அம்மா மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்த நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன், தற்போது இயக்குநராக தொடர்ந்து தனது முத்திரையை பதித்து வருகிறார். தனது முதல் படமான ‘ஆரோகணம்’ மூலம் திரையுலகை திரும்பி பார்க்க வைத்தவர், ‘நெருங்கி வா முத்தமிடாதே’, ‘அம்மணி’, ‘ஹவுஸ் ஓனர்’ என தொடர்ந்து தான் இயக்கும் படங்கள் மூலம் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குநராக உருவெடுத்துள்ளார்.
தற்போது ஐந்தாவதாக ‘ஆர் யூ ஓகே பேபி?’ என்ற படத்தை லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கியுள்ளார். இளையராஜா இசையமைக்கும் இப்படத்தின் டீசர் தற்போது வெளியாகி மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
லட்சுமி ராமகிருஷ்ணன் தொகுத்து வழங்கிய தொலைக்காட்சி நிகழ்ச்சியான ‘சொல்வதெல்லாம் உண்மை’ நிகழ்ச்சியைப் போல் இப்படத்திலும், அவர் அதேபோன்று ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவது போலவும், நிகழ்ச்சியின் இயக்குநர் அவரை கடுமையான வார்த்தைகளினால் திட்டுவது போலவும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது. மேலும், படத்தில் இடம்பெற்றுள்ள பெண் கதாபாத்திரம் சில சர்ச்சையான வசனங்கள் பேசுவது போன்ற காட்சிகள் இருப்பதாலும், டீசர் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், ‘ஆர்யூ ஓகே பேபி?’ படத்தின் டீசர் மற்றும் படம் பற்றி பத்திரிகையாளர்களிடம் பகிர்ந்துக்கொண்ட இயக்குநரும், நடிகையுமான லட்சுமி ராமகிருஷ்ணன், “டீசரில் சொல்வதெல்லாம் உண்மை போன்ற நிகழ்ச்சி வருவதும், அதில் நானே நடித்திருப்பதாலும், என்னுடைய அனுபவத்தை படமாக எடுத்திருக்கிறேன், என்று நினைக்க வேண்டாம். என்னுடைய தனிப்பட்ட அனுபவத்தையோ அல்லது எனது துறையில் நான் எதிர்கொண்ட பிரச்சனைகள் பற்றி படம் பேசவில்லை, என்பதை இங்கே தெளிவுப்படுத்த விரும்புகிறேன். இது முழுக்க முழுக்க ஒரு முக்கியமான பிரச்சனை பற்றி பேசும் படம். தற்போது நாட்டில் நடக்கும் மிக முக்கியமான பிரச்சனையை பற்றி இந்த படத்தில் பேசியிருக்கிறேன், அது என்ன பிரச்சனை என்று இப்போதைக்கு சொல்ல முடியாது, டிரைலர் வெளியானால் அதை நீங்களே தெரிந்துக்கொள்வீர்கள். தற்போது வெளியாகியிருக்கும் டீசரில் அதை நாங்கள் சொல்லவில்லை, அதே சமயம் டீசர் பல கேள்விகளை எழுப்பியிருக்கும், அதற்கான முழு விவரங்கள் டிரைலரில் தெரிந்துவிடும்.
நம்முடைய பயணத்தில் பல விசயங்களை பார்க்கிறோம், ஒரு எழுத்தாளராக ஒரு கதாபாத்திரத்தை உருவாக்குவோம், அப்படி தான் இந்த கதை உருவானது. அதே சமயம், இந்த கதையை சொல்ல வேண்டும் என்று நினைத்தேன். அதே சமயம், ரொம்பவே யோசித்து தான் இந்த படத்தை இயக்கியிருக்கிறேன். எந்த இடத்திலும், நம்முடைய நிகழ்ச்சியை நியாயப்படுத்துவது போலவும், நம்ம கதைபோலவும் இருக்க கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன். முழு கவனமும் அந்த பிரச்சனையை பற்றி மட்டுமே இருக்க வேண்டும், அதே சமயம் இந்த பிரச்சனையை சட்டம், ஊடகங்கள் மற்றும் சமூகம் எப்படி பார்க்கிறது, எப்படி கையாளுகிறது என்பதையும் சொல்லியிருக்கிறேன்.
