Latest News :

வீரப்பன் மகள் விஜயலட்சுமியை ஆதரிப்போம்! - ‘மாவீரனின் மகள்’ பட விழாவில் இயக்குநர் பேரரசு பேச்சு
Saturday March-25 2023

மறைந்த வீரப்பனின் மகள் விஜயலட்சுமி ‘மாவீரன் மகள்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகிறார். கே.என்.ஆர் மூவிஸ் சார்பில் இப்படத்தை தயாரித்து இயக்கியிருக்கும் கே.என்.ஆர்.ராஜா, படத்தின் கதாநாயகனாகவும் நடித்திருக்கிறார். இவர்களுடன் முக்கிய வேடத்தில் நடிகர் ராதாரவி நடித்திருக்கிறார். 

 

மஞ்சுநாத் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்தின் பாடல்களுக்கு ரவிவர்மன் இசையமைக்க, பிரேம் பின்னணி இசையமைத்துள்ளார். ஜூலியன் படத்தொகைப்பை மேற்கொள்ள, ஆலயமணி பாடல்கள் எழுதியுள்ளார்.

 

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது. இதில் இயக்குநர் பேரரசு, அனைத்து மக்கள் அரசியல் கட்சி தலைவர் ராஜேஸ்வரி பிரியா, நகைச்சுவை நடிகர் கூல் சுரேஷ் மற்றும் வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக்கொண்டார்கள்.

 

நிகழ்ச்சியில் இயக்குநர் பேரரசு பேசுகையில், “ஹீரோ, ஹீரோயின், இயக்குனர் யார் என பார்த்து படம் பார்க்க முடிவு செய்யாதீர்கள். படம் என்ன கருத்தை சொல்கிறது என்பதை பார்த்து படம் பாருங்கள். நம் ஊரில் முதல்வரின் மகனும் சினிமாவில் நடிக்கலாம், வீரப்பன் மகளும் நடிக்கலாம், சினிமா யார் என்றாலும் ஏற்றுக்கொள்ளும். அந்த வகையில் வீரப்பனின் மகள் விஜயலட்சுமியை ஒரு புதுமுகமாக நாம் ஆதரிப்போம். தெருக்கூத்து அழிந்து கொண்டே வருகிறது என்று சொல்கிறார்கள். ஆனால் டாஸ்மாக் முன்பாக குடித்துவிட்டு விதவிதமாக தெருக்கூத்து நடனங்களை குடிப்பவர்கள் ஆடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். விஜய், பிரபுதேவா இவர்களை விட குடிமகன் சூப்பரா ஆடுகிறான்.

 

பள்ளி, கல்லூரி மாணவிகள் மது அருந்தும் வீடியோக்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மதுவிலக்கு என்கிற வாக்குறுதியை கொடுத்துவிட்டு, அதே மதுவை கொடுத்து தான் ஓட்டு போட சொல்கிறார்கள். இந்த படத்தில் ஆலயமணி எழுதிய சாராயம் அபாயம் என்கிற பாடல் ஒரு அபாய மணி. இந்த பாடலை டாஸ்மாக் முன்பாக ஒலிக்க விட்டு மது ஒழிப்பு பிரச்சாரம் கூட செய்யலாம். மதுவிலக்கை ரத்து செய்வதாக கூறினால் ஓட்டுப் போட மாட்டார்கள் என அரசியல்வாதிகள் பயப்படுகிறார்கள். எந்த இடத்திலும் அரசியல்வாதிகள் பேசும்போது போதைப் பொருள்கள் லிஸ்டில் மதுவை சேர்ப்பதில்லை. மதுவை விற்கலாம் என்றதால் இனி வரும் நாட்களில் டாஸ்மாக்கை போல கஞ்சா கடையும் ஆரம்பித்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

 

