Latest News :

”இங்கு வாத்தியார் வெற்றிமாறன் தான்” - ‘விடுதலை’ விழாவில் விஜய் சேதுபதி பேச்சு
Friday April-07 2023

கடந்த மாதம் 31 ஆம் தேதி வெளியான ‘விடுதலை - பாகம் 1’ மிகப்பெரிய வெற்றி பெற்று திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த வெற்றியை கொண்டாடும் விதத்தில், படக்குழுவினர் சென்னையில் நன்றி தெரிவிக்கும் விழா நடத்தினார்கள். இதில், இயக்குநர் வெற்றிமாறன், தயாரிப்பாளர் எல்ரெட் குமார், விஜய் சேதுபதி, சூரி, பவானி ஸ்ரீ உள்ளிட்ட ‘விடுதலை’ படக்குழுவினர் அனைவரும் கலந்துக்கொண்டார்கள்.

 

நிகழ்ச்சியில் நடிகர் விஜய்சேதுபதி பேசுகையில், “இந்தப் படத்தில் எனக்கு பிரதானமாக இருப்பது வெற்றி மாறன் தான். மேக்கிங் வீடியோவிலேயே அவரது உழைப்பைப் பார்த்திருப்பீர்கள். நான் ஒரு களிமண் போல தான் அங்கு போவேன். அவர் என்ன சொல்கிறாரோ அதை செய்வேன். அவர் சொல்லாமல், அவரது பிஹேவியரில் இருந்தும் புரிந்து கொண்டு செய்வேன். ஏனெனில் மொழி என்பது தாமதமாகக் கண்டுபிடிக்கப்பட்டது தான். அதற்கு முன்பு உணர்வுகள் தான் நம்மிடம் பேசும் மொழி.   இந்தப் படத்தின் பெருவெடிப்பு அவருடைய சிந்தனையில் இருந்து தான் தொடங்கியது. எப்போதுமே யானைகள் பணிவாக இருக்கும் போது பார்ப்பதற்கு அழகாக இருக்கும். அதன் போலதான், அவருடைய அறிவும், போக்கும், செயல்பாடும் பிரம்மாண்டமாக இருக்கும். அவருடைய கிரகிப்புத் தன்மை எப்போதும் என்னை ஆச்சரியப்பட வைக்கும். நல்லவேளை நான் பெண்ணாக இல்லை. இப்போதும் அவரைப் பார்த்து பேசாததற்கு காரணம் அதுதான். கூச்சமாக உள்ளது. சிந்தனையில் தடுமாறினாலும், மரியாதையில் அவரிடம் தடுமாறியது இல்லை. 

 

உணவு சமைக்கும்போதே அதை பரிமாறி சுவைத்துப் பார்க்க சொல்லும் தைரியம் எத்தனை பேரிடம் இருக்கும் எனத் தெரியவில்லை. அப்படி படம் உருவாகிக் கொண்டிருக்கும் போதே என்னிடம் கேட்டார். அப்படி ஒரு அற்புதமான இயக்குநர் அவர். கதை தொடர்பாக என்னிடம் பல கேள்விகள் இருந்தது. அதை அவரிடம் கேட்டு புரிந்து கொண்டு வாத்தியாரை கொடுத்திருக்கிறேன். இங்கு வாத்தியார் என்பது விஜய்சேதுபதி கிடையாது. பல வாத்தியார்களை கிரகித்துக் கொடுத்த வெற்றி மாறன் தான். இந்தப் படம் இப்படி வெளியானதுக்கு முக்கிய காரணம் வெற்றிமாறன். அவருக்கும் படத்தை வெளியிட்ட ரெட் ஜெயண்ட் நிறுவனத்துக்கும் நன்றி. மக்கள் அதை ஏற்றுக் கொண்டதற்கும் நன்றி. நகைச்சுவை நடிகராக இருந்து, கதையின் நாயகனாக வெற்றி சாரின் மீது நம்பிக்கை வைத்து நகர்ந்து வந்திருக்கும் சூரிக்கும் பாராட்டுகள். க/பெ ரணசிங்கம் படத்தில் பவானியுடன் நடித்திருந்தேன். அதன் பிறகு இரண்டாவது படம் இது. தன் வேலையை சரியாக புரிந்து கொண்டு நடிக்கக்கூடியவர்களில் ஒருவர். படத்தில் வரும் காட்டி அரசன் வேல்ராஜ். அந்த அளவுக்கு சிறப்பான பணியை செய்துள்ளார். ராஜீவ் சார் இந்தப் படத்தில் நடித்தபோது நான் மிகவும் ரசித்துப் பார்த்தேன். ஒரு மனிதனின் வாழ்க்கையையும் மொழியையும் புரிந்து கொள்ள கூடிய படத்தை அவன் ரசிக்கும்படி கொடுப்பது சாதாரணம் அல்ல. என் நினைவுகளில் மறக்க முடியாத படத்தைக் கொடுத்த அனைவருக்கும் நன்றி.” என்றார்.

 

தயாரிப்பாளர் எல்ரெட் குமார் பேசுகையில், ”இந்த வெற்றி எனக்கு எமோஷனலான ஒன்று. ஒரு இடைவெளிக்குப் பிறகு நல்ல படத்தோடு வரவேண்டும் என நினைத்தபோது இதை ஒத்துக் கொண்ட வெற்றிமாறனுக்கு நன்றி. படத்தில் அனைவருமே கடின உழைப்பைக் கொடுத்திருக்கிறார்கள். இந்தப் படம் ஒரு சக்சஸ் ஃபார்முலாவுக்கான ஜோனில் இருக்கும் படம் கிடையாது. அதனால், படம் வெளியாகும்போது எனக்கு ஒரு பதட்டம் இருந்தது. இந்தப் பயம் பொருளாதார ரீதியாக கிடையாது. ஒரு இடைவெளிக்குப் பிறகு வருகிறோம் நல்ல படமாக அமைய வேண்டும் என்றுதான். இந்த வெற்றியை ஒத்துக் கொண்டு அடுத்தடுத்து பொறுப்புடன் செயல்படுவோம்” என்றார். 

 

நடிகர் சூரி பேசுகையில், “’விடுதலை’ படம் ரிலீஸான வேகத்திலேயே இப்படியொரு நன்றி சொல்லும் நிகழ்வு நிகழும் என எதிர்பார்க்கவில்லை. என் வாழ்க்கையில் இது ஒரு மறக்க முடியாத நிகழ்வாகவே இருக்கும். இந்தப் படத்தில் உள்ள அனைவருக்கும் சேர்த்து ஒரு ஹீரோ என்றால் அது வெற்றி மாறன் சார் தான்.  இந்தப் படம் பார்த்துவிட்டு ‘நான் நல்லா இருக்க வேண்டும்’ என்று பலரும் வாழ்த்தினார்கள். நன்றி. வெற்றிமாறன் இவ்வளவு பெரிய வாய்ப்பைக் கொடுத்துள்ளார். நிச்சயம் வருங்காலத்தில் அதை சரியாகப் பயன்படுத்திக் கொள்வேன் என நினைக்கிறேன். சக நடிகனான எனக்கு ஹீரோ விஜய் சேதுபதி மாமா ‘சூப்பர் சூப்பர்’ என பாராட்டுதல் கொடுத்துக் கொண்டே இருந்தார். பவானியுடன் நடித்தது மகிழ்ச்சி. ஆதரவு தந்த எல்லாருக்கும் நன்றி” என்றார்.

 

Viduthalai Thanks Giving Meet

 

இயக்குநர் வெற்றிமாறன் பேசுகையில், “இந்த மாதிரியான படம் எடுப்பதில் எளிதான விஷயம் என்னவென்றால், இந்தப் படம் எடுக்க வேண்டும் என்று முடிவு செய்வது தான். அடுத்த எளிதான விஷயம் இந்தப் படத்தைத் தயாரிக்கலாம் என்று நினைப்பது. இந்தப் படத்தைத் தயாரிக்க தயாரிப்பாளருக்கு பெரிய நம்பிக்கை வேண்டும். நாங்கள் கஷ்டப்பட்டு வேலை செய்தது யாரும் சொல்லவில்லை. இப்படி ஒரு கதையை கொண்டு வர அது நாங்களே உருவாக்கிக் கொண்டது. ஆனால், இப்படியான கதையை ஆரம்பிக்கிறோம் என அறிவித்ததில் இருந்தே ஊடகங்கள், ரசிகர்கள் என பலரும் அதைப் பற்றி பேச ஆரம்பித்து ஆதரவு கொடுத்தார்கள். அதுதான் பெரிய விஷயம் என நினைக்கிறேன். இந்தப் படத்தில் ஆயிரம் குறைகள் உள்ளது. ஆனால், அதை எல்லாம் விட்டுவிட்டு இந்தக் கதையின் தீவிரம், கருப்பொருள், நாங்கள் பட்ட கஷ்டம் ஆகியவற்றை மட்டுமே மதிப்பிட்டு கிட்டத்தட்ட அனைத்து மீடியாக்களும் எங்களுக்கு ஆதரவு கொடுத்தது பெரிய விஷயம். மக்கள் இந்த கதையின் வலியை அவர்களுடையதாக எடுத்துக் கொண்டாடினார்கள். அது எங்களுடைய நன்றிக்குரியது. ரெட் ஜெயண்ட் நிறுவனத்துக்கு நன்றி. இந்தக் கதையில் நல்லவன் நாயகன். நல்லவனை நாயகனாகப் பார்த்து நிறைய நாட்கள் ஆகிவிட்டது. நல்லவனை கதைநாயகனாக ஏற்றுக் கொண்டார்கள். இந்தப் படத்தில் வழக்கமான டெம்ப்ளேட் இல்லை. அதையும் ஏற்றுக் கொண்டு இரண்டாம் பாகத்திற்கும் காத்திருப்பதாக சொன்ன அனைவருக்கும் நன்றி. இன்னும் இது போன்ற புதிய முக்கியமான கதைக்களங்களை சொல்வதற்கும் ஊக்கமாக இருக்கும். ரெட் ஜெயண்ட் படத்தைப் பார்ப்பதற்கு முன்பு ராஜா சார் படத்தப் பார்த்துவிட்டு ‘பெரிய படமாக வரும். என்ன மாதிரியான இசை வேண்டுமோ கேள்’ என கேட்டு படத்திற்கு முழு ஆதரவும் கொடுத்தார். ஏனெனில் நான் படத்தின் பின்னணி இசைக்கு குறைவான நேரத்தையே கொடுத்தேன். அதை எல்லாம் பொறுத்துக் கொண்டார். அவருடன் வேலை பார்த்தது மகிழ்ச்சி.” என்றார். 

 

ஒளிப்பதிவாளரும் நடிகருமான ராஜீவ் மேனன் பேசுகையில், “என்னுடைய தமிழ் ஆர்வமூட்டும்படி இருப்பதாக விஜய் சேதுபதி சொன்னார். ஏன் இவ்வளவு நாட்கள் நடிக்கவில்லை என்பது தெரியவில்லை. ஆனால், உள்ளுக்குள் அந்த எண்ணம் இருந்தது உண்மை தான். இந்தப் படத்திற்காக வெற்றி என்னை அழைப்பதற்கு முன்பு தான் ஒரு விளம்பரத்தில் நடித்தேன். வெற்றி கேட்டதும் உடனே சம்மதித்து விட்டேன். கமல் சார் சொல்வது போல, ‘எனக்குள் இருந்த நடிகரை எழுப்பி விட்டார்’ வெற்றிமாறன். ஒரு சிறுகதையை பெரிய கதையாக மாற்றி இருக்கிறார். அவரது வொர்க்கிங் ஸ்டைல் எனக்கு வித்தியாசமாக உள்ளது. தயாரிப்பாளர் எல்ரெட் குமாருக்கு நன்றி. வேல்ராஜ், ஜாக்கி இருவரும் சிறப்பான பணியைக் கொடுத்துள்ளனர். சூரி, விஜய்சேதுபதி என இருவரும் அழகான நடிப்பைத் திரையில் காட்டியுள்ளனர். இரண்டாம் பாகத்திற்காக காத்திருக்கிறேன்.” என்றார்.

 

ரெட்ஜெயண்ட் மூவிஸ் குணா பேசுகையில், “இந்தப் படத்தின் டீசர் பார்த்த போதே  படம் வெற்றியடையும் என்பதை மக்கள் கொடுத்த வரவேற்பை புரிந்து கொண்டேன். படத்தைப் பார்த்தவர்கள் எல்லாம் லயித்து கொண்டாடி விட்டார்கள். ஒரு புத்தகத்தை, இலக்கியத்தைப் படித்தால் எப்படி இருக்குமோ அப்படி இந்த படம் இருந்தது. சூரி நடிகர் நாகேஷ் போன்றவர். அந்த அளவுக்கு சிறப்பாக நடித்துள்ளார். முதல் பாகத்தில் சூரியை ரசித்து விட்டோம். விஜய் சேதுபதியை இரண்டாம் பாகத்தில் ரசிக்க காத்திருக்கிறோம். இரண்டொரு மாதத்தில் இரண்டாம் பாகத்தையும் சீக்கிரம் வெளியிடுங்கள்.” என்றார்.

Related News

8919

’அமரன்’ படத்தை பார்த்து பாராட்டிய முதல்வர் மு.க.ஸ்டாலின்!
Thursday October-31 2024

ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷ்னல் சார்பில் நடிகர் கமல்ஹாசன் தயாரிப்பில், சிவகார்த்திகேயன் நடிப்பில், ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘அமரன்’...

பரபரப்பான சம்பவங்கள் பின்னணியில் உருவான ‘முரா’ பட டிரைலர் வெளியானது!
Thursday October-31 2024

‘கப்பேலா’ படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் முஹம்மது முஸ்தபா, இயக்கத்தில் உருவாகியிருக்கும் ஆக்‌ஷன் திரில்லர் படம் ‘முரா’...

ஃபேண்டஸி காதல் படமாக உருவாகியுள்ள ‘மெஸன்ஜர்’!
Wednesday October-30 2024

பி.வி.கே ஃபிலிம் ஃபேக்டரி (PVK FILM FACTORY) சார்பில் பா...

Recent Gallery