Latest News :

’பொம்மை’ உணர்வுகளின் அடிப்படையில் உருவான படம் - நடிகர் எஸ்.ஜே.சூர்யா
Tuesday June-13 2023

எஸ்.ஜே.சூர்யா ஹீரோவாக நடிப்பதுடன், ஏஞ்சல் ஸ்டுடியோஸ் எம்.ச் எல்.எல்.பி நிறுவனம் சார்பில் தயாரித்திருக்கும் படம் ‘பொம்மை’. ராதா மோகன் இயக்கியிருக்கும் இப்படத்தில் பிரியா பவானி சங்கர் கதாநாயகியாக நடித்திருக்கிறார். சாந்தினி முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்.

 

யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு ரிச்சர் எம்.நாதன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். வரும் ஜூன் 16 ஆம் தேதி முதல் திரையரங்குகளில் வெளியாக இருக்கும் இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று மாலை சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது.

 

இதில் கலந்துக்கொண்ட எஸ்.ஜே.சூர்யா படம் குறித்து கூறுகையில், “பத்திரிக்கையாளர் மீது நம்பிக்கை வைத்து தான் இந்த படத்தை வெளியிட முடிவு செய்தேன், நீங்கள் அளித்த ஆதரவிற்கு  நன்றி. படம் நன்றாக வந்துள்ளது. இந்தப் படத்தில் வரும் காதல் கதையே வித்தியாசமாக இருக்கும். இயக்குநர் ராதா மோகன் சாருக்கு தான் அந்த பெருமை சேரும். பிரியா பவானி சங்கர் படத்தில் பொம்மையாக நடித்துள்ளார், ஆனால் நிஜத்தில் அவர் பார்ப்பதற்கும் பொம்மை தான் அவ்வளவு அழகு. சாந்தினி ஒரு அழகான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார், படத்தில் நடித்துள்ள அத்தனை கதாபாத்திரமும் சிறப்பாக வந்துள்ளது. யுவன் சாரின் பாடல்கள் அனைத்துமே நன்றாக இருக்கிறது. ஒளிப்பதிவு மிகவும் அழகாக இருந்தது. படப்பிடிப்பின் பாதியிலேயே கொரானா வந்துவிட்டது, ஆனாலும் அது படத்திற்கு உதவியாகத்தான் இருந்தது. படத்தின் பின்னணி இசைக்காகவே படத்தைப் பார்க்கலாம் நான் அதற்கு உறுதி அளிக்கிறேன். இயக்குநர் ராதா மோகன் என்னிடமிருந்து நல்ல நடிப்பை வாங்கியுள்ளார், இந்த படத்தின் காட்சிகள் எனக்கு நல்ல பெயரை வாங்கித் தரும் என்று நம்புகிறேன்,  இந்த படம் உணர்வுகளின் அடிப்படையில் உருவான படம், இந்தப் படத்தை மக்களிடம் கொடுத்து விடுகிறேன், அனைவரும் ஆதரவு தாருங்கள்.” என்றார்.

 

இயக்குநர் ராதா மோகன் பேசுகையில், “நான் சில விஷயங்களைப் பேச வேண்டும் என்று நினைத்தேன் அதை அனைவரும் பேசி விட்டனர், இந்தப்படம் ஆரம்பித்த நாள் முதல் இன்று வரை பல சுவாரஸ்ய நிகழ்வுகள் நடந்துள்ளது, எஸ் ஜே சூர்யாவிடம் முதலில் கதையைச் சொல்லி விட்டு தயாரிப்பாளரைத் தேட ஆரம்பித்தேன், ஆனால் சில நாட்கள் கழித்து அவரே தயாரிப்பதாக கூறினார். அப்படித்தான் இந்தப்படம் தொடங்கியது. அவரும் இயக்குநர் என்பதால், அவ்வப்போது சில விஷயங்கள் சொல்வார் அது எனக்கு உதவியாக இருக்கும். இந்தக் குழுவிற்கு நான் நன்றி சொல்ல மாட்டேன் ஏனென்றால் இன்னும் பல படங்கள் இவர்களுடன் இணைந்து பணி புரிய போகிறேன். யுவன் சங்கர் ராஜாவின் பாடல்கள் அருமையாக வந்துள்ளது. think music சந்தோஷ் அவர்களுக்கு நன்றி, பாடல்களைக் கேட்டதும் எங்களுக்கு ஆதரவு கொடுத்தார், மொத்தத்தில் படம் அழகாக வந்துள்ளது. நல்ல படங்களுக்கு நீங்கள் ஆதரவு கொடுத்துள்ளீர்கள், அது போல இந்த படத்திற்கும் ஆதரவு தர வேண்டும்.” என்றார்.

 

நடிகை பிரியா பவானி சங்கர் பேசுகையில், “பொம்மை ஜீன் 16ஆம் தேதி வருகிறது. நிறைய ஆசைப்பட்டு செய்த படம். மனதுக்கு நெருக்கமான படம். இது ராதா மோகன் சாரின் படம் அவ்வளவு தான். ஒவ்வொரு காட்சியிலும் அவர் வைக்கும் உயிரோட்டம் அப்படியே தெரிந்தது. அவர் சொல்லித் தந்ததைச் செய்தாலே போதும். ஒரு நல்ல மனிதராக அவருடன் பழகியது சந்தோஷமான அனுபவம். SJ சூர்யா சாருடன் இரண்டாவது படம், இதில் தயாரிப்பாளராகவும் இருந்தார்.  ஒரு பக்கம் நெருப்பாக இருப்பார் இன்னொரு பக்கம் கூலாக நடிப்பார். ஒவ்வொரு டேக்கிலும் வித்தியாசமாகத் தரப் போராடுவார். எனக்கு நந்தினி கேரக்டர் தந்ததற்கு ராதா மோகன் சாருக்கு நன்றி. படம் கண்டிப்பாக நல்ல படைப்பாக இருக்கும் அனைவரும் ஆதரவு தாருங்கள்.” என்றார்.

 

Bommai Press Meet

 

பாடலாசிரியர் மதன் கார்க்கி பேசுகையில், “டிஜிட்டல் கம்பெனிகள் இப்போது வர்ச்சுவல் ரியாலிட்டி எனும் புது உலகத்திற்குள் போய்க்கொண்டிருக்கிறார்கள். அதற்குள் நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். வேறு வேறு நாடுகளில் இருப்பவர்கள் ஒன்றாக விளையாடலாம். ஆனால் கொஞ்ச காலத்திற்குப் பிறகு எது உண்மை உலகம் என்பது தெரியாத குழப்பம் வந்துவிடும் , மனரீதியான பிரச்சனை உள்ளவர்கள் இந்த மாதிரி இரட்டை உலகத்திற்குள் வாழ்வதாக தான் அறிவியல் சொல்கிறது. அதை மிக அழகாக ஒரு கதைக்குள் கொண்டு வந்து நம்மை ஆச்சரியப்படுத்தியுள்ளார் ராதா மோகன். ஒவ்வொரு முறையும். ராதா மோகன் சார் புதிதாக முயற்சி செய்கிறார். அது எனக்கு ரொம்ப பிடிக்கும். பொதுவாக நடிகைகள் பொம்மை மாதிரி இருக்கிறார்கள் என்பார்கள். இந்த படத்தில் பொம்மையாகவே வாழ்ந்துள்ளார் பிரியா பவானி சங்கர். SJ சூர்யா சார் இத்தனை வருடத்தில் அவரது முயற்சிகள் சாதனைகள் பிரமிக்க வைக்கிறது. இந்த படத்தில் அவர் வாழ்ந்திருக்கிறார். தொழில் நுட்ப குழுவில் ஒவ்வொருவரும் உண்மையாக உழைத்துள்ளனர். இந்தப் படம் பெரிய வெற்றி பெற வாழ்த்துக்கள்.” என்றார்.

 

நடிகை சாந்தினி பேசுகையில், “இந்தப் படம் ஒரு நல்ல அனுபவமாக இருந்தது, எஸ் ஜே சூர்யா சாருடன் இணைந்து பணி புரிந்தது மகிழ்ச்சியாக இருந்தது, இயக்குநர் ராதா மோகன் சாருக்கு இந்த வாய்ப்புக்காக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன், எஸ் ஜே சூர்யா சார் காட்சி ஆரம்பித்தவுடன் வேறு ஒரு ஆளாக மாறி விடுவார், பிரியாவிற்கும் எனக்கும் காட்சிகள் இல்லை ஆனால் இந்த படம் அவருக்கு ஒரு முக்கியமான படமாக இருக்கும், ஒட்டு மொத்த குழுவுக்கும் நன்றி. படம் நன்றாக வந்துள்ளது நீங்கள் பார்த்துவிட்டுக் கூறுங்கள்.” என்றார்.

 

எழுத்தாளர் பொன் பார்த்திபன் பேசுகையில், “பத்திரிக்கை நண்பர்கள் இப்படத்தை மக்களிடம் கொண்டு சேர்த்துள்ளீர்கள் அதற்கு நன்றி. வாலி, குஷி பட காலத்தில் பார்த்து வியந்த SJ சூர்யா சாருக்கு எழுதுவது மிகப்பெரிய சந்தோஷம். ராதா மோகன் சார் முதன் முதலில் SJ சூர்யா சார் பெயரைச் சொன்ன போதே கொஞ்சம் ஆச்சர்யமாக இருந்தது. ஆனால் இப்போது இந்த கூட்டணி அசத்தியிருக்கிறார்கள். க்ளைமாக்ஸில் நடிப்பு ராட்சசனாக மிரட்டியிருக்கிறார். படம் கண்டிப்பாக உங்களுக்குப் பிடிக்கும்.” என்றார்.

 

நடிகர் அருள் சங்கர்  பேசுகையில், “ராதா மோகன் சார் ஒவ்வொரு காட்சியிலும் கொஞ்சம் கொஞ்சமாக கேட்டு அழகாக எடுத்து விடுவார். அவருடன் நிறையப் படம் செய்ய வேண்டும்.  SJ சூர்யா சார் நடிப்பை, ஒரு காட்சியில் பார்த்து மிரண்டு விட்டேன். அவரிடம் இருந்து நிறைய கற்றுக் கொண்டேன். இந்தப் படம் கண்டிப்பாக உங்களை ஆச்சரியப்படுத்தும் அனைவருக்கும் நன்றி.” என்றார்.

 

Think music சந்தோஷ் பேசுகையில், “மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது, எஸ் ஜே சூர்யா சார் எனக்கு போன் செய்து பாடல்களைக் கேட்குமாறு கூறினார். அவர் சொல்லும்போதே நான் இந்தப்படத்தை ஒப்புக் கொள்வேன் என்று கூறினேன், யுவன் சங்கர் ராஜாவின் பாடல்கள் எல்லாம் நன்றாகவே வந்துள்ளது, படத்தின் வரவேற்பும் பெரிதாக உள்ளது, படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் நன்றி.” என்றார்.

 

நடிகர் செந்தில் பேசுகையில், “படக்குழு அனைவருக்கும் வணக்கம், நான் டிவி சேனல் மூலமாகத்தான் பிரபலம் ஆனேன், இயக்குநர் ராதா மோகன் சாருடன் இது எனக்கு மூன்றாவது படம் , எஸ் ஜே சூர்யா சாருடன் நடித்தது பெரிய வரம், அவருடன் பணி புரிந்தது நல்ல அனுபவமாக இருந்தது, பிரியா பவானி சங்கர் மேடம் கியூட்டாக நடித்துள்ளார், ஒளிப்பதிவாளர் படத்தை அழகாகப் பதிவு செய்துள்ளார்,  என்னையும் அழகாக காட்டியுள்ளார். படத்தின் ஒட்டு மொத்த குழுவுக்கும் நன்றி.” என்றார்.

Related News

9032

’அமரன்’ படத்தை பார்த்து பாராட்டிய முதல்வர் மு.க.ஸ்டாலின்!
Thursday October-31 2024

ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷ்னல் சார்பில் நடிகர் கமல்ஹாசன் தயாரிப்பில், சிவகார்த்திகேயன் நடிப்பில், ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘அமரன்’...

பரபரப்பான சம்பவங்கள் பின்னணியில் உருவான ‘முரா’ பட டிரைலர் வெளியானது!
Thursday October-31 2024

‘கப்பேலா’ படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் முஹம்மது முஸ்தபா, இயக்கத்தில் உருவாகியிருக்கும் ஆக்‌ஷன் திரில்லர் படம் ‘முரா’...

ஃபேண்டஸி காதல் படமாக உருவாகியுள்ள ‘மெஸன்ஜர்’!
Wednesday October-30 2024

பி.வி.கே ஃபிலிம் ஃபேக்டரி (PVK FILM FACTORY) சார்பில் பா...

Recent Gallery