டிஜிட்டல் தொழில்நுட்ப வளர்ச்சியால் மனிதர்களின் உள்ளங்கையில் உலகம் வந்துவிட்டது என்பதெல்லாம் பழைய கதையாகி விட்ட நிலையில், தற்போது ஒரு கணினியே மனிதனை போல் செயல்படுவதோடு, எதிர் விணையாற்றவும் வைக்கும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் வளர தொடங்கி விட்டது. பல்வேறு துறைகளில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் வேகமாக வளர்ந்து வரும் நிலையில், திரைத்துறையிலும் அத்தொழில்நுட்பத்தால் மிகப்பெரிய தாக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், ஹாலிவுட் திரையுலகமே இத்தகைய தொழில்நுட்பத்திற்கு எதிராக குரல் கொடுக்க தொடங்கியிருக்கும் நிலையில், தமிழ் சினிமாவில் முதல் முறையாக ’வெப்பன்’ திரைப்படத்தில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. சுமார் இரண்டரை நிமிடங்கள் ஓடும் பிளாஷ்பேக் காட்சிகளை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் ‘வெப்பன்’ படக்குழு படமாக்கியுள்ளது.
இரண்டரை நிமிட காட்சிகளில் மட்டும் புதிய தொழில்நுட்பத்தை கையாளாமல் முழு படத்தையுமே புதிய முயற்சியாக இவர்கள் உருவாக்கியிருக்கிறார்கள். குறிப்பாக உலகம் முழுவதும் ஏராளமன ரசிகர்களின் பேவரைட் ஜானர் படங்களாக இருக்கும் ஹாலிவுட் மார்வெல் மற்றும் டிசி கதாபாத்திரங்களைப் போல், நம் மக்களை எளிதில் தொடர்புப்படுத்தும் வகையில், நம் கலாச்சாரங்களுக்கு ஏற்ற சூப்பர் ஹூமன் கதாபாத்திரங்களை உருவாக்கி அதன் மூலம் கோலிவுட்டில் ஒரு புதிய உலகத்தை உருவாக்கும் நோக்கத்தில் ‘வெப்பன்’ படத்தை உருவாக்கியுள்ளார்கள்.
மில்லியன் ஸ்டுடியோ சார்பில் எம்.எஸ்.மன்சூர் தயாரிப்பில், ‘சவாரி’ திரைப்படம் மற்றும் ‘வெள்ள ராஜா’ இணையத் தொடரை இயக்கிய குகன் சென்னியப்பன் இயக்கியிருக்கும் இப்படத்தில் சத்யராஜ் மற்றும் வசந்த் ரவி கதையின் நாயகர்களாக நடித்திருக்கிறார்கள். பிரபல ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான ராஜீவ் மேனன் முக்கிய வில்லனாக நடித்திருக்கிறார். இவர்களுடன் தன்யா ஹோப், மாயா, மைம் கோபி, கனிகா, யாஷிகா ஆனந்த், ராஜீவ் பிள்ளை, கஜராஜ், வேலு பிரபாகரன், பரத்வாஜ் ரங்கநாதன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.
விரைவில் ’வெப்பன்’ படத்தின் டீசர் வெளியாக உள்ள நிலையில், படத்தின் இயக்குநர் குகன் சென்னியப்பன் மற்றும் தயாரிப்பாளர் எம்.எஸ்.மன்சூர் பத்திரிகையாளர்களை சந்தித்து படம் குறித்து பகிர்ந்துக்கொண்டார்கள்.
படம் பற்றி இயக்குநர் குகன் சென்னியப்பன் கூறுகையில், “வெள்ள ராஜா தொடர் வெளியாகி நான்கு வருடங்களுக்குப் பிறகு என் இயக்கத்தில் வெப்பன் படம் வெளியாக இருக்கிறது. இந்த பெரிய இடைவெளிக்கு காரணம், வெப்பன் படத்தின் கதைக்களம் தான். சாதாரண ஒரு கதைக்களத்தில் படம் இயக்க வேண்டும் என்றால் எப்போதோ இயக்கியிருப்பேன். ஆனால், அப்படி இல்லாமல் ஒரு புதிய முயற்சியாக தான் இந்த படத்தை இயக்கியிருக்கிறேன். ஹாலிவுட்டில் மிகப்பெரிய வெற்றியாக தொடரும் மார்வெல் மற்றும் டிசி கதாபாத்திரங்கள் போல் தமிழ் சினிமாவிலும் உருவாக்க வேண்டும் என்று விரும்பினேன், அதற்கான ஒரு கதைக்களத்தை உருவாக்குவதற்கு தான் எனக்கு இவ்வளவு வருடங்கள் தேவைப்பட்டது.
இந்த படத்தில் சத்யராஜ் சார் சூப்பர் ஹூமன் வேடத்தில் நடிக்கிறார். அவர் இயற்கையான சூப்பர் ஹூமன் கிடையாது, செயற்கையாக உருவாக்கப்பட்ட ஒரு சூப்பர் ஹூமன். அவர் எப்படி உருவானார், அவரை உருவாக்கியது யார்? என்பதை தான் இந்த படத்தில் சொல்லியிருக்கிறேன். இப்படி சூப்பர் ஃபவர் கொண்ட கதாபாத்திரங்களை மார்வெல் மற்றும் டிசி அறிமுகப்படுத்தியிருந்தாலும், அவை அனைத்தும் அவர்களுடைய கலாச்சாரத்தின் பின்னணியை கொண்டவைகளாக மட்டுமே இருக்கிறது. ஆனால், நான் நம்முடைய கலாச்சாரத்திற்கு ஏற்ப, நமக்கு கனெக்ட் ஆக கூடிய வகையிலான சூப்பர் ஹூமன் கதாபாத்திரத்தை உருவாக்கும் நோக்கத்தில் தான் சத்யராஜ் சார் கதாபாத்திரத்தை வடிவமைத்திருக்கிறேன். அவர் தான் வெப்பன், அதாவது எந்த ஆயுதத்தாலும் அழிக்க முடியாத மனித வெப்பன். அவர் அப்படி மாறியது எப்படி? என்ற ரீதியில் கதை பயணிக்கும். வசந்த் ரவி யுடியுப் சேனல் நடத்துபவராக வருகிறார். செயற்கையான சூப்பர் ஹூமன்களை தேடும் அவர், சத்யராஜையும் தேடுகிறார், அவரைப் போல் மேலும் சிலர் அவரை தேடுகிறார்கள், அது ஏன்? என்பது தான் கதை.
சூப்பர் ஹூமன் கதாபாத்திரத்தை வைத்துக்கொண்டு ஒரு படம் எடுக்க மிகப்பெரிய செலவு ஆகும் என்பது தெரியும், ஆனால் அந்த சூப்பர் ஹூமன் எப்படி உருவானார் என்பதை சொல்வதற்கு மிகப்பெரிய செலவு ஆகாது. அதை தான் இந்த படத்தில் நாங்கள் கையாண்டிருக்கிறோம். இதில், சத்யராஜ் சாருக்கு எப்படி சக்தி கிடைத்தது என்பதையும், அவரை தேடும் குழுவினர் பற்றியும் சொல்லியிருக்கிறோம். முதல் பாகமான இந்த படம் வெளியான பிறகு இதில் இருக்கும் கதாபாத்திரங்களை கொண்டு அடுத்தடுத்து கதைகளை சொல்வோம், அவற்றை வேண்டுமானால் மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாரிப்போம்.” என்றார்.
படத்தின் பிளாஷ் பேக் காட்சியில் செயற்கை நுண்ணறிவு பயன்படுத்தியது குறித்து கேட்டதற்கு, “செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை திட்டமிட்டு பயன்படுத்தவில்லை, படப்பிடிப்பு முடிந்துவிட்டது, பிளாஷ்பேக் காட்சியை விரைவாக எடுத்து முடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அப்போது தான் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதற்கான யோசனை வந்தது, சரி பயன்படுத்தி பார்ப்போம் என்று தான் முயற்சித்தோம். சத்யராஜ் சார் மற்றும் வசந்த் ரவி ஆகியோர் இடம் பெரும் சுமார் இரண்டரை நிமிட காட்சிகளை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் படமாக்கியிருக்கிறோம். செயற்கை நுண்ணறிவு முறையை நான் என் படத்தில் பயன்படுத்தியதற்காக, அந்த தொழில்நுட்பத்தை வரவேற்கவில்லை, அதுபோன்ற தொழில்நுட்பங்கள் படைப்பாளிகளை நிச்சயம் அழித்து விடும், எனவே அந்த தொழில்நுட்பத்தை நான் எதிர்க்கவே செய்கிறேன்.” என்றார்.
இயக்குநர் ராஜீவ் மேனன் வில்லனாக நடித்தது குறித்து கேட்டதற்கு, “ராஜீவ் மேனன் சாரின் பயிற்சி மையத்தில் தான் நான் படித்தேன், அப்போது இருந்தே அவர் ஏன் நடிக்கவில்லை? என்ற கேள்வி என் மனதில் இருந்தது. இந்த படத்தின் பணிகள் தொடங்கிய போது, வில்லன் வேடத்திற்கு அவர் பொருத்தமாக இருப்பார் என்று தோன்றியது. ஆனால், அவரிடம் கேட்க தயக்கமாக இருந்தது. இருந்தாலும், இப்படிப்பட்ட வேடத்திற்கு அவர் மிகப்பொருத்தமாக இருப்பார் என்பதால் அவரை அனுகினோம், அப்போது அவர் விடுதலை படத்தில் நடிப்பது கூட எங்களுக்கு தெரியாது. அவரிடம் மூன்று முறை கதை சொன்னேன், மூன்று முறையும் பல சந்தேகங்களை கேட்டார், அதை தீர்த்த பிறகே நடிக்க சம்மதம் சொன்னார். அதுமட்டும் இன்றி, இந்த படத்தில் நான் நடிக்க ஒப்புகொள்ள, இந்த படத்தின் களம் தான் காரணம் என்றும் சொன்னார். இப்படிப்பட்ட கதைக்களம் கொண்ட படங்கள் வந்தால் தான் தமிழ் சினிமாவில் ஒரு திருப்புமுனை ஏற்படும், அதற்கு நானும் ஒரு காரணமாக இருக்க வேண்டும் என்பதற்காகவே நடிக்கிறேன், என்று சொல்லி தான் நடிக்க வந்தார்.” என்றார்.
இப்படி ஒரு படத்தை தயாரிக்க எப்படி முன் வந்தீர்கள்? என்று தயாரிப்பாளர் எம்.எஸ்.மன்சூரிடம் கேட்டதற்கு, “குகன் இதற்கு முன் இயக்கிய திரைப்படம் மற்றும் இணையத் தொடரை வைத்து தான் இந்த படத்தை தயாரிக்க முன் வந்தோம். அது மட்டும் இன்றி, இப்படி ஒரு புதிய கதைக்களம் கொண்ட படத்தை தமிழ் ரசிகர்களுக்கு கொடுக்க வேண்டும் என்று நாங்களும் விரும்பியதால் படத்தை தயாரித்தோம்.” என்றார்.
இறுதிக்கட்ட போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகளில் தீவிரம் காட்டி வரும் படக்குழு படத்தை ஆகஸ்ட் மாதம் வெளியிடுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது.
நடிகர் விராட் கர்ணா - அபிஷேக் நாமா- கிஷோர் அன்னபு ரெட்டி - NIK ஸ்டூடியோஸ் - அபிஷேக் பிக்சர்ஸ் கூட்டணியில் உருவாகும் பான் இந்திய திரைப்படமான ' நாக பந்தம் ' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை முன்னணி நட்சத்திர நடிகரான ராணா டகுபதி வெளியிட்டார்...
விவசாயத்தில் சாதனை புரிபவர்களையும், அதற்கு உறுதுணையாக இருந்து பங்களிப்பவர்களையும் கெளரவப்படுத்தி அங்கீகரிக்கும் உழவன் ஃபவுண்டேஷனின் ‘உழவர் விருதுகள் 2025’ விழா கோலகலமாக சென்னையில் நடைபெற்றது...
தமிழ் சினிமாவில் புதிய வரலாற்றை படைக்கும் வகையில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘அகத்தியா’...