Latest News :

’கும்பாரி’ பட பாடல்களால் பசியை மறந்த பிரபலங்கள்!
Friday August-18 2023

அறிமுக இயக்குநர் கெவின் ஜோசப் இயக்கத்தில், ராயல் எண்டர்பிரைசஸ் சார்பில் டி.குமாரதாஸ் தயாரிப்பில், நட்பு மற்றும் அண்ணன் தங்கை பாசத்தை மையப்படுத்தி உருவாகியுள்ள படம் ‘கும்பாரி’. இதில் கதாநாயகர்களாக விஜய் விஷ்வா மற்றும் புதுமுகம் நலீப் ஜியா நடித்திருக்கிறார்கள். நாயகியாக மஹானா சஞ்சீவி நடித்திருக்கிறார். இவர்களுடன் ஜான் விஜய், பருத்திவீரன் சரவணன், சாம்ஸ், மதுமிதா, செந்தி, காதல் சுகுமார் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.

 

பிரசாத் ஆறுமுகம் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு ஜெய்பிரகாஷ், ஜெய்சன், பிரித்வி ஆகிய மூன்று பேர் இசையமைத்துள்ளனர். டி.எஸ்.ஜெய் படத்தொகுப்பு செய்ய, மிராக்கிள் மைக்கேல் சண்டைக்காட்சிகளை வடிவமைத்துள்ளார்.  வினோதன், அருண்பாரதி, சீர்காழி சிற்பி ஆகியோர் பாடல்கள் எழுதியுள்ளனர்.

 

இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது. இதில் இயக்குநர்கள் கே.பாக்யராஜ், ஆர்.வி.உதயகுமார், எஸ்.ஆர்.பிரபாகர், சரவண சக்தி, நடிகர்கள் அப்புக்குட்டி, ஜீவா, ரோபோ சங்கர், பிரஜன், ஜெயிலர் கலையரசன், ராட்சசன் சரவணன், பின்னணி பாடகி மாலதி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக்கொண்டார்கள்.

 

நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் ஆர்.வி.உதயகுமார், “சமீபகாலமாக நட்பு பற்றி படம் எடுப்பது என்பதே குறைந்து வருகிறது. காரணம் நட்பே குறைந்து வருவது போல இருக்கிறது. அந்த வகையில் இந்த படத்தில் நட்பை முன்னிலைப்படுத்தி படம் எடுத்துள்ளது பாராட்டுக்குரியது. இந்த விழா சற்று தாமதமாக ஆரம்பித்ததால் பசி எடுத்தது உண்மை தான். அதே சமயம் இங்கே திரையிடப்பட்ட பாடல் காட்சிகளில் முத்தக் காட்சியை பார்த்ததும் பாதி பசி பறந்து விட்டது. இந்த விழா மேடையில் நாயகியின் அருகில் அமர எனக்கு இடம் கிடைத்ததும் மொத்த பசியும் போய்விட்டது. இதுவரை எந்த விழாக்களிலும் கதாநாயகியின் அருகில் அமர்ந்தது இல்லை. அதனால் தான் இந்த விழாவில் பாக்யராஜ் முதலில் பேசுவதாக கூறி கிளம்பி சென்றாலும் நான் கடைசி வரை இந்த நிகழ்வில் இருக்கிறேன் என்று உட்கார்ந்து விட்டேன். இந்த படத்தில் இரண்டு கதாநாயகர்களுக்கு இடையே இருக்கும் கெமிஸ்ட்ரி நன்றாக இருக்கிறது. படத்தின் நாயகி பேசும்போது இசையமைப்பாளர்களின் பெயர்கள் பற்றி தெரியவில்லை என்று கூறினார். அவர்கள் இசையமைத்த பாடல்களில் தான் நீங்கள் சினிமாவில் முகம் காட்டி பிரபலமாகிறீர்கள். நிச்சயம் அவர்களின் பெயரை தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும். கும்பாரி படத்தில் பாடல்கள் மற்றும் டிரைலர் போல் படமும் நன்றாக இருக்கும் என்று நம்புகிறேன், வெற்றி பெற வாழ்த்துகள்.” என்றார்.

 

இயக்குநர் கே.பாக்யராஜ் பேசுகையில், “’கும்பாரி’ என்பதன் அர்த்தம் எனக்கு முதலில் புரியவில்லை. இங்கே வந்த பிறகுதான் கும்பாரி என்றால் நட்பு என அர்த்தம் இருப்பது தெரியவந்தது. மற்ற எந்த உறவுகளும் பந்தத்தோடு தொடர்பு கொண்டது. நட்பு மட்டும்தான் எந்தவித பந்தமும் இல்லாமல் வரக்கூடியது.” என்றார்.

 

இயக்குநர் எஸ்.ஆர்.பிரபாகரன் பேசுகையில், “இந்த படத்தின் பாடல்களை பார்த்துவிட்டு பிறகு ட்ரெய்லரை பார்க்கும்போது ஒவ்வொரு காட்சியையும் தொடர்பு படுத்தி பார்க்க முடிந்தது. இந்த படத்தின் நாயகன் விஜய் விஷ்வா மட்டுமல்லாமல் இனிகோ பிரபாகர், சௌந்தரராஜன் என எல்லோருமே என்னுடன் அடிக்கடி விவாதத்தில் இருப்பவர்கள்தான். இவர்கள் போன்ற இளம் நடிகர்களுக்கு நான் சொல்லிக் கொள்வது உங்களை தேடி வரும் வாய்ப்பை தயவுசெய்து மிஸ் பண்ணாதீர்கள். உங்கள் முகத்தை மக்களிடம் பதிவு செய்து கொண்டே இருந்தால்தான் மக்கள் உங்களை ஞாபகத்தில் வைத்திருப்பார்கள். நடிகர் விக்ரம் 16 வருட போராட்டத்திற்கு பிறகு தான் சேது என்கிற படத்தின் மூலம் வெற்றியைப் பெற்றார். உங்களுக்கும் நிச்சயம் ஏதாவது ஒரு சேது திரைப்படம் அமையும். இதுபோன்று இசை வெளியீட்டு விழாவிற்கு வருபவர்கள் இசை தொடர்பாகவும் படம் சம்பந்தப்பட்ட விஷயங்களை பற்றி மட்டுமே பேசினால் அந்த கலைஞர்களை பற்றி வெளியே தெரியும். அதை தவிர்த்து சமூக நீதி போராளிகளாக பொதுவுடமை சிந்தனை கொண்டவர்களாக தங்களை காட்டிக் கொள்வதற்கு சிலபேர் இது போன்ற விழாக்களை பயன்படுத்துகிறார்கள். அதற்கு வேறு மேடைகள் இருக்கின்றன.. அங்கே உங்களுடைய சமூக நீதி கருத்துக்களை வெளிப்படுத்துங்கள்.” என்றார்.

 

நடிகர் ரோபோ சங்கர் பேசுகையில், ”படத்தின் நாயகன் விஜய் விஷ்வாவுடன் எனக்கு பல வருட நட்பு உண்டு. இருவரும் எஸ்.ஏ.சந்திரசேகர் டைரக்ஷனில் டூரிங் டாக்கீஸ் என்கிற படத்தில் இணைந்து நடித்தோம். அப்போது எல்லா காட்சிகளையும் ஒரே டேக்கில் ஓகே செய்து நடித்த விஜய் விஷ்வா, பாடல் காட்சிகளில் குறிப்பாக கதாநாயகியுடனான நீச்சல் குளம் சம்பந்தப்பட்ட காட்சிகளில் அதிக டேக்குகள் வாங்கினார். இங்கே இந்த படத்திலும் அப்படி ஒரு பாடல் காட்சியை பார்த்தேன். ஆனால் நீங்கள் ஒரே நாளில் இந்த காட்சியை படமாக்கி உள்ளீர்கள் என்று கூறும்போது ஆச்சரியமாக இருந்தது.” என்றார்.

 

நடிகர் பிரஜன் பேசுகையில், “நானும் விஜய் விஷ்வாவும் தற்போது தரைப்படை என்கிற படத்தில் இணைந்து நடித்துள்ளோம். பெரிய படங்களுக்கு பெரிய அளவில் ஆதரவு தேவையில்லை. சிறிய படங்களுக்கு தான் ஆதரவு தர வேண்டும். வளர்ந்து வரும் நடிகர்கள் தொடர்ந்து படங்களில் நடிப்பதுடன் தங்களது கெட்டப்புகளை மாற்றுவது போன்ற முயற்சிகளில் ஈடுபடாமல் தங்கள் முகத்தை தொடர்ந்து மக்களிடம் பதிவு செய்ய முயற்சிக்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டார்.” என்றார்.

 

படத்தின் தயாரிப்பாளர் டி.குமாரதாஸ் பேசுகையில், “நட்பு சம்பந்தப்பட்ட படம் இது. காதல், காமெடி, இசை என எல்லாமே நன்றாக வந்துள்ளது. சின்ன படம் என ஒதுக்கி வைக்காதீர்கள். சின்ன படங்கள் மூலம்தான் பெரிய ஆட்கள் உருவாகியுள்ளனர். அன்று ஒரு சின்ன படத்தில் நடித்த சிவாஜிராவ் தான் இன்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆகியுள்ளார்.” என்றார்.

 

நாயகன் விஜய் விஷ்வா பேசுகையில், “இந்த படத்தின் தயாரிப்பாளர் எப்போது யாரிடம் பேசினாலும்  சாப்பிட்டீர்களா என்று தான் முதலில் கேட்பார். அந்த அளவிற்கு எல்லோரையும் அன்புடன் கவனித்துக் கொண்டார். இந்த படத்தின் கதை கடலும் கடல் சார்ந்தும் உருவாகியுள்ளது. 25 நாட்களில் இந்த படத்தின் படப்பிடிப்பை ரொம்ப வேகமாகவே முடித்து விட்டோம். படத்தின் தயாரிப்பாளர் பட்ஜெட் பற்றி கவலைப்பட வேண்டாம் என ஆரம்பத்திலேயே கிரீன் சிக்னல் காட்டிவிட்டார். இப்போது தரைப்படை, பிளாஷ்பேக், பிரம்ம முகூர்த்தம் ஆகிய படங்களில் நடித்து வருகிறேன். வாய்ப்புகள் நன்றாகவே கிடைக்கிறது. ஆனால் இதை தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என்கிற பயமும் இருக்கிறது.” என்றார்.

 

இன்னொரு நாயகனாக நடித்துள்ள நலீம் ஜியா பேசுகையில், “சினிமாவில் எனக்கு இது முதல் படம். இதற்கு முன்பு மலையாளத்தில் ஆசியா நெட் சேனலில் ஒரு சீரியலில் கிட்டத்தட்ட 920 எபிசோடுகள் கதாநாயகனாக நடித்துள்ளேன். சினிமா எப்படித இருக்கும் என்கிற ஆர்வத்தில் தான் இந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன். நான் நினைத்து வந்ததைவிட இங்கே சினிமா இன்னும் பயங்கரமாக இருக்கிறது.” என்றார்.

Related News

9185

”கண்டிப்பாக உங்களை இந்த நிகழ்வு ஆச்சரியப்படுத்தும்” - உறுதியளித்த பிரபுதேவா
Sunday January-12 2025

இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன், நடனப் புயல் என்று வர்ணிக்கப்படும் நடிகரும், நடன இயக்குநருமான பிரபுதேவாவின் பிரமாண்டமான நேரடி நடன நிகழ்ச்சி இந்தியாவில் முதல் முறையாக நடக்க உள்ளது...

”பெண்கள் இல்லாமல், நம் உலகம் இல்லை” - நடிகர் ஜெயம் ரவி உருக்கம்
Saturday January-11 2025

கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், ஜெயம் ரவி, நித்யா மேனன் நடிப்பில் உருவாகியுள்ள ‘காதலிக்க நேரமில்லை’ திரைப்படம் பொங்கல் வெளியீடாக வரும் ஜனவரி 14 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது...

Recent Gallery