதுமக்கள் நிறையபேர் வருகை தந்தனர்.

 

அதுமட்டுமல்ல தென்காசி பகுதியில் உள்ள அடர்ந்த காட்டுக்குள் பத்து நாட்கள் படப்பிடிப்பு நடத்தினோம். யானை, புலி உலாவும் அச்சுறுத்தல் கொண்ட அந்த காட்டிற்குள் மாலை 6 மணிக்கு மேல் யாரும் நுழைய மாட்டார்கள். ஆனால் நாங்கள் இரவு 9 மணிவரை படப்பிடிப்பு நடத்தினோம். எங்களது படப்பிடிப்பு நாட்கள் எல்லாமே ஒரு திருவிழா மாதிரி, ஒரு ஜாலியான சுற்றுலா சென்று வந்தது மாதிரி மகிழ்ச்சியாக இருந்தது.” என்றார்.

 

‘ரூட் நம்பர் 17’ படத்தின் முதல் பார்வை போஸ்டரை நடிகர் ஜீவாவும், இரண்டாம் பார்வை போஸ்டரை நடிகர் ஆர்யாவும் வெளியிட்டிருந்தனர். இரண்டுமே ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

 

தற்போது இறுதிக்கட்டத்தில் இருக்கும் இப்படத்தின் டிரைலரை இம்மாதம் வெளியிட இருக்கும் படக்குழுவினர், படத்தை ஏப்ரல் மாதம் வெளியிட திட்டமிட்டுள்ளது.

Related News

8754

அப்புகுட்டி நடிக்கும் ’பிறந்த நாள் வாழ்த்துக்கள்’ விரைவில் வெளியாகிறது
Friday January-17 2025

பிளான் 3 ஸ்டுடியோஸ் (Plan3 Studios) சார்பில், ரோஜி மாத்யூ மற்றும் ராஜுசந்ரா தயாரிப்பில், ராஜுசந்ரா இயக்கத்தில், தேசிய விருது நாயகன் அப்புகுட்டி நடிப்பில், கிராமத்து பின்னணியில் ஃபேண்டஸி டிராமாவாக உருவாகியிருக்கும் திரைப்படம் “பிறந்த நாள் வாழ்த்துக்கள்”...

விஜய் சேதுபதியின் ‘ஏஸ்’படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியானது
Friday January-17 2025

இயக்குநர் ஆறுமுக குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ' ஏஸ்' (ACE) திரைப்படத்தில் விஜய் சேதுபதி, ருக்மணி வசந்த், யோகி பாபு, பி...

ஐந்து நாட்களில் 5 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‘வீர தீர சூரன் - பாகம் 2’ படத்தின் பாடல்!
Friday January-17 2025

இயக்குநர் எஸ்.யு.அருண்குமார் இயக்கத்தில், விக்ரம் நடிக்கும் ‘வீர தீர சூரன் - பாகம் 2’ படத்தின் முதல் பாடல் சமீபத்தில் வெளியானது...

Recent Gallery