Latest News :

’ஃபர்ஹானா’ இஸ்லாமியர்கள் கொண்டாடும் படமாக இருக்கும் - தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு நம்பிக்கை
Saturday May-06 2023

ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில், நெல்சன் வெங்கடேஷன் இயக்கத்தில் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியிருக்கும் ‘ஃபர்ஹானா’ திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருப்பதோடு, பல கேள்விகளையும் எழுப்பியுள்ளது. குறிப்பாக படத்தின் டிரைலர் பார்த்துவிட்டு சில இஸ்லாமிய அமைப்புகள் இஸ்லாமியர்களுக்கு எதிரான படம் என்று கருத்து கூறி வருகிறது.

 

இந்த நிலையில், ’ஃபர்ஹானா’ படக்குழுவினர் நேற்று சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்தனர். இந்த நிகழ்வில் நாயகி ஐஸ்வர்யா ராஜேஷ், இயக்குநர் நெல்சன் வெங்கடேஷன், தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு உள்ளிட்ட படக்குழுவினர்கள் கலந்துக்கொண்டார்கள்.

 

படம் பற்றி பேசிய தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு, “நெல்சன் என்ற மனிதருக்காக ஆரம்பிக்கப்பட்ட படம். 3 படங்கள் வரிசையாக எடுக்கலாம் என்று பேசிதான் இப்படத்தை ஆரம்பித்தோம். ஆனால், மூன்று வருடங்களாக ஒரே கதையை தான் எடுத்திருக்கிறோம். அவர் எல்லோரையும் கஷ்டப்படுத்தியாக கூறினார். ஆனால், அவர் அப்படி இருந்ததால் தான் படம் சிறப்பாக வந்திருக்கிறது. மான்ஸ்டர் படத்தில் வீடு தான் தளம் அமைத்து எடுத்தோம். ஆனால், எலி உண்மையாகத்தான் வைத்து எடுத்தோம். அதை யாரும் நம்பவில்லை. ‘ஃபர்ஹானா’ மூன்று மொழிகளில் வெளியாகிறது. இப்படத்தில் மதம் சார்ந்து சர்ச்சைக்குரிய விதத்தில் எதுவும் இல்லை. இஸ்லாமியர்கள் பயப்படும் படமாக இல்லாமல் கொண்டாடும் படமாக இருக்கும்.” என்றார்.

 

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் பேசுகையில், “மனுஷ்ய புத்ரன் சார் சொன்ன மாதிரி, வாரா வாரம் என்னுடைய படங்கள் வெளியானது. படம் வெளியாவதற்கும் எனக்கு எந்த சம்பந்தமுமில்லை. அது என் கையிலும் இல்லை. கடந்த வருடத்தில் எனது படம் இரண்டு தான் வெளியானது. அதனால் இந்த ஆண்டு எனது படத்திற்கு எந்த விருதும் கிடைக்க வில்லை. வருடா வருடம் விருதுகள் பல வென்ற என்க்கு இந்த வருடம் பல விருது விழாக்களின் அழைப்புக் கூட வரவில்லை. க/பெ. ரணசிங்கம் படத்திற்கு அங்கீகாரம் கூட கிடைக்கவில்லை. இதில் எனக்கு வருத்தமே. சரி .. இப்போ ஃபர்ஹானா படத்திற்கு வருவோம்.

 

நெல்சன் இந்த கதையை சில வரிகளில் தான் கூறினார். பிடித்திருந்தால் சொல்லுங்கள், நான் டெவலப் செய்து எடுத்து வருகிறேன் என்றார். அதற்குள் ஊரடங்கு வந்துவிட்டது. ஆனால், அடிக்கடி நான் நெல்சன் சாரிடம் அந்த கதை என்ன ஆச்சு? எனக்கு பிடித்திருக்கிறது என்று கேட்டுக் கொண்டே இருப்பேன்.

 

இப்படம் மிகச் சிறந்த படமாக எனக்கு இருக்கும். அதற்காக நான் நடித்த மற்ற படங்களை குறை சொல்கிறேன் என்று அர்த்தமில்லை. சில படங்கள் மனதிற்கு மிக நெருக்கமாக இருக்கும். இப்படம் அது போல தான். எஸ்.ஆர்.பிரபு சார் அடிக்கடி என்னிடம், பெரிய படங்கள் செய்யுங்கள்.. என்று சொல்லி கொண்டே இருப்பார். எனக்கு பிரபு சார் நல்ல வெல்விஷர்.

 

இப்படத்தில் பணியாற்றிய நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி. மிக சிரமமான பகுதிகளில் தான் படப்பிடிப்பு நடத்தினோம். ஐஸ்வர்யா தத்தா உணர்சிவசப்பட்டு பேசினார். ஜித்தன் ரமேஷ் நடிப்பு, இது மாதிரி ஒரு கணவர் நமக்கு வேண்டும் என்று எல்லா பெண்களும் நினைக்கும்படியாக இருக்கும். எங்களின் இப்படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கும். அதை பூர்த்தி செய்யும் என்று நம்புகிறேன்.” என்றார்.

 

Farhana

 

இயக்குநர் நெல்சன் வெங்கடேஷன் பேசுகையில், “முதலில் என் அம்மாவிற்கு நன்றி. நான் டைரக்ட் செய்த முதல் படமான ஒரு நாள் கூத்தில் உயிருடன் இருந்தார். ஆனால், இந்த படத்திற்கு அவர் உயிருடன் இல்லை. கொரோனா வந்த பிறகு அனைவருக்குமே வாழ்க்கைமுறை அனைத்துமே மாறிவிட்டது. நிறைய கற்றுக் கொடுத்தது. இந்த காலகட்டத்தில் எனது குடும்பத்தில் 4 பேர் அடுத்தடுத்து என் அம்மாவையும் சேர்த்து மறைந்தார்கள். அந்த உணர்வால் என்னால் அடுத்த அடி எடுத்து வைக்க முடியவில்லை. ஆனால், எஸ்.ஆர்.பிரபு சார் அடிக்கடி என்னை தொடர்புகொண்டு பேசிக் கொண்டே இருப்பார். அதுதான் எனக்கு மிகுந்த நம்பிக்கையளித்தது. அவருக்கு நன்றி. அடுத்து பிரகாஷ் பாபு சாரிடம் இந்த கதையை கொடுத்தேன். அவர் நன்றாக இருக்கிறது என்று கூறினார். சில காலத்திற்கு பிறகு ஐஸ்வர்யா ராஜேஷ் என்னை அழைத்து எனக்கு வெப் சீரிஸ் வாய்ப்பு வருகிறது. ஆனால், ஒரு கதையும் சரியாக அமையவில்லை. நீங்கள் கூறிய கதை எனக்கு பிடித்திருக்கிறது. அதை வெப் சீரியசாக எடுக்கலாமா என்று கேட்டார். நான் மீண்டும் பிரகாஷ் சாரை அணுகினேன். அப்போது, பிரபு சார் என்னிடம் இக்கதையை 45 நிமிடம் கேட்டார். அவருக்கும் ப்டித்து போக.. அப்படித்தான் இந்த படம் தொடங்கியது.

 

ஒரு படத்திற்கு எழுத்து மிகவும் முக்கியது என்று நான் செல்லும் இடங்களில் எல்லாம் கூறுவேன். என்னுடைய ஆசிரியருடன் இணைந்து இக்கதையை விரிவாக எழுத முயற்சித்தோம். பேச பேச உயிருக்குள் உயிருள்ள கதையாகப் பேச ஆரம்பித்தது. ஃபர்ஹானா திரைப்படம் எனக்கு புது அனுபவமாக இருந்தது. 3வது படம் மிகவும் வித்தியாசமாக இருக்க வேண்டும் என்று முடிவெடுத்தேன். நான் சென்னை புதுபேட்டையில் வளர்ந்தவன். வாகனங்களின் உதிரி பாகங்கள் விற்கும் கடைகள் இருக்கும் தெருவில் தான் வீடு. அங்கு இஸ்லாமியர்கள் அதிகம். புதுபேட்டை, திருவல்லிக்கேணி என்று நான் பிரியாணி சாப்பிட்டு வளர்ந்தது எல்லாமே முஸ்லீம் நண்பர்கள் நடுவில் தான். ஆகையால், நான் எடுக்கக் கூடிய படத்தின் பின்னணி, நான் வளர்ந்த.. அனுபவித்த கதையாக ஏன் இருக்க கூடாது? என்று நினைத்தேன். மதம் சார்ந்து படம் எடுக்கிறேன் என்று சர்ச்சை எழுந்துள்ளது. என்னுடைய நண்பர்களைப் பற்றி தான் எடுத்திருக்கிறேன். மதம் சார்ந்தது அல்ல.. மனம் சார்ந்தது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

 

இப்படத்திற்கு வசனம் எழுத மனுஷ்ய புத்ரனிடம் கொடுத்தோம். அவர் அடுத்த நாள் எனக்கு இந்த கதை மிகவும் பிடித்திருக்கிறது. படிக்க படிக்க சுவாராஸ்மாக இருக்கிறது. நானே எழுதித் தருகிறேன் என்றார். முதன் முதலாக திரைப்படத்திற்காக எழுதிய அவர் வசனம் சிறப்பு வாய்ந்தது. இப்படத்தில் அவருடைய வலிமையான வசனத்தை அனல் பறக்க பேசியது அனுமோள் தான்.

 

ஐஸ்டின் பிரபாகரனின் வளர்ச்சி என்னை வியக்க வைக்கிறது. தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி என பல மொழிகளிலும் சிறந்த இசையைக் கொடுத்து வருகிறார். ஃபர்ஹானா படத்திலும் 3 சிறந்த பாடல்களைக் கொடுத்திருக்கிறார். எனக்கு தேவையான இசையை ஐஸ்டினைத் தவிர வேறு யாரிடமும் உரிமையாக கேட்க முடியாது. நடிகை ஆண்ட்ரியா இப்படத்திற்காக ஒரு பாடலை பாடியிருக்கிறார். 

 

மான்ஸ்டர், குழந்தைகளுக்கு ஏற்ற மென்மையான படம். ஆனால், ஃபர்ஹானா அப்படி இல்லை. நிறைய விஷூவல் சேலஞ்ச் இருந்தது. என்னுடைய கதையை நான் நினைத்தது போலவே காட்சியாக மாற்றிய கோகுலின்  கேமரா கண்களுக்கு நன்றி.

 

பணத்தை கொடுத்தால் மட்டுமே வெற்றி என்றால் பலருக்கும் வெற்றிக் கிடைக்காது. பணத்தைத் தாண்டி ஆத்மார்த்தமாக பணியாற்றினால் தான் வெற்றி கிடைக்கும். வேலை நேரத்தைத் தாண்டியும் படத்தொகுப்பாளர் சாபு பணியாற்றியதால் தான் இப்படம் சிறப்பாக வந்திருக்கிறது. இப்படத்தில் பணியாற்றிய உதவி இயக்குநர், மானேஜர்கள்  முதல் அனைத்து கலைஞர்களுக்கும் நன்றி.

 

கத்தி மீது நடக்கக் கூடிய கதைதான் இப்படம். என்னுடைய குழுவில் 4 பேர் இஸ்லாமியர்கள். ஏனென்றால், இஸ்லாமிய பின்புலத்தில் எடுக்கக் கூடிய படத்தில் எந்தவித தவறும் நடந்துவிடக் கூடாது என்பதில் கவனமாக இருந்தேன். இஸ்லாமிய நண்பர்கள் அனைவருக்கும் இப்படம் பிடிக்கும் என்று நம்புகிறேன். இப்படம் இஸ்லாமிய நண்பர்களை தாழ்த்தி எடுக்கவில்லை. மற்ற மொழிகளில் இஸ்லாமிய பின்புலத்தில் படங்கள் வருகிறது. நமது நாட்டை எடுத்துக் கொண்டால் இஸ்லாமியர்கள் அநேகம் பேர் இருக்கிறார்கள். இப்படம் நன்றாக வரவேண்டும் என்பதற்காக இரவுபகலாக கடினமாக உழைக்கும் என் நண்பருக்கு நன்றி.

 

கிட்டி சாரின் வீட்டிற்கு சென்றேன். வாழ்க்கையை ரசனையாக வாழக்கூடிய மனிதர். இப்படி இருக்கும் ஒரு மனிதரிடம் எப்படி நடிப்பை வாங்குவது என்று தோன்றியது. படப்பிடிப்பு தளத்தில் அவரைப் பார்த்து நாம் எப்படி நன்றாக நடிக்கப் போகிறேன் என்று அனைவரும் பயந்தார்கள். காட்சியில் அவர் கடைசியாக நின்றாலும் நடிப்பில் சிறிது அழகுக் கூட்டி விடுவார்.

 

ஜித்தன் ரமேஷ் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் இருவரும் வரும் காட்சிகளைத்தான் நான் பெரும்பாலும் ரசித்தேன். இதில் ஜித்தன் ரமேஷ் - ஐஸ்வர்யா ராஜேஷ் இருவரும் காட்சிக்கு மேலும் வலு சேர்த்தார்கள்.

 

ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்ததில், குற்றமே தண்டனை என்ற படம் தான் எனக்கு மிகவும் பிடிக்கும். ஆனால், இப்படம் தொடங்கி 10 நாட்களாக இருவருக்கும் கருத்து வேறுபாடு இருந்தது, பிறகு சரியானது. அவருடைய நடிப்பு திறமையால் பல படங்கள் வந்து கொண்டிருப்பதில் மகிழ்ச்சி.

 

இந்த காட்சி சவாலாக இருக்கும் என்று நான் நினைத்த காட்சியில் உறுதுணை அளித்து நடித்துக் கொடுத்தார். கிட்டதட்ட 5 மணி நேரம் வெயிலில் நிற்க வைத்து கொடுமைப்படுத்தியிருக்கிறேன். ஆனால், இப்படம் அந்த வலிக்கு மருந்தாக இருக்கும் என்று நினைக்கிறேன்.” என்றார்.

 

எழுத்தாளர் மனுஷ்ய புத்ரன் பேசுகையில், “கிட்டதட்ட 5, 6 வாரங்களாக ஒவ்வொருவரும் என்னைத் தொடர்பு கொண்டு.. ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த படத்தில் தானே நீங்கள் வசனம் எழுதுனீர்கள். அப்படம் வெளியாகிவிட்டது என்பார்கள். நெல்சன் எனக்கு சொல்லவே இல்லையே என்று பார்த்தால், அது வேறு படமாக இருக்கும். இப்படி ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமையன்று ஒவ்வொரு ஐஸ்வர்யா ராஜேஷ் படம் வெளியாகும். அதுதான்  நான் எழுதிய படம் என்று நினைத்து பலபேர் போன் பண்ணுவார்கள். ஆனால், இந்த மே 12ம் தேதி வெள்ளிக்கிழமை புதிய நாளாக இருக்கும். இப்படம் வேறு மாதிரி இருக்கும். ஐஸ்வர்யா ராஜேஷை அனைவரும் வேறு மாதிரி பார்ப்பார்கள்.

 

நான் நிறைய சிறு கதைகள் எழுதியிருக்கிறேன். இந்த படத்தில் ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் தெளிவாக படைத்திருந்தார் நெல்சன். சில நாட்களுக்கு முன்பு இப்படத்தைப் பார்க்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. பெரும்பாலான படங்களில் பெரிய வசனகர்த்தாக்கள் எழுதி கொடுத்த பெரும்பாலான வசனம் படத்தில் இடம் பெறாமலேயே போய்விடும். ஆனால், இப்படத்தில் 90 சதவீதம் நான் எழுதிய வசனம் இருந்தது பார்த்து மகிழ்ச்சி. படத்தை முழுவதும் பார்த்ததும், இப்படி ஓர் அற்புதமான படமா என்று உணர்ச்சி வசப்பட்டேன். இப்படத்தில் என்னுடைய எழுத்து வேறு இடத்திற்கு என்னை கொண்டு செல்லும்.

 

இப்போது இருக்கும் பெண்களுக்கு நிறைய சேலஞ்சஸ் இருக்கு. எந்த பெண்ணும் சந்திக்காத பிரச்னையை இப்பெண் சந்திக்கிறாள். இப்படத்திற்கு பிறகு பொது வெளியில் வரும் ஒவ்வொரு பெண்ணும் தன்னுடன் இப்படத்தை தொடர்பு படுத்திக் கொள்வாள்.” என்றார்.

 

Farhana Press Meet

 

தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என மூன்று மொழிகளில் உருவாகியுள்ள ‘ஃபர்ஹானா’ திரைப்படம் வரும் மே 12 ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் வெளியாகிறது.

Related News

8979

’அமரன்’ படத்தை பார்த்து பாராட்டிய முதல்வர் மு.க.ஸ்டாலின்!
Thursday October-31 2024

ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷ்னல் சார்பில் நடிகர் கமல்ஹாசன் தயாரிப்பில், சிவகார்த்திகேயன் நடிப்பில், ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘அமரன்’...

பரபரப்பான சம்பவங்கள் பின்னணியில் உருவான ‘முரா’ பட டிரைலர் வெளியானது!
Thursday October-31 2024

‘கப்பேலா’ படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் முஹம்மது முஸ்தபா, இயக்கத்தில் உருவாகியிருக்கும் ஆக்‌ஷன் திரில்லர் படம் ‘முரா’...

ஃபேண்டஸி காதல் படமாக உருவாகியுள்ள ‘மெஸன்ஜர்’!
Wednesday October-30 2024

பி.வி.கே ஃபிலிம் ஃபேக்டரி (PVK FILM FACTORY) சார்பில் பா...

Recent Gallery