ஆன்லைன் ரம்மி மூலமாக எங்கேயோ எப்போதோ ஒன்றிரண்டு பேர் இறக்கிறார்கள்.. ஆனால் குடியால் தினசரி எத்தனையோ பேர் உடல் பாதிப்பு, விபத்து என உயிர் இழக்கிறார்கள்.. ஆன்லைன் ரம்மியை ஒழிப்பதற்காக சட்டசபையில் குரல் கொடுப்பவர்கள், ஏன் மதுவை ஒழிக்க வேண்டும் என்று குரல் கொடுக்கவில்லை.. சாராயம் விற்கும் காசில் அரசாங்கம் நடத்துவது கேவலம். பெண்களுக்கு ஆயிரம் ரூபாயும் தேவையில்லை.. ஓசி பஸ்ஸும் தேவையில்லை.. நீட் தேர்வை நீங்கள் ஒழிக்கிறீர்களோ இல்லையோ, அதுவரை ஏழை மாணவர்களும் மருத்துவ படிக்க படிக்க வேண்டும் என்றால் ஏன் நீங்களே மாணவர்களுக்கு நீட் பயிற்சி அளிக்கக் கூடாது.. சாராயம் விற்ற காசில் எதுவும் எங்களுக்கு பண்ண வேண்டாம். பாவத்தை எங்கள் தலையில் கட்டாதீர்கள்.. கேளிக்கை வரி என்பது கேலிக்கூத்து வரியாக மாறிவிட்டது. இந்த படம் சமுதாயத்துக்காக எடுக்கப்பட்ட படம்” என்றார்.

 

நாயகி விஜயலட்சுமி பேசுகையில், “சின்ன வயதில் இருந்தே நடிக்க வேண்டும் என்கிற விருப்பம் இருந்தது. என்னுடைய தந்தை தனிமனித ஒழுக்கத்துடன் வாழ்ந்து ஒரு முன் உதாரணமாக இருந்தவர். சமூகத்தில் ஒரு பக்கம் குடி, இன்னொரு பக்கம் காதல் என்கிற பெயரில் பெண்கள் சீரழிக்கப்படுவது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கின்றன. இவற்றை மையமாக வைத்து திரைப்படம் எடுத்தால் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படும். அதனாலேயே இந்த படத்தில் நடிக்க ஒப்புக கொண்டேன் நிச்சயமாக என் தந்தையின் பெயருக்கு எந்தவித களங்கமும் வராமல் அவரது பெயரை காப்பாற்றுவேன்” என்றார்.

 

இசையமைப்பாளர் ரவிவர்மா பேசுகையில், “இந்த படத்தில் நான்கு பாடல்கள் இடம் பெற்றுள்ளன. அதில் குறிப்பாக சாராயம் அபாயம் என்கிற பாடலை பாடலாசிரியர் ஆலயமணி எழுதி அவரே பாடியும் உள்ளார். இந்த படத்திற்கு நான் பாடல்களுக்கு மட்டும் இசையமைத்துள்ளேன். பின்னணி இசையை பிரேம் அமைத்துள்ளார். முதல் படத்தில் கமர்சியலாக சம்பாதிக்க நினைக்காமல் இப்படி ஒரு சமூகத்திற்கு தேவையான ஒரு படத்தை தயாரிப்பாளர் ராஜா எடுத்துள்ளார் என்றால், அவரது சகோதரர் குறைந்த வயதிலேயே மதுவால் மரணம் அடைந்த தாக்கம் தான் அதற்கு காரணம். இது தர்மபுரி மாவட்டத்தில் நடக்கும் கதையாக உருவாகியுள்ளது. பல காட்சிகளில் டாஸ்மாக்கிலேயே நிஜமாக படப்பிடிப்பு நடத்தி உள்ளோம்.” என்றார்.

 

அனைத்து மக்கள் அரசியல் கட்சி தலைவர் ராஜேஸ்வரி பிரியா பேசுகையில், “வீரப்பன் உண்மையான கதாநாயகன்.. வீரப்பன் மகள் நடிக்க வந்திருப்பது பெருமையாக இருக்கிறது. திரைப்படம் என்றாலே பணம் சம்பாதிக்கும் துறை என்று தான் ஆகிவிட்டது. அதில் இந்த படத்தின் தயாரிப்பாளர் இயக்குனர் ராஜா போன்றவர்கள் தான் உள்ளே நுழைந்து சமுதாயத்தை மாற்றும் விதமாக படம் எடுக்க முடியும்.. வட மாவட்டங்களை சேர்ந்தவர்கள் தான் கல்வி அறிவிலும் பின்தங்கி இருக்கிறார்கள், அவர்கள் தான் அதிக அளவிலான மோசமான செயல்களிலும்  ஈடுபடுகிறார்கள், அவர்கள் தான் அதிக அளவிலும் மது அருந்துகிறார்கள். இதை அந்த வட மாவட்ட களத்தையே பின்னணியாக வைத்து படம் இயக்கி இருப்பது பாராட்ட வேண்டிய ஒன்று. பள்ளிகளில் போதைப்பொருளுக்கு எதிராக பேசும்போது ஏன் அங்கே மது குறித்து பேசுவதில்லை. வெளிநாடுகளிலும் மது விற்கிறார்கள். ஆனால் இங்கே மட்டும் அதிக சாவு ஏன் ? ஏனென்றால் இங்கே கொடுப்பதும் மது அல்ல விஷம்.” என்றார்.

 

நடிகர் கூல் சுரேஷ் பேசுகையில், “ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் ஆகியோர் அரசியல் ரீதியாக மதுவுக்கு எதிராக ஒரு பக்கம் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்கள். அவர்களது வழியில் வந்த இந்த படத்தின் இயக்குனர் ராஜா சினிமா மூலமாக மதுவுக்கு எதிராக குரல் கொடுக்கும் முயற்சியை எடுத்துள்ளார். அதை நாம் பாராட்ட வேண்டும். வீரப்பன் ரியல் ஹீரோ. அவரது மகள் நடிக்க வந்ததை வரவேற்போம். இந்த மேடையில் நான் அதிகமாக பேசியிருக்கிறேன் என்று நினைத்து, என்மீது வழக்கு போட நினைத்தால் எனக்கு பதிலாக இந்த படத்தின் தயாரிப்பாளர் கே என் ஆர் ராஜா மீது வழக்கு போடுங்கள்” என்றார்.

 

தயாரிப்பாளரும் இயக்குனருமான கே.என்.ஆர்.ராஜா பேசுகையில்,  “எல்லா வீடுகளிலும் ஏதோ ஒரு வகையில் மதுவால் பிரச்சனை இருக்கத்தான் செய்கிறது. மதுவிற்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதத்தில் மிகுந்த கஷ்டப்பட்டு இந்த படத்தை எடுத்துள்ளேன்” என்றார்.

Related News

8890

’நாகபந்தம்’ படத்தின் முதல் பார்வை போஸ்டரை வெளியிட்ட ராணா டகுபதி!
Monday January-13 2025

நடிகர் விராட் கர்ணா - அபிஷேக் நாமா- கிஷோர் அன்னபு ரெட்டி - NIK ஸ்டூடியோஸ் - அபிஷேக் பிக்சர்ஸ் கூட்டணியில் உருவாகும் பான் இந்திய திரைப்படமான ' நாக பந்தம் ' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை முன்னணி நட்சத்திர நடிகரான ராணா டகுபதி வெளியிட்டார்...

உழவர் விருது தொடர்ந்து நடத்துவது ஏன் ? - நடிகர் கார்த்தி விளக்கம்
Monday January-13 2025

விவசாயத்தில் சாதனை புரிபவர்களையும், அதற்கு உறுதுணையாக இருந்து பங்களிப்பவர்களையும் கெளரவப்படுத்தி அங்கீகரிக்கும் உழவன் ஃபவுண்டேஷனின் ‘உழவர் விருதுகள் 2025’ விழா கோலகலமாக சென்னையில் நடைபெற்றது...

கோலாகலமாக நடைபெற்ற ‘அகத்தியா’ கேம் மற்றும் 2 வது பாடல் வெளியீட்டு விழா!
Monday January-13 2025

தமிழ் சினிமாவில் புதிய வரலாற்றை படைக்கும் வகையில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘அகத்தியா’...

Recent Gallery