Latest News :

’ஆகஸ்ட் 16 1947’ படத்தை தயாரித்தது ஏன்? - ஏ.ஆர்.முருகதாஸ் விளக்கம்
Sunday March-19 2023

ஏ.ஆர்.முருகதாஸ் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் மற்றும் பர்ப்பிள் புல் புளூ எண்டர்டெயின்மெண்ட் (Purple Bull Entertainment), காட் பிளஸ் எண்டர்டெயின்மெண்ட் (God Bless Entertainment) சார்பில் ஓம் பிரகாஷ் பட், நரசிராம் சவுத்ரி ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கும் படம் ‘ஆகஸ்ட் 16 1947’. 

 

அறிமுக இயக்குநர் என்.எஸ்.பொன்குமார் இயக்கியிருக்கும் இப்படத்தில் கெளதம் கார்த்திக் நாயகனாக நடித்திருக்கிறார். புதுமுக நடிகை ரேவதி நாயகியாக நடித்திருக்கிறார். புகழ் முக்கியமான வேடத்தில் நடிக்க, இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ராபர்ட், மதுசூதனன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.

 

செல்வகுமார் எஸ்.கே ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். சுதர்ஷ.ஆர் படத்தொகுப்பு செய்ய, டி.சந்தானம் கலை இயக்குநராக பணியாற்றியுள்ளார். பெருமாள் செல்வம் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றியிருக்கிறார்.

 

வரும் ஏப்ரல் 7 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் இப்படம் வெளியாக உள்ள நிலையில், தயாரிப்பாலர் ஏ.ஆர்.முருகதாஸ், இயக்குநர் பொன்குமார், நடிகர் கெளதம் கார்த்திக், தயாரிப்பாளர் ஓம் பிரகாஷ் பட், நடிகர் புகழ் ஆகியோர் பத்திரிகையாளர்களை சந்தித்து படம் குறித்து பகிர்ந்துக்கொண்டார்கள்.

 

படத்தை தயாரித்திருக்கும் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் படம் குறித்து கூறுகையில், “இந்த படம் முதலில் வேறு நிறுவனம் தயாரிக்க இருந்தது. சில காரணங்களால் தயாரிப்பில் காலதாமதம் ஆனது. அதே சமயம், இந்த கதையை பொன்குமார் எங்கு சொன்னாலும், அவர்கள் உடனே தயாரிக்க முவந்துவிடுவார்கள். ஆனால், சில காரணங்களால் படம் தொடங்காமல் இருந்தது. அப்போது என்னுடைய மற்றொரு உதவி இயக்குநர் தான், சார் கதையை நீங்க கேட்டு பாருங்கள், என்று சொன்னார். அதன் பிறகு தான் நான் கதையை கேட்டேன். கேட்டவுடன் எனக்கு பிடித்துவிட்டது.  நிச்சயம் ஒரு புதிய களமாகவும், ரசிகர்களுக்கு பிடிக்கும் ஒரு படமாகவும் இருக்கும் என்ற நம்பிக்கை எனக்கு ஏற்பட்டது. இருந்தாலும் எனக்கு இருந்த ஒரே ஒரு பயம், பொன்குமாரின் முதல் படம், முதல் படத்தையே பீரியட் கதை என்பதும், நம்மால் அவ்வளவு பெரிய பட்ஜெட்டில் தயாரிக்க முடியுமா? என்ற பயம் தான் இருந்தது. அதை தவிர எனக்கு பொன்குமார் மீது பெரிய நம்பிக்கை உண்டு. அவர் மீது மட்டும் அல்ல, என்னிடம் பணியாற்றிய உதவி இயக்குநர்கள் அனைவரும் நல்ல படத்தை கொடுப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.” என்றார்.

 

இயக்குநர் பொன்குமார் படம் குறித்து கூறுகையில், “ சுதந்திரம் கிடைத்த நாள் மற்றும் அதற்கு முன் நாள், அடுத்த நாள் என்று மூன்று நாட்களில் கதை நடக்கிறது. அதனால் தான் இந்த தலைப்பை வைத்திருக்கிறேன். திருநெல்வேலி அருகே ஒரு மலை அடிவாரத்தில் இருக்கும் சிறிய கிராமத்தில் இருப்பவர்களுக்கு இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த தகவலே தெரியாத சூழ்நிலையில், அம்மக்கள் பிரிட்டிஷ்காரர்களின் ஆதிக்கத்தில் இருந்து மீள்வதற்காக மேற்கொள்ளும் போராட்டம் தான் படத்தின் கதை.

