இயக்குநர் விஜய் இயக்கத்தில், அருண் விஜய் நடிப்பில் முழுக்க முழுக்க ஆக்ஷன் மற்றும் எமோஷனல் திரைப்படமாக உருவாகியிருக்கிறது ‘மிஷன் - சாப்டர் 1’. லண்டனில் நடக்கும் கதையம்சம் கொண்ட இப்படத்தில் லண்டன் சிறைச்சாலை அதிகாரியாக எமி ஜாக்சன் நடித்திருக்கிறார். இவர்களுடன் நிமிஷா சஜயன், அபி ஹாசன், பரத் போபண்ணா, சிறுமி இயல், விராஜ், ஜேசன் ஷா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.
சந்தீப் கே.விஜய் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார். ஆண்டனி படத்தொகுப்பு செய்திருக்கிறார். ஏ.மகாதேவ் கதை எழுத, திரைக்கதை, வசனம் எழுதி விஜய் இயக்கியுள்ளார்.
இப்படத்தின் அனைத்து பணிகளும் முடிவடைந்து வெளியீட்டுக்கான பணியில் படக்குழுவினர் ஈடுபட்டுள்ள நிலையில், நடிகர் அருண் விஜய் மற்றும் இயக்குநர் விஜய் இருவரும் பத்திரிகையாளர்களை சந்தித்து படம் குறித்து பகிர்ந்துக்கொண்டார்கள்.
முதலில் இந்த படத்திற்கு ‘அச்சம் என்பது இல்லையே’ என்று தலைப்பு வைக்கபட்டிருந்தது. ஆனால், தற்போது அந்த தலைப்பு மாற்றப்பட்டு ‘மிஷன் - சாப்டர் 1’ என்று வைக்கப்பட்டுள்ளது. இதற்கான காரணத்தை கூறிய இயக்குநர் விஜய், “இந்த படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் குழுவினரும், சுபாஸ்கரன் சாரும் பார்த்தார்கள். படத்தை பார்த்ததும் படம் மிகப்பெரிய ஆக்ஷன் படமாக இருக்கிறது, நிச்சயம் படத்தை தமிழ் மட்டும் இன்றி தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் வெளியிடலாம் என்று சொன்னார்கள். அதேபோல், தற்போது இருக்கும் தலைப்பு தமிழுக்கு சரியாக இருக்கும், ஆனால் மற்ற மொழிகளில் சரியாக பொருந்தாது, அதேபோல் வைரலான தலைப்பாகவும் இருக்க வேண்டும், என்று விரும்பினார்கள். அதனால் தான் ‘மிஷன் - சாப்டர் 1’ என்ற தலைப்பு வைத்தோம்.” என்றார்.
முழு படத்தையும் லண்டனில் படமாக்கியது ஏன்? என்ற கேள்விக்கு பதில் அளித்த இயக்குநர் விஜய், “தலைவி படம் பண்ணும் போது, எழுத்தாளர் ஏ.மகாதேவ் சார் தான் இந்த கதையை என்னிடம் சொன்னார். கதையில் ஆக்ஷனோடு அதே அளவு எமோஷனல் இருந்தது, அது எனக்கு ரொம்ப பிடித்தது. அதனால் இந்த படத்தை இயக்க முடிவு செய்தேன். கதை முழுக்க முழுக்க வெளிநாட்டில் நடப்பது போலவும், குறிப்பாக லண்டனில் நடப்பது போல தான் அவர் எழுதியிருந்தார். அதனால் தான் வெளிநாட்டில் படமாக்கினோம். கதைக்காக தான் லண்டனில் படப்பிடிப்பு நடத்தினோம். அது படம் பார்க்கும் போது உங்களுக்கு தெரியும்.” என்றார்.
அருண் விஜயை இயக்கிய அனுபவம் பற்றி கேட்டதற்கு, “அருண் விஜய் சாருடன் படம் பண்ணுவதற்கு பேசிக்கொண்டிருந்தேன், அப்போது தான் இந்த கதை பண்ணலாம் என்று தோன்றியது. படம் முழுவதும் ஆக்ஷன் தான், ஆனால் அதை எமோஷனலாகவும் சொல்லியிருக்கிறேன். இப்படி ஒரு பலமான ஆக்ஷன் கதையை யாரை வைத்து பண்ணுவது என்று யோசித்த போது தான் அருண் சார் நினைவுக்கு வந்தார். உடனே அவரிடம் கதையை சொல்லி, இந்த கதையை நீங்கள் செய்தால் சரியாக இருக்கும் என்றேன், அவரும் சம்மதித்தார்.
படத்திற்குள் அவர் வந்த பிறகு எந்த விஷயத்தை பற்றியும் கவலைப்படவில்லை. ஆக்ஷன் காட்சிகளில் டூப் போடலாம் என்று சொன்னால் கூட, இல்ல சார், நானே செய்கிறேன், என்று சொல்லி நடிப்பார். படப்பிடிப்பில் பல முறை அவருக்கு காயம் ஏற்பட்டது. லண்டனில் பேருந்து ஒன்றில் சண்டைக்காட்சி படமாக்கினோம், அந்த சண்டைக்காட்சியில் அவரது காலில் அடிபட்டு வீங்கிவிட்டது. மிகப்பெரிய பாதிப்பாக இருந்தாலும், அறுவை சிகிச்சை செய்யாமல், சில நாட்கள் சிகிச்சை மற்றும் ஓய்வுக்குப் பிறகு நடித்தார். அப்போதும் சண்டைக்காட்சிகள் தான் படத்தில் இருக்கும். ஆனால், அவர் எந்த இடத்திலும் முடியாது, என்று சொல்லாமல் நடித்தார். ஒரு முறை டம்மி சங்கிலி சரியில்லை என்றதுமே, ஒரிஜினல் சங்கிலியை கையில் சுற்றிக்கொண்டு சண்டைப்போட வைத்தோம், அந்த சங்கிலி மிகப்பெரியதாக இருக்கும், அதை அவர் கையில் கட்டிக்கொண்டு சண்டைக்காட்சியில் நடித்த போது கையில் இரத்தம் வடிந்தது. ஆனால், அவர் அந்த காட்சியில் நடித்தார். அவர் கையில் இரத்தம் வருவதை நான் பார்த்தாலும், காட்சியை பாதியில் நிறுத்தாமல் தொடர்ந்து படமாக்கினேன், எனக்கும் அது தர்மசங்கடமாக இருந்தது, ஆனால் அவர் அந்த வலியை தாங்கிக்கொண்டு நடித்துக்கொடுத்தார். அவருடைய அப்படி ஒரு அர்ப்பணிப்பால் தான் படம் சிறப்பாக வந்திருக்கிறது.” என்றார்.
