Latest News :

படத்தில் ராஜலட்சுமிக்கு மட்டும் வேறு சாய்ஸ் இல்லை - ’லைசென்ஸ்’ இயக்குநர் வைத்த நம்பிக்கை
Tuesday May-30 2023

ஜே.ஆர்.ஜி புரொடக்‌ஷன்ஸ் சார்பில் என்.ஜீவானந்தம் தயாரிப்பில், கணபதி பாலமுருகன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘லைசென்ஸ்’. இதில் பிரபல பாடகி ராஜலட்சுமி செந்தில் கதாநாயகியாக நடித்திருக்கிறார். மேலும், ராதாரவி, என்.ஜீவானந்தம், விஜய் பாரத், பழ.கருப்பையா கீதா கைலாசம், அபி நட்சத்திரா, தன்யா அனன்யா, வையாபுரி, நமோ நாராயணன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

 

இந்த படத்திற்கு காசி விஸ்வநாதன் ஒளிப்பதிவு செய்ய பைஜூ ஜேக்கப் இசையமைத்துள்ளார். படத்தின் மூன்று பாடல்களையும் ஏ.இரமணிகாந்தன் எழுதியுள்ளார். கலை - சிவா. எடிட்டர் ஆண்டனியின் சிஷ்யையான வெரோனிகா பிரசாத் இந்த படத்தின் மூலம் படத்தொகுப்பாளராக அறிமுகம் ஆகிறார். 

 

இந்த படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னை சாலிகிராமம் பிரசாத் லேபில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் படக்குழுவினருடன் சிறப்பு விருந்தினராக தயாரிப்பாளர் டி.சிவா, இயக்குநர் பேரரசு, எடிட்டர் ஆண்டனி, 'சண்டியர்' ஜெகன், ரிவர்ஸ் உமன் ஆர்கனைசேஷன் மது சரண் ஆகியோர் கலந்து கொண்டனர். அதுமட்டுமல்ல தயாரிப்பாளர் ஜீவானந்தத்தின் பள்ளி நண்பர்களாக ஒன்றாக படித்து இன்று பல்வேறு துறைகளில் மிகப்பெரிய பொறுப்புக்கள் வகிக்கும் அவரது 40 நண்பர்களும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

 

நிகழ்ச்சியில் பேசிய படத்தின் இயக்குநர் கணபதி பாலமுருகன், “எனது முதல் பட தயாரிப்பாளர் தெய்வம் என்றால் ஏழு வருடங்கள் கழித்து எனக்கு இரண்டாவது பட வாய்ப்பு தந்த இந்தப்படத்தின் தயாரிப்பாளர் ஜீவானந்தத்தை தெய்வத்தின் தெய்வம் என்று சொல்லலாம். இங்கே அவரது நட்புக்கு மரியாதை கொடுத்து அவரது நண்பர்கள் 40 பேர் வந்துள்ளனர். என்னுடைய உதவி இயக்குனர்களிடம் இங்கே வந்திருப்பது 40 தயாரிப்பாளர்கள்.. எதிர்காலத்தில் உங்களுக்காக இருக்கிறார்கள் என்று கூறினேன்.

 

படத்தின் டிரைலரிலேயே முழு கதையையும் சொல்லிவிட்டேன். கிளைமாக்ஸையும் கூட டிரைலரிலேயே சொல்லிவிடலாம் என்று தான் நினைத்தேன். காரணம் அந்த அளவிற்கு கதை மீது எனக்கு நம்பிக்கை உள்ளது. இது எப்படி நிகழ்கிறது என்பதுதான் திரைக்கதை.

 

இந்த படத்தில் பல நடிப்பு மற்றும் தொழில்நுட்ப ராட்சசர்களுடன் இணைந்து பணியாற்றி உள்ளேன். இந்த படத்தில் பாடல்களை எழுதியுள்ள ரமணிகாந்தன் வரும் காலத்தில் பாடலாசிரியர் யுகபாரதிக்கு டப் கொடுப்பார். சரஸ்வதி மற்றும் லட்சுமி இரண்டும் இணைந்த கடாட்சம் கொண்டவர் தான் ராஜலட்சுமி. ஒரு பள்ளி ஆசிரியை கதாபாத்திரத்திற்கு பொருத்தமான நபராக அவர் இருந்தார். மலையாளத்தில் அய்யப்பனும் கோஷியும் உள்ளிட்ட படங்களில் நடித்த தன்யா அனன்யா இந்த படத்தில் சிறப்பான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்” என்றார்.

 

படத்தின் நாயகி ராஜலட்சுமி செந்தில் பேசுகையில், “இதுவரை ஏறிய எந்த மேடையிலும் நான் பதட்டப்பட்டதில்லை. ஆனால் இது சினிமாவில் எனக்கு முதல் மேடை. நான் முதல் குழந்தை பெற்ற போது பிரசவ வலி எப்படி இருந்ததோ அதேபோன்ற ஒரு அனுபவம் இதில் கிடைத்தது. இந்த படத்தின் கதையை இயக்குநர் சொல்லிவிட்டு அதில் கதாநாயகியாக நான் நடிக்கிறேன் என்றபோது என்னால் நம்ப முடியவில்லை. அதிலும் துப்பாக்கி வைத்த ஒரு பெண்ணாக என்னை கற்பனை கூட பண்ணி பார்த்ததில்லை. இயக்குனர் என்னிடம் கூறும்போது இந்த படத்தில் நடிக்க மற்ற நடிகர்களுக்கு கூட இன்னொரு சாய்ஸ் வைத்துள்ளேன். ஆனால் இந்த கதாநாயகி பாத்திரத்தில் உங்களைத் தவிர வேறு யாரையும் யோசிக்க முடியவில்லை என்று கூறியபோது அவர் என் மீது வைத்து நம்பிக்கையை கண்டு வியந்து போனேன்.

 

பொதுவாக ஆரம்பத்தில் தயாரிப்பாளர்கள் பாசிட்டிவாக இருந்தாலும் போகப்போக அவர்களிடம் மாற்றம் வரும். ஆனால் ஜீவானந்தம் சார் கடைசி வரை மாறவே இல்லை. பைஜூவின் இசையில் நிறைய ஆல்பங்கள் மற்றும் ஒரு சில படங்களில் பாடியுள்ளேன். நல்ல இசையமைப்பாளர் இந்த படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு கிடைத்துள்ளார். அயலி புகழ் அபி நட்சத்திரா நடிக்கும் இந்த படத்தில் நானும் இருக்கிறேன் என்பதே எனக்கு பெருமை. 32 வயதில் இரண்டு குழந்தைகளுக்கு தாயான நாந கதாநாயகியாக நடிக்கிறேன் என்பதே ஆச்சரியம் தான்.

 

ஒருமுறை ராதாரவி சார் என்னிடம் பேசும்போது இனி அடுத்து எந்த நிகழ்வுக்கு வந்தாலும் உன் கணவரை அழைத்து வரக்கூடாது என்று விளையாட்டாக கூறுவார். இன்று இந்த நிகழ்வுக்கு என் கணவர் வரவில்லை. ஆனால் அதற்கு வேறு ஒன்றும் காரணம் இல்லை.. எங்களை போன்ற கலைஞர்களுக்கு இந்த மே மாதம் முழுவதும் அடுத்தடுத்த நிகழ்ச்சிகள் தொடர்ந்து இருந்துகொண்டே இருக்கும். இன்று இந்த விழாவில் நான் கலந்து கொள்ளவேண்டிய இருந்ததால் எனது கணவரை எனக்கு பதிலாக அந்த நிகழ்வுக்கு அனுப்பி விட்டேன்” என்றார்.

 

தயாரிப்பாளர் டி.சிவா பேசுகையில், “இந்த நிகழ்வை பார்க்கும் போது இசை வெளியீட்டு விழா போல தெரியவில்லை. முன்னாள் நண்பர்கள் ஒன்று சேரும் விழா போல தான் தெரிகிறது. இந்த படத்தின் மூலம் தயாரிப்பாளராக மாறி உள்ள ஜீவானந்தம் இனி தயாரிப்பாளர் என்கிற அடையாளம் பெற்ற ஒரு ‘லைசென்ஸ்’ ஹோல்டர் தான். பெரிய நடிகர்கள் மற்றும் ஓடிடிக்கு பின்னாடி ஒரு ரேஸ் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் இப்படி ஒரு படம் எடுக்க இவருக்கு வந்த துணிச்சலை நான் பாராட்டுகிறேன். இந்த மேடையிலேயே தயாரிப்பாளரிடம் பாராட்டு வாங்கிய இந்த இயக்குனர் தான் புதிதாக சினிமாவிற்கு வரும் இயக்குனர்களுக்கு ரோல் மாடல்.

 

ராஜலட்சுமியை என் பேரன்பு மிக்க மகள் என்றே சொல்வேன். எளிமையான பின்னணியில் இருந்து வந்த வலிமையான பெண். அத்தனை திறமைகளையும் ஒன்றாக பெற்றவர். இதுவரை தனது பாடல்கள் மூலமாக பார்வையாளர்களின் மனதை வென்றவர், இனி இந்த படம் மூலம் ஒரு நடிகையாக திரையுலக  ரசிகர்களின் மனதிலும் இடம் பிடிப்பார்” என்றார்.

 

எடிட்டர் ஆண்டனி பேசுகையில், “இந்த படம் சின்ன படம் என்று சொன்னார்கள். ஆனால் இதை பார்க்கும்போது கொஞ்சம் பெரிய படமாகவே தெரிகிறது. முதன் முதலில் ஒரு பெண், சினிமாவில் படத்தொகுப்பாளராக வருவது பெருமையாக இருக்கிறது” என்றார்.

 

துரிதம் பட நாயகன் ஜெகன் பேசுகையில், “தயாரிப்பாளர் ஜீவானந்தம் எனக்கு நல்ல நண்பர். ஆனால் இப்படி ஒரு படம் தயாரிக்கிறேன் என அவர் சொன்ன போது இயக்குனர் கணபதி பாலமுருகன் மீது எனக்கு கொஞ்சம் சந்தேகம் இருந்தது. ஏனென்றால் இரண்டு படங்களில் நடித்து அனுபவப்பட்டதால் அந்த சந்தேகம் வந்தது. ஆனால் போகப்போக அவரது திறமையும் கதை மீது தயாரிப்பாளர் வைத்திருக்கும் நம்பிக்கையையும் தெரிந்து கொண்டேன்” என்றார்.

 

மூத்த அரசியல்வாதியும் நடிகருமான பழ.கருப்பையா பேசுகையில், “ஒரு பெண்ணின் உரிமைக்காக, பெண்ணின் பாதுகாப்பை நிலைநாட்டுவதற்காக எடுக்கப்பட்ட படம் இது. ராஜலட்சுமி தான் கதையின் தலைவி என்று சொன்னபோது வியப்பாக இருந்தது. இளம் வயது நடிகையை கதாநாயகியாக போட்டிருந்தால் இந்த படத்தில் அந்த பெண் போராடும்போது தனக்காக போராடுவது போல இருக்கும். ஆனால் ராஜலட்சுமி இந்த கதாபாத்திரத்தில் நடிக்கும்போது தான் ஒரு பெண் சமூகத்திற்காக போராடுவதை நம்பும்படியாக இருக்கும்.

 

இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து வீட்டிற்கு திரும்பி வந்த கொஞ்ச நேரத்திலேயே, படத்தின் மேனேஜரும் பின் தொடர்ந்து வந்து விட்டார். ஏதாவது காட்சி எடுக்கப்படாமல் விடுபட்டு போய்விட்டதா என்று கேட்டபோது, அதெல்லாம் இல்லை.. உங்களுக்கு செக் கொடுக்க வந்திருக்கிறேன் என்று கூறி ஆச்சரியப்படுத்தினார். இப்படி வீட்டுக்கே விரட்டி வந்து சம்பளத்தை கொடுத்தது இந்த தயாரிப்பு நிறுவனமாக தான் இருக்கும்” என்றார்.

 

இயக்குநர் பேரரசு பேசுகையில், “இந்த படத்தின் இயக்குனர் கணபதி பாலமுருகனை பார்க்கும்போது திருமணம் ஆகி பத்து வருடம் இருக்கும் என நினைக்கிறேன். அப்படிப்பட்டவரை அவரது மாமனாரே மேடை ஏறி பாராட்டுகிறார் என்கிறபோது உண்மையிலேயே வாழ்க்கையில் வெற்றி பெற்றுள்ளார்.. அதேபோன்று இவரது படமும் வெற்றி பெறும். பொழுதுபோக்கு படம் எடுப்பவர்கள் பொறுப்பாக படம் எடுப்பவர்கள் என இரண்டு பிரிவு உண்டு. அப்படி சமூகத்திற்காக படம் எடுப்பது தான் ஒரு பொறுப்பான டைரக்டரில் வேலை. அதைத்தான் இந்த படத்தின் இயக்குனர் செய்துள்ளார்.

 

சில வருடங்களுக்கு முன்பு ஒரு விழாவில் கலந்துகொண்டபோது ராஜலட்சுமியை பாடகியாக சந்தித்தேன். இன்று ஒரு நடிகையாக சந்திக்கிறேன். அடுத்த தடவை அவரை சந்திக்கும்போது கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும் மிகப்பெரிய நடிகையாக சந்திக்க விரும்புகிறேன். இதற்கு முன் ஆசிரியராக பல நடிகைகள் நடித்துள்ளனர். ஆனால் அவர்கள் எல்லாம் திரையில் பார்க்கும்போது நடிகைகளாக தான் தெரிந்தார்கள். இந்த படத்தில் ராஜலட்சுமி அந்த கதாபாத்திரமாகவே மாறி, நாம் பள்ளியில் படித்தபோது நமக்கு பாடம் நடத்திய ஆசிரியை போல எதார்த்தமாக தெரிகிறார். இந்த கதைக்கே அவர்தான் சரியாக சாய்ஸ்.

 

ஒரு டீச்சர் துப்பாக்கி லைசென்ஸ் வேண்டும் என்று எதற்காக கேட்கிறார் என்பதுதான் இந்த படத்தின் கதை. இன்றைக்கு சூழல் அப்படித்தான் இருக்கிறது. இன்றைய காலகட்டத்தில் மாணவர்கள் ஒழுங்கீனமாக, சுயமரியாதை இல்லாமல், அராஜகமாக நடந்து கொள்கின்றனர். சில வருடங்களுக்கு முன்பு வரை ஆசிரியர்களின் கையில் பிரம்பு இருந்தது. மாணவர்களும் ஒழுக்கமாக இருந்தனர். அந்த பிரம்பை பிடுங்கி கீழே போட்டது யார் ? அந்த பிரம்பு கீழே விழுந்ததும் மாணவர்களிடம் இருந்து ஒழுக்கமும் போய்விட்டது.

 

அதனால் ஆசிரியர்கள் கையில் மீண்டும் பிரம்பை கொடுக்க வேண்டும்.பள்ளிப் பருவத்தில் வராத ஒழுக்கம் கடைசி வரை வராது. மாணவர்கள் பிரச்சனையில் எப்போதுமே ஆசிரியர் பக்கம்தான் அரசு நிற்க வேண்டும். இப்போது ஆசிரியர்களுக்கு பாதுகாப்பு இல்லை. கண்டிக்கும் ஆசிரியர்களை பற்றி பெற்றோர்களிடம் புகார் கூறி அவர்களை பள்ளிக்கு அழைத்து வரும் மாணவர்களுக்கு டிசியை கொடுத்து அனுப்ப வேண்டும்.

 

ஆசிரியர்களிடம் இருந்து பிரம்பை எப்படி பிடுங்கிப் போட்டார்களோ, அதேபோல மக்களிடம் பக்தியையும் பிடுங்கி போட முயற்சிக்கிறார்கள். பக்தி இருக்கும் வரை தான் தார்மீக பயம் இருக்கும். அதை விடுங்க அனுமதிக்க கூடாது. இது சமூக சிந்தனை கொண்ட நல்ல படம்.  மாணவர்கள் அனைவரும் இந்த படத்தை கட்டாயம் பார்க்க வேண்டும். அதற்கு ஏற்றபடி இந்த படத்திற்கு தமிழக அரசு வரிச்சலுகை கொடுக்க வேண்டும்” என்றார்.

 

தயாரிப்பாளர் என்.ஜீவானந்தம் பேசுகையில், “இந்த படத்தின் படப்பிடிப்பு ஐந்து மாதம் நடைபெற்றது. அந்த சமயத்தில் இயக்குனர் இப்படி பேசி நான் பார்த்ததில்லை. இன்று தான் இவ்வளவு பேசியுள்ளார். ஒரு தன்னம்பிக்கை பேச்சாளராக உலகம் முழுக்க சென்று பேசியுள்ளேன். ஆனால் இன்று நான் தயாரித்துள்ள படத்தின் விழா மேடையில் நின்று பேசுவது புதிதாக இருக்கிறது. இந்த படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் பழ.கருப்பையா நடித்துள்ளார் படப்பிடிப்பு சமயத்தில் என்னை தான் புதிதாக துவங்கிய கட்சியில் சேர்வதற்காக கூட அழைத்தார். இந்த படத்தில் நானும் ஒரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். எனது தந்தை நாடக நடிகராக இருந்தவர்.. மூன்று படங்களில் நடித்துள்ளார்.. அவரை தொடர்ந்து நானும் சினிமாவிலேயே பயணிக்க துவங்கியுள்ளேன்.

 

இந்த படத்தில் கதாநாயகியாக நடித்துள்ள ராஜலட்சுமி கூச்சம் இல்லாத நடிகை அவர் மிகப்பெரிய கூட்டங்களில் கலந்துகொண்டு அங்கு இருப்பவர்களை கையாளும் விதத்தைப் பார்த்து அவர் இந்த படத்தில் நடித்தால் சரியாக இருக்கும் என நான் ஒப்புக் கொண்டேன். அபி நட்சத்திரா நடித்திருக்கும் ஒரு காட்சி படமாக்கப்பட்டபோது நான் அழுதேன். நானும் அடிப்படையில் ஒரு கவிஞன் என்றாலும் இந்த படத்தில் பாடல் எதுவும் எழுதாமல் மூன்று பாடல்களையும் ரமணி காந்தனையே எழுத சொல்லிவிட்டேன். அவருக்கு சீக்கிரம் ரசிகர் கிளப்பும் ஆரம்பிக்க இருக்கிறேன்.

 

இந்த நிகழ்வில் எனது இரண்டாவது படம் குறித்து அறிவிப்பையும் வெளியிடுகிறேன். மன்னார்குடி பின்னணியில் கால்பந்தாட்ட கதைக்களத்தில் உருவாகும் இந்த படத்திற்கு கோல் என்று டைட்டில் வைத்துள்ளோம். ஒரு கிராமம் எப்படி கால்பந்து விளையாட்டால் பிரிகிறது, பின் எப்படி கால்பந்து விளையாட்டால் ஒன்று சேர்கிறது என்பதை மையப்படுத்தி இந்த படம் உருவாகிறது. ஏவிஎம் நிறுவனத்தின் 175வது படத்தை இயக்கிய குமரன் என்பவர் தான் இந்த படத்தை இயக்குகிறார்” என்று கூறி தனது அடுத்த படத்தின் இயக்குநர் குமரனையும் அறிமுகப்படுத்தி வைத்தார்.

 

இந்த நிகழ்வில் இந்தப்படத்தின் இசை மற்றும் டிரைலரை சிறப்பு விருந்தினர்கள் வெளியிட, சிறப்பு அழைப்பாளர்களாக வருகை தந்திருந்த தயாரிப்பாளர் ஜீவானந்தத்தின் பால்ய கால நண்பர்கள் அதை பெற்றுக்கொண்டனர்.

Related News

9009

’நாகபந்தம்’ படத்தின் முதல் பார்வை போஸ்டரை வெளியிட்ட ராணா டகுபதி!
Monday January-13 2025

நடிகர் விராட் கர்ணா - அபிஷேக் நாமா- கிஷோர் அன்னபு ரெட்டி - NIK ஸ்டூடியோஸ் - அபிஷேக் பிக்சர்ஸ் கூட்டணியில் உருவாகும் பான் இந்திய திரைப்படமான ' நாக பந்தம் ' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை முன்னணி நட்சத்திர நடிகரான ராணா டகுபதி வெளியிட்டார்...

உழவர் விருது தொடர்ந்து நடத்துவது ஏன் ? - நடிகர் கார்த்தி விளக்கம்
Monday January-13 2025

விவசாயத்தில் சாதனை புரிபவர்களையும், அதற்கு உறுதுணையாக இருந்து பங்களிப்பவர்களையும் கெளரவப்படுத்தி அங்கீகரிக்கும் உழவன் ஃபவுண்டேஷனின் ‘உழவர் விருதுகள் 2025’ விழா கோலகலமாக சென்னையில் நடைபெற்றது...

கோலாகலமாக நடைபெற்ற ‘அகத்தியா’ கேம் மற்றும் 2 வது பாடல் வெளியீட்டு விழா!
Monday January-13 2025

தமிழ் சினிமாவில் புதிய வரலாற்றை படைக்கும் வகையில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘அகத்தியா’...

Recent Gallery