’பிச்சைக்காரன் 2’ படத்தின் மிகப்பெரிய வெற்றியை தொடர்ந்து விஜய் ஆண்டனி நடிப்பில் அடுத்து வெளியாக இருக்கும் படம் ‘கொலை’. ‘விடியும் முன்’ படம் மூலம் தமிழ்த் திரையுலகை திரும்பி பார்க்க வைத்த இயக்குநர் பாலாஜி குமார் இயக்கியிருக்கும் இப்படத்தின் முதல் அறிவிப்பு தொடங்கி டிரைலர் வரை மிக வித்தியாசமாக இருந்ததோடு, அனைத்து விசயங்களும் புதியதாகவும், ஈர்க்கும் வகையிலும் இருந்தது. இதனால் படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
விஜய் ஆண்டனியின் ‘பிச்சைக்காரன் 2’ படத்திற்கு கிடைத்த வரவேற்பு மற்றும் ‘கொலை’ படத்தின் டிரைலர் உருவாக்கிய தாக்கம் ஆகியவற்றால் ரசிகர்கள் அதிகம் எதிர்பார்க்கும் படங்களின் வரிசையில் முதல் இடத்தில் இருக்கும் இப்படம், திரைப்பட மேக்கிங்கின் பெஞ்ச்மார்க்காக இருக்கும், என்று படக்குழுவினர் பெருமிதாக கூறியிருப்பது படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பை பல மடங்கு அதிகரிக்கச் செய்துள்ளது.
வரும் ஜூலை 21 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ள ‘கொலை’ படம் பற்றி இயக்குநர் பாலாஜி குமார் பத்திரிகையாளர்களிடம் கூறுகையில், “’கொலை’ படத்தின் கதையை எழுதுவதற்கு ஒரு வருடம் எடுத்துக்கொண்டேன், அதேபோல் இந்த படத்தின் கிராபிக்ஸ் பணிகளுக்கும் அதிக நாட்கள் தேவைப்பட்டது. அதனால் தான் படம் நீண்ட நாட்களை எடுத்துக்கொண்டது. 1923 ஆம் ஆண்டு நடந்த ஒரு கொலை சம்பவத்தை படித்தேன். அந்த வழக்கு முடிக்கப்படவில்லை. ஆனால், பல எழுத்தாளர்கள் அந்த கொலை வழக்கு பற்றி எழுதியிருந்தார்கள். அப்போது அவர்களின் எண்ணத்தை வைத்து, அந்த வழக்கை முடிப்பது போல் எழுதியிருந்தார்கள். அவற்றை எல்லாம் படித்த போது தான், என்னுடைய ஐடியா மூலம் இந்த வழக்கை முடித்தால் எப்படி இருக்கும் என்று யோசித்தேன், அப்படி உருவானது தான் கொலை கதை.
இந்த கதை நன்றாக இருக்கிறது, விஜய் ஆண்டனிக்கு பொருத்தமாக இருக்கும், அவரிடம் கதை சொல்லுங்கள் என்று என் நண்பர் கூறினார். அவரும் தனித்துவமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பதால், அவரை எனக்கு பிடிக்கும். அதன்படி விஜய் ஆண்டனியிடம் இந்த கதையை நான்கரை மணி நேரத்தில் சொன்னேன். ஆனால், அவர் அரை மணி நேரத்திலேயே இந்த கதையை புரிந்துக்கொண்டார். அவர் சிபாரிசு செய்த தயாரிப்பு நிறுவனம் தான் இன்பினிட்டி. அவர்களுக்கு மிகப்பெரிய நன்றி சொல்ல வேண்டும். நான் கேட்டதை எல்லாம் புரிந்துக்கொண்டு தாரளமாக செலவு செய்தார்கள். அதனால் தான் படம் தரமாக வந்திருக்கிறது.
பொதுவாக மர்டர் மிஸ்டரி ஜானர் படங்கள் அனைத்திலும் ஒரு டெம்ப்ளெட் இருக்கும். பல திருப்புமுனைகள், குழப்பங்கள் என அனைத்தும் இருக்கும், அதை வித்தியாசமான முறையிலும் சொல்வார்கள், ஆனால் இறுதியில் கொலையின் பின்னணி மற்றும் ரகசியம் துப்பறிவாளன் மூலமாக தான் தெரிய வரும். ஆனால், அந்த பாணியை உடைக்க வேண்டும் என்று நான் விரும்பினேன், அதற்கு ஏற்றவாறு திரைக்கதை அமைத்திருப்பதும் புதிதாக இருக்கும்.
படம் ரொம்ப ஸ்டைலிஷாகவும், மேக்கிங் வித்தியாசமாகவும் இருப்பதால் ஏ செண்டர் ரசிகர்களுக்கான படமாக இருக்கும் என்று நினைப்பது தவறு. விஜய் ஆண்டனியே என்னிடம், நான் சி செண்டர் ரசிகன் சார், எனக்கு படம் பிடிக்குது, என்றார். தற்போதைய காலக்கட்டத்தில் ரசிகர்களில் ஏ,பி,சி என்ற பிரிவே இல்லை. எல்லோரும் அனைத்துவிதமான படங்களையும் பார்க்கிறார்கள். மொழி தெரியவில்லை என்றாலும், ஒரு திரைப்படத்தின் விஷுவலை ரசிக்கிறார்கள். அப்படி தான் ‘கொலை’ படமும் இருக்கும், விஷுவலாக அனைத்து தரப்பினரையும் படம் நிச்சயம் ஈர்க்கும்.” என்றார்.
தயாரிப்பாளர் தனஞ்செயன் படம் பற்றி கூறுகையில், “இந்த படம் காலதாமதம் ஆனதற்கு படத்தின் மேக்கிங் தான் காரணம். ஒவ்வொரு காட்சியையும் இயக்குநர் பாலாஜி குமார் செதுக்கியிருக்கிறார். நாங்கள் அவரிடம் ஒவ்வொரு முறையும் படம் எப்போது முடியும் என்று கேட்கும் போதெல்லாம், அவர் ஒரு காட்சியை காட்டுவார், அதை பார்க்கும் போது பிரமிப்பாக இருக்கும். எடுக்கும் போது அந்த காட்சி சாதாரணமாக தான் இருக்கும், ஆனால் அதை இயக்குநர் மெருகேற்றிய விதம் வேற மாதிரி இருக்கும். அது தான் கிராபிக்ஸ். கிராபிக்ஸை எப்படி பயன்படுத்துவது, அதன் மூலம் ஒரு காட்சியை எப்படி மெருகேற்றுவது என்று பல விஷயங்களை இந்த படம் மூலம் நாங்கள் அவரிடம் இருந்து கற்றுக்கொண்டோம். நிச்சயம் படம் மேக்கிங்கில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவதோடு, பிலிம் மேக்கிங்கில் கொலை ஒரு பெஞ்ச்மார்க் படமாக இருக்கும்.” என்றார்.
‘கொலை’ படத்தில் நாயகியாக நடித்திருக்கும் மீனாட்சி செளத்ரி, தற்போது தெலுங்கில் முன்னணி நடிகையாக உயர்ந்திருக்கிறார். இந்த படம் தான் அவருக்கு முதல் படம் என்றாலும், தற்போது தெலுங்கில் பல முன்னணி ஹீரோக்களுடன் ஜோடியாக நடித்து வருகிறார். அவருடைய கதாபாத்திரமும், அதில் அவர் நடித்த விதமும் படத்தின் மற்றொரு ஹைலைட்டாக இருக்குமாம்.
சாதாரண பெண்ணாக இருக்க வேண்டும், அதே சமயம் அவர் அலங்காரம் செய்துக்கொண்டு வந்தால் பேரழகியாக இருக்க வேண்டும், என்று நினைத்து தான் இயக்குநர் கதாநாயகியை தேடினாராம். அவர் நினைத்தது போலவே மீனாட்சி இருந்ததால் அவரை நடிக்க வைத்திருக்கிறார். அவர் நினைத்தது போல, ஒவ்வொரு விஷயத்தையும் கேட்டு புரிந்துக்கொண்டு நடித்த மீனாட்சி இப்போது பெரிய நடிகையாக உயர்ந்திருக்கிறார்.
விஜய் ஆண்டனி, மீனாட்சி செளத்ரி, ரித்திகா சிங் மற்றும் சித்தார்த் சங்கர் ஆகிய நான்கு பேரை சுற்றி நடக்கும் இந்த கதையில் ராதிகா சரத்குமார், முரளி சர்மா, ஜான் விஜய் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.
இன்பினிட்டி பிலிம் அட்வெஞ்சர்ஸ் மற்றும் லோட்டஸ் பிக்சர்ஸ் சார்பில் கமல் போரா, பங்கஜ் போரா, லைதா தனஞ்செயன், ஆர்.வி.எஸ்.அசோக் குமார், டான்ஸ்ரீ துரைசிங்கம் பிள்ளை, பி.பிரதீப், விக்ரம் குமார்.எஸ், சித்தார்த் சங்கர் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைத்திருக்கிறார். சிவகுமார் விஜயன் ஒளிப்பதிவு செய்ய, செல்வா ஆர்.கே படத்தொகுப்பு செய்திருக்கிறார். சுகுமார் நல்லகொண்டா ஒலி வடிவமைப்பு பணியை கவனித்துள்ளார்.
இசை, ஒளிப்பதிவு, ஒலி வடிவமைப்பு உள்ளிட்ட தொழில்நுட்பம் மற்றும் வித்தியாசமான திரைக்கதை வடிவமைப்பு ஆகியவற்றின் மூலம் ரசிகர்களுக்கு புதுவித அனுபவத்தை கொடுக்க கூடிய வகையில் உருவாகியுள்ள ‘கொலை’ விஜய் ஆண்டனிக்கு மற்றொரு பிளாக்பஸ்டர் வெற்றியாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷ்னல் சார்பில் நடிகர் கமல்ஹாசன் தயாரிப்பில், சிவகார்த்திகேயன் நடிப்பில், ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘அமரன்’...
‘கப்பேலா’ படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் முஹம்மது முஸ்தபா, இயக்கத்தில் உருவாகியிருக்கும் ஆக்ஷன் திரில்லர் படம் ‘முரா’...
பி.வி.கே ஃபிலிம் ஃபேக்டரி (PVK FILM FACTORY) சார்பில் பா...