Latest News :

12 வருட கனவு நிஜமானது! - ‘டாடா’ வெற்றி விழாவில் நடிகர் கவின் உருக்கம்
Wednesday February-15 2023

அறிமுக இயக்குநர் கணேஷ் கே.பாபு இயக்கத்தில், பிக் பாஸ் புகழ் கவின் நாயகனாக நடிக்க, நாயகியாக ‘பீஸ்ட்’ படத்தில் நடித்த அபர்ணா தாஸ் நடித்திருக்கிறார். இவர்களுடன் கே.பாக்யராஜ், ஐஸ்வர்யா, விடிவி கணேஷ், பிரதீப் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இப்படத்திற்கு அறிமுக இசையமைப்பாளர் ஜென் மார்டின் இசையமைக்க, எழிலரசன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.

 

ஒலிம்பியா மூவிஸ் சார்பில் எஸ்.அம்பேத்குமார் தயாரித்திருக்கும் இப்படம் கடந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

 

இந்த நிலையில், இப்படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக படக்குழுவினர் சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்தனர். இந்த நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் அம்பேத்குமார், நாயகன் கவின், நாயகி அபர்ணா தாஸ் உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரும் கலந்துக்கொண்டார்கள்.

 

நிகழ்ச்சியில் பேசிய நாயகன் கவின், “படம் வெளியீட்டுக்கு முன்பு ஒரு வீடியோ வெளியிட்டிருந்தேன், அதில் என்னுடைய 12 வருட கனவு என்று கூறியிருந்தேன். இப்போது அந்த கனவை நிஜமாக்கியிருக்கிறீர்கள். படம் பார்த்து எங்கு எங்கேயோ இருந்து என்னை தொடர்பு கொண்டு பேசுகிறார்கள், அவர்கள் அனைவருக்கும் நன்றி. ஒரு சாதாரண பையன், தன்னுடைய வேலையை நம்பி, நேர்மையாகவும், கடுமையாகவும் உழைத்தால் அவன் நினைத்த இடத்திற்கு நிச்சயம் செல்ல முடியும், என்பதை மிக ஆழமாக பதித்த உங்க அனைவருக்கும் நன்றி. நீங்க இல்லாமல் இந்த வெற்றி கிடைத்திருக்காது. பத்திரிகையாளர் காட்சியில் உங்க முகத்தை பார்த்த போது, நாம ஏதோ சரியாக செய்திருக்கிறோம் என்பது தெரிந்தது.

 

’டாடா’ ஒரு திரைப்படம் என்பதை விட இங்கு இருக்கும் அனைவருக்கும் ஒரு நம்பிக்கையாக இருந்தது. அந்த நம்பிக்கையை மற்றவர்களிடம் கொண்டு சேர்த்தது நீங்க தான். ஒரு நல்ல படம் பண்ணுவது சுலபம், ஆனால் அதை மக்களிடம் கொண்டு சேர்ப்பது மிகவும் சவாலான விஷயம். அதை நீங்க இல்லாமல் நிச்சயம் செய்ய முடியாது. அதேபோல், புரோமோஷன் என்பது மிகவும் முக்கியமாக இருக்கிறது. அதற்காக நாங்கள் செய்த வேலையில் படக்குழுவினர் எந்தவித மறுப்பும் சொல்லாமல் கலந்துக்கொண்டார்கள். நடிகை அபர்ணா தாஸ், இசையமைப்பாளர்  என அனைவரும் அதற்காக கூடுதல் சம்பளம் எல்லாம் கேட்காமல், நாங்கள் அழைக்கும் போதெல்லாம் வந்து எங்களுக்கு ஒத்துழைத்தார்கள், அவர்களுக்கும் இந்த நேரத்தில் தனியாக நன்றி சொல்லிக்கொள்கிறேன். இந்த படத்தின் மூலம் ஒருவர் ஒருவரை தூக்கி விட்டாங்க அது தான் உண்மை. ஒரு பாசிட்டிவான படத்தை கொடுக்க வேண்டும் என்று நினைத்தோம். வாழ்க்கையில் என்னதான் அடிபட்டாலும், அனைவரது வாழ்க்கையிலும் நிச்சயம் ஒரு வெளிச்சம் இருக்கும் என்று சொல்லி ஒரு உத்வேகத்தை கொடுப்பது தான் இந்த படம். அப்படிப்பட்ட படம் இவ்வளவு பெரிய வெற்றியடைந்திருப்பது எங்களுக்கு பெரும் மகிழ்ச்சியாக இருக்கிறது.