நடிகர் அருண் விஜய் படம் குறித்து கூறுகையில், “விஜய் சாருடன் இணைந்து பணியாற்ற இருந்த போது, மதராசப்பட்டினம் போல ஒரு பெரிய படமாக இருக்க வேண்டும் என்று விரும்பினேன். அப்போது தான் அவர் இந்த கதையை சொன்னார். கதை நன்றாக இருந்தது, அதேபோல் படத்தில் ஆக்ஷனோடு எமோஷனும் இருந்தது. அவரும் இந்த படம் செய்தால் நன்றாக இருக்கும் என்று சொன்னதால் படத்தில் நடித்தேன். படம் முடிந்துவிட்டது, மிக சிறப்பாக வந்திருக்கிறது. படம் முழுவதும் ஆக்ஷன் காட்சிகள் இருக்கும் என்று சொல்வதை விட, படம் முழுவதிலும் ஆக்ஷன் மூட் இருக்கும். அது ரசிகர்களுக்கு சிறப்பான தியேட்டர் அனுபவத்தை கொடுக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது.
ஹரி சாருடன் யானை போன்ற கமர்ஷியல் படம் பண்ணேன், இப்போது பாலா சார் இயக்கத்தில் நடிக்க இருக்கிறேன். இந்த படத்திலும் கடினமாக உழைத்திருக்கிறேன். இப்படி ஒவ்வொரு படத்திலும் உடலை வறுத்திக்கொண்டு நடிப்பது எனது வீட்டில் இருப்பவர்களுக்கு கஷ்ட்டமாக இருந்தாலும், அனைத்துவிதமான வேடங்களில் நடிப்பதோடு, பெரிய பெரிய இயக்குநர்களின் படங்களில் பணியாற்ற வேண்டும் என்பது தான் என் விருப்பம். அதற்காக தான் இப்படி கடினமாக உழைக்கிறேன், இனியும் இது தொடரும்.” என்றார்.
லண்டனில் நடக்கும் கதையாக இருந்தாலும், சென்னையில் போடப்பட்ட லண்டன் சிறைச்சலை செட் படத்தில் பிரமிக்க வைக்கும் விதத்தில் இருக்குமாம். சுமார் 5 கோடி ரூபாய் செலவில் 4.5 ஏக்கர் நிலப்பரப்பளவில் போடப்பட்ட அந்த செட் மழை மற்றும் புயலால் இரண்டு முறை பாதிப்படைந்து பிறகு மீண்டு புதுப்பிக்கப்பட்டதாம். அதுமட்டும் இன்றி, சிறைச்சாலையில் கைதிகளாக இருக்கும் 250 வெளிநாட்டினரை சென்னைக்கு அழைத்து வந்து நடிக்க வைத்ததும் பெரும் சவாலாக இருந்ததாக, கூறிய இயக்குநர் விஜய், அந்த சவால்களை சமாளித்து தற்போது வெற்றிகரமாக படத்தை முடித்ததற்கு ஸ்ரீ சீரடி சாய் மூவிஸ் நிறுவன தயாரிப்பாளர் ராஜசேகர் சார் முக்கிய காரணம், என்று தெரிவித்தார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாக உள்ள ‘மிஷன் - சாப்டர் 1’ திரையரங்கில் சென்று படம் பார்க்க கூடிய ரசிகர்களுக்கு புதிய அனுபவத்தை கொடுக்கும் மிகப்பெரிய ஆக்ஷன் திரைப்படமாக இருப்பதோடு, தொழில்நுட்ப ரீதியாக சினிமா ரசிகர்களை கவரக்கூடிய பிரம்மாண்டமான திரைப்படமாகவும் இருக்கும், என்று இயக்குநர் விஜய் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
நடிகர் விராட் கர்ணா - அபிஷேக் நாமா- கிஷோர் அன்னபு ரெட்டி - NIK ஸ்டூடியோஸ் - அபிஷேக் பிக்சர்ஸ் கூட்டணியில் உருவாகும் பான் இந்திய திரைப்படமான ' நாக பந்தம் ' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை முன்னணி நட்சத்திர நடிகரான ராணா டகுபதி வெளியிட்டார்...
விவசாயத்தில் சாதனை புரிபவர்களையும், அதற்கு உறுதுணையாக இருந்து பங்களிப்பவர்களையும் கெளரவப்படுத்தி அங்கீகரிக்கும் உழவன் ஃபவுண்டேஷனின் ‘உழவர் விருதுகள் 2025’ விழா கோலகலமாக சென்னையில் நடைபெற்றது...
தமிழ் சினிமாவில் புதிய வரலாற்றை படைக்கும் வகையில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘அகத்தியா’...