Latest News :

”காலில் இரத்தம் வர நடித்தேன்” - ’இராவண கோட்டம்’ கஷ்ட்டங்களை பகிர்ந்துகொண்ட நடிகர் ஷாந்தனு
Tuesday May-02 2023

இயக்குநர் விக்ரம் சுகுமாரன் இயக்கத்தில் ஷாந்தனு, கயல் ஆனந்தி நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘இராவண கோட்டம்’. கண்ணன் ரவி குரூப் சார்பில் கண்ணன் ரவி தயாரித்துள்ள இப்படத்தில் பிரபு, இளவரசு, தீபா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

 

வெற்றிவேல் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். லாரன்ஸ் கிஷோட் படத்தொகுப்பு செய்துள்ளார். வரும் மே 12 ஆம் தேதி வெளியாக உள்ள இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று சென்னையில் நடைபெற்றது.

 

இதில் கலந்துகொண்டு பேசிய நடிகர் ஷாந்தனு, “இப்படத்தின் தயாரிப்பாளர் கண்ணன் என் தந்தை எனக்கு என்ன செய்ய நினைப்பாரோ அதே போல் நான் முன்னேற தேவையான அனைத்தையும் செய்தார். அவருக்கு மிகப்பெரும் நன்றி.  இந்தப்படம் சக்கரக்கட்டி படத்திற்குப் பிறகு மக்களிடம் அதிகம் எதிர்பார்க்கப்படுகிற படமாக இருப்பது மிக மகிழ்ச்சியாக உள்ளது. இந்தப் படத்தில் நடிகரைத் தாண்டி, தயாரிப்பு பணிகளும் நான் பார்க்க வேண்டி இருந்தது, தயாரிப்பு மிகக் கடினமான வேலை, மிகவும் சிரமப்பட்டேன், படக்குழுவிற்கு நிறைய அனுபவம் இருந்தது,  அனைவரும் இப்படத்திற்காகப் பல நாட்கள் தூங்காமல் வேலை செய்தனர். அனைவருக்கும் மிகப்பெரிய நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்த நான்கு வருடங்கள் பல விஷயங்களை கற்றுக் கொண்டேன். படம் பார்த்த பிறகு எனக்கு மிகவும் திருப்திகரமாக இருந்தது, கிராமத்துப் பையனாக நடிக்கப் போகிறோம் என்று மகிழ்ச்சியாக இருந்தேன் ஆனால் அது அவ்வளவு எளிதல்ல, காலில் இரத்தம் வர நடித்தேன் எந்த படத்திலும் நான் இதைச் செய்ததில்லை. நான் மட்டும் இல்லை அனைவரும் இது போல கஷ்டப்பட்டு தான் நடித்தனர். இந்தப் படத்தில் தென் மாவட்டத்தில் உள்ள அரசியலைப் பற்றிப் பேசியுள்ளனர். இது ஒரு தரமான படைப்பாக இருக்கும், அனைவரும் எங்கள் உழைப்பிற்கு ஆதரவு தர வேண்டும் நன்றி.” என்றார்.

 

இயக்குநர் விக்ரம் சுகுமாரன் பேசுகையில், “இந்தப் படத்தில் நான் சிரித்துக் கூட பேசவில்லை, அது கொஞ்சம் குற்ற உணர்வாக இருக்கிறது, இருந்தும் யாரும் என்னை விட்டுக் கொடுக்காமல் பேசினார்கள் அனைவருக்கும் நன்றி. இளவரசன் அண்ணனை 15 வருடங்களுக்கு முன்னதாகவே என் படத்தில் நடிக்க வைக்க வேண்டும் என நினைத்து விட்டேன், இந்தப் படத்தில் அவரை நடிக்க வைத்தது எனக்கு மிகப் பெருமையான விஷயம். நான் ஒரு பிடிவாதமான இயக்குநர், யாரிடமும் இரக்கம் காட்டவில்லை அதற்காக நன்றியும் மன்னிப்பும் கேட்டுக் கொள்கிறேன். ஆனால் இனிமேலும் அப்படித்தான் இருப்பேன் அதுதான் என் பாவனை, எனக்குக் கொடுக்கப்பட்ட பொறுப்பு அது. படக்குழுவினர் அனைவருக்கும் நன்றிக்கடன் பட்டுள்ளேன், இந்தப் படம் மிகப்பெரிய நெருக்கடியில் தான் உருவானது, அதற்கு ஒத்துழைப்பு கொடுத்த அனைவருக்கும் நன்றி. இந்தப் படத்தில் பெரும் உழைப்பைக் கொடுத்துள்ளார் நடிகர் ஷாந்தனு, மிகப்பெரும் பாரத்தைத் தலையில் ஏற்றிக் கொண்டார், அவருக்கு இந்தப் படம் பெயர்ச் சொல்லும் படைப்பாக இருக்கும். கண்டிப்பாக இது மிகப்பெரிய வெற்றியாக அமையும். தயாரிப்பாளர் கண்ணன் சாருக்கு நன்றி மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி. பத்திரிக்கையாளர்கள் இதை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.” என்றார்.

 

நடிகை கயல் ஆனந்தி பேசுகையில், “3 வருட உழைப்பு. பல தடைகளைத் தாண்டி இந்தப் படம் இப்போது வெளியாகத் தயாராகி உள்ளது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது, யாரும் விட்டுக் கொடுக்காமல் இந்தப் படத்திற்கு உழைத்துள்ளோம். விக்ரம் சுகுமாரன் சார் சினிமாவை மிகவும் ரசித்து வேலை செய்பவர், அவருடன் வேலை செய்தது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது, ஷாந்தனு உடன் இணைந்து நடித்தது மிகவும் சுலபமாக இருந்தது. இந்தப் படம் ராம்நாடு மக்களின் வாழ்க்கை பற்றிப் பேசுவதாக இருக்கும். படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி இந்த படத்தை அனைவரும் தியேட்டரில் வந்து பார்க்க வேண்டும் நன்றி.” என்றார்.

 

Raavana Kottam

 

நிகழ்ச்சியில் எடிட்டர் லாரன்ஸ் கிஷோர் பேசுகையில், “இப்படத்தின் படப்பிடிப்பு தளத்திற்குச் நான் இரண்டு நாட்கள் சென்றேன் ஆனால் அங்கு என்னால் சுகுமாரன் சாரை பார்த்துப் பேசக்கூட முடியவில்லை.  ஷுட்டிங் அவ்வளவு பிஸியாக இருந்தது. எல்லோரும் என்னிடம் அவரைப் பற்றிக் கேட்டபோது, ஷூட்டிங் முடிந்ததும் நாங்கள் இருவரும் இணைந்து பணி புரிவோம் என்று கூறினேன். அது போலப் படப்பிடிப்பு முடிந்து சென்னை வந்தார் மூன்றே நாட்களில் எங்கள் இருவருக்கும் ஒரு நல்ல பிணைப்பு உருவானது, இந்த படத்தில் நான் பல விஷயங்கள் கற்றுக் கொண்டேன், ஷாந்தனு சார் இந்த படத்தில் மிக அதிகமான உழைப்பைப் போட்டுள்ளார் கண்டிப்பாக அதற்கான பலன் அவருக்குக் கிடைக்கும். படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் நன்றி.” என்றார்.

 

ஒளிப்பதிவாளர் வெற்றிவேல் பேசுகையில், “மதயானைக் கூட்டம் படத்திற்குப் பிறகு நான் வேலை செய்ய வேண்டும் என்று அதிகம் எதிர்பார்த்த ஒரு இயக்குனர் விக்ரம் சுகுமாரன் சார். அது நடந்து விட்டது , ஷாந்தனு நடிகராக மட்டும் இல்லை இப்படத்தில் அனைத்து வேலைகளையும் செய்தார். கண்ணன் சார் போன்ற சிறப்பான தயாரிப்பாளர் வருவது சினிமா துறைக்கு மிகவும் ஆரோக்கியமானது. அவருக்கு எனது வாழ்த்துக்கள் படம் நன்றாக வந்துள்ளது அனைவரும் இதை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும். அனைவருக்கும் நன்றி.” என்றார்.

 

நடிகர் சஞ்சய் பேசுகையில், “எனக்கு இந்த மேடை புதிது, நான் 12 வருடமாக பல படங்களில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். ஆனால் இந்தப் படம் எனக்குக் கிடைத்தது ஒரு வரம், இயக்குநர் சுகுமாரன் சாருக்கு நான் பெரிதும் கடமைப் பட்டுள்ளேன், இந்தப் படத்திற்காக நிறைய இரத்தம் சிந்தி நடித்துள்ளேன், நான் மட்டும் அல்ல அனைவரும் அப்படித்தான் நடித்தனர். இந்த படத்தின் வாழ்வியல் அம்சங்கள் அப்படி அமைந்துள்ளது, அதற்கு நாங்கள் ஈடு செய்ய வேண்டும் என்று எண்ணினோம்,.இயக்குநர் என்னைப் பெரிய அளவுக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்று நினைத்தார், எனக்கு அவர் அண்ணனாக இருக்கிறார், அதற்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். படத்தில் அனைவரும் எனக்குப் பல விஷயங்களை கற்றுக் கொடுத்தனர், நான்கு வருட போராட்டம் என்றே சொல்லலாம். இரவு பகல் பாராமல் அனைவரும் உழைத்துள்ளோம், உங்கள் ஆதரவை தாருங்கள் நன்றி.” என்றார்.

 

கலை இயக்குநர் நர்மதா பேசுகையில், “எனக்கு இந்தப் படத்தில் வாய்ப்பளித்த ஷாந்தனு மற்றும் இயக்குநர் சுகுமாரன் சாருக்கு நன்றி,  இது மிகப்பெரிய அனுபவம் பல விஷயங்களை கற்றுக் கொண்டேன், படம் நன்றாக வந்துள்ளது அனைவருக்கும் வாழ்த்துகள் நன்றி.” என்றார்.

 

நடிகை தீபா பேசுகையில், “இராவண கோட்டம் படத்தில் நடித்து வந்தது பள்ளிக் கூடத்திற்கு சென்று வந்தது போல இருந்தது, சுகுமார் சாரிடம் ஒரு நாள் நடித்தாலும் நடிப்பு என்றால் என்னவென்று கற்றுக் கொள்ளலாம், இளவரசு அண்ணனின் பேச்சை நான் பல இடங்களில் ரசித்துக் கேட்பேன், இப்படத்தில் அவருடன் பணி புரிந்தது மகிழ்ச்சியாக இருந்தது, தம்பி ஷாந்தனு என்னுடன் சகஜமாக பழகி வந்தார் அதற்கு நன்றி, படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி.” என்றார்.

 

நடிகர் இளவரசு பேசுகையில், “இந்தப் படத்தின் கலை இயக்குநர் நர்மதாவிற்கு வாழ்த்துக்கள், விக்ரம் சுகுமாரனிடம் ஒளிப்பதிவாளர் மற்றும் எடிட்டராக பணி செய்வது மிக கடினம், இருவருக்கும் மிகப்பெரிய வாழ்த்துகள். இந்தப் படத்தில் தென் மாவட்டத்தில் உள்ள அரசியலைப் பற்றிப் பேசியுள்ளனர். படம் பார்த்த பிறகு உங்களுக்கு தெரியும், தென் பகுதிகளில் பல கஷ்டங்கள் உள்ளது. தண்ணீர் மிகப் பெரிய பிரச்சனையாக உள்ளது , அதற்கான காரணங்களையும் இந்த படத்தில் பேசியுள்ளனர். இயக்குநரை எனக்குப் பல வருடங்கள் முன்பே தெரியும். ஒரு படத்தின் வேலைக்காக மதுரைக்கு அருகில் ஒரு ஊருக்குச் சென்றேன், அப்போது ஒரு நாள் ஒருவர் வீட்டிற்குச் சென்று தண்ணீர் குடித்தேன் அது அவரது வீடுதான், பல நாட்கள் கழித்து அதை என்னிடம் சொன்னார் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. ஷாந்தனு வெற்றிக்காகப் போராடிக் கொண்டிருக்கும் ஒரு இளைஞன் கண்டிப்பாக இந்த படம் வெற்றி பெறும், தயாரிப்பாளர் கண்ணன் சாருக்கு என் மனமார்ந்த நன்றி, இந்த குழுவினர் உழைப்பை,  மக்களிடம்  நீங்கள் எடுத்துச் செல்ல வேண்டும். அனைவருக்கும் நன்றி.” என்றார்.

 

இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகர் பேசுகையில், “மதயானைக் கூட்டம் ஒரு அற்புதமான படைப்பு , இயக்குநர் விக்ரம் சுகுமாரன் சாருடன் இணைந்து பணி செய்தது மிகவும் மகிழ்ச்சி, பெரும் உழைப்பைக் கொடுத்துள்ளார், ஷாந்தனு மிகவும் கஷ்டப்பட்டு இந்தப் படத்தில் வேலை செய்துள்ளார் கண்டிப்பாக அது அனைவரிடமும் சேரும், தயாரிப்பாளர் கண்ணன் மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி.” என்றார்.

Related News

8973

’அமரன்’ படத்தை பார்த்து பாராட்டிய முதல்வர் மு.க.ஸ்டாலின்!
Thursday October-31 2024

ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷ்னல் சார்பில் நடிகர் கமல்ஹாசன் தயாரிப்பில், சிவகார்த்திகேயன் நடிப்பில், ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘அமரன்’...

பரபரப்பான சம்பவங்கள் பின்னணியில் உருவான ‘முரா’ பட டிரைலர் வெளியானது!
Thursday October-31 2024

‘கப்பேலா’ படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் முஹம்மது முஸ்தபா, இயக்கத்தில் உருவாகியிருக்கும் ஆக்‌ஷன் திரில்லர் படம் ‘முரா’...

ஃபேண்டஸி காதல் படமாக உருவாகியுள்ள ‘மெஸன்ஜர்’!
Wednesday October-30 2024

பி.வி.கே ஃபிலிம் ஃபேக்டரி (PVK FILM FACTORY) சார்பில் பா...

Recent Gallery