வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி கதையின் நாயகனாகவும், விஜய் சேதுபதி வாத்தியாராகவும் நடித்திருக்கும் ‘விடுதலை - பாகம் 1’ படத்தை ஆர்.எஸ்.இன்போடெயின்மெண்ட் சார்பில் எல்ரெட் குமார் தயாரித்திருக்கிறார். இளையராஜா இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
வரும் மார்ச் 31 ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் ‘விடுதலை - பாகம் 1’ வெளியாக உள்ள நிலையில், படத்தில் சூரிக்கு ஜோடியாக நடித்திருக்கும் நடிகை பவானி ஸ்ரீ படத்தில் நடித்தது குறித்து கூறுகையில், “பணிக்காக கிராமத்திற்கு வரும் போலீஸ் கான்ஸ்டபிளுடன் அழகான பிணைப்பை ஏற்படுத்திக் கொள்ளும் ஒரு பழங்குடியினப் பெண் கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். வெற்றிமாறன் சாருடன் பணிபுரிவது என்பது எந்த நடிகருக்கும் நீண்ட நாள் கனவு, நானும் இதற்கு விதிவிலக்கல்ல. என்னுடைய இரண்டாவது படத்திலேயே அது நடந்ததில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இந்தப் படத்தில் நான் கமிட் ஆன போது நான் அனுபவித்த அதே உற்சாகம் இப்போதும் இருக்கிறது. வெற்றிமாறன் சார் சிறந்த இயக்குநர். தனித்துவமான கதைகளை உருவாக்குபவர். மேலும் அவர் கதையில் வரும் கதாபாத்திரங்களை உருவாக்கும் விதமும் தனித்துவமானது. ஒரு சிறந்த இயக்குநர் என்பதையும் தாண்டி, அவர் ஒரு நல்ல மனிதர். அடர்ந்த காடுகளுக்குள் படப்பிடிப்பு நடந்தபோது அங்கிருக்கும் ஒரு செடி, பூச்சி கூட தொந்தரவு செய்யாதபடி பார்த்துக் கொள்ள விரும்பினார். இது எனக்கு ஒரு சிறந்த கற்றல் அனுபவமாக இருந்தது. உணர்ச்சிப்பூர்வமாக தன் கதாபாத்திரங்களை உருவாக்குவதில் அவர் சிறந்த இயக்குநர். இந்தப் படத்தில் சூரி சார் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். நகைச்சுவை நடிகராக இருந்து இந்தப் படத்தில் தீவிரமான கதையின் நாயகனாக அவர் மாறியிருப்பது அவருக்கு பாராட்டுகளை குவிக்கும்.
ஒட்டுமொத்த படப்பிடிப்பே மறக்க முடியாதது. காடுகளின் இந்த சூழலுக்கு நான் புதியவள். அந்த சூழல் எனக்கு ஒரு தியான அனுபவத்தை கொடுத்தது. இது எனக்கு ஒரு நிதானமான மற்றும் இனிமையான அனுபவத்தை பரிசளித்து என்றுமே எனக்கு மறக்க முடியாததாக அமைந்தது.” என்றார்.
மேலும், தனக்கான ரசிகர் பட்டாளம் அதிகரித்துள்ளது பற்றி நடிகை பவானி கூறும்போது, “இது உண்மையா என்பது எனக்கு முழுமையாகத் தெரியவில்லை. ஆனால் இரண்டு பாடல்களிலும் நான் இருக்கிறேன். இதற்கான பாராட்டுகளைப் பெறுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். அற்புதமான பாடல்களால் படத்தை அழகுபடுத்தியிருக்கும் மேஸ்ட்ரோ இசைஞானி இளையராஜா சாருக்கு எல்லாப் புகழும் சேரும்” என்றார்.
இசை மேதைகளின் குடும்பத்தைச் சேர்ந்த பவானிக்கு 'விடுதலை'யில் ஒரு பாடலைப் பாட வேண்டும் என்ற ஆசை இருந்ததா? என்று அவரிடம் கேட்கப்பட்டபோது, அவர் புன்னகையுடன் மறுத்தார். “இல்லை! என் குடும்பத்தில் நான்தான் 'ODD ONE'. எனது குடும்பத்தினர் என்னிடம் வற்புறுத்திய போதிலும், நான் இசைப் பயிற்சியை சரியாக மேற்கொள்ளவில்லை. இளையராஜா சார் கூட நான் ஒரு பாடலை பாடச்சொல்லி கேட்டபோது, நான் அந்த அளவுக்கு சிறந்த பாடகர் இல்லை என்று மறுத்து விட்டேன்.” என்றார்.
படம் குறித்தான அனுபவத்தை பகிர்ந்த பாவனி, ”நான் இன்னும் படத்தை முழுதாக பார்க்கவில்லை. ஆனாலும், படக்குழுவில் படம் பார்த்த அனைவரும் 'விடுதலை' நன்றாக வந்திருப்பதாகத் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர். பார்வையாளர்களுடன் படத்தைத் திரையில் பார்க்க ஆர்வமாக உள்ளேன். நல்ல கதைகளை நிச்சயம் பார்வையாளர்கள் மதிப்பார்கள். எண்டர்டெயின்மெண்ட் என்பதையும் தாண்டி, நல்ல படங்கள் வரும்போது அதை வரவேற்றுக் கொண்டாடுவார்கள். நிச்சயம் அது 'விடுதலை' படத்திற்கும் நடக்கும்.” எனத் தெரிவித்தார்.
மிகப்பெரிய வெற்றி படங்களையும், தரமான படங்களையும் வெளியிட்டு வரும் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் ‘விடுதலை - பாகம் 1’ படத்தை தமிழகம் முழுவதும் வெளியிடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகர் விராட் கர்ணா - அபிஷேக் நாமா- கிஷோர் அன்னபு ரெட்டி - NIK ஸ்டூடியோஸ் - அபிஷேக் பிக்சர்ஸ் கூட்டணியில் உருவாகும் பான் இந்திய திரைப்படமான ' நாக பந்தம் ' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை முன்னணி நட்சத்திர நடிகரான ராணா டகுபதி வெளியிட்டார்...
விவசாயத்தில் சாதனை புரிபவர்களையும், அதற்கு உறுதுணையாக இருந்து பங்களிப்பவர்களையும் கெளரவப்படுத்தி அங்கீகரிக்கும் உழவன் ஃபவுண்டேஷனின் ‘உழவர் விருதுகள் 2025’ விழா கோலகலமாக சென்னையில் நடைபெற்றது...
தமிழ் சினிமாவில் புதிய வரலாற்றை படைக்கும் வகையில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘அகத்தியா’...