‘வாமணன்’, ‘என்றென்றும் புன்னகை’. ‘மனிதன்’ ஆகிய படங்களை இயக்கியிருக்கும் இயக்குநர் அஹமத் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘இறைவன்’. ஜெயம் ரவி, நயன்தாரா நடித்திருக்கும் இப்படத்தை ஃபேஷன் ஸ்டுடியோஸ் சார்பில் சுதன் சுந்தரம், ஜெயராம்.ஜி இணைந்து தயாரித்துள்ளனர்.
இயக்குநர் அஹமத் இயக்கத்தில் வெளியான படங்கள் அனைத்தும் மயிலிறகால் வருடுவது போல் மென்மையான படங்களாகவே இருந்த நிலையில், தற்போது அவர் இயக்கியிருக்கும் ‘இறைவன்’ அப்படியே எதிர்மறையான மிக கொடூரமான படமாக உருவாகியிருக்கிறது.
ஆம், ‘இறைவன்’ சைக்கோ த்ரில்லர் ஜானர் திரைப்படமாகும். இதில், வரும் சைக்கோ கதாபாத்திரம் இளம் பெண்களை மிக கொடூரமாக கொலை செய்கிறான், அந்த காட்சிகள் படத்தில் பார்க்கும் போது எப்படி இருக்கும் என்று தெரியாது, ஆனால் படத்தின் டிரைலர் பார்ப்பவர்களை நடுங்க வைக்கும் வகையில் இருக்கிறது.
செப்டம்பர் 3 ஆம் தேதி வெளியாக உள்ள இந்த டிரைலர் பத்திரிகையாளர்களுக்காக பிரத்யேகமாக திரையிடப்பட்டது. எத்தனையோ க்ரைம் த்ரில்லர் படங்களை பார்த்த பத்திரிகையாளர்களே ‘இறைவன்’ டிரைலரை பார்த்து நடுங்கி போனதோடு, “சார் உங்க படமா இப்படி இருக்கு” என்று இயக்குநர் அஹமத்திடம் கேட்க, “ஒரே மாதிரியான படங்களை தொடர்ந்து எடுக்க முடியாது, வெவ்வேறு பாணியிலான படங்களை எடுக்க வேண்டும் என்று தான், சைக்கோ க்ரைம் ஜானரை தேர்வு செய்தேன். அப்படிப்பட்ட ஜானரை இப்படி தான் எடுக்க வேண்டும், அப்போது தான் அதற்கான ரசிகர்களுக்கு பிடிக்கும்.” என்றார்.
தொடர்ந்து படம் குறித்து பேசிய இயக்குநர் அஹமத், ”ரசிகர்களை நான் ஏமாற்ற விரும்பவில்லை. சைக்கோ ஜானர் படத்தை எடுக்கிறேன் என்றால் அந்த ஜானரில் என் படம் பெஸ்ட்டாக இருக்க வேண்டும் என்று தான் நினைப்பேன், அதற்கான காட்சிகளை தான் படத்தில் வைத்திருக்கிறேன். இப்படி ஒரு படத்தை எடுத்து விட்டு, டிரைலரில் வேறு சில காட்சிகளை வைத்து ரசிகர்களை ஏமாற்ற விரும்பவில்லை. இது தான் என் படம், இப்படி தான் இருக்கும், என்று சொல்வதற்காக தான் டிரைலரிலேயே எப்படி பட்ட படம் என்பதை சொல்லியிருக்கிறேன்.
அதற்காக படம் முழுவதும் இப்படிப்பட்ட காட்சிகள் தான் இருக்கும் என்றும் நினைக்க வேண்டாம், இதில் அழகான காதல் கதை இருக்கிறது. ஜெயம் ரவி - நயன்தாரா ஜோடி வெற்றி ஜோடி என்பதால் அவர்களுக்கான காதல் கதை ரசிகர்களை கவரக்கூடியதாக இருக்க வேண்டும், அதே சமயம் படத்தின் ஜானரை விட்டும் விலக கூடாது என்பதில் தெளிவாக இருந்தேன். அதேபோல், என்னுடைய முந்தைய படங்களைப் போல் இதிலும் இரண்டு இனிமையான உயிரோட்டமுள்ள பாடல்கள் இருக்கிறது. முழு படத்தையும் பார்த்தால் நிச்சயம் உங்களுக்கு நடுங்க வைக்கும் உணர்வு மட்டுமே இருக்காது, ஒரு நல்ல படத்தை பார்த்த உணர்வு தான் இருக்கும்.” என்றார்.
இப்படி ஒரு கதை எழுத உங்களுக்கு தூண்டுதலாக இருந்தது எது? என்ற கேள்விக்கு பதில் அளித்த இயக்குநர் அஹமத், “அப்படி எதுவும் இல்லை, நான் ஜெயம் ரவியுடன் இரண்டு படங்கள் செய்கிறேன், அதில் ஒன்று தான் ‘இறைவன்’. ஜெயம் ரவி போலீஸ் வேடத்தில் பல படங்களில் நடித்து விட்டார், ஏன் விண்வெளிக்கு கூட அவர் சென்றுவிட்டார். அப்படி ஒரு நடிகரை வைத்து நான் படம் பண்ணும் போது, அந்த கதை வித்தியாசமானதாக இருக்க வேண்டும், அவருக்கும், அவருடைய ரசிகர்களுக்கும் புதிய அனுபவத்தை கொடுக்க கூடிய படமாக இருக்க வேண்டும், அப்போது தான் அவருக்கும் என்னுடன் தொடர்ந்து பணியாற்ற ஆர்வம் ஏற்படும். அதனால் தான் இந்த ஜானர் கதையை எழுதினேன், அவருக்கு மட்டும் அல்ல, நயன்தாராவுக்கும் இந்த கதை பிடித்ததால் தான் அவரும் நடிக்க சம்மதித்தார்.
இந்த படத்தின் திரைக்கதையை வித்தியாசமாக முயற்சித்திருக்கிறேன், நடிகர்களின் நடிப்பை முன்னிலைப்படுத்தி தான் திரைக்கதை பயணிக்கும். அதனால் தான் இந்த படத்தில் நடித்த ஜெயம் ரவி, நயன்தாரா உள்ளிட்ட அனைவருக்கும் இந்த படம் புதிய அனுபவத்தை கொடுக்கும் படம் என்று சொல்கிறேன்.” என்றார்.
யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு ஹரி கே.வேதாந்தம் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ஜே.வி.மணிகண்ட பாலாஜி படத்தொகுப்பு செய்திருக்கிறார்.
படத்தின் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், நாளை (செப்.3) ‘இறைவன்’ படத்தின் டீசர் வெளியாக உள்ளது. இந்த டீசரை பார்ப்பவர்கள் நிச்சயம் பயத்தில் உறையாமல் இருக்க மாட்டார்கள் என்பது உறுதி.
புக் ஆப் சினிமா புரொடக்ஷன் நிறுவனம் சார்பில் அனூப் ரத்னா தயாரித்துள்ளார்...
பி.வி பிரேம்ஸ் நிறுவனம் சார்பில் பாபு விஜய் தயாரித்து இயக்கும் படத்தில் ஜெய் மற்றும் மீனாட்சி கோவிந்தராஜன் நடிக்கிறார்கள்...
தமிழ் சினிமாவில் ஒரு சில படங்கள் பெரும் எதிர்பார்ப்புகள் இல்லாமல் வெளியாகி பாக்ஸ் ஆபிஸில் மாயாஜாலம் செய்து விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றுள்ளது...