முன்னணி காமெடி நடிகராக வலம் வரும் யோகி பாபு, கதையின் நாயகனாகவும் நடித்து பல வெற்றிப் படங்களை கொடுத்து வருகிறார். அதனால், யோகி பாபு முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் படங்கள் வரிசைக்கட்டி நின்றாலும், அதில் முக்கியமான படமாக ‘தூக்குதுரை’ பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே யோகி பாபு நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற ‘ட்ரிப்’ படத்தை இயக்கிய டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கியிருக்கும் ‘தூக்குதுரை’ படத்தில் யோகி பாபுக்கு ஜோடியாக இனியா நடித்திருக்கிறார். இவர்களுடன் மொட்டை ராஜேந்திரன், மகேஷ், பால சரவணன், சென்ராயன், மாரிமுத்து, நமோ நாராயணன், அஷ்வின், சத்யா, சீனியம்மா, வினோத் தங்கராஜு, சிந்தாலப்பட்டி சுகி, ராஜா வெற்றிபிரபு உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
18 ஆம் நூற்றாண்டு, 1999 மற்றும் 2023 ஆகிய மூன்று காலக்கட்டங்களில் நடக்கும் கதையம்சம் கொண்ட இப்படம் சஸ்பென்ஸ் திரில்லர் ஜானர் கதையாக இருந்தாலும், அதை முழுக்க முழுக்க நகைச்சுவையாக கையாண்டிருக்கிறாராம் இயக்குநர் டென்னிஸ் மஞ்சுநாத்.
அட்வெஞ்சர் த்ரில்லர் கதையான ‘ட்ரிப்’ படத்தை நகைச்சுவையாக சொல்லி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த இயக்குநர் டென்னிஸ் மஞ்சுநாத், அதேபோன்று ஒரு சுவாரஸ்யமான கதையை காமெடியோடு சொல்லியிருப்பது மற்றும் படத்தில் நடித்திருக்கும் நடிகர், நடிகைகள் ஆகியோரல் ‘தூக்குதுரை’ மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது படப்பிடிப்பை முடித்துவிட்டு பின்னணி வேலைகளில் ஈடுபட்டிருக்கும் நிலையில், இயக்குநர் டென்னிஸ் மஞ்சுநாத் படம் குறித்து கூறுகையில், ”மன்னர்கள் காலத்தில், ராஜாவாக வாழ்ந்தவர்களின் தலைமுறைகள் தற்போது சாதாரண மக்களாக வாழ்ந்துக்கொண்டிருந்தாலும், அவர்களின் தலைமையில் தான் ஊர் கோயில் திருவிழாக்கள் நடக்கும். அப்படிப்பட்ட ஒரு குடும்பம், அந்த குடும்பம் தொடர்புடைய கோயில் திருவிழாவில் நடக்கும் சுவாரஸ்யமான சம்பவங்களை மையப்படுத்தியது தான் படத்தின் கதை. இதில் யோகி பாபு முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார், அவருக்கு ஜோடியாக இனியா நடித்திருக்கிறார். அந்த ஊரின் ராஜகுடும்பத்து வாரிசாக மாரிமுத்து நடித்திருக்கிறார், அவரது தம்பியாக நமோ நாராயணன் நடித்திருக்கிறார். இவர்களுடன் பால சரவணன், புதுமுகம் அஷ்வின், மொட்டை ராஜேந்திரன், சென்றாயன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
ராஜா பரம்பரை, 18 ஆம் நூற்றாண்டு என்பதால் படத்தில் எதாவது சர்ச்சையான விஷயத்தை பேசியிருக்கிறோம் என்று நினைக்க வேண்டாம். இது முழுக்க முழுக்க நகைச்சுவையை அடிப்படையாக கொண்ட படம் மட்டுமே, இதில் மன்னர் காலத்து கதை ஒன்றை களமாக கொண்டு சொல்லியிருக்கிறோம். அந்த கதையை அனிமேஷனில் தான் சொல்லியிருக்கிறோம்.
இந்த படத்தின் கதை மன்னர் காலத்தை மையப்படுத்தி இருப்பதால், மாமன்னன், மன்னாதி மன்னன் போன்ற தலைப்புகளை வைக்க முயற்சித்தோம். ஆனால், ‘மாமன்னன்’ என்ற தலைப்பு ஏற்கனவே இருந்ததால், அது சார்ந்த எந்த ஒரு தலைப்பும் வைக்க முடியாத சூழல் உருவானது. அப்போது வேறு தலைப்பை வைக்க யோசித்த போது தான் இளவரசர்களை துரை என்றும் அழைப்பார்கள். மன்னர்களின் முக்கிய அடையாளம் அவருடைய மகுடம், அதை தூக்கி காண்பிக்கும் போது மக்கள் வணங்குவார்கள், அதனால் தூக்குதுரை என்று வைக்க முடிவு செய்தோம். அந்த வார்த்தை கமர்ஷியலாக இருப்பதோடு, ஏற்கனவே மக்களிடம் பிரபலமானதாக இருந்ததால் படத்திற்கு அதுவும் ஒரு பலமாக அமைந்திருக்கிறது.” என்றார்.
யோகி பாபு - இனியா ஜோடியின் கெமிஸ்ட்ரி எப்படி இருந்தது? என்ற கேள்விக்கு பதில் அளித்த இயக்குநர் டென்னிஸ் மஞ்சுநாத், “ரொம நன்றாக வந்திருக்கிறது. யோகி பாபு - இனியா காதலால் தான் பிரச்சனை வரும், அந்த பிரச்சனை எப்படி போய் முடிகிறது, என்பது தான் கதை. இரண்டு பேருக்கும் இடையே காதல் காட்சிகள் இருக்கிறது. ஆனால், பாடல் காட்சிகள் இல்லை.” என்றார்.
யோகி பாபு சரியாக ஒத்துழைப்பதில்லை என்று பல தயாரிப்பாளர்கள் புகார் தெரிவிக்கிறார்களே, உங்களுக்கு எப்படி ஒத்துழைத்தார்? என்றதற்கு, “ஆமாம், நிறைய பேர் என்னிடமே போன் பண்ணி உங்க படம் மட்டும் எப்படி பிரச்சனை இல்லாம போகுது, என்று கேட்பார்கள். யோகி பாபுவால் எங்களுக்கு எந்த பிரச்சனையும் வந்ததில்லை, அவர் கொடுத்த தேதிகளை நாங்கள் சரியாக பயன்படுத்தினோம், அவரும் எங்களுக்கு நல்லபடியாக ஒத்துழைப்பு கொடுத்தார். அவர் நடித்த படங்களில் நான் உதவியாளராக பணியாற்றியிருக்கிறேன், அதனால் அவரை எனக்கு பல வருடங்களாக தெரியும். ட்ரிப் படத்திலும் எங்கள் இருவருக்கும் நல்ல நட்பு இருந்தது, இந்த படத்திலும் அவர் எனக்கு முழுமையான ஒத்துழைப்பு கொடுத்தார்.” என்றார்.
ஓபன் கேட் பிக்சர்ஸ் சார்பில் அரவிந்த் வெள்ளைபாண்டியன், அன்புராசு கணேசன் இணைந்து தயாரித்திருக்கும் இப்படத்தின் இணை தயாரிப்பை வினோத் குமார் தங்கராஜு கவனிக்கிறார். தற்போது படப்பிடிப்பு முடிவடைந்து பின்னணி வேலைகளில் பிஸியாகியிருக்கும் ‘தூக்குதுரை’ படக்குழு விரைவில் படத்தின் டீசரை வெளியிடுவதற்கான பணியில் ஈடுபட்டுள்ளது.
ரவி வர்மா.கே ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு கே.எஸ்.மனோஜ் இசையமைத்திருக்கிறார். தீபக் எஸ்.துவாரக்நாத் படத்தொகுப்பு செய்ய, ஜெய்முருகன் கலை இயக்குநராக பணியாற்றியிருக்கிறார். மான்ஸ்டர் முகேஷ் மற்றும் ராம்குமார் சண்டைக்காட்சிகளை வடிவமைக்க, அறிவுமதி மற்றும் மோகன்ராஜன் பாடல்கள் எழுதியுள்ளனர்.
ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷ்னல் சார்பில் நடிகர் கமல்ஹாசன் தயாரிப்பில், சிவகார்த்திகேயன் நடிப்பில், ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘அமரன்’...
‘கப்பேலா’ படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் முஹம்மது முஸ்தபா, இயக்கத்தில் உருவாகியிருக்கும் ஆக்ஷன் திரில்லர் படம் ‘முரா’...
பி.வி.கே ஃபிலிம் ஃபேக்டரி (PVK FILM FACTORY) சார்பில் பா...