அறிமுக இயக்குநர் ஹாரூண் இயக்கத்தில், நட்டி நட்ராஜ் நாயகனாக நடித்திருக்கும் படம் ‘வெப்’. கதாநாயகியாக ஷில்பா மஞ்சுநாத் நடித்திருக்கிறார். இவர்களுடன் நான் கடவுள் ராஜேந்திரன், சாஷ்வி பாலா, சுபப்பிரியா, முரளி ராதாகிருஷ்ணன், அனன்யா மணி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.
கார்த்திக் ராஜா இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு கிறிஸ்டோபர் ஜோசப் ஒளிப்பதிவு செய்திருக்கிறார் சுதர்ஷன் படத்தொகுப்பு செய்ய, நிர்வாக தயாரிப்பாளராக கே.எஸ்.கே.செல்வா பணியாற்றியுள்ளார். வேலன் புரொடக்ஷன்ஸ் சார்பில் வி.எம்.முனிவேலன் தயாரித்திருக்கும் இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் படக்குழுவினருடன் சிறப்பு விருந்தினர்களாக தயாரிப்பாளர்கள் கே.ராஜன், தனஞ்செயன், இயக்குனர்கள் ஆர்.வி.உதயகுமார், சுப்பிரமணிய சிவா, நடிகை ரேகா நாயர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
படம் குறித்து இயக்குநர் ஹாரூண் பேசுகையில், “நல்ல படைப்புகளை தொடர்ந்து மக்களிடம் கொண்டு போய் சேர்க்கும் பத்திரிக்கையாளர்களுக்கு நன்றி. பெரும்பாலும் ஒரு கட்டடம் அழகாக தெரிவதைத்தான் பார்ப்பார்கள். ஆனால் அதன் அடித்தளம் யாருக்கும் தெரியாது. அதுபோலத் தான் தயாரிப்பாளர்களும்.. கார்த்திக் ராஜாவிடம் இந்த படத்தின் கதை பற்றி கூறிய போது, அப்பா (இளையராஜா) சைக்கோ படத்திற்கு ஒரு விதமாக பண்ணினார். நான் இதில் ஒரு புது மாதிரியாக முயற்சிக்கிறேன் என்று ஊக்கமளித்தார். நடிகர் நட்டி புது இயக்குனர் என நினைக்காமல் 100% எங்களை நம்பினார். இந்த படத்தின் கதாநாயகிகள் தங்களுக்குள் ஆடை சம்பந்தமாக எந்த பிரச்சினையும் வரவில்லை என்று சொன்னார்கள்.. அதற்கு காரணம் இரண்டு பாடல்களைத் தவிர கிளைமாக்ஸ் வரை அனைவருக்கும் ஒரே காஸ்டியூம் தான். ஜெயிலர் திரைப்படம் வரும் அதே மாதத்தில் எங்களது படமும் வெளியாவதில் மகிழ்ச்சி” என்றார்.
தயாரிப்பாளர் முனிவேலன் பேசுகையில், “சமூகத்திற்கு ஒரு நல்ல ஒரு மெசேஜ் சொல்லும் படமாக இது உருவாகியுள்ளது. இந்த இடத்தில் தயாரிப்பாளர் சங்கத்திற்கும் அரசாங்கத்திற்கும் சில வேண்டுகோள்களை வைக்கிறேன். படத்தில் நடித்துள்ள நடிகர் நடிகைகள் கட்டாயம் படத்தின் புரமோசனுக்கு ஒத்துழைப்பு தர வேண்டும். அப்படி தராத நடிகர்கள் மீது தடை விதிக்க வேண்டும். ஓடிடி வியாபாரத்தை ஒழுங்குபடுத்தி தரவேண்டும். மேலும் பைரசியை தடுக்க வேண்டும்” என்றார்.
நடிகர் நட்டி பேசுகையில், “எங்களுக்கு சம்பளத்துடன் ஜிஎஸ்டியும் சேர்த்து கொடுத்த தயாரிப்பாளர்களில் வெப் படத்தின் தயாரிப்பாளரும் ஒருவர். இயக்குனர் ஹாரூன் இதுவரை எந்த படத்திலும் உதவி இயக்குனராக பணியாற்றாவிட்டாலும் அவர் முதல் காட்சியை எடுக்கும் போதே அவர் வேலை தெரிந்தவர் தான் என்பது தெரிந்து விட்டது. இப்போதைய சூழலில் பல பேர் தங்களது மன அழுத்தத்தை குறைப்பதற்காக சில விஷயங்களை செய்கிறார்கள். ஆனால் அவை ஆபத்து நிறைந்த ஒன்வே டிராபிக் என்பது பற்றி விளக்கும் படம் தான் இந்த வெப்” என்றார்.
இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் பேசுகையில், “நடிகர் நட்டி தேர்ந்தெடுக்கும் கதைகள் எல்லாமே வித்தியாசமாக இருக்கிறது. கார்த்திக் ராஜா ஜீனியஸ் இசையமைப்பாளர்களில் ஒருவர். அவர் சிறுவயதாக இருந்தபோதே நான் அவரிடம் சின்னக்கவுண்டர் படத்தின் கதையை கூறியிருக்கிறேன். நான் இயக்கிய உறுதிமொழி படத்திற்கு டிரைலரை உருவாக்கும்போது அப்போது கார்த்திக் ராஜாவும் திலீப் என்கிற பெயரில் இருந்த ஏ..ஆர் ரகுமானும் தான் அதை செய்து கொடுத்தனர். அதன்பிறகு பொன்னுமணி படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் கார்த்திக் ராஜா இசையமைத்து கொடுத்தார்.” என்றார்.
நடிகை சுபப்பிரியா பேசுகையில், “ஒரு படத்தில் ஒரு நடிகை இருந்தாலே சமாளிப்பது கஷ்டம். இந்தப்படத்தில் 5 பேர் இருந்தாலும் படப்பிடிப்பின்போது பெண்களுக்கான பாதுகாப்பு, தங்கும் வசதி, சாப்பாடு என எல்லாவற்றிலும் எங்களை நல்ல விதமாக பார்த்துக் கொண்டனர். யாரிடமும் உதவி இயக்குனராக பணியாற்றாத இயக்குனர் ஹாரூன் படப்பிடிப்பு தளத்தில் ஒவ்வொரு பேச்சுக்கும் கவுன்ட்டர் கொடுத்து ஜாலியாக படப்பிடிப்பை நடத்தினார். கதாநாயகன் நட்டியும் எப்பொழுதும் ரஜினி பாடலை உற்சாகமாக பாடிக்கொண்டு அனைவரையும் கலகலப்பாக வைத்திருந்தார்.” என்றார்.
நடிகர் முரளி ராதாகிருஷ்ணன் பேசுகையில், ”சமூகத்திற்கு தேவையான ஒரு விஷயத்தை இந்த படத்தில் சொல்லி இருக்கிறோம். இந்த படத்தின் தயாரிப்பாளர் கோயம்பேட்டில் மிகப்பெரிய வியாபாரி என்பதால் கோயம்பேடு மார்க்கெட் ஆட்கள் பார்த்தாலே இந்த படம் ஹிட் ஆகிவிடும். நடிகர் நட்டி எந்தவித பந்தாவும் காட்டாதவர். அவரை மாதிரி இருக்க நானும் முயற்சி செய்வேன். படத்தின் ஒளிப்பதிவாளர் கிறிஸ்டோபர் ஜோசப் ஹீரோயின்களுக்கு மத்தியில் எங்களையும் அழகாக காட்டியுள்ளார்.” என்றார்.
பாடலாசிரிசிரியர் ஜெகன் கவிராஜ் பேசுகையில், “அதிர்ஷ்டம் என்றாலே அது இஷ்டத்துக்கு வரும் என்பார்கள் அப்படி வந்த வாய்ப்பு தான் இது. இளையராஜாவின் முதல் ராஜாவான கார்த்திக் ராஜாவுடன் இணைந்து பணியாற்றியதன் மூலம் ராஜ வம்சத்தில் நானும் இணைந்துள்ளேன் என பெருமைப்படுகிறேன். பாடல் எழுதத் தெரிந்த ஒரு இயக்குனருடன் பணிபுரிந்ததில் சந்தோஷம்.” என்றார்.
