உலகில் நடைபெறும் பல ஆச்சரியமான நிகழ்வுகளில் மறுபிறவியும் ஒன்று. மறுபிறவியை மையமாக வைத்து தமிழ் சினிமாவில் சில திரைப்படங்கள் வெளியானாலும், அவற்றில் மறுபிறவியின் உண்மையையும், அதன் பின்னணி ரகசியத்தையும் ஆதாரத்துடன் இதுவரை யாரும் சொன்னதில்லை. அந்த வகையில், பூர்வ ஜென்மம் பற்றிய உண்மைகளை ஆதாரத்துடன் நிரூபிக்கும் வகையில் உருவாகியுள்ளது ‘ஆன்மீக அழைப்பு’ திரைப்படம்.
’கீழக்காடு’ மற்றும்’ ‘பற்றவன்’ ஆகிய படங்களை தயாரித்ததோடு, ‘கீழக்காடு’ படத்தை இயக்கிய சத்தியமூர்த்தி ஜெயகுரு, தனது சத்ய சுதா கிரியேஷன்ஸ் சார்பில் ’ஆன்மீக அழைப்பு’ திரைப்படத்தை தயாரித்து இயக்குவதோடு, முதன்மை கதாபாத்திரத்திலும் நடித்திருக்கிறார்.
ஆதேஷ் பாலா, ரோஜா டிவி துரை ராமச்சந்திரன் மற்றும் புதுமுக நடிகர்கள் பலர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கும் இப்படத்தில் விமான பணிபெண்ணாக இருந்து சினிமாவுக்கு வந்திருக்கும் சுபிக்ஸா கதாநாயகியாக நடித்திருக்கிறார். இவருடன் மேலும் ஐந்து புதுமுக நடிகைகளும் நாயகிகளாக நடித்திருக்கிறார்கள். சிக்கல் ராஜேஷ், ‘திரெளபதி’ பட புகழ் கோபிநாத், ‘பொன்னியின் செல்வன்’ பட குதிரை வீரன் சதிஷ் வாரியர் ஆகியோர் வில்லன்களாக நடித்திருக்கிறார்கள்.
காந்தி ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு எச்.மொஹமத் அசாரூதின் இசையமைத்திருக்கிறார். சத்யமூர்த்தி ஜெயகுரு, ஜி.வி.ராஜன், பழனியப்பன் ஆகியோர் பாடல்கள் எழுதியுள்ளனர். பன்னீர் படத்தொகுப்பு செய்ய, பி.ஆர்.ஓ பணியை கோவிந்தராஜ் கவனிக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், படம் குறித்து நம்மிடம் பகிர்ந்துக்கொண்ட இயக்குநரும் தயாரிப்பாளருமான சத்யமூர்த்தி ஜெயகுரு, “எனது இரண்டு படங்களும் சிறிய பட்ஜெட்டில் உருவானாலும் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து மூன்றாவது படமாக ஆன்மீக அழைப்பு படத்தை தயாரித்து இயக்கியிருக்கிறேன்.
இந்த உலகில் விடை கிடைக்காமல் பல கேள்விகள் இருக்கிறது. அதில் ஒன்று மறுபிறவி இருக்கிறதா? என்ற கேள்வி. இதற்கான பதிலை பலர் பல வகையில் சொல்லி வந்தாலும், சினிமாவில் இதுவரை முழுமையாக சொல்லவில்லை என்று தான் நினைக்கிறேன். அதனால் தான் மறுபிறவியை மையமாக வைத்து இந்த படத்தை இயக்கி தயாரித்திருக்கிறேன்.
ஒவ்வொரு மனிதரும் அவருடைய கர்மா முடியும் வரை மறுபிறவி எடுத்துக்கொண்டு தான் இருப்பார். அதுமட்டும் அல்ல, ஒரு பிறவியில் அவருடன் தொடர்புடையவர்கள், அவருடைய எதிரி அல்லது அவரது லட்சியம் என அனைத்தும் ஒவ்வொரு பிறவியிலும் பல வடிவங்களில் அவரை தொடரும் என்பதையும், மறுபிறவியின் ரகசியத்தையும் தகுந்த ஆதாரங்களுடன் படத்தில் சொல்லியிருக்கிறோம்.
பல நூற்றாண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த குறுநில மன்னன் தற்போதைய கலிகாலத்தில் மறுபிறவி எடுக்கிறார். வாத்தியாரான அவரது வாழ்க்கையில் பல்வேறு மர்மமான விஷயங்கள் நடப்பதோடு, அவ்வபோது அவரை சில அமானுஷ்ய சக்திகள் பயமுறுத்துகிறது. இதன் ரகசியத்தை அறிவதற்காக முன்கூட்டியே நடப்பதை தெரிவிக்கும் நாடிஜோதிடரை வாத்தியார் சந்திக்கிறார். அப்போது, மறுஜென்மம் பற்றிய உண்மைகளை ஜோதிடர் வாத்தியாருக்கு சொல்கிறார். அதை தொடர்ந்து வாத்தியார் வாழ்க்கையில் நடக்கும் பல சம்பவங்களை பரபரப்பான திரைக்கதையோடும், சுவாரஸ்யமான காட்சிகளோடும் சொல்வது தான் ‘ஆன்மீக அழைப்பு’ படத்தின் கதை.
மறுபிறவி இருப்பதை பலர் நம்ப மறுக்கிறார்கள், அவர்கள் இந்த படத்தை பார்த்தால் மறுபிறவி உண்மை தான் என்பதை ஏற்றுக்கொள்வார்கள், அந்த அளவுக்கு படத்தில் பல உண்மை சம்பவங்களையும், அதன் பின்னணியையும் ஆதாரத்தோடு விளக்கியிருக்கிறோம். பிரபல நாடிஜோதிடர் பாபு இந்த படத்தில் நாடிஜோதிடர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்த கதையை நான் அவரிடம் சொன்ன போது, அவர் கதையில் இருப்பவை அனைத்தும் உண்மை, என்று சொன்னதோடு இந்த படம் தொடர்பான பல விஷயங்களில் ஆர்வமாக கலந்துக்கொண்டார். குறிப்பாக, அவருடைய பல அனுபவங்களையும் இந்த படத்திற்காக பகிர்ந்துக்கொண்டார்.
அரசக் காலத்து காட்சிகளும், அதில் நடந்த சம்பவங்களையும், தற்போதைய நிகழ்காலத்தோடு இணைத்து சொல்லிய விதம் நிச்சயம ரசிகர்களை கவரும். படத்தில் வரும் அமானுஷ்யம், அரசக்காலத்து சம்பவங்கள் என அனைத்தும் முதல்பாதியை சஸ்பென்ஸாக நகர்த்தி செல்லும். அதேபோல் இரண்டாம் பாதியில் வரும் அரசியல் சம்பவங்கள் அடுத்தது என்ன நடக்கும்? என்ற எதிர்பார்ப்போடும் படத்தை நகர்த்தி செல்லும். அரசியல் மற்றும் ஆன்மீகம் இரண்டையும் வைத்து அனைத்து தரப்பினருக்கும் பிடிக்கும் ஒரு படமாக ஆன்மீக அழைப்பு படத்தை இயக்கியிருக்கிறேன். ” என்றார்.
’ஆன்மீக அழைப்பு’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகரும் இயக்குநருமான கே.பாக்யராஜ் வெளியிட்ட நிலையில், சமீபத்தில் படத்தின் டீசர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. தற்போது படத்தின் பின்னணி வேலைகள் முடியும் தருவாயில் இருக்க, விரைவில் திரையரங்குகளில் படம் வெளியாக உள்ளது.
நடிகர் விராட் கர்ணா - அபிஷேக் நாமா- கிஷோர் அன்னபு ரெட்டி - NIK ஸ்டூடியோஸ் - அபிஷேக் பிக்சர்ஸ் கூட்டணியில் உருவாகும் பான் இந்திய திரைப்படமான ' நாக பந்தம் ' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை முன்னணி நட்சத்திர நடிகரான ராணா டகுபதி வெளியிட்டார்...
விவசாயத்தில் சாதனை புரிபவர்களையும், அதற்கு உறுதுணையாக இருந்து பங்களிப்பவர்களையும் கெளரவப்படுத்தி அங்கீகரிக்கும் உழவன் ஃபவுண்டேஷனின் ‘உழவர் விருதுகள் 2025’ விழா கோலகலமாக சென்னையில் நடைபெற்றது...
தமிழ் சினிமாவில் புதிய வரலாற்றை படைக்கும் வகையில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘அகத்தியா’...