இலங்கையில் நடைபெற்ற தமிழ் இன அழிப்பை மையமாக வைத்து உருவாகியுள்ள திரைப்படம் ‘பேர்ல் இன் தி பிளட்’. (PEARL IN THE BLOOD) கென் கந்தையா இயக்கி தயாரித்திருக்கும் இந்த படத்தில் சம்பத் குமார் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். மேலும், ஜெயசூர்யா, காட்வின் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.
இப்படத்தின் சிறப்பு திரையிடல் மற்றும் அறிமுக விழா ஜூலை 16 ஆம் தேதி சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது. இதில் இயக்குநர் பேரரசு, டாக்டர்.காந்தராஜ், எழுத்தாளரும் நடிகருமான ஜெயபாலன், நடிகர் போண்டாமணி, இயக்குநர் கணேஷ் பாபு, நடிகர் ஆதேஷ் பாலா, சுலோச்சனா ஈவென்ட ஜனார்த்தனன், ஒளிப்பதிவாளர் சதீஷ், எடிட்டர் கணேஷ், ஆகியோர் கலந்துக் கொண்டார்கள். நிகழ்ச்சியை நந்தினி தொகுத்து வழங்கினார். மக்கள் தொடர்பு கோவிந்தராஜ்.
நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் பேரரசு, “காந்தராஜ் ஐயாவின் வீடியோ நிறைய பார்ப்பேன், பிரமித்து போவன். இந்த மாதிரி போல்டா பேச முடியுமா! என்று பிரமித்து போவேன். தற்போது இருக்கும் இளைஞர்களை விட நூறு மடங்கு பேசக்கூடியவர் தான் காந்தராஜ் ஐயா. எதை பற்றியும் கவலைப்படாமல் அதிரடியாக பேசுவார். அவருடைய வீடியோக்கள் மக்களிடம் சென்றடைய வேண்டும்.
இந்த படத்தோட வில்லன், கதாநாயகன், கதையை தாங்கி செல்லும் கதாபாத்திரம் என்று சம்பத் ராமை சொல்லலாம். அவர் நடிகர் என்பதை விட என் நண்பர். திருப்பாச்சி உள்ளிட்ட அனைத்து படங்களிலும் அவர் இருப்பார். ஆனால், அவரை பெரிதாக பயன்படுத்தவில்லைஅ என்பது எனக்கு ஒரு குறையாகவே இருக்கிறது. ஆனால், அவர் தொடர்ந்து என் படத்தில் இருப்பார். அதற்கு காரணம், அவரது ஈடுபாடு. சினிமாவை நேசிப்பது, விடாமல் தொடர்ந்து பயணிப்பது, அப்படிப்பட நடிகர்களை பார்க்கும் போது நான் அவர்களை என் படத்தில் பயன்படுத்திக்கொள்வேன். அப்படி ஒரு நடிகர் தான் சம்பத் ராம். இந்த படம் அவருக்கு மிகப்பெரிய பொக்கிஷம் அல்லது பரிசு என்று சொல்லலாம். அவரது சிறப்பான நடிப்பை பதிவு செய்த படம், இப்படி ஒரு வாய்ப்பு அளித்த கென் கந்தையாவுக்கு தான் அவர் நன்றி சொல்ல வேண்டும்.
இந்த படத்தை பார்க்கும் போது நமக்கு ஆத்திரம் வருகிறது. தமிழ் மக்களை இப்படி கொடூரமாக கொலை செய்திருப்பதை பார்க்கும் போது ரத்தம் கொதிக்கிறது. படத்தில் அந்த சிங்கள அதிகாரி அமைதியாக இருந்தாலும், அவரை பார்க்கும் போது நமக்கு எரிச்சல் வருகிறது. ஈழத்தமிழர்களுக்கு என்று ஒரு நாடு கிடைத்திருக்க வேண்டும் என்பது தான் நம் அனைவரது விருப்பம். ஆனால் , அது நடக்கவில்ல, அதற்கு ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சியை மட்டும் குறை சொல்ல கூடாது. அனைத்து அரசியல் கட்சிகளும் தான் காரணம். எது எதுக்கோ அனைத்து கட்சி கூட்டம் நடத்தியவர்கள் அங்கு நடக்கும் அவலத்தை தடுக்க நடத்தவில்லை. அரசியல் கட்சிகள் மட்டும் அல்ல ஒவ்வொரு தமிழனும் இதற்கு பொறுப்பேற்க வேண்டும்.
இந்த படத்தில் சில குறைகள் இருந்தாலும் அதை நாம் பெரிதாக பார்க்க கூடாது. காரணம், இது வியாபாரத்திற்காக எடுக்க்ப்பட்ட படம் அல்ல, தமிழர் என்ற உணர்வுக்காக எடுத்த படம். எனவே இந்த படத்தை உலக தமிழர்கள் அனைவரும் பார்த்து ஆதரவு அளிக்க வேண்டும். இப்படி ஒரு படத்தை இயக்கி தயாரித்த கென் கந்தையாவுக்கு பாராட்டுக்களை தெரிவித்துக்கொண்டு விடைபெறுகிறேன், நன்றி.” என்றார்.
டாக்டர்.காந்தராஜ் பேசுகையில், “‘பேர்ல் இன் தி பிளட்’ படத்தை பார்க்கும் போது, ஈழத்தில் வாழும் தமிழர்கள் அமைதியாக அவர்களுடைய வேலையை மட்டும் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள், ஆனால், அவர்களை சிங்கள ராணுவம் தேடிப்பிடித்து கொள்கிறது, என்பது தெளிவாக தெரிகிறது. இதை தடுக்க அங்கு யாரும் இல்லை. இப்படி ஒரு நிலையில் தான் ஈழத்தமிழர்களின் வாழ்க்கை இருக்கிறது. இதை மிக அழகாக இயக்குநர் கென் கந்தையா சொல்லியிருக்கிறார். படத்தில் காட்டப்பட்ட அம்மக்களின் நிலையை பார்க்கும் போது கோபம் வருகிறது, ஆத்திரம் வருகிறது, திரையை கிழித்துவிடலாமா என்று தோன்றுகிறது. நாம் ஏன் இவ்வளவு அமைதியாக இருக்கிறோம், அரசாங்கம் ஏன் இதில் அமைதி காக்கிறது, நாம் என்ன அனாதைகளா?. தமிழன் இல்லாத நாடே கிடையாது, ஆனால் தமிழனுக்கு என்று ஒரு நாடு கிடையாது, என்று வழக்கமாக சொல்வார்கள். ஆனால், ஈழப்போராளிகளின் போராட்டத்தை பார்த்த போது நிச்சயம் தமிழர்களுக்கு என்று ஒரு நாடு கிடைத்து விடும் என்று நான் நினைத்தேன். பிரபாகரன் உள்ளிட்ட போராளிகளுடன் பயகியதால், நான் கண் மூடும் முன்பு தமிழர்களுக்கான தனி நாட்டை பார்த்துவிட்டு தான் இறப்பேன், என்று நினைத்தேன். ஆனால், அது இப்போது இல்லை என்று ஆகிவிட்டது. அதற்கான காரணம் இந்த படத்தை பார்க்கும் போது தெரிகிறது. அப்பாவி மக்களை அநியாயமாக கொலை செய்கிறார்கள். அதை கேட்பதற்கு யாரும் இல்லை. இந்த அவலம் எப்போது தீரும் என்ற கோபம் வருகிறது. அந்த கோபத்தை இந்த படம் நமக்கு கொடுக்கிறது. இப்போது கூட ஈழத்திற்காக எந்த போராட்டமாக இருந்தாலும் அதில் கலந்துக்கொள்ள நான் தயாராக இருக்கிறேன். இப்படி ஒரு உணர்ச்சிக்கரமான படத்தை எடுத்த கென் கந்தயாவுக்கு என் பாராட்டுக்கள்.” என்றார்.
எழுத்தாளர் ஜெயபாலன் பேசுகையில், “டாக்டர்.காந்தராஜ் சொல்கின்ற பல விஷயங்களை நான் ஏற்றுக்கொள்கிறேன். விடுதலை போராட்ட இயக்கங்களின் அனைத்து தலைவர்களுடனும் எனக்கு நட்பு இருந்தது. இந்திய அரசாங்கம் மற்றும் இலங்கை புலிகள் இடையிலான அமைதி பேச்சு வார்த்தை உள்ளிட்டவைகளிலும் நான் ஈடுபட்டிருக்கிறேன். இந்த படத்தை பொருத்தவரையில் நடிகர்கள் அனைவரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். சம்பத்குமார் உள்ளிட்ட அனைத்து நடிகர்களும் நன்றாக நடித்திருக்கிறார்கள். போராட்டம் பற்றி இப்படி ஒரு படத்தை எடுத்ததற்காகவும், அதற்காக பணம் செலவு செய்ததற்காகவும், இந்த படத்தின் மூலம் ஈழப் போராட்டத்தை மீண்டும் நமக்கு நினைவுப்படுத்தியதற்காகவும் கென் கந்தையாவுக்கு என் பாராட்டுக்கள்.” என்றார்.
