Latest News :

’கன்னி’ படத்தின் படப்பிடிப்பில் நடந்த அற்புதங்கள்! - இயக்குநர் நெகிழ்ச்சி
Saturday April-01 2023

இயக்குநர் மாயோன் சிவா தொரப்பாடி எழுதி இயக்கியிருக்கும் படம் ‘கன்னி’. சன் லைஃப் கிரியேஷன்ஸ் சார்பில் எம்.செல்வராஜ் தயாரித்திருக்கும் இப்படத்தில் அஷ்வினி சந்திரசேகர் பிரதான பாத்திரத்தில் நடித்துள்ளார். மணிமாறன், தாரா கிரீஸ் ,அறிமுகம் -ராம் பரதன் மற்றும் ஏராளமான புது முகங்கள், மண்ணின் மைந்தர்கள் நடித்துள்ளனர்.

 

ராஜ்குமார் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு செயாஸ்டியன் சதீஷ் இசையமைத்திருக்கிறார். உமாதேவி பாடல்கள் எழுத, சக்திவேல் மோகன் கலையை நிர்மாணித்துள்ளார். ரமேஷ் பாபு சண்டைக்காட்சிகளை வடிவமைக்க, சாம் ஆர்.டி.எக்ஸ் படத்தொகுப்பு செய்கிறார்.

 

திரைப்பட முயற்சிகளில் ஒரு நல்ல படைப்புக்கான கதை எப்போது மலரும் என்பதை அறுதியிட்டுச் சொல்ல முடியாது. அதைத் தேடி திரியும் தருணங்களில் அகப்படாமல் போக்கு காட்டும். வேறொரு பயணத்தில் எதிர்பாராமல் வந்து முகம் காட்டும். அப்படி வேறொரு படத்திற்காக படப்பிடிப்பு நடத்த இடம் தேடி சென்ற சிந்தனை தோன்றி அது 'கன்னி'  படமாக உருவாகியது, என்று கூறும் இயக்குநர் மாயோன் சிவா தொரப்பாடி, 'கன்னி'  படத்தின் உருவாக்க முயற்சிகள் , படப்பிடிப்பு அனுபவம் குறித்து கூறுகையில், “படப்பிடிப்பு அனுபவம்  என்று கேட்டால், படத்திற்காக  லொகேஷன் தேடினோம். எப்படி என்றால் மண் சாலையாக இருக்க வேண்டும், நாகரீக மாற்றங்கள் எதுவும் அங்கே இருக்கக் கூடாது, வண்டி வாகனங்கள், மின் கம்பங்கள், செல்போன் டவர்கள்  எதுவும் இல்லாத இடமாக இருக்க வேண்டும். அப்படிப்பட்ட இடத்தைத் தேடி அலைந்து கொண்டிருந்தோம். அப்படி இருக்கும்போது என் நண்பர்தான் ஓர் இடத்துக்கு அழைத்துக் கொண்டு போனார்.

 

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஓசூர் சுற்றுப்புறத்தில் உள்ள தேன்கனிக்கோட்டை தாலுகாவில் உள்ள ஒரு சிற்றூர். புல்லஹள்ளி ஆலஹள்ளி என்கிற ஊர். அந்த ஊரைப் பார்த்தபோது எனக்கு ஆச்சரியமாகவும் அதிசயமாகவும் இருந்தது.ஒரு காலத்தில் நன்றாக வாழ்ந்த மக்கள் இப்போது பெரும்பாலும் அந்த ஊரை விட்டு வெளியேறி விட்டார்கள். அந்த ஊரில் பள்ளி இல்லை, கல்வியில்லை. யாரும் திருமணம் செய்து கொள்ள பெண் தருவதில்லை. எனவே எல்லாரும் வெளியூர் சென்று விட்டார்கள். நாலு குடும்பங்கள் தான் உள்ளன. குடும்ப உறுப்பினர்கள் இருப்பார்கள்.சில நூறு ஆடு மாடுகள் உள்ளன.அப்படிப்பட்ட ஊரை தேடிப் பிடித்து தான் நாங்கள் படப்பிடிப்பு நடத்தி இருக்கிறோம். படப்பிடிப்பு நடத்திய போது அந்த ஊரின் காய்ந்த செம்மை படர்ந்த வறண்ட முகத்தையும் டிசம்பர் பருவத்தில் பனிக்காலத்தில் பனி சூழ்ந்த வெண் புகை  படிந்து மூடிய  முகத்தையும் நாங்கள் பார்த்தோம். ஒரே ஊரின் இரு வேறுபட்ட தரிசனங்கள் எங்களை ஆச்சரியப்படுத்தின

 

இந்த ஊருக்கு ஒரு பத்து முறை சென்று தான் மனதளவில் நாங்கள் பழகிக் கொண்டோம். தயாரிப்பாளரிடம் அந்தப் பகுதியைக் காட்டிய போது மேலே ஏறுவதற்கு பல சிரமங்கள் இருந்தாலும், வண்டி வாகனங்கள் இல்லாமல் செல்வதற்கு சிரமப்பட்டாலும் உடனே ஒப்புக்கொண்டார். அவருக்கு சினிமா மீதுள்ள காதலால்தான் இது நடந்தது.

 

நாங்கள் அந்தப் பகுதியில் படப்பிடிப்பு என்று செல்லும் போது அக்கம் பக்கம் உள்ளவர்கள் வனவிலங்குகள் தொல்லைகள் அதிகம், ஆபத்து அதிகம் என்று அச்சமூட்டினார்கள். ஆனால் இயற்கையின் ஒத்துழைப்பால் , பிரபஞ்ச சக்தியின் ஆதரவால் நாங்கள் பாதுகாப்பாகப் படப்பிடிப்பை நடத்தி முடித்து விட்டோம்.அந்தப் படப்பிடிப்பிற்காக பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்களும் சரி நடித்தவர்களும் சரி எங்களுக்குக் கொடுத்து ஒத்துழைப்பை மறக்க முடியாது. அதை அவர்கள் ஒரு வேலையாகச் செய்யாமல் விருப்பமாகச் செய்தார்கள். அதனால் தான் இது சாத்தியப்பட்டது.

 

Kanni

 

அந்த ஊரில் தண்ணீரே கிடைக்காது என்றார்கள். ஆனால் எங்களுக்கு கிணறு கிடைத்தது. அதில் கைக்கெட்டும் தூரத்தில்  தண்ணீர் பிடிக்கும் அளவிற்கு தண்ணீரும் இருந்தது. அருகிலேயே ஒரு குடமும் இருந்தது .இது ஒரு அதிசயம். அதில் தான் நாங்கள் குடித்ததும் குளித்ததும். அதேபோல் நாங்கள் இருள் சூழ்ந்த இடங்களில் சந்தித்த மனிதர்கள் அமானுஷ்யமாக எங்களுக்கு தெரிந்தது. ஏனென்றால் அப்படிப்பட்டவர்கள் அந்த ஊரில் இல்லை என்றார்கள். இப்படி நிறைய அற்புதங்கள் நிகழ்ந்தன.இந்தப் படத்தைப் பொறுத்தவரை அமானுஷ்யமும் கனவும் நினைவும் புனைவும் கலந்த அனுபவம்.

 

இந்தப் படத்தின் கதை என்ன என்றால்,ஒரு நடு இரவில்  ஒன்றரை வயதுக் கைக்குழந்தையுடன் கையில் லாந்தர் விளக்குடன்  இளம் பெண் ஒருத்தி இருட்டில் மலையேறுகிறாள். மலைப் பாதையில் செல்கிறாள். வழியில் தென்படுபவர்கள் அச்சமூட்டுகிறார்கள்.தன் மாமாவை பார்க்க வேண்டும் என்று அவள் சொல்கிறாள். வேண்டாம் என்று பலரும் தடுக்கிறார்கள். இருந்தும் தைரியமாக மேலே சென்று அந்த ஊரை அடைகிறாள். அங்கும் அவளுக்கு பாதுகாப்பு இல்லாததால் மீண்டும் திரும்புகிறாள். அவள் யார்?அது அவளது குழந்தை இல்லை. அப்படி என்றால் அது யார்? அவளுக்கு நேர்ந்தது என்ன? அவளை ஏன் மற்றவர்கள் தடுக்கிறார்கள்? அவளை துரத்தி வரும் ஆபத்து என்ன?அவளுடைய எதிரிகள் யார்? அவர் சந்தித்த அமானுஷ்ய அனுபவங்கள் என்ன? என்பதுதான் இந்த 'கன்னி' படத்தின் கதை.இந்தக் கதையைப் பல்வேறு உணர்வுகளின் குவியலாக கூறி இருக்கிறோம்.

 

இந்தப் பிரபஞ்சம் நம்முடன் எப்போதுமே உரையாடிக் கொண்டிருக்கிறது. அதன் மொழியைத்தான் யாரும் கண்டு கொள்வதில்லை. அது நமக்குப் புரிவதில்லை.புரிந்து கொண்டவர்கள் சுகமான வாழ்க்கை வாழ்கிறார்கள்.அப்படி இந்தப் பிரபஞ்சத்தின் மொழியைத் தெரிந்து கொண்டவர்கள் தான் நமது மூதாதையர்கள்.எப்போதும் இந்தப் பிரபஞ்சம் நமக்கு சொல்வதை யாரும் காது கொடுத்துக் கேட்பதில்லை. கண் திறந்து பார்ப்பதில்லை.அதனால்தான் நமக்கு இவ்வளவு அழிவுகளும் கெட்ட விளைவுகளும் ஏற்படுகின்றன. ஆனால் அந்தக் கிராமத்தில் அந்த மண்ணின் வேர்களாக இருக்கும் மக்கள் , மண்ணோடு கலந்துவிட்ட மக்கள் அந்த பிரபஞ்சத்தின் மொழியை அறிவார்கள்.

 

 அதைப் புரிந்து கொண்டு வாழ்பவர்கள்.புரியாததன் பாதிப்பு என்ன என்பதைப் பற்றி எல்லாம் இந்தப் படத்தில் கூறி இருக்கிறோம் .இந்தப் படம் நமது பண்பாடு , தொன்மை வேரோடு வேரடி மண்ணாகக் கலந்துள்ள கலாச்சாரம் நமது மருத்துவ, பாரம்பரியப் பெருமை என அனைத்தையும் பேசி இருக்கிறது.அதற்கான பாதையில் செல்லும் கதையில் நிகழும் அமானுஷ்ய சம்பவங்கள் பற்றியும் சொல்கிறது.இப்படம் நமது மண்ணின் பெருமை, தொன்மை, பாரம்பரியம் ஆன்மீகம். அமானுஷ்யம், மர்மம், திகில் அனைத்தும் கலந்த கலவையாக  நிச்சயமாக இருக்கும்.” என்று நம்பிக்கையுடன் கூறினார்.

Related News

8908

’நாகபந்தம்’ படத்தின் முதல் பார்வை போஸ்டரை வெளியிட்ட ராணா டகுபதி!
Monday January-13 2025

நடிகர் விராட் கர்ணா - அபிஷேக் நாமா- கிஷோர் அன்னபு ரெட்டி - NIK ஸ்டூடியோஸ் - அபிஷேக் பிக்சர்ஸ் கூட்டணியில் உருவாகும் பான் இந்திய திரைப்படமான ' நாக பந்தம் ' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை முன்னணி நட்சத்திர நடிகரான ராணா டகுபதி வெளியிட்டார்...

உழவர் விருது தொடர்ந்து நடத்துவது ஏன் ? - நடிகர் கார்த்தி விளக்கம்
Monday January-13 2025

விவசாயத்தில் சாதனை புரிபவர்களையும், அதற்கு உறுதுணையாக இருந்து பங்களிப்பவர்களையும் கெளரவப்படுத்தி அங்கீகரிக்கும் உழவன் ஃபவுண்டேஷனின் ‘உழவர் விருதுகள் 2025’ விழா கோலகலமாக சென்னையில் நடைபெற்றது...

கோலாகலமாக நடைபெற்ற ‘அகத்தியா’ கேம் மற்றும் 2 வது பாடல் வெளியீட்டு விழா!
Monday January-13 2025

தமிழ் சினிமாவில் புதிய வரலாற்றை படைக்கும் வகையில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘அகத்தியா’...

Recent Gallery