Latest News :

முதலமைச்சருக்கு கோரிக்கை வைத்த ‘ஸ்ரீ இராமானுஜர்’ படக்குழு!
Monday April-17 2023

ஆயிரம் வருடங்களுக்கு முன் வாழ்ந்து, அந்த காலக்கட்டத்திலேயே ஆன்மீகத்துடன் சமூக புரட்சியும் செய்த மகான் ஸ்ரீ இராமானுஜர். அவருடைய வாழ்க்கை வரலாறு ‘ஸ்ரீ ராமானுஜர்’ என்ற தலைப்பில் திரைப்படமாக உருவாகியுள்ளது.

 

ஹைக்ரீவா சினி ஆர்ட்ஸ் நிறுவனம் சார்பில் டி.கிருஷ்ணன் ‘ஸ்ரீ ராமானுஜர்’ படத்தை தயாரித்திருப்பதோடு, ஸ்ரீ இராமானுஜர் வேடத்திலும் நடித்திருக்கிறார். இளையராஜாவின் இசையமைப்பில் உருவாகியுள்ள இப்படத்தில் ராதாரவி, ஒய்.ஜி.மகேந்திரன், ஸ்ரீமன் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள்.

 

தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகியுள்ள இப்படத்தின் முதல் பாடல் மற்றும் டீசர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கோயில் 24ஆம் பட்டம் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ சடகோபர் இராமானுஜர் சுவாமிகள் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டார்.

 

நிகழ்ச்சியில் பேசிய படக்குழுவினர்கள், ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சமூக புரட்சி செய்த ஸ்ரீ இராமானுஜரின் திரைப்படத்தை பள்ளி, கல்லூரி மாணவர்கள் பார்ப்பதற்கான ஏற்பாட்டை அரசு செய்ய வேண்டும், இதற்கு முன்பு இதுபோன்ற சமூக நீதியை வலியுறுத்தும் படங்களுக்கு அப்படி ஒரு வாய்ப்பை அரசு ஏற்படுத்தி கொடுத்திருக்கிறது. எனவே, சமூக புரட்சி மற்றும் சீர்த்திருத்த செயல்களில் ஈடுபட்ட ஸ்ரீ இராமானுஜரின் வாழ்க்கை வரலாறு திரைப்படமான ‘ஸ்ரீ இராமானுஜர்’ படத்தை மாணவர்களிடம் கொண்டு சேர்ப்பதில் அரசு உதவிட வேண்டும், இதனை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிச்சயம் செய்ய வேண்டும், என்று அவருக்கு கோரிக்கை வைத்தார்கள்.

 

தொடர்ந்து இது பற்றி பேசிய நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன், “இது புராண படம் இல்லை. சரித்திர படம். 1000 வருடங்களுக்கு முன் வாழ்ந்து சாதனை புரிந்த மகானை பற்றிய படம். எல்லோரும் கடவுள் முன் சமம் என்று 1000 வருடங்களுக்கு முன்பே புரட்சி செய்தவர். இந்த கால இளைஞர்களுக்கு இந்தப்படத்தை கொண்டுபோய் சேர்க்க வேண்டிய பொறுப்பு பத்திரிகையாளர்களுக்கு இருக்கிறது. இந்தப் படத்தை எல்லோரும் பார்க்கும் விதமாக அரசும் உதவி செய்யவேண்டும் என்று இந்த நேரத்தில் முதல்வர் அவர்களுக்கு நான் வேண்டுகோள் வைக்கிறேன். இதில் நடிக்க எனக்கு வாய்ப்பு கிடைத்ததை பெரும் பாக்கியமாக நினைக்கிறேன். இன்றைக்கும் ஸ்ரீரங்கத்தில் இராமானுஜரின் பூத உடல் இருக்கிறது. குங்கும பூ அர்ச்சனை நடக்கிறது. இந்த படத்திற்காக கடுமையாக உழைத்திருக்கிறார் தயாரிப்ப்பாளர் T.கிருஷ்ணன். இராமானுஜர் இந்து மாதத்தில் புரட்சி செய்தவர் . ஆனால் மதம் என்று அவரை கட்டுப்படுத்த முடியாது. எல்லோருக்கும் எல்லாமும் கற்றுக்கொடுத்தவர். அந்த மகானை பற்றிய இந்த படம் பெரிய வெற்றியை பெறவேண்டும் என்று வாழ்த்துகிறேன்” என்றார்.

 

Sri Ramanujar

 

படத்தின் தயாரிப்பாளரும் இராமானுஜர் வேடத்தில் நடித்திருப்பவருமான டி.கிருஷ்ணன் பேசுகையில், “இந்தப்படத்தை மிகவும் சிரமப்பட்டு எடுத்திருக்கிறேன். இது ஒரு பீரியட் படம். படத்தின் டீசர் வெளியானபோது. ஒரே நாளில் ஒரு மில்லியன் பார்வையாளர்கள் பார்த்தனர். இளையராஜா சார் என்னை அழைத்து அதுப்பற்றி விசாரித்தார். 2018ஆம் ஆண்டிலேயே வெளியாகியிருக்க வேண்டிய படம். பல்லேறு சூழல்களால் தாமதமாகிவிட்டது. படத்தை எடுத்துக்கொண்டிருந்தபோது இயக்குனர் இறந்துவிட்டார். கேமராமேன் இறந்துவிட்டார். இப்படி நிறைய கஷ்டங்களை கடந்து இந்தப்படம் உருவாவதற்கு திரு வினோத் அவர்கள் படத்தின் கோ-டைரக்டர் மிகவும் உதவியாக இருந்தார் . இது வெற்றி பெறாமல் நான் விடமாட்டேன். இராமானுஜர் மீதும் என் மீதும் எனக்கு நம்பிக்கை இருக்கு. இந்தப்படத்தை தயாரித்ததை நான் பாக்கியமாக நினைக்கிறேன். இளையராஜா சார் இந்தப்படத்தில் 5 பாடல்கள் தந்திருக்கிறார். விரைவில் அந்தப்பாடல்கள் நேரு ஸ்டேடியத்தில் லைவாக இசையமைக்கப்படும். அதற்கான வேலைகள் நடந்துகொண்டிருக்கிறது.

 

இப்படத்திற்கு இதில் நடித்த நடிகர்கள் தவிர வேறு யாருமே சப்போர்ட் பண்ணவில்லை. சில பிரச்சினைகள் வந்தபோது தயாரிப்பாளர்கள் சங்கம் கண்டுகொள்ளவே இல்லை. இந்தப் படத்தின் தலைப்பை போல் வேறு சில படங்களுக்கும் வைக்கப்பட்டது. தயாரிப்பாளர்கள் சங்கத்தில் முறைப்படி பதிவு செய்த்திருந்தபோதும் மற்ற படங்களுக்கும் இதே தலைப்பை வைக்க அனுமதி கொடுப்பது என்ன நியாயம்? இதுவே ரஜினி படம், விஜய் படத்தில் டைட்டிலை வேறு படத்திற்கும் வைக்க அனுமதிப்பீர்களா? பிரச்சனைகளை தீர்க்கதானே  தயாரிப்பாளர்கள் சங்கம் இருக்கு?

 

இந்தப்படத்திற்காக திருவாடுதுறை ஆதினம் மிகப்பெரிய அளவில் ஆதரவு கொடுத்தார். அதேபோல் நடிகர் ஸ்ரீமன், ஒய்.ஜி.மகேந்திரன், ராதாரவி ஆகியோரும் ஒத்துழைப்பு கொடுத்தனர். கலை இயக்குனர் மகி ரொம்பவே சிரமப்பட்டு செட் போட்டு கொடுத்தார். ஸ்ரீரங்கம் செட், திருப்பதி செட், சோழ மன்னன் அரண்மனை செட் என்று படத்திற்கு பிரமாண்டம் சேர்த்துள்ளார் கலை இயக்குனர் மகி. படத்தில் சோழ மன்னன் அரண்மனை காட்சி மட்டும் இருபது நிமிடங்கள் இடம்பெறுகிறது. ஆயிரம் வருடங்களுக்கு முன் இராமானுஜர் சமூக நீதிக்காக என்னவெல்லாம் செய்தார் என்று இந்தப் படம் பார்க்கும்போது புரியும். இந்த படத்திற்கு மீடியா பெரிய அளவில் ஆதரவளிக்க வேண்டும்” என்றார்.

 

Sri Ramanujar

 

நடிகர் ராதாரவி பேசுகையில், “இராமானுஜர் 1027ஆம் ஆண்டு பிறந்தவர். இங்கு ஆத்திகம், நாத்திகம் என்று வெவ்வேறு கருத்துகள் பேசப்படுகிறது. அப்படியெல்லாம் பேசக்கூடாது. ஏனென்றால் ஆத்திகம் இல்லாமல் நாத்திகம் கிடையாது; நாத்திகம் இல்லாமல் ஆத்திகம் கிடையாது. அந்த காலத்திலேயே சீர்த்திருத்த கருத்துக்களை பேசி எல்லோரையும் சமமாக நினைத்தவர்தான் இராமானுஜர். இந்தப்படத்தில் இராமனுஜராகவே வாழ்ந்திருக்கும் கிருஷ்ணனுக்கு நிச்சயம் விருது கிடைக்கும். இந்தப்படத்தை பார்த்தபோது கிருஷ்ணனை நான் இராமனுஜராகவே பார்த்தேன். நடிப்பு மட்டும் யார் சொல்லியும் வராது. கிருஷ்ணனுக்குள் இரமானுஜர் இருந்ததால்தான் அவரால் நடிக்க முடிந்தது. சீர்த்திருத்தவாதியாக நடிப்பது மிகவும் கஷ்டமானது. 

 

ஒருமுறை எனது தயாரிப்பில் கமல்ஹாசனை நடிக்கவப்பதற்காக அவரது கால்ஷீட் கேட்டு அவரை சந்திக்க சென்றேன். நானும் கமலும் அப்போது நல்ல நண்பர்கள். “உன்னை வச்சு ஒரு படம் எடுக்கணும்” என்று அவரிடம் கேட்டபோது, “இப்போது எடுத்துக்கொண்டிருக்கும் படம் ரிலீஸ் ஆகட்டும் அப்புறம் பார்க்கலாம்” என்றவர், “நான் குளத்தில் போட்ட ஆமை மாதிரி. வாயை திறந்துகொண்டே இருக்கணும். எப்போ குருவி விழுதோ அப்போ வாயை டக்குன்னு மூடிக்கொள்ளனும் “என்றார். கமல் ஏன் அப்படி சொன்னார் என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் அவர் பெரிய அறிவாளி. இன்றைக்கு சினிமாவில் நடிகர் திலகம் இல்லையென்றாலும் கமல்ஹாசன் இருக்கிறார் என்று திருப்திப்பட்டுக்கொள்ளலாம். இந்தப் படத்தை எல்லோரும் தியேட்டரில் போய் பார்க்கவேண்டும்” என்றார்.

 

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கோயில் 24ஆம் பட்டம் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ சடகோபர் இராமானுஜர் சுவாமிகள் பேசுகையில், “இன்றைய தினம் நாம் எல்லோரும் ரொம்ப புண்ணியம் பண்ணியிருக்கவேண்டும். நாம் இராமானுஜர் காலத்தில் இல்லையென்றாலும் இந்தப்படம் மூலம் நம்மை ராமானுஜர் காலத்துக்கு கொண்டு போயிருக்கார் தயாரிப்பாளர் கிருஷ்ணன். இராமானுஜர் 18 முறை நடந்து சென்று  திருக்கோஷ்டியூர்  நம்பியிடம் திருமந்திரம் கற்றுக்கொண்டார். அந்த மந்திரத்தை யாருக்கும் சொல்லிக்கொடுக்க கூடாது. அப்படி சொல்லிக்கொடுத்தால் நீ நரகத்திற்கு போவாய் என்று நம்பி எச்சரித்தார். ஆனாலும் இராமானுஜர் திருக்கோஷ்டியூர்  கோயில் கோபுரத்தில் ஏறி அனைவரையும் அழைத்து அந்த மந்திரத்தை சொல்லிக்கொடுத்தார். அப்படிப்பட்ட இராமானுஜரின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தை தயாரித்து நடித்திருக்கிறார் தி.கிருஷ்ணன். இந்தப்படம் வெற்றிப்படமாக அமையும்” என்றார்.

 

‘ஸ்ரீ இராமானுஜர்’ திரைப்படத்தின் டீசர் வெளியாகி ஒரே நாளில் 10 லத்திற்கு மேலான பார்வையாளர்களை கடந்து வரவேற்பு பெற்றுள்ளது. இதனை தொடர்ந்து படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவை மிகப்பெரிய அளவில் இளையராஜாவின் இசை நிகழ்ச்சியோடு நடத்த தயாரிப்பாளரும் நடிகருமான டி.கிருஷ்ணன் முடிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Related News

8941

’அமரன்’ படத்தை பார்த்து பாராட்டிய முதல்வர் மு.க.ஸ்டாலின்!
Thursday October-31 2024

ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷ்னல் சார்பில் நடிகர் கமல்ஹாசன் தயாரிப்பில், சிவகார்த்திகேயன் நடிப்பில், ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘அமரன்’...

பரபரப்பான சம்பவங்கள் பின்னணியில் உருவான ‘முரா’ பட டிரைலர் வெளியானது!
Thursday October-31 2024

‘கப்பேலா’ படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் முஹம்மது முஸ்தபா, இயக்கத்தில் உருவாகியிருக்கும் ஆக்‌ஷன் திரில்லர் படம் ‘முரா’...

ஃபேண்டஸி காதல் படமாக உருவாகியுள்ள ‘மெஸன்ஜர்’!
Wednesday October-30 2024

பி.வி.கே ஃபிலிம் ஃபேக்டரி (PVK FILM FACTORY) சார்பில் பா...

Recent Gallery