இந்த படத்தின் கதையை நான் இயக்குநர் விஜயிடம் தான் முதலில் சொன்னேன், அவர் உடனே உங்களுக்கு எந்த உதவியாக இருந்தாலும் செய்கிறேன் என்று சொன்னதோடு, எங்களுடன் இணைந்து படத்தை தயாரிக்கவும் செய்தார். நான் சிறியதாக பண்ணால் கூட, மேடம் நல்லா பண்ணுங்க, பெருசா பண்ணுங்க என்று சொல்வார். அவர் கொடுத்த ஊக்கத்தால் தான் பெரிய படமானது.
இந்த படத்தை தொடங்கும் போது முன்னணி நடிகர்கள் யாரும் இல்லை. மிக சாதாரணமான ஒரு படமாக தான் தொடங்கினேன். சமுத்திரக்கனி பிஸியான நடிகர், அவரை நடிக்க வைக்க வேண்டும் என்று முயற்சிக்கவில்லை. கதையை அவருக்கு அனுப்பி, அவருடைய கருத்தை கேட்கலாம் என்று நினைத்து தான் கதையை அனுப்பினேன், அவர் அதை ஒரே இரவில் படித்துவிட்டு, மறுநாள் என்னிடம் நான் நடிக்கிறேன், மேடம் என்று சொல்லிவிட்டார். நடிகை அபிராமியும் கதைக்காக தான் நடிக்க வந்தார். இயக்குநர் மிஷ்கின் சிறிய வேடத்தில் நடித்திருக்கிறார். அவரும் கதை பிடித்ததால், எந்த வேடமாக இருந்தாலும் செய்கிறேன், என்று சொன்னார். ரோபோ சங்கர், அனுபமா குமார், வினோதினி, நரேன், பவல் என மிகப்பெரிய நட்சத்திர கூட்டம் சேர்ந்து விட்டது. பவல் இந்த படத்தில் மிக சிறப்பாக நடித்திருக்கிறார். அதேபோல், முல்லை என்ற பெண்ணும் சிறப்பாக நடித்திருக்கிறார். அந்த பெண்ணை நான் ஒப்பந்தம் செய்யும் போது, எதற்கு புதுமுகம், பிரபலமான நடிகையை போடலாமே, என்றெல்லாம் சொன்னார்கள். ஆனால், எனக்கு அவர் மீது ஏதோ தனிப்பட்ட நம்பிக்கை இருந்ததோடு, அந்த கதாபாத்திரத்திற்கு இவர் பொருத்தமாக இருப்பார் என்று தோன்றியது, அதனால் யாருடைய கருத்தையும் காதில் வாங்கவில்லை. அதை சரி என்று அந்த பெண் நிரூபித்துவிட்டார். மிக அபாரமாக நடித்திருக்கிறார்.
படம் ரொம்பவே எமோஷனலாக இருக்கும். அதே சமயம், கமர்ஷியலாகவும் இருக்கும். எனது படங்கள் விருதுகள் பல வாங்குகிறது, பத்திரிகையாளர்கள் பாராட்டுகிறார்கள். ஆனால், அவை கமர்ஷியலாக வெற்றி பெறுகிறதா? என்ற சந்தேகம் எனக்கே இருந்தது. அந்த சந்தேகத்தை இந்த படம் சரி செய்யும் என்று நினைக்கிறேன். நிச்சயம் படம் அழுத்தமான கதையம்சம் கொண்ட படமாக மட்டும் இன்றி முழுமையான கமர்ஷியலாகவும் இருக்கும்.
இளையராஜா சார் இசை படத்திற்கு மிகப்பெரிய பலாமாக இருக்கும். அவருடன் இணைந்து பணியாற்றியது எனக்கு மறக்க முடியாத அனுபவம். அவருடைய தீவிர ரசிகை நான். படத்திற்கு பின்னணி இசை அமைக்கும் போது என்னை பக்கத்தில் உட்கார வைத்து அவர் பணியாற்றிய விதம், குறிப்பிட்ட நேரத்திற்குள் வேலையை முடிப்பது, என்று அவர்களுடைய அந்த நடைமுறையே புது அனுபவமாக இருந்தது.” என்றார்.
படத்தை ராமகிருஷ்ணன் உடன் இணைந்து தயாரித்திருக்கும் இயக்குநர் விஜய் படம் பற்றி பேசுகையில், “லட்சுமி மேடம் இந்த கதையை என்னிடம் சொல்லும் போது இது சொல்ல வேண்டிய பிரச்சனை தான் என்பதை புரிந்துக்கொண்டேன். இப்போது அதிகமாக இந்த பிரச்சனை நடக்கிறது, ஆனால் இதுவரை யாரும் இதை திரைப்படங்களில் சொல்லவில்லை. மேடம், இதை நல்ல கமர்ஷியல் படமாகவும், எமோஷ்னலான படமாகவும் இயக்கி இருக்காங்க. என்னுடைய படத்தில் தான் மேடம் அறிமுகம். சினிமாவை பற்றி எதுவும் தெரியாது, அப்போதே, நான் எடுக்கும் காட்சிகளை பார்த்துவிட்டு என்னிடம் நிறைய சந்தேகங்கள் கேட்பாங்க, எதற்கு இவங்க இதெல்லாம் கேக்குறாங்க, என்று நான் யோசிப்பேன். அதன் பிறகு அவங்க இயக்கிய ஆரோகணம் படத்தை பார்த்த பிறகு தான் அவங்களுக்குள் ஒரு இயக்குநர் இருந்ததை நான் புறிந்துக்கொண்டேன். அவங்க இயக்கிய அனைத்து படங்களும் பேசப்பட்டது. இந்த படம் அதிகமாக பேசப்படும். படத்தை நான் மட்டும் அல்ல, இயக்குநர் மிஷ்கின் உள்ளிட்ட சிலர் பார்த்துட்டாங்க, அனைவரும் படத்தையும், கதையை மேடம் கையாண்ட விதத்தையும் பற்றி பாராட்டினாங்க. படம் வெளியானால் நிச்சயம் நீங்களும் லட்சுமி ராமகிருஷ்ணன் மேடமை பாராட்டுவீங்க.” என்றார்.
டி ஸ்டுடியோஸ் சார்பில் ராமகிருஷ்ணன் தயாரிக்க, மங்கி கிரியேட்டிவ்லேப்ஸ் சார்பில் இயக்குநர் விஜய் இணை தயாரிப்பாளராக பணியாற்றியுள்ளார். இளையராஜா இசையமைக்க, கிருஷ்ண சேகர் டி.எஸ் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். சி.எஸ்.பிரேம் படத்தொகுப்பு செய்ய, தபஸ் நாயக் ஒலி வடிமைப்பாளராக பணியாற்றியுள்ளார்.
சமுத்திரக்கனி, அபிராமி, இயக்குநர் மிஷ்கின், முல்லை அரசி, வினோதினி, நரேன், ரோபோ சங்கர், பவல் நவகீதன், அனுபமா குமார், கலைராணி உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
நடிகர் விராட் கர்ணா - அபிஷேக் நாமா- கிஷோர் அன்னபு ரெட்டி - NIK ஸ்டூடியோஸ் - அபிஷேக் பிக்சர்ஸ் கூட்டணியில் உருவாகும் பான் இந்திய திரைப்படமான ' நாக பந்தம் ' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை முன்னணி நட்சத்திர நடிகரான ராணா டகுபதி வெளியிட்டார்...
விவசாயத்தில் சாதனை புரிபவர்களையும், அதற்கு உறுதுணையாக இருந்து பங்களிப்பவர்களையும் கெளரவப்படுத்தி அங்கீகரிக்கும் உழவன் ஃபவுண்டேஷனின் ‘உழவர் விருதுகள் 2025’ விழா கோலகலமாக சென்னையில் நடைபெற்றது...
தமிழ் சினிமாவில் புதிய வரலாற்றை படைக்கும் வகையில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘அகத்தியா’...