அண்ணல் அம்பேத்கரின் வாழ்க்கை வரலாற்றோடு சாதி மத பிரச்சனைகளையும் மற்றும் கவ்லி, மருத்துவம், விவசாயம் ஆகியவற்றின் முக்கியத்துவத்தையும் மையமாக கொண்டு உருவாகியிருக்கும் கமர்ஷியல் திரைப்படம் ‘A படம்’. கேஸ்ட்லெஸ் சிவா.கோ இயக்கியிருக்கும் இப்படத்தை மாங்காடு அம்மன் மூவிஸ் சார்பில் ராஜகணபதி தயாரித்து, கதையின் நாயகனாகவும் நடித்திருக்கிறார். நாயகிகளாக மேகா ஸ்ரீ, சுஷ்மிதா சென் ஆகியோர் நடிக்க, சந்திரபோஸ் முக்கிய வேடம் ஒன்றில் நடித்திருக்கிறார்.
இந்த படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று காலை சென்னை சாலிகிராமம் பிரசாத் லேபில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், துணை பொதுச்செயலாளர் வன்னி அரசு, நடிகையும் இயக்குநருமான லட்சுமி ராமகிருஷ்ணன், இயக்குநர் தர்மசீலன் செந்தூரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளரும் நாயகனுமான ராஜகணபதி பேசுகையில், “மலையாளத்தில் மம்முட்டி நடிப்பில் வெளியான பீம் படத்தில் அம்பேத்கராக நடித்திருந்த மம்முட்டி தான் நமக்கு கண்ணுக்கு தெரிவார். ஆனால் இப்போது தமிழில் உருவாகியுள்ள இந்த படத்தில் நீங்கள் பார்க்கும்போது உங்களுக்கு அம்பேத்கர் மட்டும் தான் தெரிவார். அந்த அளவிற்கு தத்ரூபமாக இந்த கதையில் பயணித்துள்ளேன். சில காரணங்களால் சென்சாருடன் போராட்டம் நடத்த வேண்டி இருக்கிறது. படத்திற்கு நிறைய எதிர்ப்புகளும் இருக்கிறது. இந்த படத்திற்கு சென்சார் சான்றிதழ் மறுக்கப்பட்டால் ஓடிடியில் வெளியிடவும் திட்டம் வைத்திருக்கிறோம்” என்றார்.
இயக்குநர் கேஸ்ட்லெஸ் சிவா.கோ பேசுகையில், “இந்த படத்தை பார்த்த சென்சார் அதிகாரிகள் இதற்கு என்ன சான்றிதழ் கொடுப்பது என தீர்மானிக்க முடியாமல் திணறினார்கள். ரிவைசிங் கமிட்டிக்கு அனுப்புகிறோம் என கூறி நடிகை கவுதமி உள்ளிட்ட 15 பேர் கொண்ட குழுவினர் இந்த படத்தை பார்த்தார்கள். இந்த படத்தில் இடம்பெற்ற தலைவர் பிரபாகரன், கர்மவீரர் காமராஜர் ஆகியோர் படங்களை நீக்க வேண்டும் என கூறினார்கள். சரஸ்வதியை விட காமராஜர் பெரியவரா, இரண்டையும் சமமாக காட்டுங்கள் என்று கூறினார்கள். அறிவாயுதம் என்கிற வார்த்தையை நீக்க வேண்டும் என்கிறார்கள்.
இந்தியில் வெளியான காஷ்மீர் பைல்ஸ் என்கிற படத்தில் சிவன் சிலையை எரிக்கிறார்கள்.. அதை அனைவரும் பாராட்டுகிறார்கள் ஆனால் சாய்பாபா படம் போட்ட வண்டியை தள்ளிக்கொண்டு பிச்சை எடுக்கும் காட்சியை காட்டி அதன் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த நினைத்தால் அதை அவமதிப்பு என்கிறார்கள். விவசாயிகளின் மரணத்திற்கு அரைக்கம்பத்தில் தேசியக்கொடி பறக்க விடப்பட வேண்டும் என்று சொல்வதும் இறந்த விவசாயின் உடலில் தேசியக்கொடி போர்த்தப்பட வேண்டும் என்று சொல்வதும் என்ன தவறு ? ரோஜா படத்தில் தேசியக்கொடியை எரிக்கும் காட்சியை வைத்த மணிரத்தினத்துக்கு ஒரு நியாயம்.. எனக்கு ஒரு நியாயமா ?
இந்த படத்திற்குள் ஒரு படம் உண்டு. அதற்குள் ஒரு சென்சார் குழுவினரும் காட்டப்பட்டுள்ளனர். தமிழனை பற்றி உயர்வாக எந்த ஒரு காட்சியும் வரக்கூடாது என்பதை ஒரு உறுதியாகவே சென்சார் குழுவினர் வைத்துள்ளனர். திருவள்ளுவர் பற்றி சொல்லக்கூடாது என்றால் எப்படி?. 44 இடங்களில் இந்த படத்தில் திருத்தம் செய்ய வேண்டும் என கூறியுள்ளார்கள்.. ஆனாலும் அடுத்த கட்ட நடவடிக்கைகளில் இறங்கவுள்ளோம்” என்றார்.
நடிகையும் இயக்குநருமான லட்சுமி ராமகிருஷ்ணன் பேசுகையில், “இந்த படத்தின் தயாரிப்பாளர் ராஜகணபதியின் சிரிப்பே தனித்துவமாக இருக்கிறது. வெகுளித்தனமான, மனதில் இருப்பதை அப்படியே பிரதிபலிக்கும் சிரிப்பு அது. இதில் அம்பேத்காராக நடித்துள்ள ராஜகணபதியின் நடிப்பு வசனம் ஆகியவற்றை பார்த்து திகைத்துப்போய் விட்டேன். அர்ப்பணிப்போடு எந்த முயற்சி செய்தாலும் அது ஜெயிக்கும். அப்படி ஒரு வெற்றி இந்த படத்தின் இயக்குநர் கேஸ்ட்லெஸ் சிவாவுக்கும் கிடைக்கும். மக்களோட மைண்ட் தற்போது பரபரப்பான விஷயங்களில் தான் இருக்கிறது.
இந்த படத்தின் டிரைலரை பார்த்து வியந்தேன். இந்த படத்தின் எடிட்டர் எல்.வி.கே தாஸ் அவர்களுக்கு தனியாக மிகப்பெரிய பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன். ஒரு படத்தில் ஒரு விஷயத்தைப் பற்றி டீடைலாக சொல்வதே பெரிது. ஆனால் இதில் பல விஷயங்களை சொல்லி இருக்கிறார்கள். இன்றைய தலைமுறையினர் பலர் காந்தி, அம்பேத்கர் பற்றி தவறாக பேசுகிறார்கள்.
ஆன்டி இண்டியன் படம் போல தான் இந்த படமும் ஒரு புதிய கோணத்தில் உருவாகியுள்ளது. ஆன்டி இண்டியன் படம் எனக்கு ரொம்பவே பிடித்துப்போய் புளூ சட்டை மாறனை அப்போதே அழைத்து பாராட்டினேன். அப்போது சென்சார் சான்றிதழ் வாங்குவதில் புளூ சட்டை மாறன் ஒரு புதிய பாதை போட்டார். அந்த பாதையில் இந்த படத்திற்கும் சென்சார் தீர்வு கிடைக்கும்.” என்றார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளர் வன்னி அரசு பேசுகையில், “இங்கே ஆதிக்க வர்க்கம் சென்சார் போர்டையும் கைப்பற்றி விட்டார்கள். ஜனநாயகமும் அங்கே மறுக்கப்படுகிறது. இது பேராபத்தாக அமையும். மதம் சார்ந்து, கட்சி சார்ந்து சென்சார் போர்டு உறுப்பினர்களை நியமிக்க கூடாது.” என்றார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் பேசுகையில், “அம்பேத்கரை ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கான தலைவராக காட்டுவதாக தான் பல படங்களில் காட்சிகள் இடம் பெறுகின்றன. அது தவறு. அவர் எல்லோருக்குமானவர். சமத்துவம், ஜனநாயகம் என்று கூறியவர். இப்போது ஒரு தனி நபரை விமர்சிக்காமல், ஒரு கட்சியை விமர்சிக்காமல், கருத்தியல் சார்ந்து விவாதித்தால் யாருக்கும் பகை ஏற்படாது. கருத்தியலுக்கு இடையே நடக்கும் யுத்தம் தான் மனித குல வரலாறாக இருக்கிறது.
மனித நேயத்தை போற்றுவதும் அநீதிக்கு எதிராக குரல் கொடுப்பதும் அமைதியை விரும்புவதும் தான் கம்யூனிசம். பிஜேபி பகைக்கட்சி கிடையாது. சாதி, மதம் மீது பகை இல்லை, ஆதிக்கம், ஒடுக்குமுறை, சுரண்டல் இதுதான் மனித குலத்திற்கு பகை. ஒவ்வொரு சாதிக்கும் இடையே கண்ணுக்குத் தெரியாத தடைகள் உள்ளன. ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இருப்பதால் தான் சகோதரி லட்சுமி ராமகிருஷ்ணன் என்னை அண்ணா என துணிவாக கூறுகிறார். அதுதான் அம்பேத்கரின் எண்ணம்.” என்றார்.
இந்த நிகழ்வின் இறுதியாக இந்த படத்தின் டிரைலரை தொல்.திருமாவளவன் அவர்கள் வெளியிட விழாவிற்கு வந்திருந்த சிறப்பு விருந்தினர்கள் பெற்றுக்கொண்டனர்.
சதீஷ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு ஜோஸ் பிராங்கிளின் இசையமைத்திருக்கிறார். எல்.வி.கே.தாஸ் படத்தொகுப்பு செய்ய, எஸ்.கே கலை இயக்குநராக பணியாற்றியுள்ளார். இடி மின்னல் இளங்கோ தாஸ்.பி சண்டைக்காட்சிகளை வடிவமைக்க, மக்கள் தொடர்பாளராக எம்.பி.ஆனந்த் பணியாற்றுகிறார்.
நடிகர் விராட் கர்ணா - அபிஷேக் நாமா- கிஷோர் அன்னபு ரெட்டி - NIK ஸ்டூடியோஸ் - அபிஷேக் பிக்சர்ஸ் கூட்டணியில் உருவாகும் பான் இந்திய திரைப்படமான ' நாக பந்தம் ' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை முன்னணி நட்சத்திர நடிகரான ராணா டகுபதி வெளியிட்டார்...
விவசாயத்தில் சாதனை புரிபவர்களையும், அதற்கு உறுதுணையாக இருந்து பங்களிப்பவர்களையும் கெளரவப்படுத்தி அங்கீகரிக்கும் உழவன் ஃபவுண்டேஷனின் ‘உழவர் விருதுகள் 2025’ விழா கோலகலமாக சென்னையில் நடைபெற்றது...
தமிழ் சினிமாவில் புதிய வரலாற்றை படைக்கும் வகையில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘அகத்தியா’...