Latest News :

’அயோத்தி’ மொழி தாண்டி பலரை ஈர்த்திருக்கிறது - 50வது நாள் விழாவில் இயக்குநர் சமுத்திரக்கனி பேச்சு
Thursday April-20 2023

அறிமுக இயக்குநர் மந்திர மூர்த்தி இயக்கத்தில், சசிகுமார், யஷ்பால் சர்மா, ப்ரீத்தி அஸ்ரானி ஆகியோர் நடிப்பில், டிரைடண்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன் தயாரிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றதோடு, மதம் முக்கியமில்லை மனிதமே முக்கியம் என்ற கருத்தை மக்கள் மனதில் பதிவு செய்த ‘அயோத்தி’ திரைப்படம் 50 நாட்களை கடந்து வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.

 

இந்த நிலையில், ‘அயோத்தி’ திரைப்படத்தின் 50 வது நாளை கொண்டாடும் விதத்தில் சென்னை கமலா திரையரங்கில் கோலாகலமான வெற்றி விழா நடத்தப்பட்டது. இதில், படத்தில் நடித்த நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் ஊழியர்கள் என அனைவருக்கும் 50வது நாள் நினைவு கேடம் வழங்கி கெளரவிக்கப்பட்டது.

 

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்ட இயக்குநரும் நடிகருமான சமுத்திரக்கனி பேசுகையில், “சமீபமாக நானும் சசியும் அடிக்கடி சந்தித்துகொள்ள முடிவதில்லை. எப்படியும் பார்த்து விடுவோம், அப்போது நாங்கள் செய்யும் படங்கள் பற்றி பேசிக்கொள்வோம். அப்போதே இந்தப்படம் பற்றி மிக நம்பிக்கையோடு சொன்னார். ஒரு படம் 10 வருடம் 20 வருடம் கடந்தும் பேசப்படும். இந்தப்படம் திரைத்துறை இருக்கும் வரை பேசப்படும். இந்தப்படம் பற்றி தெலுங்கில் என்னிடம் கேட்டார்கள் இப்படி ஒரு படம் வந்திருக்கிறது நீங்கள் பாருங்கள் தெலுங்கில் நீங்கள் செய்ய முடியுமா? அது என் தம்பி படம் என் சகோதரர் தான் தயாரிப்பாளர் என பெருமையோடு சொன்னேன். இந்தப்படம் மொழி தாண்டி பலரை ஈர்த்திருக்கிறது அது தான் உண்மையான வெற்றி. இந்தப்படத்தை இந்தியில் அப்படியே வெளியிட வேண்டும். அங்கும் இது ஜெயிக்கும். மந்திரமூர்த்தி முதல் படத்திலேயே தன்னை நிரூபித்து விட்டான். சசி நிஜ வாழ்க்கையிலேயே எல்லோருக்கும் ஓடி உதவும் மனிதன். யாஷ்பால் சர்மா, ப்ரீத்தி நடிப்பு அற்புதம். இன்னும் இந்தப்படம் ஓடும். அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்.” என்றார்.

 

இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா பேசுகையில், “இந்த திரையரங்கு பழைய நினைவுகளை தருகிறது. அண்ணாமலை, பாட்ஷா 25வது வாரம் கோலாகலமாக இங்கு ஓடின. இந்த காலத்தில் 50 நாட்களை கடப்பது அரிதாக மாறிவிட்டது. அந்த வகையில் பிரமாண்ட வெற்றியை சாத்தியமாக்கியிருக்கிறது அயோத்தி. இந்த கதையை நம்பி தயாரித்த டிரைடண்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரனுக்கு ஹேட்ஸ் ஆஃப். இப்படி ஒரு கதையை புதுமுக இயக்குநரை நம்பி எடுப்பது மிகப்பெரிய விசயம். இது ஒரு அற்புதம். இந்தக்கதை ஓடும் என நம்பிய படக்குழுவிற்கு வாழ்த்துக்கள். சசிகுமார் பேசிக்கொண்டிருக்கும் போது கதை தான் ஹீரோயிசம் என்றார், அது முழுக்க உண்மை. அனுபவம் வாய்ந்த இயக்குநர்கள் ஒரு படத்தை இயக்குவது போல் இயக்கியிருகிறார் மந்திரமூர்த்தி. யஷ்பால் ஆளவந்தானில் நடித்திருந்தார் இதில் பின்னியிருக்கிறார். அந்த சின்னப்பெண் மிரட்டிவிட்டார். மொழி ஒரு தடையாகவே இல்லை. இந்தப்படம் வெற்றிபெற்றதற்கு படக்குழுவினருக்கு எனது வாழ்த்துக்கள்.” என்றார்.

 

Ayothi 50th Day Celebration

 

நடிகர் அஸ்வின் குமார் பேசுகையில், “நான் செம்பி படத்தில் நடித்துக்கொண்டிருக்கும் போது தான் இந்தப்படமும் ஆரம்பித்தது. கதை கேட்டு நான் நடிக்கவா என்று ரவி சாரிடம் கேட்டேன். ஆனால் சசி சார் நடிக்க போகிறார், அவர் தான் இந்தக்கதைக்கு சரியாக இருப்பார் என்றார். இந்தக்கதைக்கு சசி சாரை விட பொருத்தமானவர் யாரும் இருக்க முடியாது. சசி சார் நிஜத்தில் அத்தனை சாந்தமானவர், எல்லோரையும் சமமாக நடத்துபவர். இந்தப்படத்தில் இறுதிக்காட்சியில் அழ வைத்து விட்டார். சசி சாருக்கும் இயக்குநர் மந்திரமூர்த்திக்கும் வாழ்த்துகள். மொத்த படக்குழுவிற்கும் எனது வாழ்த்துகள். ” என்றார்.

 

நடிகர் ராஜேஷ் பேசுகையில், “அயோத்தி படம் என்றவுடன் இது ஏதோ மதம் சம்பந்தமான படமென தப்பாக நினைத்து விட்டேன். எனது நண்பர் ரகுநந்தன் படம் பார்க்க கூப்பிட்டார், போனேன். படம் பார்த்து பிரமித்து விட்டேன். ஹாலிவுட் படம் மாதிரி இருந்தது. எல்லையே இல்லை, ஜாதி மதம் இனம் மொழி கடந்து மனிதமே முக்கியம் என்பதை தேனில் குழைத்து தந்தது போல் தந்துவிட்டார்கள். நடித்த அனைவரும் அற்புதமாக செய்துள்ளார்கள். சசிகுமார் இறுதிக்காட்சியில் அவர் பெயர் சொல்லும்போது நம்மை கலங்க வைத்து விடுகிறார். என்ன ஒரு அற்புதமான படம். படக்குழுவினர் அனைவருக்கும் என் வாழ்த்துகள்.” என்றார்.

 

நடிகர் சசிகுமார் பேசுகையில், “இந்தப்படம் ஓடிடிக்கு விற்றதால் அவசரமாக வெளியிட வேண்டிய சூழ்நிலை. எந்த புரமோசனும் செய்யவில்லை. ஆனால் ரவீந்திரன் சார் முடிந்த அளவு நிறைய தியேட்டர்கள் போடுகிறேன் என்று அவரால் முடிந்த அத்தனையும் செய்தார். படம் வெளியானதே நிறைய பேருக்கு தெரியவில்லை. ஆனால் பத்திரிகை நண்பர்கள் பாராட்டி எழுத ஆரம்பித்த பிறகு பலர் கவனிக்க ஆரம்பித்தார்கள். மக்கள் தங்கள் படமாக கொண்டாட ஆரம்பித்து விட்டார்கள். இந்தப்படம் குறித்து மந்திரமூர்த்தி சொன்னபோதே இதன் ஆழம் எனக்கு புரிந்தது. இந்தப்படத்தை மகேந்திரன் சாருக்கும், பாலு மகேந்திரா சாருக்கும் போட்டுக்காட்ட எனக்கு ஆசை. அவர்கள் இருந்திருந்தால் கண்டிப்பாக காட்டியிருப்பேன். மகேந்திரன் சார் நண்டு என ஒரு படம் எடுத்தார். அதில் இதே போல் இந்தி கதாப்பாத்திரங்கள் இந்தியில் பேசுவார்கள். அப்போதே அதைச் செய்து விட்டார், ஆனால் தயாரிப்பாளர் ஒத்துக்கொள்ளாததால் அது படத்தில் வரவில்லை. இந்தப்படம் மூலம் அவர் ஆத்மா சாந்தியடையும். படம் பார்த்துவிட்டு நிறைய பிரபலங்கள் பாராட்டினார்கள். ரஜினி சார் போன் செய்து பாராட்டினார். நண்பர் சிம்பு பாராட்டினார். ஒரு நல்ல படம் என்ன செய்யும் என்பதை இந்தப்படம் காட்டியுள்ளது. நான் இனிமேல் எந்த மாதிரி படம் செய்ய வேண்டும் என்று சொல்லியுள்ளீர்கள். எல்லோருக்கும் நன்றி.” என்றார்.

 

இயக்குநர் மந்திரமூர்த்தி பேசுகையில், “இந்தப்படம் ரிலீஸான பிறகு எல்லோரும் சொன்னது: இந்தப்படம் சரியான சமயத்தில் சரியான கருத்துடன் வந்திருக்கிறது என்றார்கள் அது என் மூலம் நடந்திருக்கிறது, அவ்வளவு தான். அதற்கு இயற்கைக்கும் இறைவனுக்கும் நன்றி. என் அப்பா அம்மாவுக்கு நன்றி. வீட்டுக்கு இதுவரை 1 ரூபாய் தந்ததில்லை ஆனால் என்னிடம் எதுவும் எதிர்பார்க்காமல் ஆதரித்த பெற்றோருக்கு நன்றி. என் குரு பாலாஜி அருள் சார், அவர் இப்போது உயிரோடில்லை. அவருக்கு நன்றி. சசி சார் ஒத்துக்கொண்டிருக்காவிட்டால் இந்தப்படம் நடந்திருக்காது. தனக்கு காட்சிகள் இல்லை என்றாலும், ஒதுங்கி நின்று நடித்தார். வேறு எந்த நடிகரும் செய்திருக்க மாட்டார்கள். சசி அண்ணாவிற்கு நன்றி. யஷ்பால், பிரீத்தி அற்புதமாக நடித்தார்கள். இசையமைப்பாளர் ரகுநந்தனை படுத்தி எடுத்து விட்டேன். இப்படத்தில் அனைவரும் தங்கள் படமாக உழைத்தார்கள். படத்தை மக்களிடம் கொண்டு சென்ற பத்திரிகையாளர்களுக்கு நன்றி. இறுதியாக இந்தப்படத்தை நான் எடுக்கிறேன் என்று எனக்கு ஊக்கமளித்த ரவீந்தரன் சாருக்கு நன்றி.” என்றார்.

 

Ayothi 50th Day Celebration

 

டிரைடண்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன் பேசுகையில், “படத்தை பற்றி அனைவரும் புகழ்ந்து விட்டார்கள். படத்திற்கு நீங்கள் தந்த ஆதரவிற்கு நன்றி. இன்னும் இது போல் படங்கள் செய்ய இந்த வெற்றி ஊக்கமளிக்கிறது, அனைவருக்கும் நன்றி.” என்றார். 

Related News

8953

’நாகபந்தம்’ படத்தின் முதல் பார்வை போஸ்டரை வெளியிட்ட ராணா டகுபதி!
Monday January-13 2025

நடிகர் விராட் கர்ணா - அபிஷேக் நாமா- கிஷோர் அன்னபு ரெட்டி - NIK ஸ்டூடியோஸ் - அபிஷேக் பிக்சர்ஸ் கூட்டணியில் உருவாகும் பான் இந்திய திரைப்படமான ' நாக பந்தம் ' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை முன்னணி நட்சத்திர நடிகரான ராணா டகுபதி வெளியிட்டார்...

உழவர் விருது தொடர்ந்து நடத்துவது ஏன் ? - நடிகர் கார்த்தி விளக்கம்
Monday January-13 2025

விவசாயத்தில் சாதனை புரிபவர்களையும், அதற்கு உறுதுணையாக இருந்து பங்களிப்பவர்களையும் கெளரவப்படுத்தி அங்கீகரிக்கும் உழவன் ஃபவுண்டேஷனின் ‘உழவர் விருதுகள் 2025’ விழா கோலகலமாக சென்னையில் நடைபெற்றது...

கோலாகலமாக நடைபெற்ற ‘அகத்தியா’ கேம் மற்றும் 2 வது பாடல் வெளியீட்டு விழா!
Monday January-13 2025

தமிழ் சினிமாவில் புதிய வரலாற்றை படைக்கும் வகையில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘அகத்தியா’...

Recent Gallery