பாடலாசிரியர் அருண்பாரதி பேசுகையில், “இந்த படத்திற்கு இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா தான் பாடல் எழுத என்னை அழைத்தார். இந்த படத்தில் நட்டியின் ஃப்ளாஷ்பேக்கில் அண்ணன் தங்கச்சிக்காக ஒரு பாடலை எழுதியுள்ளேன். இந்த படத்தை நான் பார்த்து விட்டேன். கிளைமாக்ஸ் உங்களை இருக்கை நுனியில் அமர வைக்கும் விதமாக இருக்கும். இந்த படத்தில் வேறொரு விதமான திரைக்கதையை கையாண்டுள்ளார் இயக்குனர் ஹாரூண்” என்றார்.
நடிகை சாஷ்வி பாலா பேசுகையில் “ஒரு படத்தின் பிரமோசனுக்கு அதில் நடித்த அனைவருமே கட்டாயம் வந்து கலந்து கொள்ள வேண்டும். இயக்குனர் ஹாரூண் எல்லா காட்சிகளையும் எனக்கு நடித்துக் காட்டினார். படத்தில் நட்டியுடன் நடிக்கும்போது அவரிடமிருந்து நிறைய கற்றுக் கொள்ளலாம் என்கிற ஆர்வத்தில் இருந்தேன். என்னை போன்ற இலங்கை தமிழ் கலைஞர்களுக்கு தமிழ் சினிமா தொடர்ந்து வாய்ப்புகள் தந்து ஆதரிக்க வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார்.” என்றார்.
நடிகை ரேகா நாயர் பேசுகையில், “ஹீரோயின் வரவிலைலை என்று யாரும் கவலைப்பட வேண்டாம். அதனாலேயே படமும் ஹிட் ஆகிவிடும். ஹீரோயினும் பிரபலமாகி விடுவார். நட்டி சாரைப் பொறுத்தவரை அவர் ஒரு ஞானி. அது அவர்களுடன் பேசி பழகியவர்களுக்கு தான் தெரியும். நட்டி எல்லோருக்குமே வாய்ப்புகளை தேடி கொடுக்கிறார். தயாரிப்பாளரின் பெயரிலேயே முனி இருப்பதால் நிச்சயமாக காத்து கருப்பு அண்டாது. நடிகர் முரளி இங்கே வருத்தப்பட்டதை பார்க்கும்போது அவர் இத்தனை வருடங்களாக இன்னும் முள் பாதையிலேயே நடந்து கொண்டிருக்கிறார் என்பது தெரிகிறது. விரைவில் அவருக்கு வெல்வெட் பாதையில் நடக்கும் வாய்ப்பு கிடைக்கும்” என்றார்.
தயாரிப்பாளர் கே.ராஜன் பேசுகையில், “நடிகர் நட்டி இருக்கும் இடம் எப்போதும் ஒற்றுமையாக இருக்கும். அவருடன் நான் பகாசுரன் என்கிற படத்தில் இணைந்து சில நாட்கள் நடித்தபோது, அவரது அற்புதமான குணத்தை கண்டு ஆச்சரியப்பட்டேன் . ஒழுக்க நெறி கொண்ட நடிகர் அவர். தயாரிப்பாளருக்கு துரோகம் செய்கின்ற, டார்ச்சர் கொடுக்கின்ற எந்த ஒரு நடிகர் என்றாலும் அவர்களை ஒதுக்கி வைக்க வேண்டும். கடந்த ஒரு வருடமாக சின்ன படங்களுக்கு மக்கள் நல்ல வரவேற்பு கொடுத்து வருகிறார்கள். லவ் டுடே, டா டா, குட் நைட், போர் தொழில் என அந்த வரிசையில் இந்த வெப் படமும் இடம் பெறும்” என்றார்.
இயக்குநர் சுப்பிரமணிய சிவா பேசுகையில், “யாருக்கும் தெரியாத விஷயம் இந்த படத்தின் இயக்குநர் ஹாரூண் மிகுந்த நகைச்சுவை உணர்வு கொண்டவர். நட்டியை சமூகம் என்று தான் நான் கூப்பிடுவேன். காரணம் அவரை பார்க்க செல்லும் போதெல்லாம் எப்போதும் நான்கு ஐந்து நண்பர்கள் அவருடன் இருப்பார்கள். எல்லோரும் அவர் கஷ்டப்பட்ட காலத்தில் இருந்தே உடன் இருந்த நண்பர்கள். அப்படி பழைய நண்பர்களை அரவணைத்து செல்வது வெகு சிலர் மட்டுமே. இந்த படத்தின் டைட்டான வலை என்பது பற்றி சொல்ல வேண்டும் என்றால் உங்களை லட்சம் பேர் இப்போது கண்காணித்துக் கொண்டிருக்கிறார்கள் ஆப்ஷனோட இருக்கும் ஆபத்துதான் இந்த வலை” என்றார்.
தயாரிப்பாளர் தனஞ்செயன் பேசுகையில், “நடிகர் நடிகைகள் படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கு கொள்ளத்தான் வேண்டும். அதே சமயம் அது வேறு ஒரு படத்தின் படப்பிடிப்பு உள்ளிட்ட வேலைகளை ரத்து செய்துவிட்டு அவர்கள் வருவதற்கு சிரமமாக கூட இருக்கலாம். அதனால் தங்கள் விழா பற்றி முறையான அறிவிப்பை முன்கூட்டியே படக்குழுவினர் அவர்களுக்கு தெரிவித்து விட்டால் அவர்களுக்கும் கலந்து கொள்ள ஏதுவாக இருக்கும். படம் நல்ல படமாக இருந்தால் நிச்சயமாக இப்போது ஒதுங்கிப்போனவர்கள் எல்லாம், நாளை சாட்டிலைட் ரைட்ஸ், டிஜிட்டல், ஓடிபி என வியாபாரம் பேச தேடி வருவார்கள்.
சினிமா தயாரிக்க வருபவர்கள் கனத்த இதயத்துடன் தான் வர வேண்டும் தயாரிப்பாளர் சங்கம் தயாரிப்பாளர்களின் பிரச்சினைகளுக்கு உறுதுணையாக உதவியாக இருக்குமே தவிர அவர்களின் வியாபார விஷயங்களில் நிச்சயமாக பொறுப்பெடுத்துக் கொள்ள முடியாது. ஒருவேளை படம் தோல்வி அடைந்தாலும் வருத்தப்படக்கூடாது. தவறுகளை எப்படி களைவது என அதிலிருந்து கற்றுக்கொண்டு அடுத்த படத்தில் அதை சரி செய்ய வேண்டும். நடிகர் நட்டி அடுத்தடுத்து பிரம்மாண்ட படங்களில் நடிக்க இருக்கிறார். வரும் நாட்களில் அவர் உலக அளவில் பேசப்படுவார்” என்றார்.
இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா பேசுகையில், நான் தமிழுக்கு அடிமை. ஹீரோயின்கள் அழகாக தமிழ் பேசியதை பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருந்தது. நட்டியுடன் அவர் அறிமுகமான நாளை உட்பட 3 படங்களில் இணைந்து பணியாற்றியுள்ளேன் இயக்குநர் மிஷ்கின் போல ஒரு சிலர்தான் தங்களுக்கு என்ன வேண்டும் என்பதை கேட்டு வாங்குவதை சரியாக தெரிந்து வைத்து இருப்பார்கள் அந்த வகையில் இந்த படத்தின் இயக்குனர் ஹாரூணும் ஒருவர்” என்றார்.
விறுவிறுப்பான மற்றும் வித்தியாசமான படமாக உருவாகியுள்ள ‘வெப்’ திரைப்படம் ஆகஸ்ட் 4 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.
நடிகர் விராட் கர்ணா - அபிஷேக் நாமா- கிஷோர் அன்னபு ரெட்டி - NIK ஸ்டூடியோஸ் - அபிஷேக் பிக்சர்ஸ் கூட்டணியில் உருவாகும் பான் இந்திய திரைப்படமான ' நாக பந்தம் ' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை முன்னணி நட்சத்திர நடிகரான ராணா டகுபதி வெளியிட்டார்...
விவசாயத்தில் சாதனை புரிபவர்களையும், அதற்கு உறுதுணையாக இருந்து பங்களிப்பவர்களையும் கெளரவப்படுத்தி அங்கீகரிக்கும் உழவன் ஃபவுண்டேஷனின் ‘உழவர் விருதுகள் 2025’ விழா கோலகலமாக சென்னையில் நடைபெற்றது...
தமிழ் சினிமாவில் புதிய வரலாற்றை படைக்கும் வகையில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘அகத்தியா’...