Latest News :

விமர்சனங்களால் ஒரு படம் மிகப்பெரிய வெற்றியடையும் என்பதற்கு ‘போர் தொழில்’ உதாரணம்! - இயக்குநர் விக்னேஷ் ராஜா நெகிழ்ச்சி
Friday June-30 2023

அறிமுக இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில், சரத்குமார், அசோக் செல்வன், நிகிலா விமல் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்த ‘போர் தொழில்’ சில வாரங்களுக்கு முன்பு திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

 

படம் வெளியாகி 20 நாட்களுக்கு மேல் ஆகியும், இன்று வரை பல திரையரங்குகளில் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கும் ‘போர் தொழில்’ இந்த ஆண்டு மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படங்களின் பட்டியலில் முக்கிய இடத்தை பிடித்திருக்கிறது. தமிழகத்தில் மட்டும் இன்றி இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட பல வெளிநாடுகளிலும் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ள இப்படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில், படக்குழுவினர் இன்று சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்தனர். 

 

நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் விக்னேஷ் ராஜா, “என்னோட முதல் நன்றி தயாரிப்பாளர்களுக்கு  தான். இந்த கதையை கேட்டு இப்படத்தை தயாரித்ததற்கு நன்றி. அப்ளாஸ் படம் ஒப்பந்தமானவுடன் படத்தை கமர்ஷியல் ஆக்குகிறோம் என கெடுக்காமல், நீங்கள் நினைத்ததை..  எழுதியதை... எடுங்கள் என்றார்கள். அறிமுக இயக்குநருக்கு இது எவ்வளவு பெரிய வரமென்பது உங்களுக்கு புரியும். யுவராஜ் பம்பரமாக சுழன்று வேலை செய்தார். சக்திவேல் சார் ஒவ்வொரு படத்தையும் பக்காவாக டிசைன் செய்கிறார். அவருக்கு நன்றி. தீபா மேடமுக்கு நன்றி. எடிட்டர் ஶ்ரீஜித் சாரங் மிக அட்டகாசமாக செய்துள்ளார். இசையில் ஜேக்ஸ் பிஜாய் மிரட்டியிருந்தார். அவர் தான் அடம்பிடித்து படத்தின் கடைசியில் பாட்டு வைத்தார். இப்போது அந்த பாட்டில்லாமல் அந்தப்படத்தை நினைக்க முடியவில்லை. சவுண்டிங்கில் மிரட்டி விட்டார். படம் முழுக்க அதன் உணர்வை ரசிகனிடம் கொண்டு சேர்ப்பது இசையும் சவுண்டும் தான். அதை மிகச்சிறப்பாக செய்தார்கள். இந்தப்படத்தில் உழைத்த அத்தனை பேரும் கடுமையாக உழைத்துள்ளார்கள். படத்தை 2010 ல் நடப்பதாக எடுத்தோம். அதற்கான சிஜி படம் முழுக்க இருக்கிறது. உதவி இயக்குநர்கள், உதவி ஒளிப்பதிவாளர்கள் எல்லோருக்கும் நன்றி. ஆல்ஃபிரட்டையும் என்னையும் தனியாக மனதில் பிரித்து பார்க்க முடியவில்லை. நாங்கள் இருவருமே ஒரே ஆள் தான். இப்படி ஒரு ரைட்டர் கிடைப்பது வரம். நிகிலா விமல் கேரக்டர் அவர் கதையில் இல்லாத பலத்தை நடிப்பில் கொண்டு வந்தார்.  அசோக் செல்வன்  காலேஜ் படிக்கும் போதிருந்து தெரியும், அப்போதே யாராவது குறும்படம் எடுத்தால் ஓடிப்போய் நடிப்பான். அப்போது அவன் ஏற்படுத்திய நெட்வொர்க் இப்போது எல்லோரும் இயக்குநர்களாக இருக்கிறார்கள். இன்னும் பல இயக்குநர்களை அறிமுகப்படுத்துவான். சரத்குமார் சாரை நன்றாக நடிக்க வைத்துள்ளேன் என்கிறார்கள். ஆனால் 150 படத்தில் நடித்தவருக்கு என்ன சொல்ல முடியும்... இந்தப்படத்தில் செய்தது எல்லாமே அவரே செய்தது தான். என்னை விட அவருக்கு தான் படத்தின் மீது நம்பிக்கை இருந்தது. சரத்பாபு சார் முதலில் நடிப்பாரா ?, அவருக்கு புரியுமா? என்று பயமாக இருந்தது. ஆனால் அவர் மிக அப்டேட்டாக இருந்தார். அவர் கேட்ட கேள்வியால் படத்தில் சில பகுதிகளை மாற்றி எழுதினோம். அவர் படம் பார்க்க முடியாதது வருத்தம். இறுதியாக ஊடகங்களுக்கு ரெண்டு நாள் முன்னரே படத்தை போட்டுக்காட்டலாம் என்ற போது... யாராவது டிவிஸ்ட்டை உடைத்து விட்டால்..!  என்ற பயம் வந்தது. சக்தி சார் அப்படி செய்ய மாட்டார்கள் என்றார். அதேபோல்  ஒருவர் கூட டிவிஸ்ட்டை உடைக்காமல், படம் பிரீமியர் ஆனவுடனே இணையத்தில் படத்தை பற்றி புகழ்ந்து எழுத ஆரம்பித்து விட்டார்கள். விளம்பரம் செய்யாத ஒரு படம், பத்திரிக்கை விமர்சனங்களால்.. ரசிகர்களால் ஓடும் என்பதற்கு இந்தப்படம் உதாரணம். அனைவருக்கும் நன்றி” என்றார்.

 

Director Vignesh Raja

 

நடிகர் அசோக் செல்வன் பேசுகையில், ”இது சக்ஸஸ் மீட் என்பதை விட தேங்ஸ் மீட் என்று தான் சொல்ல வேண்டும். மக்கள் இப்படத்தை தங்கள் படமாகக் கொண்டாடினார்கள். ஊடகங்களுக்கு ரெண்டு நாள் முன்னரே படத்தைப் போட்டுக்காட்டினோம். யாராவது டிவிஸ்ட்டை உடைத்து விடுவார்களோ..! என்ற பயம் இருந்தது. ஆனால் ஒருவர் கூட டிவிஸ்ட்டை உடைக்காமல், பாஸிட்டிவான விமர்சனம் தந்தார்கள். உங்கள் எல்லோர்க்கும் நன்றி. கடந்த வருடம் நிறையப் படங்கள் செய்தேன். படம் நல்ல படமென்றாலும் பாக்ஸ் ஆபீஸ் ஹிட்டாகவில்லை. எனக்கே என் மீது சந்தேகம் வந்தது. நல்ல படம் செய்கிறோமா..? என கேள்வி வந்தது. அதற்கெல்லாம் பதிலாக இந்தப்படம் வந்துள்ளது. எல்லோரும் நல்ல கதைகளைத் தேர்ந்தெடுக்கிறீர்கள் என்று சொல்லும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது. சரத்குமாருடன் வேலை பார்த்தது மிக மகிழ்ச்சியான அனுபவமாக இருந்தது. விக்னேஷ் ராஜாவை அனைவரும் பாராட்டுவதைக் கேட்கும்போது, நண்பனாக மிக மகிழ்ச்சியாக இருக்கிறது. அவனோடு குறும்பட காலத்திலிருந்து பழகி வருகிறேன், தான் என்ன எடுக்கிறோம் என்பதில் தெளிவாக இருப்பான். அவன் இன்னும் உயரம் செல்வான். தயாரிப்பாளருக்கு இப்படி ஒரு படம் எடுத்ததற்கு நன்றி. ஒரு வசனம் சொல்லி முடிக்கிறேன்,  இந்தப்படத்தில் ஒரு வசனம் வரும் “உன் வேலையைச் சரியா செஞ்சா மரியாதை தானா வரும், அனைவருக்கும் நன்றி” என்றார்.

 

Ashok Selvan

 

நடிகர் சரத்குமார் பேசுகையில், ”விக்னேஷ் ஒரு நல்ல இயக்குநராக வருவார் என்று முன்பே சொல்லியிருந்தேன். அதை விடப் பெரிய இயக்குநராக வந்து விட்டார். மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது, இயக்குநர் அனைவரையும் செதுக்கி இருந்தார். தனக்குத் தேவையான கதாபாத்திரத்தை அப்படியே கொண்டு வந்துள்ளார். இயக்குநர் ஒரு ஹாலிவுட் தரத்தை இப்படத்திற்குக் கொடுத்துள்ளார். இந்தப் படமும் ஹாலிவுட் பட வெற்றி போலப் பல நாடுகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்தப் படம் இன்றும் பல திரையரங்கில்  வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. கண்டிப்பாக இது ஒரு புதிய சாதனை படைக்கும். விக்னேஷ் நமக்குக் கிடைத்த ஒரு பொக்கிஷம். அசோக் ஒரு நல்ல நடிகர் மற்றும் நடிகை நிகிலா அருமையாகத் தனது கதாபாத்திரத்தை நடித்துள்ளார். படக்குழு அனைவருக்கும் நன்றி. தயாரிப்பாளர் இந்த கதையை நம்பி படமாக்கியதற்கு நன்றி. ஒளிப்பதிவாளர் மிகவும் அற்புதமாகப் பணி செய்துள்ளார். ஒரு நல்ல படத்தில் நடித்த திருப்தி எனக்குக் கிடைத்துள்ளது. படக்குழு அனைவருக்கும் நன்றி. இதையெல்லாம் தாண்டி பத்திரிக்கையாளர்கள் உங்களுக்குத்தான் மிகவும் நன்றி கூற வேண்டும். உங்களின் கருத்துதான் இந்த படத்தை மக்களிடம் கொண்டு சேர்த்தது. இந்த வெற்றிக்கு நீங்கள் தான் காரணம் நன்றி” என்றார்.

 

Sarathkumar

 

நடிகை நிகிலா விமல் பேசுகையில், ”இந்தப் படத்தில் நடித்தது மிகவும் பெருமையாக இருந்தது, இந்தப் படத்தின் மூலம் பலருக்கு நான் அறிமுகமாகியுள்ளேன், படத்தின் உதவி இயக்குநர்கள் அனைவருக்கும் நன்றி , இந்தப் படத்தில் நடிக்கும்போது எனக்குத் தூக்கமே இல்லை. படம் முழுக்க முழுக்க இரவு நேரத்தில் தான் இருந்தது, எனக்கு இது ஒரு புது அனுபவமாக இருந்தது. அசோக் மற்றும் சரத்குமார் சாருக்கு மிகவும் நன்றி. படப்பிடிப்பில் எனக்கு மிகவும் ஆதரவாக இருந்தார்கள், இந்த கதாபாத்திரத்தை எழுதிய இயக்குநருக்கு நன்றி, E4 என்டர்டெயின்மென்ட் இன் முதல் படத்தில் நான் இருந்தேன். அதே போல் இந்தப் படமும் வெற்றி என்பது மகிழ்ச்சியாக இருக்கிறது, ஊடக பத்திரிக்கையாளர் அனைவருக்கும் என் நன்றி” என்றார்.

 

அப்ளாஸ் என்டர்டெயின்மென்ட்  சுனில் பேசுகையில், ”போர் தொழில் டிரெய்லர் வந்தபோது இந்தப்படம் மிகப்பெரிய வெற்றி பெறும் எனச் சொன்னேன். 30 நாட்களைக் கடந்து இப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது. விக்னேஷ் ராஜா மிக அற்புதமான படத்தைத் தந்துள்ளார். அசோக் செல்வன், சரத்குமார் நல்ல நடிப்பைத் தந்துள்ளார்கள். இது தமிழில் எங்களுக்கு அறிமுகப்படம். ஒரு நல்ல தரமான படத்தைத் தந்தது மகிழ்ச்சி. உங்கள் ஆதரவால் தான் இந்தப்படம் பெரிய அளவில் வரவேற்பைப் பெற்றது.  தொடர்ந்து உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி.” என்றார்.

 

சக்தி ஃபிலிம் ஃபேக்டரி சக்திவேலன் பேசுகையில், “இந்தப் படம் எங்களுக்கான வெற்றி மட்டும் இல்லை, தமிழ் சினிமாவிற்கு ஒரு மிகப்பெரிய நம்பிக்கையைத் தந்துள்ளது, நல்ல படத்திற்கு ரசிகர்கள் கண்டிப்பாக ஆதரவு தருவார்கள். அது போல இந்த படத்திற்கும் ஆதரவு கொடுத்தீர்கள். நன்றி, படத்திற்கான வரவேற்பு நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே சென்றது, இது ஒரு சாதாரண விஷயமில்லை, அது மட்டுமல்ல.. திரையரங்க உரிமையாளர்கள் அனைவரும் எங்களுக்கு நன்றி கூறியது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது , இயக்குநர் ஒரு அசாத்திய வெற்றியைக் கொடுத்து விட்டு அமைதியாக அமர்ந்துள்ளார், இவர் கண்டிப்பாக ஒரு சிறந்த இயக்குநராக வருவார் என்பதில் ஆச்சரியம் இல்லை , தயாரிப்பாளருக்கு மிகப்பெரிய நன்றி. அவருக்குத் தேவையான வெற்றியை இப்படம் கொடுத்துள்ளது, பத்திரிக்கையாளர் அனைவருக்கும் நன்றி.” என்றார்.

 

Por Thozhil Success Meet

 

தயாரிப்பாளர்களில் ஒருவரான E4 எக்ஸ்ப்ரிமெண்ட்ஸ் எல் எல் பி முகேஷ் R மேத்தா பேசுகையில், ”உங்கள் அனைவருக்கும் நன்றி, ரசிகர்களிடம் கொண்டு சேர்த்தது நீங்கள் தான். அடுத்ததாக ரசிகர்கள் அவர்கள் படத்தின் டிவிஸ்ட்டை உடைக்காமல் படத்தைப் பாராட்டி, வரவேற்பு தந்தார்கள். அசோக் செல்வன், சரத்குமார் அவர்களின் கதாபாத்திரத்தைப் புரிந்து அட்டகாசமாக நடித்துள்ளனர். விக்னேஷ் ராஜா மிக அற்புதமாக இப்படத்தை இயக்கியுள்ளார். ஓடிடி இருந்தாலும்  நல்ல கதைகள் கண்டிப்பாக ஓடும், மக்கள் திரையரங்கத்திற்கு வருவார்கள் என்பதை இப்படம் நிரூபித்துள்ளது. தொடர்ந்து இது மாதிரி நல்ல படங்களைத் தருவோம் நன்றி.” என்றார்.

 

ஒளிப்பதிவாளர் கலைச் செல்வன் பேசுகையில், ”நான் பாலு மகேந்திரா சாரின் கல்லூரியில் படித்தேன், அவர் எப்போதும் சொல்வது ஒரு வார்த்தை தான், 'படத்தின் ஸ்கிரிப்ட் தான் படத்தைத் தாங்கும்' என்று சொல்வார், அது எனக்கு மிகவும் உதவியாக இருந்தது, விக்னேஷ் தனக்கு எது தேவை என்பதில் தெளிவாக இருந்தார், அவரின் பார்வை தான் இந்தப்படம், பத்திரிக்கையாளர்கள் அனைவருக்கும் நன்றி.” என்றார்.

 

விநியோகஸ்தர் தீபா பேசுகையில், “எனக்கு முகேஷ், அசோக் செல்வனைப் பல காலமாகத் தெரியும். இந்தப்படம் எங்களிடம் வந்த போதே, இந்தப்படம் கண்டிப்பாகப் பெரிய வெற்றி பெறும் எனத் தெரியும். அப்ளாஸ் என்டர்டெயின்மென்ட் தொடர்ந்து நல்ல படங்களைத் தந்து வருகிறார்கள். இந்தப்படத்தைச் சின்ன சின்ன நாடுகளில் கூட எங்களால் விநியோகம் செய்ய முடிந்தது. படத்திற்கான வரவேற்பு எல்லா நாடுகளிலும் இருந்தது. இப்படம் இன்னும் யூகே வில் ஹவுஸ்ஃபுல்லாக ஓடிக்கொண்டிருக்கிறது. அசோக் செல்வன், சரத்குமார் இருவரும் தங்கள் முழு ஒத்துழைப்பைத் தந்தார்கள். தொடர்ந்து படத்தை புரமோட் செய்தார்கள். நீங்கள் தந்த ஆதரவு மிகப்பெரியது. தொடர்ந்து  நல்ல படங்களைத் தருவோம் நன்றி.” என்றார்.

 

நிகழ்ச்சியின் இறுதியில் படத்தில் பணியாற்றிய நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது.

Related News

9067

’அமரன்’ படத்தை பார்த்து பாராட்டிய முதல்வர் மு.க.ஸ்டாலின்!
Thursday October-31 2024

ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷ்னல் சார்பில் நடிகர் கமல்ஹாசன் தயாரிப்பில், சிவகார்த்திகேயன் நடிப்பில், ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘அமரன்’...

பரபரப்பான சம்பவங்கள் பின்னணியில் உருவான ‘முரா’ பட டிரைலர் வெளியானது!
Thursday October-31 2024

‘கப்பேலா’ படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் முஹம்மது முஸ்தபா, இயக்கத்தில் உருவாகியிருக்கும் ஆக்‌ஷன் திரில்லர் படம் ‘முரா’...

ஃபேண்டஸி காதல் படமாக உருவாகியுள்ள ‘மெஸன்ஜர்’!
Wednesday October-30 2024

பி.வி.கே ஃபிலிம் ஃபேக்டரி (PVK FILM FACTORY) சார்பில் பா...

Recent Gallery