 

இந்த கதையை முருகதாஸ் சாரிடம் சொன்ன போது, அவர் ரொம்ப நல்லா இருக்கு, நல்ல விஷயத்தை புடிச்சிருக்க, ஆனால் இதை படமாக்கும் போது அதற்கான ஒரு உலகத்தை உருவாக்க வேண்டும். அந்த காலத்தில் பயன்படுத்திய உடை உள்ளிட்ட அனைத்து விஷயங்களையும் மிக சரியாக செய்ய வேண்டும், என்று கூறினார்.

 

அதேபோல், கெளதம் கார்த்திக் சாரிடம் இந்த கதையை சொன்ன போது, அவர் ஓகே சொன்னதோடு, இந்த ஸ்லாங் பேசுவதற்கு பயிற்சி எடுக்க வேண்டும், இப்போதே தொடங்கிடலாமா? என்று கேட்டார். அப்போதில் இருந்து இன்று வரை அவர் மிகப்பெரிய ஒத்துழைப்பு கொடுத்து வருகிறார். பரமன் என்ற கதாபாத்திரத்தில் அவர் வாழ்ந்திருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும். ஒரு ஹீரோவை தாண்டி பரமன் என்ற கதபாத்திரமாக மக்கள் மனதில் இடம்பெறும் அளவுக்கு அவர் நடித்திருக்கிறார்.

 

புகழ் இந்த படத்தில் இதுவரை நடிக்காத ஒரு வேடத்தில் நடித்திருக்கிறார். அந்த ஊரிலே படிக்க தெரிந்த ஒரே ஒரு நபர் புகழ் தான். இரண்டாம் பாதி முழுவதும் அவர் பேசவே மாட்டார். பேசாமலேயே அவர் உணர்வுகளை வெளிப்படுத்திய விதம் சிறப்பாக இருப்பதோடு, அது நகைச்சுவையாகவும், எமோஷனலாகவும் இருக்கும். நிச்சயம் புகழுக்கு இது முக்கியமான படமாக இருக்கும்.

 

நாயகியாக நடித்திருப்பவர் ரேவதி, ஒரு ஜமீன் வீட்டில் வாழும் பெண்ணாக நடித்திருக்கிறார். அவர் அவருக்கான சுதந்திரத்திற்காக ஏங்கிக்கொண்டிருப்பார். அதாவது, வீட்டில் இருக்கும் வரை தான் ராணியாக வாழ முடியும், வெளியே வந்தால் தானும் ஒரு அடிமை தான் என்று அவர் நினைப்பார். இப்படி ஒவ்வொரு கதாபாத்திரங்களும் ஒவ்வொரு சுதந்திரத்தை நோக்கி பயணிக்கும். பிரிட்டிஷ்காரர் வேடத்தில் நடிக்க ராபர்ட் என்றவரை தேடி பிடித்திருக்கிறோம். 300 ஆண்டுகள் நம்மை பயமுறுத்தி வைத்திருந்த பிரிட்டிஷ் ஆட்சியின் அடக்குமுறையை மூன்று நாட்களில் அந்த கிராம மக்களிடம் காட்டும்படியான ஒரு முகம் இருக்க வேண்டும் என்பதற்காக அவரை தேடி பிடித்திருக்கிறோம். இப்படி ஒவ்வொரு கதாபாத்திரங்களும் அதில் நடித்தவர்களின் நடிப்பும் தான் கதையாக இருக்கும்.

 

August 16 1947

 

நடிகர்களை தாண்டி படத்தில் மிகப்பெரிய தொழில்நுட்ப கலைஞர்கள் பணியாற்றியிருக்கிறார்கள். ஒளிப்பதிவாளர் செல்வகுமார், இசையமைப்பாளர் ஷான் ரோல்டன், கலை இயக்குநர் சந்தானம் சார் என அனைவரும் படத்தில் கூடுதல் கவனம் செலுத்தி பணியாற்றியிருக்கிறார்கள். அதனால் படம் நிச்சயம் அனைத்து தரப்பினருக்கும் பிடித்த படமாக தான் இருக்கும்.

 

பயம் தான் நம்முடைய முதல் எதிரி என்ற ரீதியில் கதை இருக்கும். பிரிட்டிஷ்காரர்கள் நம்மை ஆண்டதற்கு அவர்களிடம் நமக்கு இருந்த பயம் தான் முக்கிய காரணம். எங்க ஊரில் உள்ள பெரியவர் பேருந்தில் செல்லும் போதும், ஒரு வெளிநாட்டுக்காரர் வந்திருக்கிறார். அப்போது அவரை பார்த்ததும் அவருக்கு படபடப்பு ஏற்பட்டதாக கூறினார். அந்த பெரியவரின் அப்பா பிரிட்டிஷ் இந்தியா காலத்தில் வாழ்ந்தவர், அந்த ஜீன் தான் இப்போதும் வெள்ளையர்களை பார்த்தால் நமக்குள் ஒரு பயத்தை ஏற்படுத்துகிறது. இப்போதும் ஆங்கில மொழியை பார்த்தால் பயப்படுகிறோம், அவர்களுடைய உடையை அணிவதை பெருமையாக கருதுகிறோம். இந்த விஷயங்கள் தான் இந்த கதையை எழுத என்னை தூண்டியது.” என்றார்.

 

நடிகர் கெளதம் கார்த்திக் படம் குறித்து கூறுகையில், “இந்த படம் எனக்கு ரொம்ப முக்கியமான படமாக இருக்கும். இந்த படத்திற்காக நான் எந்த கஷ்ட்டமும் படவில்லை, ரொம்பவே ஜாலியாக பணியாற்றினேன். அதுமட்டும் அல்ல, இந்த படத்தில் நிறைய விஷயங்களை கற்றுக்கொண்டேன். நான் நடிக்க வந்தபோது எனக்கு எதுவும் தெரியாது, பல தவறுகளை செய்திருக்கிறேன். அதன் பிறகு தான் ஒவ்வொன்றாக கற்றுக்கொண்டேன். அதுபோல தான் இந்த படத்தில் பல விஷயங்களை கற்றுகொண்டு ஒரு ஃபேஷனோடு பணியாற்றினேன். இயக்குநர் பொன்ராம் என்ன சொன்னாரோ அதை சரியாக செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருக்கும், பிறகு எனக்கு தோன்றியதை சில இடங்களில் செய்வேன், அது பிடித்தால் இயக்குநர் வைத்துக்கொள்வார். அப்படி தான் இந்த படத்தில் ரசித்து நடித்திருக்கிறேன்.” என்றார்.

 

நடிகர் புகழ் பேசுகையில், “பொதுவாக என்னை காமெடி பண்ண சொல்லி தான் எல்லோரும் கேட்பார்கள்,  அதிலும் என் தலை முடி அப்படியே இருக்கிறதா? என்று கேட்டுவிட்டு தான் படம் குறித்தே சொல்வார்கள். ஆனால், இயக்குநர் பொன்குமார் தான், என் பரட்டை தலைமுடி வேண்டாம் என்று சொல்லியிருக்கிறார். எனக்கு திரக்கதையை முதலிலேயே கொடுத்து விடுவார்கள், நான் முழுமையாக படித்துவிட்டு படப்பிடிப்பு தளத்திற்கு போகும் போது, பேச கூடாது, முக பாவங்கள் மூலமாகவே நடிக்க வேண்டும் என்று சொல்லிவிடுவார்கள். அது எனக்கு புதிதாக இருந்தது. கெளதம் கார்த்திக் சார் மிக சிறப்பாக நடித்திருக்கிறார். ஒரு காட்சி சொன்னால் போதும், இப்படி செய்யலாம், அப்படி செய்யலாம் என்று பல யோசனைகள் சொல்வதோடு, எங்களுக்கும் அடிக்கடி சொல்லிக்கொடுப்பார். ஒரு முன்னணி நடிகர் போல் இல்லாமல் ரொம்ப சகஜமாக பேசி, அனைவரும் ஒன்றாக இணைந்து நடித்திருக்கிறோம். இந்த படம் எனக்கு மிக முக்கியமான படமாக இருக்கும்.” என்றார்.

Related News

8879

””செம்மண்ணு தானே...” பாடல் எனது சிறந்த இசையமைப்பில் ஒன்று” - ’அகத்தியா’ 3வது பாடல் பற்றி யுவன் நெகிழ்ச்சி
Tuesday January-28 2025

பா.விஜய் இயக்கத்தில், வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் டாக்டர்...

”நான் மிகவும் பெருமையும் மகிழ்ச்சியும் அடைகிறேன்” - நடிகர் அஜித்குமார் அறிவிப்பு
Monday January-27 2025

மத்திய அரசின் மதிப்புமிக்க் பத்ம விருதுக்கு நடிகர் அஜித்குமார் தேர்வு செய்யப்பட்டுள்ளார்...

’பேட் கேர்ள்’ (BAD GIRL) திரைப்படம் க்ராஸ் ரூட் நிறுவனத்தை பெருமைப்பட வைக்கும் - இயக்குநர் வெற்றிமாறன் நம்பிக்கை
Monday January-27 2025

தரமான படைப்புகள் மூலம் தமிழ் திரையுலகில் தனக்கென்று தனி இடத்தை பிடித்திருக்கும் இயக்குநர் வெற்றிமாறன், தனது க்ராஸ் ரூட் பிலிம் கம்பெனி நிறுவனம் மூலம் ‘காக்கா முட்டை’, ‘விசாரணை’ உள்ளிட்ட பல விருது வென்ற திரைப்படங்களை தயாரித்தும் வருகிறார்...

Recent Gallery