Latest News :

”பெற்றோருக்கு தெரியாமல் சினிமாவை கற்றுக் கொண்டேன்” - ‘ஆபரேஷன் அரபைமா’ இயக்குநர் பிராஷ் நெகிழ்ச்சி பேச்சு
Wednesday March-08 2023

முன்னாள் கப்பல் பட வீரர் பிராஷ் இயக்கி தயாரித்துள்ள படம் ‘ஆபரேஷன் அரபைமா’. பி.நடராஜன் வழங்கும் இப்படத்தில் ரகுமான், நாடோடிகள் அபிநயா, டினி டாம், நேகா சக்ஸேனா, ஷிகாத், பாலாஜி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். போர்க்கப்பலில் படமாக்கப்பட்ட முதல் தமிழ்த் திரைப்படம் என்ற பெருமையோடு உருவாகியுள்ள இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது.

 

இந்த நிகழ்வில் படக்குழுவினர் அனைவரும் கலந்துக்கொண்டு டிரைலர் வெளியிட்டனர். நிகழ்ச்சியில் பங்கேற்ற சிறப்பு விருந்தினர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் டிரைலரை பார்த்து வியந்து பாராட்டினார்கள்.

 

படம் குறித்து பேசிய இயக்குநர் பிராஷ், “நேற்று என் படத்தின் ட்ரைலரை முதன் முதலாக பிரசாத் லேப் தியேட்டரில் பரிசோதித்து  பார்க்கையில் ரொம்ப உணர்ச்சிவசப்பட்டேன். ஊரில் எனது அம்மா பெயரில் ஒரு திரையரங்கம் இருந்தது. என் அப்பாவை சிலர் ஏமாற்றி விட்டார்கள். அந்த திரையரங்கத்தை அபகரித்துக்கொண்டார்கள். ஆனாலும் நான் சினிமாவை விடவில்லை. சினிமா என்னைக் கைவிடவில்லை. பெற்றோருக்கு தெரியாமல் சினிமாவை கற்றுக் கொண்டேன். இருப்பினும், கடலோர காவற்படையில் தேர்வானேன். அதிக நாட்கள் சென்னையில் தான் இருந்தேன். கப்பல்படை, விமானப்படை, தரைப்படை என மூன்று படைத்தளங்களிலும் பணியாற்றிய அதிர்ஷ்டசாலி நான் என்று நினைக்கிறேன்.

 

அதன் பின் ஒரு விபத்தில் சிக்கினேன். நான் அந்த விபத்திலிருந்து மீண்டு வந்ததற்கு காரணமே அப்துல் கலாம் ஐயா-வின் “விங்ஸ் ஆப் பயர்” புத்தகம் தான். அந்த புத்தகத்தை படித்துவிட்டு, நான் அப்துல் கலாம் ஐயாவை பார்க்க வேண்டும் என்று முடிவு செய்து, அவருக்கு கடிதம் எழுதி அவரை சந்தித்தேன். அதன் பின், அவரின் வாழ்க்கையை ஒரு சுய சரிதை படமாக எடுக்கும் உரிமையை எனக்கு மட்டும் கொடுத்தார். 2014ஆம் ஆண்டு அப்படத்தின் அறிவிப்பை வெளியிட்டேன். அதன் பின் சில காரணங்களால் அப்படம் இன்னும் முழுமையாக எடுக்கப்படவில்லை. அப்படத்தில் விக்ரம் சாராபாயாக ’சீயான்’ விக்ரம் சார் தான் நடிக்கிறார். இன்னமும் அந்த படம் உயிருடன் தான் இருக்கிறது.

 

போர்க்கப்பலில் படமாக்கப்பட்ட முதல் தமிழ் படம் ஆபரேஷன் அரபைமா வாகத்தான் இருக்கும். நாம், இப்படத்தை கம்ப்யூட்டர் க்ராபிக்ஸ் மூலம் எடுத்திருக்க முடியும். ஆனால், உண்மையான கப்பல்களை காட்டும் அழகு வராது. ஆனால், அந்த சவால்களையும் செய்துள்ளோம். கடலில் ஒரு காட்சியை படம் பிடிப்பது கடினம். கடல் சீற்றம், காற்று என அனைத்தையும் கணித்து படம் பிடிக்க வேண்டும். நாங்கள் அதை செய்துள்ளோம்.

 

17 லொகேஷன்களை இப்படத்தில் காட்டியுள்ளேன். நம் நாட்டிற்கு புதியதாக அறிமுகமாகவிருக்கும் போதை பொருளின் பாதிப்பை சொல்லும் படம் தான் இது.

 

இப்படத்தில் நாயகனுக்கு காதலிக்கவே நேரமில்லை. ஆனால், வில்லன் காதலிக்கிறார், அவருடைய தம்பி ரொமான்ஸ் செய்கிறார். நிச்சயமாக படம் உங்களுக்குப் பிடிக்கும். மற்றபடி நீங்கள் படம் பார்த்துவிட்டு சொல்லவேண்டும். அதற்காக நான் காத்திருக்கிறேன்.” என்றார்.

 

நடிகை நேஹா சக்ஸேனா பேசுகையில், “நான் பஞ்சாபி பெண். ஆனால், தமிழ் படிக்க வேண்டும் பேச வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. என் அப்பா என்னுடைய சிறு வயதில் ஒரு விபத்தில் இறந்து விட்டார். என் அம்மா தான் என்னை வளர்த்தார். வாழ்க்கையில் முன்னேற எதாவது ஒரு லட்சியம் வைத்துக் கொள்ள வேண்டும் என்று அம்மா கூறினார். பல மொழிகளில் 12 வருடங்களாக நடித்து வருகிறேன். சினிமாவிற்கு மொழிகள் கிடையாது. ஒரு மாநிலத்திற்குள் நாம் வேலைக்காக அல்லது நம் தேவைக்காக செல்லும்போது அந்த மாநிலத்தின் மொழியை நாம் கற்றுக்கொள்வது அந்த மாநிலத்திற்குச் செய்யும் மரியாதை. நான் பஞ்சாபி பெண்… ஆனால் தமிழ், தெலுங்கு, கன்னட, மலையாள சினிமாக்களில் வேலை செய்யும் போது அந்தந்த மொழியைக் கற்றுக்கொள்கிறேன். அதில் எனக்கு ரொம்பவே சந்தோஷம் என்று பேசி கைத்தட்டல்களை வாங்கினார்.” என்றார்.

 

Operation Arapaima Trailer Launch

 

நடிகர் டினி டாம் பேசுகையில், “தமிழில் இது எனக்கு முதல் படம். அனைத்து நடிகர்களுக்கும் தமிழில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். காரணம், தமிழ் தான் உலகின் பழமையான மொழி.  மேலும், கலாபவன் மணி சார் தான் என்னுடைய குரு. நேற்று அவரின் 7 ஆம் ஆண்டு நினைவஞ்சலி. நேற்று, கலாபவன் மணி விருதினை எனக்கு வழங்கினார்கள் என்பதையும் நான் தெரிவித்துக் கொள்கிறேன். இப்படத்தில் திருநங்கை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். இந்த படத்திற்கு உங்கள் ஆதரவைத் தந்து வெற்றி பெறச்செய்ய வேண்டும்.” என்றார்.

 

பாடலாசிரியர், வசனகனர்த்தா முருகன் மந்திரம் பேசுகையில், “நண்பகல் நேரத்து மயக்கம் திரைப்படம் சமீபத்தில் வெளியானது. அந்த படம் மலையாளப் படம் தான். ஆனால், அந்த படத்தின் தலைப்பு தமிழில் இருக்கிறது. கதை தமிழ் நாட்டின் தான் நடக்கிறது. இனிமேல் மலையாள மக்கள் முழுப்படத்தையும் கூட தமிழில் எடுத்து அதை மலையாளப் படமாக வெளியிட்டாலும் ஆச்சர்யமில்ல. அந்த வகையில் ஆபரேஷன் அரபைமா படக்குழுவில் உள்ள மலையாள சொந்தங்களை நான் தமிழ்நாட்டின் சார்பாக வரவேற்கிறேன்.

 

இந்த படத்தின் இயக்குநர் பிராஷ் சார் கடற்படையில் வேலை பார்த்துவிட்டு, அரண் என்ற படத்தில் துணை இயக்குனராக வேலை செய்தார். பின்பு, மிலிட்டரி ஆபரேஷன் பற்றி ஒரு படம் எடுக்க வேண்டும் என்று முடிவு செய்து இப்படத்தை இயக்கியுள்ளார். இப்படம் கொச்சின், சென்னை, திருவனந்தபுரம், அந்தமான், துபாய் போன்ற இடங்களில் படமாக்கப்பட்டுள்ளது. இப்படம் முழுவதும், கடல் வழியாக பெண் கடத்தல், போதை பொருள் கடத்தல் போன்ற விஷயங்களையும் அதிலுள்ள அரசியலையும் பேசும். 

 

இப்படத்தின் பாடல்கள் எழுத கேரளா சென்றேன். அப்போது என்னுடைய அரசியல் பதிவுகளைப் பார்த்துவிட்டு இந்த படமும் அரசியல் மற்றும் ராணுவ ஆபரேஷன் பற்றி தான் எடுக்கிறோம். ஆகையால், இப்படத்திற்கு நீங்கள் வசனம் எழுத வேண்டும் என்று என்று பிராஷ் சார் அழைத்தார்.

 

ஆசையொரு ஆசை என்ற தாலாட்டு பாடல் எழுதினேன். சின்னக்குயில் சித்ரா அதைப் பாடி இருக்கிறார்கள். அதன் கூடவே அதுக்கு சற்றும் தொடர்பில்லாத ஒரு துள்ளல் பாடலையும் எழுதி இருக்கிறேன். பாடல் மதுவை பற்றி எழுத வேண்டும் ஆனால், பெண்ணுக்கும் பொருந்த வேண்டும். அப்படி ஒரு வாய்ப்பு கிடைத்ததற்கு இயக்குநருக்கு நன்றி. உள்ளேற ஒரு முறை அனுமதி, பொல்லாத சுகமிது அனுபவி என்று தொடங்குகிறது அந்தப் பாடல்

 

ஆபரேஷன் அரபைமா படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அபிநயா அசாத்தியமான திறமை கொண்டவர். உதடு அசைவை வைத்து அதை கவனித்து அப்படியே நடிக்க கூடியவர். அபிநயாவுடன் பணியாற்றியது மறக்க முடியாத அனுபவம்.” என்றார்.

 

இணை தயாரிப்பாளர் ஜெயின் ஜார்ஜ் பேசுகையில், “போதை பொருள் கும்பலிடம் இருந்து இளைஞர்களை எப்படி காப்பாற்றுவது என்பது தான் இப்படத்தின் கதை. இப்போது இப்படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவராக இங்கே நிற்கிறேன். விரைவில் உங்கள் நடிகனாக நிற்கவேண்டும் என்பது என் ஆசை.” என்றார்.

Related News

8861

’நாகபந்தம்’ படத்தின் முதல் பார்வை போஸ்டரை வெளியிட்ட ராணா டகுபதி!
Monday January-13 2025

நடிகர் விராட் கர்ணா - அபிஷேக் நாமா- கிஷோர் அன்னபு ரெட்டி - NIK ஸ்டூடியோஸ் - அபிஷேக் பிக்சர்ஸ் கூட்டணியில் உருவாகும் பான் இந்திய திரைப்படமான ' நாக பந்தம் ' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை முன்னணி நட்சத்திர நடிகரான ராணா டகுபதி வெளியிட்டார்...

உழவர் விருது தொடர்ந்து நடத்துவது ஏன் ? - நடிகர் கார்த்தி விளக்கம்
Monday January-13 2025

விவசாயத்தில் சாதனை புரிபவர்களையும், அதற்கு உறுதுணையாக இருந்து பங்களிப்பவர்களையும் கெளரவப்படுத்தி அங்கீகரிக்கும் உழவன் ஃபவுண்டேஷனின் ‘உழவர் விருதுகள் 2025’ விழா கோலகலமாக சென்னையில் நடைபெற்றது...

கோலாகலமாக நடைபெற்ற ‘அகத்தியா’ கேம் மற்றும் 2 வது பாடல் வெளியீட்டு விழா!
Monday January-13 2025

தமிழ் சினிமாவில் புதிய வரலாற்றை படைக்கும் வகையில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘அகத்தியா’...

Recent Gallery