 

தயாரிப்பாளர் அம்பேத்குமார் சார் எங்கள் மீது நம்பிக்கை வைத்து படம் தயாரித்தார்.  அவருடைய நம்பிக்கைக்கு ஏற்ற்படி நாங்கள் வெற்றி படத்தை கொடுத்தது மகிழ்ச்சி. அவரும், எங்களிடம் படம் வெற்றி பெற்றுவிட்டது, சந்தோஷமாக இருக்கிறது, என்றார். ஆனால், அவருடைய தனிப்பட்ட வாழ்வில் ஏற்பட்ட சோகத்தால் இந்த படத்தின் வெற்றியை அவரால் முழுமையாக கொண்டாட முடியவில்லை.

 

இந்த படத்தில் எனது கதாபாத்திர பெயர் வேறு ஒன்றாக இருந்தது. நான் தான் இயக்குநரிடம் மணி என்று மாற்றிக்கொள்ளலாமா என்று கேட்டேன். அதற்கு காரணம், என் பள்ளி நண்பனின் பெயர் தான் மணி. என் வாழ்க்கையில் மிகவும் முக்கியமான நபர். அவர் இன்று உயிருடன் இல்லை. அவருக்கு எதாவது செய்ய வேண்டும் என்று தான் அவருடைய பெயரை கதாபாத்திரத்திற்கு வைத்தேன். நான் முதல் முதலில் டிவியில் வந்த போது கைதட்டியவன் அவன் தான். நான் எது செய்தாலும் என்னை கொண்டாடுவான். இந்த படத்தின் வெற்றியையும் என் நண்பனுக்கு சமர்ப்பிக்கிறேன். 

 

இயக்குநர் பாபு கணேஷ் என் மீது பெரிய நம்பிக்கை வைத்திருந்தார். அவரது நம்பிக்கை வீண் போகவில்லை என்று நினைக்கிறேன். நிச்சயம் அவர் தொடர்ந்து பல வெற்றி படங்களை கொடுத்து பெரிய இடத்துக்கு போவார். அவர் மட்டும் அல்ல, ஒளிப்பதிவாளர் எழிலரசன், இசையமைப்பாளர் ஜென் மார்டின், நாயகி அபர்ணா தாஸ் என  அவரையும் ‘டாடா’ படத்தின் வெற்றி அடுத்தக்கட்டத்திற்கு அழைத்து செல்லும். இந்த படத்தை மக்களிடம் கொண்டு சேர்த்த பத்திரிகையாளர்களுக்கு மீண்டும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். நீங்கள் இல்லை என்றால் இந்த வெற்றி சாத்தியமல்ல, என் படம் மட்டும் அல்ல, என்னை போன்று பலரது படங்களை மக்களிடம் கொண்டு சென்றிருக்கிறீர்கள், தொடர்ந்து நீங்கள் அந்த பணியை செய்ய வேண்டும், என்று கூறி விடைபெறுகிறேன்.” என்றார்.

 

DADA

 

நடிகர் விடிவி கணேஷ் பேசுகையில், “இயக்குநர் கணேஷ் பாபு என்னை அணுகியபோது நான் கொஞ்சம் சந்தேகப்பட்டேன். முதல் நாள் படப்பிடிப்புக்கு போன பிறகு திரும்பி சென்று விடலாமா என்று யோசித்தேன். இரண்டு நாட்களுக்குப் பிறகு தான் இவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்று தெரிந்தது. இயக்குநர் என்னிடம் என்ன எதிர்பார்க்கிறார் என்றும் புரிந்தது, அதன் பிறகு இந்த குழுவுடன் சேர்ந்து விட்டேன். கவின் போன்றவர்களை பெண்களுக்கு பிடிக்கும். மிகவும் அப்பாவியாக முகத்தை வைத்துக்கொண்டு இருப்பார். ஒரு நடிகராக மட்டும் அல்லாமல், உதவி இயக்குநராக படத்தில் பணியாற்றியிருக்கிறர். என்னுடைய கேரோவேன் வாசலில் காத்திருந்து என்னை அழைத்து செல்வார். அவர் நிச்சயம் தொடர்ந்து வெற்றி பெற்றுக்கொண்டிருப்பார்.

 

இப்படி ஒரு இளைஞர்களின் புதிய முயற்சியை நம்பி பணம் போட்ட தயாரிப்பாளர் அம்பேத்குமார் சார் தான் இந்த படத்தின் வெற்றிக்கு முதல் காரணம். நான் நம்பிக்கை இல்லாமல் இருந்த போது கூட, அவர் என்னிடம், இந்த படம் நிச்சயம் வெற்றி பெறும், இந்த இளைனஞர்கள் நிச்சயம் நல்ல படத்தை கொடுப்பார்கள், என்று நம்பிக்கையாக இருந்தார். அவருடைய நம்பிக்கையால் தான் படம் மிகப்பெரிய வெற்றி பெற்றிருக்கிறது.” என்றார்.

 

தயாரிப்பாளர் அம்பேத்குமார் பேசுகையில், “நான் திரைப்படத்துறையிக்கு வந்தது எதிர்பாராமல் நடந்தது. சில வருடங்கள் படம் இயக்காமல் இருந்த இயக்குநர் எழில் சாருக்கு எதாவது உதவி செய்ய முடியுமா? என்று ஒரு நண்பர் கேட்டார். அதற்காக மனம் கொத்தி பறவை படத்தை தயாரித்தேன். அப்படி தான் நான் சினிமாவுக்கு வந்தேன். பிறகு தொடர்ந்து சில படங்களை தயாரித்தோம். கடைசியாக தயாரித்த ஜிப்ஸி படம் சிறப்பான படமாக வந்தது. ஊடகத்துறையினர் பாராட்டையும் பெற்றது. ஆனால், அந்த படத்தை தொடங்கிய போது ஊரடங்கு வந்ததால் பெரும் நஷ்ட்டம் ஏற்பட்டது. அதன் பிறகு படம் தயாரிக்காமல் இருந்தோம். 

 

லிப்ட் படம் பார்த்த பிறகு கவினை வைத்து ஒரு படம் தயாரிக்க வேண்டும் என்று முடிவு செய்தேன். அப்போது தான் ஒருவர் என்னிடம் ஒரு கதை சொல்ல வந்தார். நான் அவரை கவினிடம் அனுப்பினேன், அந்த கதையை கேட்ட கவின், சார் வேறு ஒரு கதை இருக்கிறது கேளுங்கள் என்றால். அதன்படி தான் கணேஷ் பாபு வந்து என்னிடம் கதை சொன்னார். கதையை கேட்டவுடன் பிடித்துவிட்டது. அதுமட்டும் அல்ல, அவர் மீது எனக்கு நம்பிக்கையும் ஏற்பட்டது. அப்படி தான் இந்த படம் தொடங்கியது.

 

மனம் கொத்தி பறவை படத்தில் சிவகார்த்திகேயனை நடிக்க வைக்கலாம் என்று நான் தான் சொன்னேன். அந்த படம் வெற்றி பெற்ற போது அதன் வெற்றி விழாவை இங்கு தான் கொண்டாடினோம். அதேபோல், டாடா படத்தின் இந்த வெற்றி நிகழ்வை வேறு சில இடங்களில் நடத்த திட்டமிட்டிருந்தோம். ஆனால், அதில் மாற்றம் ஏற்பட்டு இங்கு கொண்டாடும்படி ஆகிவிட்டது. அதனால், கவினும் சிவகார்த்திகேயன் போல் பெரிய நடிகராக உயர்வார். இந்த படத்தின் கதையை லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் நிராகரித்து விட்டது. ஆனால், இப்போது அவர்களே கணேஷ் பாபுவை வைத்து படம் பண்ண ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள், இதுவே டாடா படத்தின் வெற்றிக்கு சான்று.” என்றார்.

 

நாயகி அபர்ணா தாஸ் பேசுகையில், “இந்த படத்திற்கு ஒப்பந்தமான பிறகு சிறிய படம் என்று தான் நினைத்தேன். ஆனால், உள்ளே வந்த பிறகு தான் எவ்வளவு பெரிய படம் என்று தெரிந்தது. படக்குழுவினர் எனக்கு மிகவும் ஒத்துழைப்பு கொடுத்தார்கள். கவின் உள்ளிட்ட அனைவரும் கடினமாக உழைத்தார்கள். இப்போது படத்திற்கு கிடைத்திருக்கும் வெற்றி நாங்கள் எதிர்பார்த்ததை விட பெரிதாக கிடைத்திருப்பதோடு, படமும் மிகப்பெரிய படமாக அமைந்திருக்கிறது. தமிழ் சினிமாவில் நான் நாயகியாக அறிமுகமாகும் ஒரு படம் இவ்வளவு பெரிய வெற்றி பெற்றிருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது.” என்றார்.

 

DADA Thanks Giving Meet

 

இயக்குநர் கணேஷ் கே.பாபு பேசுகையில், “12 வருடங்களாக இதற்காக தான் காத்திருந்தேன். நானும் உங்களுடன் பணியாற்றிய ஒருவன் தான். ஒரு நிருபராக பணியாற்றிருக்கிறேன். ரேடியோவில் வேலை செய்திருக்கிறேன். அப்போது நினைத்தது உண்டு, எப்படியாவது இயக்குநராக வேண்டும் என்று, இப்போது அந்த கனவு நிறைவேறியுள்ளது. அதற்கு நீங்கள் தான் காரணம், உங்களுக்கு தான் முதல் நன்றி. கவின் மச்சான் எனக்கு மிகப்பெரிய உதவி செய்திருக்கிறான். அவன் இல்லை என்றால் நான் இந்த இடத்திற்கு வந்திருக்க முடியாது. இசையமைப்பாளர் ஜென் மார்டினுக்கு பெரிய இயக்குநர்கள் வாய்ப்பளித்தால் அவர் நிச்சயம் மிகப்பெரிய இடத்துக்கு செல்வார்.

 

தயாரிப்பாளர் அம்பேத்குமார் சார் எங்கள் மீது பெரிய நம்பிக்கை வைத்திருந்தார். அவரது நம்பிக்கைக்கு ஏற்றபடி வெற்றி படத்தை கொடுத்தது மகிழ்ச்சியாக இருக்கிறது. நடிகர் விடிவி கணேஷ் சார் வந்த பிறகு படம் பெரிய படமாகிவிட்டது. அவருக்கும் நன்றி. நிச்சயம் நான் எத்தனை படங்கள் எடுத்தாலும், என் முதல் படத்தை மறக்க முடியாது, அதேபோல் உங்களையும் என்னால் மறக்க முடியாது, நன்றி.” என்றார்.

Related News

8818

’அமரன்’ படத்தை பார்த்து பாராட்டிய முதல்வர் மு.க.ஸ்டாலின்!
Thursday October-31 2024

ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷ்னல் சார்பில் நடிகர் கமல்ஹாசன் தயாரிப்பில், சிவகார்த்திகேயன் நடிப்பில், ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘அமரன்’...

பரபரப்பான சம்பவங்கள் பின்னணியில் உருவான ‘முரா’ பட டிரைலர் வெளியானது!
Thursday October-31 2024

‘கப்பேலா’ படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் முஹம்மது முஸ்தபா, இயக்கத்தில் உருவாகியிருக்கும் ஆக்‌ஷன் திரில்லர் படம் ‘முரா’...

ஃபேண்டஸி காதல் படமாக உருவாகியுள்ள ‘மெஸன்ஜர்’!
Wednesday October-30 2024

பி.வி.கே ஃபிலிம் ஃபேக்டரி (PVK FILM FACTORY) சார்பில் பா...

Recent Gallery