Latest News :

புதிய தயாரிப்பாளர்களுக்கு கவுன்சிலிங்! - ‘கடத்தல்’ இசை வெளியீட்டு விழாவில் தேனாண்டாள் முரளி தகவல்
Wednesday July-05 2023

‘காத்தவராயன்’, ‘காந்தர்வன்’, ‘இ.பி.கோ 302’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் சங்கை துரை இயக்கத்தில், டி.நிர்மலா தேவி நல்லாசியுடன் பி.என்.பி கிரியேசன்ஸ் மற்றும் பிரைம் அசோசியேட்ஸ் இணைந்து வழங்க, செளத் இண்டியன் புரொடக்‌ஷன்ஸ் தயாரித்துள்ள படம் ‘கடத்தல்’.

 

இந்த படத்தில் எம்.ஆர்.தாமோதர் கதாநாயகனாக அறிமுகமாக, கதாநாயகிகளாக விதிஷா மற்றும் ரியா நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் சுதா, நிழல்கள் ரவி, சிங்கம் புலி, தமிழ்வாணன், ஆர்.ஜெயச்சந்திரன், ரவிகாந்த், ஆதி வெங்கடாச்சலம் ,க.சபாபதி, சந்தோஷ், மோகன் ரெட்டி, மாஸ்டர் தருண், பிரவீன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

 

ராஜ்செல்வா ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு எம்.ஸ்ரீகாந்த் இசையமைத்திருக்கிறார். பாவலர் எழில் வாணன், இலக்கியன், சக்தி பெருமாள் ஆகியோர் பாடல்கள் எழுத, ஏ.எல்.ரமேஷ் படத்தொகுப்பு செய்திருக்கிறார்.

 

இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று மாலை சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் தேனாண்டாள் முரளி, விநியோகஸ்தர் சங்க தலைவர் கே.ராஜன், இயக்குநர் பேரரசு உள்ளிட்டவர்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக்கொண்டார்கள்.

 

நிகழ்ச்சியில் பேசிய தேனாண்டாள் முரளி, “அனைவருக்கும் வணக்கம், கடத்தல் இயக்குநர் சலங்கை துரை நிறையப் போராடி இந்தப்படத்தை எடுத்ததாகச் சொன்னார்கள், இந்தக்காலத்தில் படமெடுப்பது மிகக்கடினமாகத் தான் இருக்கிறது. தயாரிப்பாளர் சங்கத்தில் பல வேலைகளை முன்னெடுத்து வருகிறோம். புதுத் தயாரிப்பாளர்களுக்கு வாராவாரம் எங்கள் சங்கத்தில் கவுன்சிலிங்க் கொடுத்து வருகிறோம். சினிமா ஒரு அழகான கலை, நிறையத் தயாரிப்பாளர்கள் வர வேண்டும், தயாரிப்பாளருக்குப் பல வழிகாட்டுதல்களை ஏற்படுத்தி வருகிறோம். சினிமா தியேட்டர்களில் இருப்பது தான் என்றும் நல்லது. சிறு முதலீட்டுப் படங்களுக்கு ஆதரவு தாருங்கள் மக்களிடம் முடிவை விடுங்கள் என்று உங்களிடம் கேட்டுக்கொள்கிறேன். இந்தப்படம் வெற்றி பெற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

 

புதிய தயாரிப்பாளர்களுக்குத் தயாரிப்பாளர்கள் சங்கம் இந்த அளவு உதவிகரமாக இருப்பது மகிழ்ச்சியாக உள்ளது , சிறு முதலீட்டுப் படங்களுக்குப் பல ஆதரவு இருப்பதாக இதிலிருந்து தெரிகிறது , இதுவே படத்தின் வெற்றியைப் பிரதிபலிக்கிறது , சிறு படங்களுக்குப் பத்திரிக்கையாளர்கள் தான் ஆதரவு தர வேண்டும் கண்டிப்பாக தியேட்டருக்கு இந்தப் படத்தில் நல்ல வரவேற்பு இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம் நன்றி.” என்றார்.

 

இயக்குநர் பேரரசு பேசுகையில், “கடத்தல் இது என்ன கடத்தல்,  ஆள் கடத்தலா? எம் எல் ஏ கடத்தலா?. உலகிலேயே மிகப்பெரிய கடத்தல் நாள் கடத்தல் தான். நாம் அனைவரும் நாளைக் கடத்திக்கொண்டிருக்கிறோம். சில டைட்டில்களை எப்படி விட்டு வைத்தார்கள் என்று தோன்றும் அப்படியான டைட்டில் இந்தக் கடத்தல். இந்த தயாரிப்பாளருக்கு வாழ்த்துக்கள். செல்வாக்கால் படம் வெற்றி பெறுவதாகச் சொன்னார்கள். அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி படங்களை வெற்றிப்படமாக்கலாம் ஆனால் அந்த வெற்றி நிலைக்காது. எவர்கிரீன் வெற்றி என ஒன்று உண்டு, 10 வருடம் கழித்துப் படத்தின் டைட்டில் சொன்னால் நடித்த நடிகர்கள், படத்தின் கதை, சீன்  எல்லாவற்றையும் மக்கள் சொல்வார்கள் அந்த வெற்றியைச் செல்வாக்கால் தர முடியாது. 

 

சில படங்களுக்கு விளம்பரம் நிறையச் செய்ய முடியும், அவர்களுக்கு எவ்வளவு முடியுமோ அவ்வளவு விளம்பரம் செய்து தியேட்டருக்கு ஆட்களை வரவைக்கிறார்கள். ஆனால் வெற்றியை மக்கள் தர வேண்டும். என்ன பிரச்சனையை வேண்டுமானாலும் படத்தில் சொல்லலாம் நமது வலியைச் சொல்லலாம் ஆனால் அதை மக்கள் அனைவரும்  கனக்ட் செய்து கொள்ள வேண்டும். ஆனால் மக்கள் சிலருக்கு வலியைத் தரும்படி படமெடுக்கக் கூடாது. வன்முறையைத் தூண்டக்கூடாது. இப்போது மக்கள் என்ன சார் இப்படி படமெடுக்கிறாங்க என்று கவலையுடன் கேட்கிறார்கள். மக்கள் சில நேரம் படம் ஏன் சரியில்லை என கேட்பார்கள் ஆனால் அதை விட, என்ன சார் இப்படி படமெடுக்கிறாங்க? எனக் கேட்பது பெரிய வலி. 

 

சினிமாவில் தாழ்த்தப்பட்டவன் என யாருமில்லை. ஜெயித்தவன் ஜெயிக்கப்போகிறவன் என இரண்டே ஜாதிதான் இருக்கிறது. தாழ்த்தப்பட்டவன் என்ற சொல்லை, எனக்குச் சொல்லவே வலிக்கிறது. உலகமே கொண்டாடிய இசை மேதை ஜீனியஸ் தாழ்த்தப்பட்டவர், அவர் காலில் விழுந்து வணங்கவில்லையா? அவரை ஜாதி பார்த்தார்களா? சினிமாவில் ஜெயித்தவர் காலில் எல்லோரும் விழுவார்கள். அது தான் சினிமா, அவரை ஜாதி என்ன என பார்க்க மாட்டார்கள். என்னை அஸிடெண்டாக சேர்த்த போது நான் என்ன ஜாதி என கேட்க வில்லை. விஜய் சார் வாய்ப்பு தந்தார் அவர் என்னிடம் கதை தான் கேட்டார் ஜாதி கேட்கவில்லை, தயாரிப்பாளர் சௌத்திரி சார் ஜாதியைக் கேட்கவில்லை. வாய்ப்பு கேட்டு வருகிறவனிடம் ஜாதி என்ன? என கேட்பவன் இயக்குநரே இல்லை. சிறுபான்மையினர் ஜாதி மதம் இதையெல்லாம் சினிமாவில் கலக்காதீர்கள். இப்படி ஆரம்பித்தால் தேவர் மகன் கவுண்டர் மகன் என படம் வரும் தனித்தனி ஜாதி குழுக்கள் வரும். அதையெல்லாம் குறை சொல்லவில்லை. ஜாதிப்படம் வரட்டும் ஜாதிப்பெருமை பேசட்டும் ஆனால் அடுத்த ஜாதியைக் குறை சொல்லாதீர்கள். 

 

தேவர் மகன் ஜாதிப்பெருமை பேசிய படமா அது  தேவர் ஜாதிக்குள் நடந்த கதையைச் சொன்ன படம், உண்மையில் தேவர் ஜாதியினர் தான் அந்தப்படத்தைத் திட்ட வேண்டும், ஏனெனில் அவர்களைக் காட்டுமிராண்டி கூட்டம் என்பார் கமல், சிவாஜி அதை மறுத்துப் பேசமாட்டார் அந்தப்படத்தில் ரேவதி யார்?, தாழ்ந்த ஜாதிப் பெண்ணைக் கல்யாணம் பண்ணியதை பற்றி யாரும் பேசவில்லை. இது போல முன்பு நடந்த கதையை இப்போது பேசி பிரச்சனை ஆக்காதீர்கள்.  சினிமாவிற்குள் ஜாதி வேண்டாம் ஜாதியைக் கலக்காதீர்கள். கடத்தல் திரைப்பட குழுவினர் வெற்றி பெற வாழ்த்துக்கள் நன்றி.” என்றார்.

 

தயாரிப்பாளர் கே ராஜன் பேசுகையில், “பேரரசு பேசும்போது ஜாதிப்படங்கள் வெண்டாம் என்றார் ஜாதிப்பிரச்சனை வேண்டாமே அதை நம் வீட்டுக்குள் வைத்துக்கொள்வோம் நாட்டுக்குள் வேண்டாம், அதிலும் ஜாதிப்பிரச்சனையை உங்கள் வலியைச் சொல்லுங்கள் ஆனால் அடுத்தவருக்கு வலியை ஏற்படுத்தாதீர்கள் என்றார்.  இன்னும் பழங்கதையைப் பேசிக்கொண்டிருக்காதீர்கள். சுதந்திரம் பெற்ற காலத்திலிருந்து காமராஜர் செய்து தந்த பல திட்டங்கள் வழியே, பலர் முன்னேறிவிட்டார்கள் 70 சதவீதம் பேர் முன்னேறி, பல பெரிய பதவிகளில் இருக்கிறார்கள். ஆனால் 30 சதவீதம்  பேர் இன்னும் அடிமைப்படுத்தப்படுகிறார்கள் அவர்களும் மேலே வர வேண்டும் அதற்காக அதையே பேசி பிரச்சனையாக்காதீர்கள். அம்பேத்கர், கலைஞர் எல்லோரும் எவ்வளவு கஷ்டப்பட்டு வந்தார்கள், அது மாதிரி எல்லோரும் வரட்டும். பழங்கதை பேச வேண்டாம், சினிமாவில் இருக்கும் பிரச்சனையை பேசுவோம் 100 ரூபாய் டிக்கெட் 200 ரூபாய் அதைப் பேசுவோம். சில நாட்களாக விஜய் படங்களில் நடிக்க மாட்டார் என நியூஸ் வருகிறது அவருக்கு நார்மலான வயது தான் அவர் தமிழர் அவர் தொடர்ந்து தமிழில் நடிக்க வேண்டும், அரசியலுக்கு வந்து என்ன செய்யப் போகிறார், அரசியலும் செய்யட்டும் ஆனால் சினிமாவில் தொடர்ந்து நடிக்கட்டும். சினிமா இப்போது கஷ்டத்தில் இருக்கிறது, ஒரு குடும்பம் தியேட்டருக்கு போனால் 1000 ரூபாய் செலவாகிறது அதை அமைச்சர் உதயநிதி போன்றவர்கள் ஆராய்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். சினிமாவை இன்னும் ஒரு தொழிலாக மத்திய அரசு அங்கீகரிக்கவில்லை அதையெல்லாம் பாஜாகவில் சேர்ந்த சினிமா துறை நண்பர்கள் கோரிக்கை வைத்து மாற்ற வேண்டும். கடத்தல் இந்தப்படத்தில் குழந்தைக்கடத்தல் பற்றி ஒரு நல்ல விசயத்தைச் சொல்லியுள்ளார்கள் படம் வெற்றி பெற என் வாழ்த்துக்கள்.” என்றார்.

 

தயாரிப்பாளர் தமிழ்வாணன் பேசுகையில், “இவ்விழாவிற்கு வருகை தந்துள்ள அனைவருக்கும் நன்றி. கடத்தல் படத்தில் எனது நண்பர் சலங்கை துரை அவர்கள் சின்னகதாப்பாத்திரம் என்று தான் அழைத்தார்கள் ஆனால் இரண்டு நாயகர்களில் ஒருவராக என்னை நடிக்க வைத்ததற்கு நன்றி. இப்படத்தில் பணிபுரிந்துள்ள அனைவரும் என் நண்பர்கள். படத்திற்கு அனைவரும் ஆதரவு  தாருங்கள் நன்றி.” என்றார்.

 

தயாரிப்பாளர் சரவணபவ பேசுகையில், “எனக்கு இந்த மேடையில் வாய்ப்பளித்த இயக்குநருக்கும் தயாரிப்பாளருக்கும் நன்றி கூறிக் கொள்கிறேன் , இந்தப் படத்தைக் கிராமப்புற மக்களையும், சினிமா ரசிகர்களையும் நம்பி தயாரித்துள்ளனர், இயக்குநரை வைத்து நான் ஒரு படத்தை உருவாக்கி வருகிறேன், அந்தப் படமும் வெற்றிப்படம் தான், இயக்குநருக்கு எனது வாழ்த்துக்கள் படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.” என்றார்.

 

வழக்கறிஞர் சௌந்திரபாண்டி பேசுகையில், “கடத்தல் என்பதை நாம் அடிக்கடி செய்திகளில் பார்த்திருப்போம் அந்த பெயரில் படமெடுத்திருக்கிறார்கள் என்றால் அதற்கேற்ற கதை இருக்கும் என நம்புகிறேன். இப்படத்தில் பணிபுரிந்த  அனைவருக்கும் வாழ்த்துக்கள். இன்றைய காலகட்டத்தில் பத்திரிக்கையாளர்கள் படம் வெற்றி பெற முக்கிய காரணமாக இருக்கிறார்கள் இந்தப்படத்தையும் ஆதரவு தந்து வெற்றி பெறச் செய்ய வேண்டும்.  இயக்குநர் சலங்கை துரை மற்றும் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள் நன்றி.” என்றார்.

 

இயக்குநர் சலங்கை துரை பேசுகையில், “வெற்றி பெற்றவர்கள் அனைவரும் எங்களை வாழ்த்துகின்றனர் அதுவே எங்களுக்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றி , நடிகர்கள் மற்றும் இயக்குநர்கள் உயிரோடு இருக்கிறார்கள் என்பதை மக்களுக்குத் தெரிவிப்பதே பத்திரிக்கையாளர் தான் நீங்கள் எங்களை மக்களிடையே கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்று உங்களைக் கேட்டுக் கொள்கிறேன், இந்தப் படம் உங்களுக்கு ஒரு முக்கியமான அனுபவமாக இருக்கும். படத்தில் நடித்துள்ள அனைவரும் புதுமுக நடிகர்கள் எங்களின் இந்த முயற்சியை நீங்கள் தான் ஆதரிக்க வேண்டும் நன்றி.” என்றார்.

 

கிரைம் திரில்லர் ஆக்‌ஷன் பொழுதுபோக்கு திரைப்படமாக உருவாகியுள்ள ‘கடத்தல்’ இம்மாதம் திரையரங்குகளில் வெளியாகிறது.

Related News

9087

’நாகபந்தம்’ படத்தின் முதல் பார்வை போஸ்டரை வெளியிட்ட ராணா டகுபதி!
Monday January-13 2025

நடிகர் விராட் கர்ணா - அபிஷேக் நாமா- கிஷோர் அன்னபு ரெட்டி - NIK ஸ்டூடியோஸ் - அபிஷேக் பிக்சர்ஸ் கூட்டணியில் உருவாகும் பான் இந்திய திரைப்படமான ' நாக பந்தம் ' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை முன்னணி நட்சத்திர நடிகரான ராணா டகுபதி வெளியிட்டார்...

உழவர் விருது தொடர்ந்து நடத்துவது ஏன் ? - நடிகர் கார்த்தி விளக்கம்
Monday January-13 2025

விவசாயத்தில் சாதனை புரிபவர்களையும், அதற்கு உறுதுணையாக இருந்து பங்களிப்பவர்களையும் கெளரவப்படுத்தி அங்கீகரிக்கும் உழவன் ஃபவுண்டேஷனின் ‘உழவர் விருதுகள் 2025’ விழா கோலகலமாக சென்னையில் நடைபெற்றது...

கோலாகலமாக நடைபெற்ற ‘அகத்தியா’ கேம் மற்றும் 2 வது பாடல் வெளியீட்டு விழா!
Monday January-13 2025

தமிழ் சினிமாவில் புதிய வரலாற்றை படைக்கும் வகையில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘அகத்தியா’...

Recent Gallery