நடிகர் போண்டா மணி பேசுகையில், “இந்த படத்தை பார்த்து நான் அழுதுவிட்டேன். நான் இலங்கை தமிழனாக பாதிக்கப்பட்டவன், இலங்கை ராணுவத்தில் பிடிபட்டு அடிபட்டு தப்பித்திருக்கிறேன். இந்திய ராணுவத்திலும் மாட்டி தப்பித்து வந்தவன் தான் இந்த போண்டா மணி. எங்க ஊர் மன்னாரில், சிங்கள அதிகாரி ஒருவன் காலையில் இருந்து இரவு வரை சுமார் 500 பேரை சுட்டுக்கொன்றான். பிறகு நாங்க ஒன்று சேர்ந்து அவனை அடித்து கொலை செய்தோம். 42 பேரை ஒன்றாக நிக்க வச்சி சுட்டான். அதில் நானும் ஒருவனாக இருந்து உயிர் பிழைத்து வந்தேன். எங்க அம்மா,தம்பி, அண்ணன் என அனைவரும் ஒரே படகில் தப்பித்து வந்த போது, ராமேஸ்வரம் அருகே குண்டு போட்டு கொண்ணாங்க, அதில தப்பித்து இங்கே வந்தே. இந்த படத்தில் இயக்குநர் கென் கந்தையா சம்பத் ராமை சிங்கள அதிகாரியாக நடிக்க வைத்திருக்கிறார். அவர் மிக சிறப்பாக நடித்திருக்கிறார். சம்பத் ராம் சிறப்பான நடிகர், 25 வருடங்களாக சினிமாவில் போராடி வருகிறார். ஆனால், அவருக்கான சரியான இடம் இன்னும் கிடைக்கவில்லை, நிச்சயம் அதை இந்த படம் பெற்று தரும் என்ற நம்பிக்கை இருக்கிறது. பேரரசு சார் பெரிய ஹிட் படங்களை கொடுத்தவர். இன்றைக்கு அந்த ஹீரோக்கள் அவருக்கு வாய்ப்பு கொடுக்க கூடாதா!, குறைவான சம்பளம் வாங்கும் போது அவர்களுக்கு பெரிய வெற்றியை பேரரசு சார் கொடுத்தார். ஆனால், இன்று புதியவர்களுக்கு வாய்ப்பு கொடுத்து வருகிறார்கள். இந்த படத்தை பார்க்கும் போது எனது பழைய நினைவுகள் வந்துவிட்டது. படத்தின் ஒவ்வொரு காட்சியை பார்க்கும் போது நமக்கு சிங்கள வெறியர்கள் மீது வெறி வருகிறது. அந்த அளவுக்கு ஈழத் தமிழர்கள் அதிகம் கஷ்ட்டப்படுகிறார்கள். ஈழத் தமிழர்களுக்கு நிச்சயம் ஒரு தனி நாடு கிடைக்கும்.” என்றார்.
நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட மற்ற சிறப்பு விருந்தினர்கள் ‘பேர்ல் இன் தி பிளட்’ படம் உலகளவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று பேசியதோடு, இப்படி ஒரு படத்தை இயக்கி தயாரித்த கென் கந்தையாவை பாராட்டினார்கள்.
‘பேர்ல் இன் தி பிளட்’ திரைப்படம் விரைவில் முன்னணி ஒடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது. அது பற்றிய அறிவிப்பை படக்குழு விரைவில் அறிவிக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகர் விராட் கர்ணா - அபிஷேக் நாமா- கிஷோர் அன்னபு ரெட்டி - NIK ஸ்டூடியோஸ் - அபிஷேக் பிக்சர்ஸ் கூட்டணியில் உருவாகும் பான் இந்திய திரைப்படமான ' நாக பந்தம் ' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை முன்னணி நட்சத்திர நடிகரான ராணா டகுபதி வெளியிட்டார்...
விவசாயத்தில் சாதனை புரிபவர்களையும், அதற்கு உறுதுணையாக இருந்து பங்களிப்பவர்களையும் கெளரவப்படுத்தி அங்கீகரிக்கும் உழவன் ஃபவுண்டேஷனின் ‘உழவர் விருதுகள் 2025’ விழா கோலகலமாக சென்னையில் நடைபெற்றது...
தமிழ் சினிமாவில் புதிய வரலாற்றை படைக்கும் வகையில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘அகத்தியா’...