Latest News :

”எல்லா ஹீரோக்களும் இரண்டு வருடங்களுக்கு ஒரு நல்ல படத்திலாவது நடிக்க வேண்டும்” - இயக்குநர் தங்கர் பச்சான் கோரிக்கை
Wednesday August-23 2023

இயக்குநர் தங்கர் பச்சான் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கருமேகங்கள் கலைகின்றன’ திரைப்படத்தில் இயக்குநர்கள் பாரதிராஜா, கவுதம் மேனன், எஸ்.ஏ.சந்திரசேகர், யோகி பாபு, அதிதி பாலன் ஆகியோர் முதன்மை வேடங்களில் நடித்திருக்கிறார்கள். 

 

ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள இப்படத்திற்கு ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்துள்ளார். லெனின் படத்தொகுப்பு செய்ய, மைக்கேல் கலை வடிவமைப்பு செய்துள்ளார். வரும் செப்டம்பர் 1 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது.

 

இந்த நிகழ்வில் படம் குறித்து பேசிய இயக்குநர் தங்கர் பச்சான், “இது துணிச்சல் மிக்க காரியம். என் எதிரில் ஆயுதங்களுடன் பலர் நிற்கிறார்கள், நான் மட்டும் நிராயுத பாணியாக நிற்கிறேன். ஒவ்வொரு படத்திலும் இதை செய்யவேண்டி இருக்கிறது. படத்தை எடுக்க, விற்க, மக்களை படம் பார்க்க வரவழைக்க என மிகுந்த சிரமப்பட வேண்டி இருக்கிறது. ஒரு படத்தில் கமர்சியல் நடிகை நடிக்கிறார் என போடும் செய்திக்கான முக்கியத்துவத்தை கூட ஒரு நல்ல படத்திற்கு இங்கே ஊடகங்கள் கொடுப்பது இல்லை. மக்களிடம் நல்ல சினிமாவை கொண்டு போவதற்கு பல தடைகள் இங்கே இருக்கின்றன. 

 

எல்லா நடிகர்களும் இரண்டு வருடங்களுக்கு ஒரு நல்ல படத்திலாவது நடிக்க வேண்டும். 500 கோடி வசூல் என்பதில் என்ன பெருமை ? நல்ல படங்கள் நிறைய வந்தால் சமூகம் மேலே வரும். கலப்படம் எங்கே, நல்ல சப்பாடு, நல்ல பெட்ரோல் என்பதை மட்டும் சரியாக கண்டுபிடித்து அதை தேடி செல்கிறீர்களே, அதேபோல நல்ல சினிமா எது என்பது உங்களுக்கு தெரியாதா ? பெரிய நடிகர் படம் என்கிற பெயருக்காகவே படம் பார்க்க தயாராக இருக்கிறார்கள். வெட்டு, குத்து காட்சிகளை குழந்தைகளிடம் அறிமுகப்படுத்துகிறார்கள். அதுபோன்ற படங்களின் தயாரிப்பாளர்களுக்கு, அதில் நடிக்கும் நடிகர்களுக்கு பொறுப்பு இருக்காதா? நல்ல படம் பாருங்கள் என்று கெஞ்சிக்கிட்டே இருக்கணுமா ?

 

இயற்கை விவசாயம் செய்வதை போல நல்ல படங்களை கொடுத்து வருகிறேன்.  ஆனால் எங்களுக்கு தண்டனை தான் கொடுத்து வருகிறீர்கள். எம்ஜிஆர் படம் பார்த்து வளர்ந்தவன் நான். அப்போதைய கமர்சியல் படம் என்றாலும் அதில் மது அருந்துவது, புகை பிடிப்பது போன்ற விஷயங்களுக்கு எதிராக கருத்துக்கள் சொல்லப்பட்டன. ஆனால் இன்று மது விற்பனை தொகையை அறிவிப்பதை போலத்தான் சினிமா பட வசூல் விளம்பரமும் இருக்கிறது. இரண்டுக்கும் வித்தியாசம் என்ன இருக்கிறது ? 

 

ஜி வி பிரகாஷ் அற்புதமான கலைஞன். யோகி பாபு இந்த மண்ணின் மைந்தன், சிறந்த கலைஞன். ஆனால் அவரை கிச்சுகிச்சு மூட்டத்தான் பயன்படுத்தி வருகிறோம். அதிதி பாலன் நடித்த அருவி படத்தை தாமதமாகத்தான் பார்த்தேன், அதை பார்த்த பின்பு இவ்வளவு தாமதமாக பார்க்கிறோமே என அவமானமாக இருந்தது. 

 

இப்படத்தில் நடித்துள்ள விபின் லால் இந்திய சினிமாவில் ஒரு பெரிய இடத்தை பிடிப்பார். இவர் தேசிய நாடகப்பள்ளி (NSD) மாணவர், வரும் காலத்தில் பஹத் பாசில் மாதிரி வருவார். இன்றைய இளம் இயக்குநர்கள், அடுத்து வரப்போகும் இயக்குநர்கள் இவரை தவறாமல் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அது அவர்களது படைப்புகளுக்கு பலம் சேர்ப்பதாக இருக்கும். 

 

'கருமேகங்கள் கலைகின்றன' படத்தை திரும்பத் திரும்ப பார்க்கும் போதும் ஒவ்வொரு முறையும் புதிதாக ஒன்று தோன்றும். மனதுக்கு மிக நிறைவான படைப்பாக கொடுத்துள்ளேன். உடலை, மனதை கெடுக்காத படைப்பு இது. உலகத் தமிழர்கள் இந்த படத்தை பார்த்தால் அடுத்த விமானத்தை பிடித்து இங்கே கிளம்பி வந்து விடுவார்கள், அப்படி ஒரு உணர்வுபூர்வமான படம்” என்றார்.

 

இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன் பேசுகையில்,  “நான் என்னை இன்னும் ஒரு நடிகராக பார்க்கவில்லை. இந்த கதை எனக்கு பிடித்திருந்தது. அது மட்டுமல்ல பாரதிராஜாவின் மகனாக நடிக்க வேண்டும் என்று சொன்னதுமே இப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன். எடிட்டர் லெனினின் வெட்டு, பாரதிராஜா என் மீது விட்ட குத்து என இந்த படத்திலும் வெட்டு, குத்து இருக்கிறது. படத்தில் பாரதிராஜா என்னை ஒரு காட்சியில் அடிக்க வேண்டும், பலமுறை அடிப்பதற்கு தயங்கி நின்றார். அப்போது அவரிடம் எப்போதாவது நான் உங்களிடம் உதவி இயக்குநராக பணியாற்றி இருப்பதாக நினைத்துக் கொண்டு என்னை அடியுங்கள் என்று கூறினேன். நிஜமாகவே அடித்துவிட்டார். அடுத்து தங்கர் பச்சான் என்ன கதை சொன்னாலும் நான் கேட்பேன், அவர் படத்தில் நடிப்பேன்” என்றார்.

 

இயக்குநர் இமயம் பாரதிராஜா பேசுகையில், “தங்கர் பச்சான் ஒரு நல்ல எழுத்தாளர். 25 வருடங்களுக்கு முன் தங்கர் எழுதிய  குருநாவலான ‘கருமேகங்கள் ஏன் கலைகின்றன’ புத்தகத்தை நான் தான் வெளியிட்டேன். தங்கர் பச்சான் இந்த கதையை சொன்ன விதம், இதில் என்னை வடிவமைத்த விதம் அற்புதமாக இருந்தது. இது ஒரு அரிதான சந்தர்ப்பம். நான் பெரும்பாலும் பெண்களின் கண்களைத் தான் ரசித்து அவர்களுக்கு குளோசப் காட்சிகள் வைப்பேன். அதை தாண்டி நான் ரசித்தது என்றால் கவுதம் மேனனின் கண்களைத் தான். அவரது கண்கள் மட்டும் தான் பேசும். ஒரு காட்சியில் அதிதியின் காலில் விழ வேண்டும், நடிப்பு என வந்துவிட்டால் எதையும் பார்க்க கூடாது.  எந்த விழாவிலும் இத்தனை வருடங்களில் எடிட்டர் லெனினை பார்த்ததில்லை, இன்று பார்ப்பது ஆச்சரியமாக இருக்கிறது. இது குழந்தை சாரலின் நடிப்பு மிக அற்புதம். அவளது கண்களே பேசும். யோகிபாபு இந்த படத்தை ஆக்கிரமித்து விட்டார். அவர் ஏற்றுள்ள அந்த கதாபாத்திரத்திற்கு நியாயம் செய்துவிட்டார். திரைப்பட வரலாற்றில் சில படங்கள் தான் வருடக்கணக்காக பேசப்பட்டு வரும் .நாகரிகமாக எடுக்கப்பட்ட சினிமா. குடும்ப உறவுகளுடன் பார்க்க வேண்டிய படம் இது” என்றார்.

 

நடிகை அதிதி பாலன் பேசுகையில், “அருவி படத்தில் நடித்த போது சினிமா துறையில் இல்லாத ஆட்களுடன் சேர்ந்து பணி புரிந்தேன். ஆனால் இப்படத்தில் உடன் நடித்த அனைவருமே ஜாம்பவான்களாக இருந்தனர். பாரதிராஜாவிடமிருந்து நிறைய கற்றுக்கொண்டேன். தங்கர் பச்சான் இப்படத்திற்காக என்னை அழைத்த போது எனக்கு ‘அழகி’ தான் ஞாபகம் வந்தது. அவர் சொன்ன கதையை கேட்டதும் இந்த கதாபாத்திரத்தை என்னால் பண்ணி விட முடியுமா என்று ஒரு சந்தேகம் ஏற்பட்டது. ஆனால் இயக்குநர் தங்கர் பச்சான் என்னை கன்வின்ஸ் செய்து அழகாக அந்த கதாபாத்திரமாக மாற்றி நடிக்க வைத்தார்” என்றார்.

 

KarumegangalKalaigindrana

 

இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் பேசுகையில்,  “’கிழக்கே போகும் ரயில்’ படத்தின் படப்பிடிப்பில் சிறுவனாக இருந்த போது நான் கேட்ட பாரதிராஜாவின் அதே குரல் இன்றும் மாறவில்லை. இப்போதும் மிகச்சிறந்த படத்தை என்னால் கொடுக்க முடியும் என்கிற துணிச்சல் அவருக்கு மட்டுமே உண்டு. அவரது படைப்புகள் இப்படித்தான் என யூகிக்க முடியாதபடி இருக்கும். கோவணம் கட்டிய கமலுக்கு கோட் சூட் போட்டு படம் எடுத்தார். இப்போது  திடீர் திடீரென மருத்துவமனைக்கு சென்று விடுவார், நாங்கள் எல்லாம் கவலையுடன் அவரை போய் பார்க்கும் போது அடுத்த படத்திற்காக கதையை தயார் செய்து கொண்டு இருப்பேன் என்று கூறி ஆச்சரியப்படுத்துவார். இயக்குநர் தங்கர் பச்சான் என்னுடைய படங்களில் உதவி ஒளிப்பதிவாளராக வேலை பார்த்துள்ளார். அப்போதே என்ன படம் எடுக்கிறார் என்று என்னை திட்டுவார், மனதில் பட்டதை வெளிப்படையாக பேசக்கூடியவர், எப்போதும் தனது குணாதிசயத்தை சமரசம் செய்து கொள்ளாமல் இருப்பவர்.

 

பாரதிராஜாவை வைத்து படம் எடுக்க போகிறேன் என்று சொன்ன போது அவர் உடல்நிலை சரிப்பட்டு வருமா என்று விசாரித்துக் கொள்ளுங்கள் என கூறினேன். ஆனால் படம் பார்த்த பிறகு தான் இந்த கதையில் அவரைத் தவிர வேறு யாராலும் நடிக்க முடியாது என்கிற எண்ணம் தோன்றியது. அதிதி பாலனின் நடிப்பை பார்த்த போது படம் இவ்வளவு சீக்கிரம் முடிந்து விட்டதே என்கிற உணர்வு ஏற்பட்டது. தங்கர் பச்சானுக்கு 'செல்லுலாய்டு சிற்பி' என்கிற பட்டத்தை சூட்டுகிறேன். தங்கருக்கு ஆங்கிலம் பிடிக்கவில்லை என்றால் அதை தமிழில் மாற்றி வைத்துக் கொள்ளட்டும், இந்த படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ள சாரல் பிறவி நடிகை என்று சொல்லும் விதமாக அற்புதமாக நடித்துள்ளார்” என்றார்.

 

நடிகை மஹானா சஞ்சீவ் பேசுகையில்,  “இந்த படத்தில் எந்த பக்கம் திரும்பினாலும் ஒரே இயக்குநர்களாகவே இருக்கின்றனர். இத்தனை பேருடன் இணைந்து நடித்தது பெருமையாக இருக்கிறது. நிறைய படங்கள் பண்ண வேண்டும். கருமேகங்கள் கலைகின்றன படம் எனக்கு திருப்புமுனையாக இருக்கும்” என்றார். 

 

தொலைக்காட்சி செய்தியாளரும் நடிகருமான நிஜந்தன் பேசுகையில்,  “16 வயதினிலே படத்திற்குப் பிறகு சினிமா வேறு மாதிரியான உருவம் எடுத்தது. அதன்பிறகு பல வருடங்கள் கழித்து ‘அழகி’ படத்துக்கு பிறகு சினிமாவின் மொழியே மாறியது. இப்படத்தில் ஒவ்வொரு நிமிடமும் முக்கியமானது. படத்தைப் பார்க்கும் பார்வையாளர்களுக்கு அதன் தாக்கம் பல வருடங்கள் இருக்கும்” என்றார்.

 

ஒளிப்பதிவாளர் ஏகாம்பரம் பேசுகையில்,  “திரைப்படக் கல்லூரியில் படிக்கும் போது தங்கர் பச்சான் எனது சீனியர், இந்த படத்தில் என்னை பணியாற்ற அவர் அழைத்த போது அவரும் ஒரு ஒளிப்பதிவாளர் என்பதால் என்னுடைய பணியில் தலையீடு இருக்குமோ என்று நினைத்து அதை அவரிடமும் கூறினேன். ஆனால் அவர், தான் டைரக்ஷனை மட்டும் பார்த்துக் கொள்வதாகவும் என்னுடைய பணியில் குறுக்கிட மாட்டேன் என்றும் கூறி முழு பொறுப்பையும் என்னிடம் ஒப்படைத்து விட்டார்.

மறைந்த இயக்குநர் எஸ்.பி.ஜனநாதனுடன் தான் பணியாற்றிய சமயத்தில் தனக்கு ஒளிப்பதிவில் அளித்த சுதந்திரம் பற்றி கூறும்போது அதற்கு மேல் பேச முடியாமல் கண்கலங்கினார். நம்மை உற்சாகப்படுத்தியே கூடுதலாக வேலை வாங்கி விடுவார். இந்த கதைக்கு முதலில் தருமபுரி தான் லொகேஷன் என முடிவு செய்திருந்தாலும் கதையின் சூழலுக்கு கும்பகோணம் தான் சரியாக வரும் என மாற்றி படப்பிடிப்பை நடத்தினோம். மேலும் ராமேஸ்வரம் கதைக்களம் என்பதால் அந்த சமயத்தில் பாரதிராஜாவுக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்தாலும் அவர் நலம் பெற்று வந்தவுடன் கிட்டத்தட்ட 15 நாட்கள் ராமேஸ்வரத்தில் படப்பிடிப்பை நடத்தினோம்” என்றார்.

 

எடிட்டர் லெனின் பேசுகையில், “இந்த படத்தில் எல்லோருமே கிழவர்களாக இருக்கிறார்கள். என்னுடைய படத்தொகுப்பை அப்போது யாரும் ஒத்துக்கொள்ளவில்லை. ஆனால் இப்போது என்னை தேடி வருகிறார்கள். இந்த படத்தின் படத்தொகுப்பை முடித்து டப்பிங்கிற்கு அனுப்பும் போது கிட்டத்தட்ட ஐந்தே கால் மணி நேரம் படம் இருந்தது. பேசாமல் இரண்டு பாகங்களாக வெளியிடலாம் அல்லது இரண்டு இடைவேளைகள் விட்டு படத்தை வெளியிடலாம் என்று கூட கூறினேன்.

 

அடுத்ததாக பாரதிராஜா இயக்கவுள்ள படத்திற்கு நான் தான் படத்தொகுப்பு செய்வேன். இன்றைய இளைஞர்கள் இப்படி படம் எடுக்கிறார்களே, நாம் இதைவிட அதிகமாக ஒரு படம் எடுக்க வேண்டும் என்கிற ஆத்திரம் பாரதிராஜாவுக்கு இன்னும் இருக்கிறது. இந்த படத்தில் நடித்த பாரதிராஜாவுக்கு கிடைக்கிறதோ இல்லையோ குழந்தை நட்சத்திரம் சாரலுக்கு நிச்சயம் தேசிய விருது கிடைக்கும். அருவி படத்திற்கு எடிட்டிங்கில் நான் தான் உதவி செய்தேன். அதில் பார்த்ததற்கும் இந்த படத்தில் பார்ப்பதற்கும் அதிதி பாலன் வித்தியாசமாக தெரிகிறார். பாரதிராஜா உடல்நிலை சரியில்லாத நிலையிலும் கூட வெகு சிரத்தை எடுத்து டப்பிங் பேசியுள்ளார்” என்றார்.

 

கலை இயக்குநர் மைக்கேல் பேசுகையில், “வெட்டு, குத்து, துப்பாக்கி என்கிற கலாச்சாரம் சார்ந்து இன்று படங்கள் வெளியாகிக் கொண்டிருக்கும் சூழலில் குடும்ப உறவுகளை மையப்படுத்தி இந்த படம் உருவாகி உள்ளது” என்றார்.

 

தயாரிப்பாளரும் நடிகருமான பிரமிட் நடராஜன் பேசுகையில்,  “இது மாதிரி படங்கள் அமைவது அபூர்வம். இப்படம் பார்த்த போது இடைவேளையின் போது ஏற்பட்ட தாக்கம் இப்போது வரை நீங்கவில்லை. பெரிய இயக்குநர், ஹீரோவின் படங்களுக்கு கமர்சியல் வெற்றி கிடைக்கிறது. ஆனால் இந்த சமூகத்திற்கு என்ன விஷயத்தை சொல்லப் போகிறார்கள் ?. பாசத்தை மட்டுமே மூலதனமாக வைத்து இந்த படத்தை கொடுத்துள்ளார் தங்கர் பச்சான். இந்தப் படத்திற்காக பாரதிராஜாவுக்கு தேசிய விருது கொடுக்கவில்லை என்றால் தேசிய விருது கொடுப்பதையே நிறுத்தி விடலாம். 

 

என்னுடைய இந்த வாழ்க்கைக்கு அர்த்தம் கொடுத்தவர் தங்கர் பச்சான். பாலச்சந்தர் இருந்திருந்தால் இப்போது தங்கர் பச்சானை கட்டிப்பிடித்து பாராட்டி இருப்பார். ஒளிப்பதிவாளர் ஏகாம்பரம் பேசும்போது இயக்குநர் ஜனநாதன் பற்றி பேச முடியாமல் கண் கலங்கினாரே, இந்த சினிமா உலகம் மட்டும் தான் நன்றி உணர்வு அதிகமாக உள்ள துறை” என்றார்.


Related News

9198

”கண்டிப்பாக உங்களை இந்த நிகழ்வு ஆச்சரியப்படுத்தும்” - உறுதியளித்த பிரபுதேவா
Sunday January-12 2025

இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன், நடனப் புயல் என்று வர்ணிக்கப்படும் நடிகரும், நடன இயக்குநருமான பிரபுதேவாவின் பிரமாண்டமான நேரடி நடன நிகழ்ச்சி இந்தியாவில் முதல் முறையாக நடக்க உள்ளது...

”பெண்கள் இல்லாமல், நம் உலகம் இல்லை” - நடிகர் ஜெயம் ரவி உருக்கம்
Saturday January-11 2025

கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், ஜெயம் ரவி, நித்யா மேனன் நடிப்பில் உருவாகியுள்ள ‘காதலிக்க நேரமில்லை’ திரைப்படம் பொங்கல் வெளியீடாக வரும் ஜனவரி 14 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது...

Recent Gallery