Latest News :

’அஸ்வின்ஸ்’ எனக்கு மிகவும் முக்கியமான படம்! - நடிகர் வசந்த் ரவி நெகிழ்ச்சி
Wednesday June-21 2023

’தரமணி’ படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமாகி கவனம் ஈர்த்த வசந்த் ரவி, ‘ராக்கி’-யில் மிரட்டலான நடிப்பு மூலம் ஒட்டு மொத்த திரையுலகையும் திரும்பி பார்க்க வைத்தார். 

 

தற்போது பல படங்களில் நடித்து வரும் வசந்த் ரவி நடிப்பில் வரும் ஜூன் 23 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கும் படம் ‘அஸ்வின்ஸ்’. ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி சித்ராவின் பி.வி.எஸ்.என்.பிரசாத் தயாரிக்க, பாபிநீடு பி வழங்கும் இப்படத்தை அறிமுக இயக்குநர் தருண் தேஜா இயக்கியிருக்கிறார்.

 

திகில் ஜானர் திரைப்படமாக உருவாகியுள்ள இப்படம் வெளியீட்டுக்கு முன்பாகவே பத்திரிகையாளர்களுக்கு திரையிட்டு காட்டப்பட்டது. படத்தை பார்த்தவர்கள், படத்தின் மேக்கிங் மற்றும் இசை, ஒலிக்கலவை, ஒளிப்பதிவு உள்ளிட்ட தொழில்நுட்ப பணிகளை வெகுவகாக பாராட்டினார்கள்.

 

இதுவரை பல திகில் படங்கள் தமிழ் சினிமாவில் வந்திருந்தாலும், தொழில்நுட்ப ரீதியாக மிரட்டலான ஒரு படமாக ‘அஸ்வின்ஸ்’ உருவாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கதைக்களத்தையும், கதாபாத்திரங்களையும் இயக்குநர் கையாண்ட விதமும், திகில் காட்சிகளை வடிவமைத்த விதமும், ரசிகர்களுக்கு நிச்சயம் புதிய திகில் அனுபவத்தை கொடுக்கும், என்று பத்திரிகையாளர்கள் பாராட்டி வருகிறார்கள்.

 

சிறப்பு காட்சி முடிவடைந்த பிறகு படம் குறித்து பத்திரிகையாளர்களிடம் பேசிய நடிகர் வசந்த் ரவி, “இந்தப் படம் எனக்கு மிகவும் முக்கியமானது. ‘தரமணி’, ‘ராக்கி’ ஆகிய படங்களை முடித்துவிட்டு என்ன மாதிரியான படங்களில் நடிக்கலாம் என்ற கேள்வி இருந்து கொண்டே இருந்தது. அப்படி தருண் மூலமாக என்னைத் தேடி வந்த படம்தான் ‘அஸ்வின்ஸ்’. ஹாரர் செய்ய வேண்டாம் என்று இருந்த என்னை இந்த கதை கேட்டதுமே நடிக்கலாம் என்று தோன்ற வைத்தது. ’தரமணி’,  ‘ராக்கி’ படங்களுக்கு தந்த ஆதரவு போலவே, இந்தப் படத்தையும் நீங்கள் உங்கள் படமாக எடுத்துப் போய் மக்களிடம் கொடுத்தால் சந்தோஷப் படுவேன். ஏனெனில் படத்தின் இறுதியில் முக்கியமான மெசேஜ் உள்ளது. படத்திற்கு ‘யூ/ஏ’ சான்றிதழ் கிடைக்கும் என எதிர்பார்த்தேன். ஆனால், ‘ஏ’ கிடைத்திருக்கிறது. இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களின் நெகட்டிவிட்டி குழந்தைகளை எப்படி பாதிக்கிறது என அவர்களுக்கான மெசேஜ் தான் இது.  தெலுங்கில் இருந்து தமிழுக்கு வந்துள்ள பாபி சாருக்கும் இது முக்கியமான படம். நிறைய தயாரிப்பாளர்கள் தெலுங்கில் இருந்து தமிழுக்கு வருவது ஆரோக்கியமான விஷயம். விமலாராமன், சரஸ்வதி, முரளி என அனைவரும் மிரட்டலான நடிப்பைக் கொடுத்துள்ளனர். படத்தின் ரியல் ஹீரோ இசையமைப்பாளர் விஜய் தான், அவருக்கு நன்றி. இந்த சினிமாத் துறையில் நான் பிரம்மித்து போய் பார்க்கிற ஒருவர் என்றால் அது சக்திவேலன் சார் தான். இவருடைய பேனரில் போனால் எல்லாப் படங்களும் ஹிட்.  சினிமா தற்போதுள்ள சூழ்நிலையில் வருகிற சின்ன படங்கள் எல்லாவற்றையும் ஹிட்டாக்குவது சாதாரண விஷயம் கிடையாது. இந்த வரிசையில், ‘அஸ்வின்ஸ்’ படமும் அவர் பிடித்து வெளியிட்டுள்ளார். ’அஸ்வின்ஸ்’ என் படம் கிடையாது, உங்கள் படம்.” என்றார்.

 

இப்படத்தை தமிழகம் முழுவதும் வெளியிடும் சக்தி பிலிம் பேக்டரி சக்திவேலன் பேசுகையில், “சமீபத்தில் ஒரு பெரிய நடிகருடன் பேசிக் கொண்டிருந்தபோது, ‘’யாத்திசை’, ‘குட்நைட்’ போன்ற படங்களுக்குப் பேசியது போலதான் ‘போர்தொழில்’ படத்திற்கும் புகழ்ந்து பேசினீர்கள் என்று நினைத்தேன். ஆனால், இந்தப் படம் நன்றாக போய்க் கொண்டிருக்கிறதாமே!’ என்று விசாரித்தார். உண்மையில், எனக்குப் பிடித்த படங்களை மட்டும்தான் பார்த்து வாங்குவேன். அதுபோல, ஒரு அனுபவமாக ‘அஸ்வின்ஸ்’ எனக்கு பிடித்திருந்தது. தொழில்நுட்பம், நடிப்பு என ஹாரர் படத்தில் வித்தியாசமான ஒரு அனுபவம் கொடுத்தது இந்தப் படம். சிறந்த சவுண்ட் எபெக்ட்ஸோடு வந்த படத்திற்கு உதாரணமாக இதை சொல்வேன். எனக்குப் பிடித்துதான் இந்தப் படத்தை வெளியிடுகிறேன். தெலுங்கில் ‘விரூபாக்‌ஷா’ போன்ற பல வெற்றிப் படங்களைக் கொடுத்த தயாரிப்பாளர் தமிழுக்கு வருவது பெரிய விஷயம். பார்வையாளர்களுக்கு அடுத்த தலைமுறைக்கான ஒரு அனுபவமாக ’அஸ்வின்ஸ்’ இருக்கும் என நம்புகிறேன்.” என்றார்.

 

இயக்குநர் தருண் தேஜா பேசுகையில், “கொரோனா சமயத்தில் ஒரு ஷார்ட்ஃபிலிம் நாங்கள் எடுத்திருந்தோம். அதை விமலா ராமன் மேம் பார்த்துவிட்டு தயாரிப்பு தரப்பிடம் காண்பித்தார். பின்பு நான் பாபி சாரிடம் வீடியோ காலில் கதை சொல்லி சம்மதம் வாங்கினேன். இந்த கதைக்கு எல்லாவிதமான உணர்ச்சிகளும் தரக்கூடிய ஒரு நடிகர் தேவை என நினைத்திருந்தபோது, வசந்த் ரவி உள்ளே வந்தார். கதை சொல்லும்போதே நாங்கள் நல்ல நண்பர்களாகிவிட்டோம். சிறப்பான நடிப்பைக் கொடுத்துள்ளார். அதேபோல, படத்தில் நடித்துள்ள மற்ற நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் என அனைவருமே சிறப்பான உழைப்பைக் கொடுத்துள்ளனர். இந்த கடின உழைப்பிற்காகவே இந்தப் படம் மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும் என ஆசைப்படுகிறேன். உங்களுக்கும் பிடிக்கும் என நம்புகிறேன். நன்றி.” என்றார்.

 

Asvins Movie Press Meet

 

தயாரிப்பாளர் பிரசாத்தின் மகன் பாபி நீடு பேசியதாவது, “தெலுங்கில் இதற்கு முன்பு நாங்கள் படங்கள் தயாரித்து இருந்தாலும் இந்தப் படம் தமிழில் நாங்கள் முதல் படமாக தயாரித்து இருக்கிறோம். உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் என நினைக்கிறேன்.” என்றார்.

 

இணைத்தயாரிப்பாளர் பிரவீன் டேவிட் பேசியதாவது, “இந்தப் படத்தில் இணைத் தயாரிப்பாளராக பணியாற்றியுள்ளேன். அனைவரும் உங்கள் ஆதரவை கொடுக்க வேண்டும்.” என்றார்.

 

இசையமைப்பாளர் விஜய் சித்தார்த், “’அஸ்வின்ஸ்’ கதை பிடித்துப் போய் அதற்கு இவ்வளவு பெரிய பிளாட்ஃபார்ம் உருவாக்கித் தந்த பாபி சாருக்கும், எங்களை அழைத்து போன பிரவீன் சாருக்கும் நன்றி.  இயக்குநர் தருண் தேஜாவுக்கு வேறு பெரிய இசையமைப்பாளர்களிடம் போவதற்கான வாய்ப்பு இருந்தும், என் வேலை மீது நம்பிக்கை வைத்து என்னை தேர்ந்தெடுத்ததற்கு நன்றி. வசந்த் ரவி, விமலா மேம், சரஸ்வதி என அனைவரும் சிறப்பாக நடித்துள்ளனர். லாக்டவுண் சமயத்தில் இருந்து படம் முடியும் வரை எந்தவிதமான டென்ஷனும் இல்லாமல் முழு ஒத்துழைப்போடு வேலை பார்த்துக் கொடுத்த தொழில்நுட்பக் குழுவுக்கும் நன்றி.” என்றார்.

 

நடிகர் முரளிதரன், “இயக்குநர் தருணும் நானும் கல்லூரியில் இருந்தே நண்பர்கள். நான் அமெரிக்காவில் இருந்து திரும்பி வந்ததும் நடிக்க ஆரம்பிக்கலாம் என்று இருந்தேன். பிறகு லாக்டவுணில் இந்தக் கதையில் வேலை பார்க்க ஆரம்பித்தோம். சிறப்பான கதையை தருண் கொடுத்துள்ளார். வசந்த் ரவி, விமலா ராமன் என அனைவருமே கடினமான சூழலைக் கூட பொருட்படுத்தாமல் நடித்துள்ளனர். தொழில்நுட்பக் குழுவுக்கும் நன்றி. உங்கள் ஆதரவு தேவை.” என்றார்.

 

நடிகை சரஸ்வதி மேனன், “இந்தக் கதாபாத்திரத்திற்காக என்னைத் தேர்ந்தெடுத்த இயக்குநர் தருணுக்கு நன்றி. ஹாரர் படங்கள் கூட பார்க்காத நான் அதுபோன்ற ஜானரில் படங்கள் நடிப்பேன் என நினைத்துக் கூட பார்க்கவில்லை. தயாரிப்பாளர் பாபி சார், நடிகர்கள் வசந்த் ரவி, விமலா ராமன் அனைவருக்கும் நன்றி. முரளி, விஜய் சித்தார்த் என நாங்கள் அனைவரும் ஒரு குடும்பமாக இங்கு வந்துள்ளோம். படத்திற்கு இவ்வளவு பெரிய ஆதரவு கிடைக்கும் என நினைக்கவே இல்லை. கொரோனா சமயத்தில் படம் வெளியாகுமா எனத் தெரியாமல் நம்பிக்கையோடு அனைவரும் வேலை பார்த்தோம். உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் என நம்புகிறேன்.” என்றார்.

 

நடிகை விமலா ராமன் பேசியதாவது, “இயக்குநர் தருணுடைய கனவை அனைவரும் நிறைவேற்றியுள்ளதற்கு வாழ்த்துகள்! லாக்டவுண் சமயத்தில் தருணுடைய இந்த ஷார்ட்ஃபிலிம் பார்த்தபோதே எனக்கு பிடித்திருந்தது. ஒரு இயக்குநருக்கு என்ன தகுதி வேண்டுமோ அவை அனைத்தும் தருணுக்கு இருந்தது. இந்த புராஜெக்ட்டில் நானும் ஒரு அங்கம் என்பது மகிழ்ச்சியான ஒன்று. வசந்த், சரஸ், முரளி, உதய் என நாங்கள் அனைவரும் குடும்பமாக வேலை பார்த்தோம். விஜய் சித்தார்த்தின் இசை எனக்கு பிடித்திருந்தது. சரியான இசையைக் கொடுத்துள்ளார். லண்டனில் நாங்கள் மைனஸ் 4 டிகிரி குளிரில் படமாக்கினோம். யாருமே முகம் சுழிக்காமல் நடித்துக் கொடுத்தனர். தமிழ் சினிமாவுக்கு வேறு விதமான மேக்கிங்கை காட்ட வேண்டும் என்ற எண்ணம் எங்கள் அனைவருக்குமே இருந்தது. இதை சாத்தியமாக்கிய பாபி சார், சக்தி சாருக்கு நன்றி. உங்கள் ஆதரவை எதிர்பார்த்து இருக்கிறோம்.” என்றார்.

Related News

9048

’அமரன்’ படத்தை பார்த்து பாராட்டிய முதல்வர் மு.க.ஸ்டாலின்!
Thursday October-31 2024

ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷ்னல் சார்பில் நடிகர் கமல்ஹாசன் தயாரிப்பில், சிவகார்த்திகேயன் நடிப்பில், ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘அமரன்’...

பரபரப்பான சம்பவங்கள் பின்னணியில் உருவான ‘முரா’ பட டிரைலர் வெளியானது!
Thursday October-31 2024

‘கப்பேலா’ படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் முஹம்மது முஸ்தபா, இயக்கத்தில் உருவாகியிருக்கும் ஆக்‌ஷன் திரில்லர் படம் ‘முரா’...

ஃபேண்டஸி காதல் படமாக உருவாகியுள்ள ‘மெஸன்ஜர்’!
Wednesday October-30 2024

பி.வி.கே ஃபிலிம் ஃபேக்டரி (PVK FILM FACTORY) சார்பில் பா...

Recent Gallery