Latest News :

’மாமன்னன்’ கொடுத்த மாபெரும் வெற்றி! - மகிழ்ச்சியோடு விடைபெற்ற உதயநிதி ஸ்டாலின்
Monday July-10 2023

நடிகர் விஜயின் ‘குருவி’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் தயாரிப்பாளராக அறிமுகமான உதயந்தி ஸ்டாலின், ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். முதல் படமே மிகப்பெரிய வெற்றி பெற்றதை தொடர்ந்து நடிகர் மற்றும் தயாரிப்பாளர் என்று இரட்டை குதிரைகளை வெற்றிகரமாக இயக்கி வந்தவர், தீவிர அரசியலில் ஈடுபட்டு தற்போது அமைச்சராக பதவி வகித்து வருவதால், சினிமாவுக்கு ஓய்வு கொடுக்க முடிவு செய்தார்.

 

அதன்படி, உதயநிதி நடிக்கும் கடைசி திரைப்படமாக ‘மாமன்னன்’ உருவானது. இப்படம் கடந்த ஜூன் 29 ஆம் தேதி வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்று வசூல் சாதனை படைத்துள்ளது. தற்போது பல திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ‘மாமன்னன்’ திரைப்படத்தின் வெற்றியை கொண்டாடும் விதத்தில், படக்குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்து நன்றி தெரிவித்தார்கள்.

 

இந்த நிகழ்ச்சியில் பேசிய் உதயநிதி ஸ்டாலின், என் முதல் படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது போல், என் கடைசி படமான ‘மாமன்னன்’ திரைப்படமும் மிகப்பெரிய வெற்றி பெற்றிருப்பது எனக்கு மகிழ்ச்சியளிப்பதோடு, சினிமாவில் இருந்து மன நிறைவோடு விடைபெறும் சூழலை உருவாக்கியுள்ளது, என்றார்.

 

தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசியவர், “மாமன்னன் படக்குழு அனைவருக்கும் நன்றி, நல்ல படத்தை மக்களுக்கு கொண்டு சென்றுள்ளீர்கள், எனக்கு முதல் படம் போலக் கடைசி படமும் வெற்றி. படம் இன்றும் பல திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. ரெட் ஜெயண்ட் தயாரித்த படங்களிலேயே அதிக வசூல் ஈட்டியது இந்த படம. படம் வெளியாகி இதுவரை 9 நாட்கள் ஆகிறது. இதுவரை ரூ.52 கோடி வசூல் செய்துள்ளது. இது மிக்கப்பெரிய வசூல் ஆகு. பாடலாசிரியர் மற்றும் ஒளிப்பதிவாளர் அவர்களுக்கு நன்றி. இயக்குநர் மாரி தான் நடன இயக்குநராகவும், சண்டைக் காட்சிகள் இயக்குநராகவும் பணிபுரிந்துள்ளார். இடைவேளை சண்டைக்காட்சிகள் அனல் பறக்கும், படத்தில் மட்டுமல்ல, படப்பிடிப்பே, அப்படித்தான் இருந்தது. படப்பிடிப்பில் நிறையக் காயங்கள் ஏற்பட்டது, எல்லாமே ரியலாக இருந்தது. படத்தில் இருக்கும் அழுத்தம் படப்பிடிப்பில் இல்லை எல்லோரும் ஜாலியாக தான் படத்தை எடுத்தோம். இந்நேரத்தில் படக்குழுவிற்கு நன்றி கூறிக்கொள்கிறேன். வடிவேலு அண்ணன் நடித்த காட்சிகளை பார்த்த பிறகு தான் எனக்கு இந்த கதையைப் பற்றி புரிந்தது. உண்மையிலேயே இந்த படத்தை அவர் தான் தாங்கியுள்ளார். பஹத் பாசில் பற்றி நான் சொல்லத் தேவையில்லை தேசிய விருது பெற்ற நடிகர், படத்தை அடுத்த கட்டத்துக்கு கொண்டு சென்றது அவரது நடிப்பு. ரஹ்மான் சாருக்கு நன்றி படத்தின் கதையை போல இசையும் பெரும் வலு சேர்த்தது. செண்பகமூர்த்தி சாருக்கு நன்றி ரெட் ஜெயன்டை நன்றாக வழி நடத்திச் செல்கிறார். என் படத்தைக் கொண்டு சேர்த்ததற்கு நன்றி.  உதவி இயக்குநர்கள் அனைவருக்கும் நன்றி. அனைவருக்கும் நன்றி படத்தின் 50வது நாள் வெற்றி விழாவில் அனைவரையும்  மீண்டும் சந்திக்கிறேன் நன்றி.” என்றார்.

 

நடிகர் வடிவேலு பேசுகையில், “இத்தனை நாட்களாக காமெடி கதாபாத்திரத்தில் நடித்தேன், ஆனால் இந்தப் படம் எனக்கு இன்னொரு உருவத்தைக் கொடுத்துள்ளது, இந்தக் கதையை முதலில் உதய் சார் தான் என்னைக் கேட்கச் சொன்னார் , அதன் பின் கதையைக் கேட்டேன். அவர் முதலில் என்னிடம் சொன்னது ஒரு காட்சி கூட உங்களுக்கு நகைச்சுவை இல்லை என்றார், முதலில் நான் கொஞ்சம் பயந்தேன், ஆனால் முழு கதையைக் கேட்டதும் நான் கண்டிப்பாக நடிக்கிறேன்  என ஒப்புக்கொண்டேன். இயக்குநர் மாரி செல்வராஜிற்கு ஒரு 30 படம் செய்த இயக்குநருக்கு உள்ள அனுபவம் இருந்ததை நான் அறிந்தேன், அவரது வலியை நடிகர்களுக்கு சுலபமாக உணரவைத்து விடுவார், என்னை முழுதாக மாற்றி இருக்கிறார். சிரிக்கவே கூடாது என்று சொல்லிவிட்டனர், அது கஷ்டமாகத்தான் இருந்தது. இப்போது வரும் பாராட்டுக்கள் மகிழ்ச்சியாக உள்ளது.  படப்பிடிப்பு ஜாலியாக இருக்கும் ஆனால் மாரி செல்வராஜ் அவர் குறிக்கோளை விட்டு விலகவே இல்லை. படம் பார்த்து அனைவரும் எனக்கு போன் செய்தனர், முதலமைச்சர் ஸ்டாலின் சார் எனக்கு போன் செய்து வாழ்த்துக் கூறினார். சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் போன் செய்தார், எனக்கு அது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. இப்படி ஒரு வாய்ப்பை இழக்க பார்த்தேன் அதற்கு உதய் சாருக்கு தான் நன்றி கூற வேண்டும். படப்பிடிப்பு முடிந்தது போக நான் பாடல் பாடியதும் ஒரு நல்ல அனுபவம் தான், இந்த படத்தை உலகத்தில் உள்ள அனைவரும் பாராட்டி வருகின்றனர். மொத்த படக்குழுவும் பெரும் உழைப்பைக் கொடுத்துள்ளனர், எங்கள் அனைவரையும் தாண்டி ஒரு படி மாரி செல்வராஜ் உழைப்பைக் கொடுத்தார். இந்தப் படம் அனைவருக்கும் பிடித்துள்ளது, பத்திரிக்கையாளர் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.” என்றார்.

 

நடிகை கீர்த்தி சுரேஷ் பேசுகையில், “இப்படி ஒரு வெற்றி விழாவில் கலந்து கொண்டது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது, படக்குழு அனைவருக்கும் இந்த வெற்றி சமர்ப்பணம். இயக்குநர் மாரி செல்வராஜ் சாருக்கு நன்றி. வீடியோ காலில் பேசி கதை சொல்லி இன்று இந்த வெற்றியில் நிற்கிறது, உதயநிதி சாருக்கு நன்றி.  ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனத்திற்கு நன்றி. பெரிய படங்களில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் இருக்காது ஆனால் அதைத் தகர்த்த இயக்குநர் மாரி செல்வராஜ் சாருக்கு எனது வாழ்த்துக்கள். இனிமேல் வரும் இளம் இயக்குநர்களுக்கு இது ஒரு ஆரம்பப் புள்ளியாக இருக்கும் அதற்கு நன்றி. உதவி இயக்குநர்கள் அனைவருக்கும் நன்றி என்னை நன்றாகப் பார்த்துக் கொண்டனர், படத்தை வெற்றி பெறச் செய்த பத்திரிக்கையாளர்களுக்கு நன்றி , மீண்டும் ஒரு வெற்றி விழாவில் சந்திப்போம்.” என்றார்.

 

Udhayanithi and Mari Selvaraj

 

இயக்குநர் மாரி செல்வராஜ் பேசுகையில், “மூன்று வெற்றிகள், மூன்று படங்கள் மக்கள் ஏற்றுக் கொண்டார்கள், ஆனால் இன்னும் பதற்றம் குறையவில்லை. இந்தப் பதற்றம் குறையும் நாளில் நான் மனநிம்மதி அடைந்துவிடுவேன். இந்தப்படம் ஒரு கூட்டு முயற்சி. இப்படத்தில் நான் என்ன நினைக்கிறேன், என் வலி என்ன, என்ன சொல்ல வருகிறேன் என்பதை புரிந்து கொண்டு அனைத்து கலைஞர்களும் ஒத்துழைத்து ஒரு சிறப்பான படைப்பைத் தந்தனர். எல்லோரும் அவர்கள் ஜெயிக்க வேண்டும் அவர்களை நிரூபிக்க வேண்டும் என்பதை விட மாரி ஜெயிக்க வேண்டும், மாரியின் கருத்து ஜெயிக்க வேண்டும் என வேலை பார்த்தார்கள். அத்தனை கலைஞர்களுக்கும் என் நன்றிகள். மாமன்னன் ஒரு நாவலாக எழுத வேண்டும் என்று நினைத்திருந்த படைப்பு, இதை எடுக்க முடியாது என்று நினைத்திருந்தேன். ஆனால் ரெட் ஜெயன்ட் மூவீஸ் நிறுவனத்தால் இது சாத்தியமாயிற்று. உதயநிதி சாருக்கு என் மீது இருக்கும் அன்பு மிகப்பெரிது. அவர் கூப்பிட்ட போது இவர் செய்யும் படங்கள் வேறு வகை நாம் செய்யும் படங்கள் வேறு வகை எப்படி ஒத்து வரும் எனும் பயம் இருந்தது. என்னைச் சந்தித்த போதே அந்த தயக்கத்தை உடைத்து விட்டார். இந்தப்படத்தில் நடித்த கலைஞர்கள் சிலருக்கு டயலாக் இல்லை ஆனாலும் என் மீதான அன்பிற்காக மட்டுமே செய்தார்கள். இந்தப்படத்தின் இடைவேளை காட்சி தான் இந்த படத்தின் மையப்புள்ளி. அதிலிருந்து தான் இந்தப் படம் தொடங்கியது. வடிவேலு சார் என்னை நம்பி நான் சொன்னதை உள்வாங்கி நடித்தார். அவருக்கு நன்றி. பகத் சார் இன்னும் இன்னும் காட்சியை மெருகேற்றுவார். அவர் எப்போதும் கேரளாவில் என் வீடு உனக்காக திறந்திருக்கும் என்று சொன்னார். அவருக்கு நன்றி. உதய் சார் என் மீது காட்டும் அன்பு மிகப்பெரியது. என்றென்றைக்கும் அவருடனான உறவு தொடரும். திரைப்படங்கள் தான் என் அரசியல், என் வலி, என் வரலாறு அதைத் தொடர்ந்து என் திரைப்படங்களில் பேசிக்கொண்டே இருப்பேன். படத்தின் மீது சில சர்ச்சைகள் இருந்தது, ஆனால் மக்கள் படத்தை அரவணைத்துக் கொண்டார்கள். முதல்வர் ஸ்டாலின் அவர்கள், திரு ரஜினிகாந்த், திரு கமல்ஹாசன் என் மூன்று படங்களையும் பார்த்துப் பாராட்டினார்கள். அவர்கள் அனைவருக்கும் நன்றி. நான் பேசியதைப் புரிந்து கொண்டு எங்களுக்கு ஆதரவு தந்த கமல்ஹாசன் சாருக்கு நன்றி. இந்தப்படத்திற்கு இரவு பகல் பாராமல் உழைத்த என் உதவி இயக்குநர்களுக்கு நன்றி. இந்தப்படம்  இப்படியான ஒரு படைப்பாக மாற ரெட் ஜெயண்ட் மூவீஸ் தான் காரணம், M.செண்பகமூர்த்தி சார் அர்ஜுன் துரை சார் இருவரும் என்னை எந்த கேள்வியும் கேட்டதில்லை. அவர்களுக்கு மிகப்பெரிய நன்றி. படப்பிடிப்பில் உறுதுணையாக இருந்த நிர்வாக மேற்பார்வையாளர் E.ஆறுமுகத்திற்கு நன்றி, விநியோக நிர்வாகம் செய்த C,ராஜா அவர்களுக்கு நன்றி. படத்தை மாபெரும் வெற்றிப்படமாக்கிய மக்களுக்கு நன்றி.” என்றார்.

 

நடிகர் லால் பேசுகையில், “நன்றி சொல்வதா வாழ்த்து சொல்வதா தெரியவில்லை. மாமன்னன் சிறப்பான படம். பெரிய வெற்றிப்படம். முதலில் நான் நன்றியை என்னைத் தமிழில் அறிமுகப்படுத்திய சித்திக் சார் வெற்றி படைப்பைத் தந்த லிங்குசாமிக்கு சாருக்கு சொல்லிக்கொள்கிறேன். மாரியின் இரண்டு படத்தில் நடிக்க அதனால் தான் வாய்ப்பு கிடைத்தது. மற்றொரு மொழியில் நடிப்பதே பெரிய விஷயம் அதிலும் சி எம் ஆக நடிப்பது மகிழ்ச்சி. உதய் சார் கீர்த்தி எல்லோருக்கும் வாழ்த்துக்கள் நன்றி.” என்றார்.

 

பாடலாசிரியர் யுகபாரதி பேசுகையில், “பத்தாவது முறை பாதம் தடுக்கி விழுந்தவனை பூமித்தாய் சொன்னாள் ஒன்பது முறை எழுந்தவன் அல்லவா நீ என ஈரோடு தமிழன்பனின் கவிதை ஒன்று உள்ளது. எப்போது வெற்றி விழா நடந்தாலும் இந்தக்கவிதை ஞாபகம் வரும். இந்த வெற்றிக்குக் காரணம் பத்திரிக்கையாளர்கள் உங்களுக்கு நன்றி. நினைவில் காடுள்ள மிருகத்தை எளிதில் பழக்க முடியாது என்றொரு கவிதை உள்ளது. அது போல் நினைவில் அன்புள்ள மிருகத்தை எளிதில் பழக்க முடியாது என்பது போலானவன் மாரி. அவன் வெற்றி பெற்றது மகிழ்ச்சி. எல்லாவற்றிருக்கும் காரணமாக இருந்த ஏ ஆர் ரஹ்மான் சாருக்கு நன்றி. அனைவருக்கும் நன்றி.” என்றார்.

 

Maamannan Success Meet

 

‘மாமன்னன்’ படத்திற்கு மக்கள் கொடுத்திருக்கும் ஆதரவால் படம் நிச்சயம் 50 நாட்களை கடந்து ஓடும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ள படக்குழு 50 வது நாள் விழாவை பிரமாண்டமான முறையில் கொண்டாட திட்டமிட்டுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


Related News

9097

’நாகபந்தம்’ படத்தின் முதல் பார்வை போஸ்டரை வெளியிட்ட ராணா டகுபதி!
Monday January-13 2025

நடிகர் விராட் கர்ணா - அபிஷேக் நாமா- கிஷோர் அன்னபு ரெட்டி - NIK ஸ்டூடியோஸ் - அபிஷேக் பிக்சர்ஸ் கூட்டணியில் உருவாகும் பான் இந்திய திரைப்படமான ' நாக பந்தம் ' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை முன்னணி நட்சத்திர நடிகரான ராணா டகுபதி வெளியிட்டார்...

உழவர் விருது தொடர்ந்து நடத்துவது ஏன் ? - நடிகர் கார்த்தி விளக்கம்
Monday January-13 2025

விவசாயத்தில் சாதனை புரிபவர்களையும், அதற்கு உறுதுணையாக இருந்து பங்களிப்பவர்களையும் கெளரவப்படுத்தி அங்கீகரிக்கும் உழவன் ஃபவுண்டேஷனின் ‘உழவர் விருதுகள் 2025’ விழா கோலகலமாக சென்னையில் நடைபெற்றது...

கோலாகலமாக நடைபெற்ற ‘அகத்தியா’ கேம் மற்றும் 2 வது பாடல் வெளியீட்டு விழா!
Monday January-13 2025

தமிழ் சினிமாவில் புதிய வரலாற்றை படைக்கும் வகையில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘அகத்தியா’...

Recent Gallery