லைக்ட் ஹவுஸ் மீடியா, ஸ்ரீ தர்மா புரொடக்ஷன்ஸ், ஜாஸ்பர் ஸ்டுடியோஸ் மற்றும் விஷ்தாரா நிறுவனங்கள் இணைந்து தயாரிக்க, அறிமுக இயக்குநர் அஜித்குமார்.ஜே இயக்கியிருக்கும் படம் ‘முகை’. கிஷோர் நாயகனாகவும், ஆர்ஷா சாந்தினி பைஜூ நாயகியாகவும் நடித்திருகும் இப்படம் மாறுபட்ட திரில்லர் ஜானர் திரைப்படமாக உருவாகியுள்ளது.
விரைவில் திரையரங்குகளில் வெளியாக இருக்கும் ‘முகை’ திரைப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா இன்று சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது. விபத்து ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருவதால் இந்த நிகழ்வில் நாயகன் கிஷோர் கலந்துக்கொள்ளவில்லை. இருந்தாலும், காணொலி வாயிலாக நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுக்கு நன்றி கூறி, படக்குழுவினரையும் வாழ்த்தினார்.
நிகழ்ச்சியில் விநியோகஸ்தர் சங்கத் தலைவர் தயாரிப்பாளர் கே.ராஜன் பேசுகையில், “'முகை' ஒரு அற்புதமான தமிழ் தலைப்பு. இயக்குநர் அஜித்குமார் அவர்களை வாழ்த்துகிறேன். நல்ல தமிழ் தலைப்புகள் இருக்கின்றன, தமிழில் தலைப்பு வையுங்கள் என்று நான் நீண்டகாலமாக சொல்லிக்கொண்டிருக்கிறேன். மலரின் முன் பருவத்தை குறிக்கும் வகையில் இயக்குநர் தமிழில் தலைப்பு வைத்துள்ளார். இந்த படக்குழுவை வாழ்த்துகிறேன். இந்த காலத்தில் இயக்குநர்கள் ஹாலிவுட் படத்திற்கு இணையாக படத்தை உருவாக்குகிறார்கள். தயாரிப்பாளருக்கு கஷ்டம் தராமல் படத்தை உருவாக்குங்கள். அனைவருக்கும் என் வாழ்த்துகள். படம் கண்டிப்பாக பெரிய வெற்றி பெறும்.” என்றார்.
நடிகர் எஸ் வி சேகர் பேசுகையில், “சின்ன படங்கள் வெற்றி பெறுவது திரையுலகத்திற்கு மிகவும் நல்லது. இத்திரைப்படத்தின் தயாரிப்பாளர் சந்தோஷ் ஜெயிக்க வேண்டும், கட்டாயம் ஜெயிப்பார். முயற்சி திருவினையாக்கும். 'முகை' திரைப்படம் வெற்றி பெற வாழ்த்துகிறேன்.” என்றார்.
தயாரிப்பாளர் டில்லிபாபு பேசுகையில், “ரிஷி என்னுடைய நண்பர். அவருடைய நண்பர் தயாரிப்பாளர் சந்தோஷ். தமிழ் சினிமாவுக்கு கனவுகளோடு இவர்கள் வந்துள்ளார்கள். திறமையான இயக்குநர் அஜித்குமார். சினிமாவின் எதிர்காலம் இளைஞர்களிடம் தான் இருக்கிறது. நிறைய புதுமுக தயாரிப்பாளர்கள் தமிழுக்கு வருவது மகிழ்ச்சி. இப்படம் வெற்றி பெற என் வாழ்த்துகள்.” என்றார்.
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவரும் தயாரிப்பாளருமான முரளி ராமசாமி பேசுகையில், “டிரெய்லர் அருமையாக உள்ளது படமும் நன்றாக இருக்கும் என்று தெரிகிறது, படத்தின் தொழில்நுட்ப குழுவினர் அருமையாக பணி செய்துள்ளனர், மக்களிடையே இந்த படம் நல்ல வரவேற்பைப் பெறும், கதைக்களம் புதிதாக இருக்கிறது. இது போன்ற படங்கள் அனைவருக்கும் பிடிக்கும். இப்படத்தை நீங்கள்தான் மக்களிடம் கொண்டு போய் சேர்க்க வேண்டும், நன்றி.” என்றார்.
இசையமைப்பாளர் சக்தி பேசுகையில், “இது எனக்கு முதல் படம். பாடல்கள் கேட்டிருப்பீர்கள் என நம்புகிறேன், உங்கள் ஆதரவை தாருங்கள். நன்றி.” என்றார்.
ஒளிப்பதிவாளர் அர்ஜுன் பேசுகையில், “இயக்குநர் அஜித் மிகத்தெளிவான சிந்தனையுடன் இருந்தார், படத்தை பற்றி எல்லாம் தெரிந்து வைத்திருந்தார். அதனால் என் வேலை சுலபமாக இருந்தது. படம் நன்றாக இருக்கும், பார்த்து விட்டு உங்கள் கருத்துகளை சொல்லுங்கள், நன்றி.” என்றார்.
இணை தயாரிப்பாளர் கிஷோர் பேசுகையில், “'முகை' படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துகள், படம் நன்றாக வந்துள்ளது டிரெய்லர் பார்த்த உங்களுக்கே தெரியும், எங்கள் அழைப்பை ஏற்று இங்கு வந்துள்ள அனைவருக்கும் நன்றி, படம் வெற்றி பெற வாழ்த்துகள்.” என்றார்.
நடிகர் ஜெயப்பிரகாஷ் பேசுகையில், “ஒரு சின்ன ரூமுக்குள் படம் எடுப்பது மிக சவாலான விஷயம். கிஷோர் அவர்களுக்கு சவால்கள் பிடிக்கும். டிரெய்லர் மிக அருமையாக உள்ளது. திரில்லர் படமாக தெரிகிறது. படக்குழுவினர் கடுமையாக உழைத்திருப்பது தெரிகிறது. படம் வெற்றி பெற என் வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன், நன்றி.” என்றார்.
இயக்குநர் பிரவீன் காந்த் பேசுகையில், “பாட்டிலுக்குள் மரம் இருக்கிறது, அதற்குள் வாழ்க்கை இருக்கிறது என மேடையிலேயே நிரூபித்து விட்டார்கள். இங்கு பரிசாக தந்த மரத்தை எல்லோரும் பாதுகாப்போம். 'முகை' மிகை இல்லாத அருமையான படைப்பாக தெரிகிறது. இந்தப்படம் நிச்சயம் அனைவரும் கவனிக்கும் படமாக இருக்கும். கன்னடத்தில் இருந்து தமிழ் படம் எடுக்க வந்திருக்கிறார்கள். தமிழகம் எல்லோரையும் ஏற்கும். அவர்களுக்கு என் வாழ்த்துகள். இந்தப்படம் மிகப்பெரும் வெற்றி பெறும்.” என்றார்.
நடிகை ஆர்ஷா சாந்தினி பைஜூ பேசுகையில், “இயக்குநர் அஜீத் மற்றும் தயாரிப்பாளருக்கு நன்றி. இது எனக்கு ஒரு மறக்க முடியாத அனுபவம். என் மீது நம்பிக்கை வைத்த குழுவினருக்கு நன்றி, படம் வந்ததும் பார்த்து விட்டு உங்கள் கருத்துகளை சொல்லுங்கள், நன்றி.” என்றார்.
இயக்குநர் அஜித்குமார் பேசுகையில், “இது என் முதல் படம், என் குடும்பத்திற்கு என் நன்றி. என் தயாரிப்பாளருக்கு என்னுடைய மிகப்பெரும் நன்றி. நாயகி நடித்த ஒரு யூடியூப் வீடியோ பார்த்து அவரை தேர்வு செய்தேன். மிக நன்றாக நடித்துள்ளார். ஒரே இடத்தில் நடக்கும் கதை. கிஷோர் குமார் சார் இப்படத்தில் எனக்கு மிகவும் உதவியாக இருந்தார். என்னை நம்பி உழைத்த என் படக்குழுவிற்கு நன்றி. படத்திற்கு உங்கள் ஆதரவை தாருங்கள் உங்களுக்கு பிடித்த படமாக இருக்கும்.” என்றார்.
தயாரிப்பாளர் ராஜா பேசுகையில், “'முகை' திரைப்படத்தின் டிரெய்லர் மிகவும் அருமையாக உள்ளது. இசை சிறப்பாக உள்ளது. இசையமைப்பாளர் சக்திக்கு வாழ்த்துகள். இது திரையரங்குகளில் கண்டு ரசிக்க வேண்டிய திரைப்படம். இந்த படம் மாபெரும் வெற்றி அடைய வாழ்த்துகிறேன்.” என்றார்.
தயாரிப்பாளர் சந்தோஷ் பேசுகையில், “என் வாழ்வின் முதல் மேடை இது. நாங்கள் அழைத்து இங்கு வந்து வாழ்த்திய திரை பிரபலங்கள் அனைவருக்கும் நன்றி. இந்தப்படத்தை தயாரிக்க ஆதரவாக இருந்த என் குடும்பத்திற்கு என் நன்றி. லாக்டவுனில் தான் இந்தப்படம் ஆரம்பித்தது. அஜித்குமார் அப்போது தான் பழக்கமானார். சும்மா இருக்கிறோம் ஏதாவது கதை பண்ணு என்றேன். அவர் உருவாக்கிய கதை தான் இது. இந்தப்படத்திற்கு கிஷோர் குமார் பொருத்தமாக இருப்பார் என அவரை சந்தித்தோம். அவர் எங்கள் படத்திற்காக கடினமாக உழைத்துள்ளார். கிஷோர் குமார் சார் இல்லையென்றால் இந்தப்படம் இல்லை. நாயகி எங்களை நம்பி வந்து நடித்து தந்தார். படம் நன்றாக வரவேண்டுமென தொழில்நுட்ப கலைஞர்கள் மிகவும் உழைத்துள்ளனர். இப்படத்திற்காக உழைத்துள்ள அனைத்து கலைஞர்களுக்கும் நன்றி. இப்படத்திற்கு உங்கள் ஆதரவை தாருங்கள்.” என்றார்.
ஒரு வீட்டில், இரண்டு கதாபாத்திரங்களுக்கு இடையே நடக்கும் கதையாக உருவாகியுள்ள ‘முகை’ விறுவிறுப்பான திரில்லர் திரைப்படமாக உருவாகியிருப்பதோடு, இரண்டு கதபாத்திரங்களை வைத்துக்கொண்டு இரண்டு மணி நேரம் எப்படி போனது என்பது தெரியாத அளவுக்கு பரபரப்பான திரைக்கதையோடு உருவாகியிருப்பதாக படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
நடிகர் விராட் கர்ணா - அபிஷேக் நாமா- கிஷோர் அன்னபு ரெட்டி - NIK ஸ்டூடியோஸ் - அபிஷேக் பிக்சர்ஸ் கூட்டணியில் உருவாகும் பான் இந்திய திரைப்படமான ' நாக பந்தம் ' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை முன்னணி நட்சத்திர நடிகரான ராணா டகுபதி வெளியிட்டார்...
விவசாயத்தில் சாதனை புரிபவர்களையும், அதற்கு உறுதுணையாக இருந்து பங்களிப்பவர்களையும் கெளரவப்படுத்தி அங்கீகரிக்கும் உழவன் ஃபவுண்டேஷனின் ‘உழவர் விருதுகள் 2025’ விழா கோலகலமாக சென்னையில் நடைபெற்றது...
தமிழ் சினிமாவில் புதிய வரலாற்றை படைக்கும் வகையில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘அகத்தியா’...