ராம் இயக்கத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற ‘தரமணி’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமான வசந்த் ரவி, முதல் படத்திலேயே அழுத்தமான கதாபாத்திரத்தில் அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டை பெற்றார். அப்படத்தின் வெற்றியின் மூலம் மிகப்பெரிய அளவில் கவனம் பெற்றவர், ‘ராக்கி’ படத்தின் மூலம் ஆக்ஷன் ஹீரோவாக அவதாரம் எடுத்தார்.
‘ராக்கி’ படத்தில் வசந்த் ரவி, வெளிப்படுத்திய வெறித்தனமான நடிப்பு மூலம் கோலிவுட்டின் கவனம் அவர் மீது திரும்பியதை தொடர்ந்து அவருக்கு ஏகப்பட்ட பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது. இதுவரை 7 படங்களில் நடித்து முடித்திருக்கும் வசந்த் ரவி, தமிழ் சினிமாவின் பிஸியான ஹீரோக்கள் பட்டியலில் இடம் பிடித்திருக்கிறார்.
இந்த நிலையில், ஏப்ரல் 18 ஆம் தேதி பிறந்தநாள் கொண்டாடிய வசந்த் ரவி, தனது பிறந்தநாளை முன்னிட்டு பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது தான் நடித்து வரும் படங்கள் குறித்து கூறுகையில், “’ராக்கி’ திரைப்படம் எனக்கு மிகப்பெரிய திருப்பு முனையை கொடுத்திருக்கிறது. அந்த படத்தால் தான் எனக்கு நிறைய பட வாய்ப்புகள் வந்தன. தமிழ் சினிமாவையும் தாண்டி தெலுங்கு போன்ற வேறு மொழி படங்களிலும் நடிக்கும் வாய்ப்புகள் வருகின்றது.
‘ராக்கி’ திரைப்படம் 2021 ஆம் ஆண்டு வெளியானது. அதன் பிறகு எனது படங்கள் வெளியாவதில் பெரிய கேப் ஏற்பட்டுவிட்டதாக சொல்கிறீர்கள், அதற்கு காரணம் நான் தான். ‘ராக்கி’ படத்தின் மூலம் எனக்கு கிடைத்த வெற்றி மற்றும் அங்கீகாரத்தை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக கதை தேர்வில் கவனம் செலுத்தினேன். அதனால் தான் அந்த கேப். ஆனால், இனி அப்படி இருக்காது. காரணம், தற்போது 7 படங்களில் நடித்து முடித்துவிட்டேன். அந்த படங்கள் அனைத்தும் ஒவ்வொன்றாக இந்த வருடம் வெளியாகும்.
’ராக்கி’ படத்தில் எனது நடிப்பை பார்த்துவிட்டு தான் ரஜினி சார் ஜெயிலர் பட வாய்ப்பு கொடுத்தார். ஜெயிலர் படத்தில் நான் நடிக்கும் கதாபாத்திரம் பற்றி தற்போது எதுவும் சொல்ல முடியாது, அதற்கு இன்னும் நாட்கள் இருக்கிறது. எனக்கு இன்னும் இரண்டு நாட்கள் படப்பிடிப்பு இருக்கிறது. ரஜினி சாருக்கு ஒரு நாள் இருக்கிறது.
தற்போது ஏழு படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறேன். அதில் நான்கு முடிந்து விட்டது, மற்ற படங்களின் படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. நிறைய பட வாய்ப்புகள் வருகிறது. ‘ராக்கி’ படத்தில் ஆக்ஷன் ஹீரோவாக நடித்தேன். அடுத்தடுத்த படங்களில் ஆக்ஷன் மட்டும் இன்றி காதல் உள்ளிட்ட அனைத்து ஜானர்களிலும் நடித்து வருகிறேன்.
இயக்குநர் பிரியா இயக்கும் படத்தில் நடிக்கிறேன். அது முழுக்க முழுக்க காதல் படமாக இருக்கும். ஐஸ்வர்யா ராஜேஷுடன் ஒரு படத்தில் நடிக்கிறேன், அந்த படம் க்ரைம் த்ரில்லர் ஜானர் படம். ‘அஸ்வின்ஸ்’ என்ற ஹாரர் படத்திலும் நடிக்கிறேன். மித்தாலஜிக்கல் ஹாரர் ஜானர் படமான இது அஸ்வினி தேவர்கள் பற்றிய கதை. முற்றிலும் வித்தியாசமான ஹாரர் படமாக இது இருக்கும்.
ஆக்ஷன், காதல், க்ரைம், பேய் படம் என அனைத்து ஜானர்களிலும் நடித்து வருகிறேன். அனைத்து படங்களும் ஒவ்வொன்றாக வெளியாகப் போகிறது. எனது அடுத்த வெளியீடாக ‘அஸ்வின்ஸ்’ படம் இருக்கும். தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.
வித்தியாசமான ஜானர் படங்களில் நடிப்பதால் ஒவ்வொரு படத்திலும் புதிதாக கற்றுக்கொள்ள முடிகிறது, அந்த படங்கள் நடிகனாக எனக்கு பெரிய நம்பிக்கையை கொடுக்கிறது. முதல் படத்தில் கேமரா முன்பு நிற்கும் போது அனைவருக்கும் தடுமாற்றம் இருக்கும். ஆனால், ராம் சார் போன்ற அனுபவம் வாய்ந்த இயக்குநர்கள் உடன் இருந்தால் அந்த தடுமாற்றம் இல்லாமல் நடிக்கலாம். அப்படித்தான் தரமணி படத்தில் நடித்தேன். அதேபோல் ‘ராக்கி’ படத்தில் வேறு விதமான நடிப்பை வெளிப்படுத்த இயக்குநர் அருண் உதவினார். இப்படி ஒவ்வொரு படத்திலும் எனது நடிப்பு கவனம் பெறுவதற்கு இயக்குநர்கள் முக்கிய காரணம்.
இதுவரை 7 படங்கள் நடித்து முடித்துவிட்டேன். ஒவ்வொரு படங்களாக வெளியாகப் போகிறது. அதனால் என் சினிமா பயணத்தில் இனி இடைவெளி என்பதற்கு வாய்ப்பு இல்லை. இப்பவும் படப்பிடிப்புக்கு நடுவே தான் உங்களை சந்திக்க வந்திருக்கிறேன்.” என்று தெரிவித்தவர் மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்க பறந்து விட்டார்.
நடிகர் விராட் கர்ணா - அபிஷேக் நாமா- கிஷோர் அன்னபு ரெட்டி - NIK ஸ்டூடியோஸ் - அபிஷேக் பிக்சர்ஸ் கூட்டணியில் உருவாகும் பான் இந்திய திரைப்படமான ' நாக பந்தம் ' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை முன்னணி நட்சத்திர நடிகரான ராணா டகுபதி வெளியிட்டார்...
விவசாயத்தில் சாதனை புரிபவர்களையும், அதற்கு உறுதுணையாக இருந்து பங்களிப்பவர்களையும் கெளரவப்படுத்தி அங்கீகரிக்கும் உழவன் ஃபவுண்டேஷனின் ‘உழவர் விருதுகள் 2025’ விழா கோலகலமாக சென்னையில் நடைபெற்றது...
தமிழ் சினிமாவில் புதிய வரலாற்றை படைக்கும் வகையில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘அகத்தியா’...