Latest News :

50 வது படம் என்பது என் சினிமா பயணத்தில் ஒரு மைல்கல்! - நடிகர் விஜய் சேதுபதி நெகிழ்ச்சி
Monday September-11 2023

விஜய் சேதுபதியின் 50 வது படத்திற்கு ‘மஹாராஜா’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. ‘குரங்கு பொம்மை’ படத்தை இயக்கிய நிதிலன் இயக்கும் இப்படத்தை பேஷன் ஸ்டுடியோஸ் சார்பில் சுதன் மற்றும் தி ரூட் நிறுவனம் சார்பில் ஜெகதீஸ் இணைந்து தயாரிக்கிறார்கள்.

 

’மஹாராஜா’ படத்தின் முதல் பார்வை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நேற்று மாலை நடைபெற்றது. இதில், படக்குழுவினருடன் தயாரிப்பாளர்கள் எஸ்.ஆர்.பிரபு, லலித் குமார் உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக்கொண்டார்கள்.

 

படம் குறித்து பேசிய இயக்குநர் நிதிலன், “இந்த கதை மீது நம்பிக்கை வைத்து கடுமையாக உழைக்கும் என்னுடைய அணிக்கு நன்றி. படத்தில் நடிக்க ஒப்புக்கொண்ட அபிராமி மேம், மம்தா மேம், அனுராக் கஷ்யப் சார் இவர்களுக்கும் நன்றி. விஜய் சேதுபதி அண்ணன் சிறந்த நடிகர் என்பதையும் தாண்டி அவர் ஒரு சிறந்த மனிதர். அவரது ஐம்பதாவது படத்தில் எனக்கு வாய்ப்பு கொடுத்தது பெரிய விஷயம். நிச்சயம் தயாரிப்பாளர்களுக்கு மூன்று மடங்கு லாபம் தரக்கூடிய படமாக இதை உருவாக்குவேன்” என்றார்.

 

நடிகர் விஜய் சேதுபதி பேசுகையில், “என்னை திட்டியும் வாழ்த்தியும்  இந்த உயரத்திற்கு கொண்டு வந்த ரசிகர்களுக்கும் ஊடகங்களுக்கும் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். பொறுமையும் அனுபவமும் ஒரு மனிதனை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்லும். அத்தகைய அற்புதமான அனுபவத்தை கொடுத்த என் இயக்குநர்களுக்கும் ரசிகர்களுக்கும் நன்றி! இந்த படம் உங்களுக்கு பிடித்தது போல வந்திருக்கிறது. ஐம்பதாவது படம் என்பது நிச்சயம் என் சினிமா பயணத்தில் ஒரு மைல்கல். அது ஞானத்தையும் அனுபவத்தையும் கொடுத்திருக்கிறது. என் சினிமா வாழ்க்கையின் மிக முக்கிய புள்ளியை அருள் தாஸ் அண்ணன் வைத்துள்ளார். அவரைப் பார்த்ததும் பழைய நினைவுகள் மீண்டும் வந்துள்ளது. நட்டி சாரை பார்க்கும் பொழுது ரஜினி சாரின் அதே வேகம் ஈர்ப்பு அவரிடம் இருந்தது. பிலோமின், தினேஷ், அபிராமி, மம்தா என அனைவரும் தங்களது பணியை சிறப்பாக செய்துள்ளனர். நிதிலன் தயாரிப்பாளர்களின் பணத்தை எடுத்து தருவேன் என்று சொன்னது திமிர் கிடையாது, அவர் படத்தின் மீது வைத்துள்ள நம்பிக்கை. அந்த அளவுக்கு சிறப்பாக படம் வந்திருக்கிறது. பாய்ஸ் மணிகண்டன் அவரின் சமீபத்திய பேட்டி ஒன்று பார்த்தேன். மாடர்ன் சாமியார் போல அவ்வளவு நம்பிக்கையாக பேசியிருந்தார். அவர் இன்னும் நிறைய உயரம் அடைய வேண்டும். அனுராக் சாரின் தயாரிப்பில் நான் நடிப்பதாக இருந்தது. ஆனால், சில காரணங்களால் அது நடக்காமல் போனது. ஆனால் இந்த படத்திற்காக அவர் செய்த வேலை மிக பெரியது. நானும் அவரும் இணைந்து இன்னும் நிறைய படங்கள் பணிபுரிய வேண்டும் என விருப்பம்” என்றார்.

 

இசையமைப்பாளர் அஜ்னீஷ் லோக்நாத், ”விஜய் சேதுபதி சாரின் மிகப்பெரிய ரசிகன் நான். அவரின் ஐம்பதாவது படத்திற்கு நான் இசையமைக்கிறேன் என்பதே எனக்கு பெருமையாக உள்ளது. 'குரங்கு பொம்மை' படத்திலேயே நிதிலன் அட்டகாசம் செய்திருப்பார். இந்த படமும் சிறப்பாக வந்திருக்கிறது. இரண்டு மெலோடி பாடல்கள் படத்தில் உண்டு. அனைவருக்கும் வாழ்த்துக்கள்” என்றார். 

 

ஒளிப்பதிவாளர் தினேஷ் புருஷோத்தமன் பேசுகையில், “படத்தின் கதை மிக அருமையாக வந்திருக்கிறது. நான் செய்த அனைத்து டார்ச்சர்களையும் பொறுத்துக் கொண்ட விஜய் சேதுபதி சாருக்கு நன்றி. நட்டி சார் அனுராக் கஷ்யப் சார் என பெரிய டெக்னீஷியன்களுடன் பணி புரிந்ததில் நிறைய கற்றுக் கொண்டேன். 'மஹாராஜா' தமிழ் சினிமாவுக்கு முக்கியமான படமாக இருக்கும்” என்றார்.

 

எடிட்டர் ஃபிலோமின் ராஜ் பேசுகையில், ”இது எனக்கு ரொம்பவே ஸ்பெஷல். சேது அண்ணாவுடன் முதல் படம் எனக்கு. நிதிலன் சொன்ன கதை எனக்கு ரொம்ப பிடிக்கும். 'குரங்கு பொம்மை' படத்தின் இன்னொரு வெர்ஷனாக இன்னும் ஸ்பெஷலாக இந்த படம் இருக்கும்” என்றார்.

 

நடிகர் நட்டி பேசுகையில், ”’மஹாராஜா’ தமிழ் சினிமாவின் முக்கிய படமாக அமையும். இந்த படத்தின் திரைக்கதை இனி வரும் படங்களுக்கு முன்னுதாரணமாக இருக்கும். விஜய் சேதுபதியுடன் எனக்கு இது முதல் படம். படக்குழு அனைவரும் சிறப்பாக வேலை செய்தனர். நிதிலன் இன்னும் சில வருடங்களில் பான் இந்தியா படம் இயக்கும் அளவிற்கு பெரிய ஆளாக வருவார்” என்றார்.

 

நடிகை அபிராமி பேசுகையில், ”இந்த படத்தில் நானும் ஒரு அங்கமாக இருப்பதில் மகிழ்ச்சி. விஜய் சேதுபதியுடன் எனக்கு இது முதல் படம். தமிழ் சினிமாவில் மிக தீவிரமான கண்கள் என்றால் முதலில் கமல் சாருடையதை சொல்வேன். அதற்கு அடுத்து விஜய் சேதுபதியுடையது தான். இந்த படம் ஒரு ரிவென்ச் கதை என்று தெரியும். மற்றபடி முழு கதையும் எனக்கு தெரியாது. என்னுடைய காட்சிகள் மட்டுமே தெரியும். உங்களை போலவே இந்த படத்தின் மீது மிகத் தீவிரமான நம்பிக்கை கொண்டு படம் பார்க்க ஆவலாக உள்ளேன்” என்றார்.

 

நடிகை மம்தா மோகன்தாஸ் பேசுகையில், ”நான் தமிழில் சில படங்கள் மட்டுமே நடித்திருக்கிறேன். இப்போது ஸ்பெஷலான ஒரு படத்தில் நடித்திருப்பது மகிழ்ச்சி! கதை நன்றாக இருந்தால் எந்த மொழி, எந்த ஹீரோ என்று பார்க்காமல் அந்த படத்தை நான் பார்த்து விடுவேன். இப்படி விஜய் சேதுபதி சாரின் படங்கள் நிறைய பார்த்திருக்கிறேன். அபிராமி சொன்னது போல உங்களுடைய கண்களில் ஒரு மேஜிக் உள்ளது. கண்டிப்பாக இது ஒரு ரிவென்ச் ஸ்டோரி தான். அனுராக் மற்றும் விஜய் சேதுபதி சாருக்கும் இடையே கதை நடக்கும், படம் நான் இன்னும் முழுதாக பார்க்கவில்லை. ஆனால் பார்த்தவர்கள் அருமையான விமர்சனம் கொடுத்திருக்கிறார்கள். கண்டிப்பாக 'மஹாராஜா' தமிழ் சினிமாவில் முக்கியமான ஒரு படமாக அமையும்” என்றார்.

 

Maharaja First Look

 

தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபு பேசுகையில், ”ஒரு ஹீரோ 50 படம் நடிப்பது சாதாரணமானது கிடையாது. அப்படி இருக்கும் பொழுது 30 புது இயக்குநர்கள், 20 புது தயாரிப்பாளர்கள் உள்ளே வருவார்கள். அப்படி விஜய் சேதுபதி செய்திருப்பது மிகப்பெரிய விஷயம். நிதிலன் மிகக் குறுகிய காலத்தில் இந்த படத்தை எடுத்து இருக்கிறார். படக்குழிவினருக்கு வாழ்த்துகள்” என்றார். 

 

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் தயாரிப்பாளர் லலித் பேசுகையில், ”’96’ படத்தில் தயாரிப்பாளர்களுக்கு சில பிரச்சனைகள் இருக்கலாம். ஆனால் எனக்கு தெரிந்து விஜய் சேதுபதி அந்த படத்திற்கு சம்பளம் வாங்கவில்லை என்று நினைக்கிறேன். அடுத்ததாக 'துக்ளக் தர்பார்' . அவரிடம் டேட் கேட்டு விட்டு படம் ஆரம்பிக்கும் போது 'மாஸ்டர்' படத்தின் வில்லன் கதாபாத்திரத்துக்காக லோகேஷ் விஜய் சேதுபதியை கேட்டிருந்தார். நான் அவரிடம் கேட்டபோது டேட் இல்லை என்று சொல்லிவிட்டு 'துக்ளக் தர்பார்' படத்திற்கான டேட் மாற்றி வைத்தால் அந்த படத்தில் நடிக்கலாம் என்று சொன்னார். அதற்கு ஏற்ப டேட் மாற்றிக் கொடுத்ததில் இந்த படத்தை சிறப்பாக முடித்துக் கொடுத்தார். அடுத்ததாக 'காத்து வாக்குல ரெண்டு காதல்'. இந்த நான்கு படங்களுமே தயாரிப்பாளராக நான் லாபம் சம்பாதித்த படம். எடிட்டர் பில்லோமின் ராஜின் ரசிகன் நான் 'லியோ' படத்தின் ஃபர்ஸ்ட் ஆஃப் பார்த்துவிட்டு லோகேஷ் கனகராஜூக்கு கால் செய்து அவரது வேலையை பாராட்டினேன். அனைவருக்கும் வாழ்த்துகள்” என்றார். 

 

ஸ்டோன் பெஞ்ச் தயாரிப்பாளர் கார்த்திகேயன் சந்தானம் பேசுகையில், ”விஜய் சேதுபதியை குறும்படங்கள் காலத்திலிருந்து எனக்கு  தெரியும். எங்களுக்குள் நல்ல நட்பு உள்ளது. அவரின் ஒவ்வொரு படத்தின் வெற்றியும் எனக்கு மகிழ்ச்சியாக இருக்கும். அவரது ஐம்பதாவது படம் என்பது சாதாரண விஷயம் அல்ல. இந்த பயணத்தில் நானும் ஏதேனும் ஒரு பங்காக இருக்கின்றேன் என்பது மகிழ்ச்சி. வாழ்த்துக்கள்!” என்றார்.

Related News

9229

”இந்த அளவிற்கு கொண்டாடுவார்கள் என எதிர்பார்க்கவில்லை” - ‘லப்பர் பந்து’ வெற்றி குறித்து ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி பேச்சு
Thursday September-26 2024

அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில், பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில், ஹரிஷ் கல்யாண், அட்ட கத்தி தினேஷ், சுவாசிகா விஜய், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘லப்பர் பந்து’ விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...

இந்தியில் வெற்றி பெற்ற ‘கியாரா கியாரா’ இணையத் தொடர் தமிழ் மற்றும் தெலுங்கிலும் ஒளிபரப்பாகிறது!
Thursday September-26 2024

ஜீ5 தளத்தில் வெளியான ’கியாரா கியாரா’ இணையத் தொடர் பெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து,  செப்டம்பர் 20 முதல் இந்த தொடரின்  தமிழ் மற்றும் தெலுங்கு மொழிப் பதிப்புகளை வெளியிட்டுள்ளது...

விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் ‘பிக் பாஸ் சீசன் 8’! - அக்டோபர 6 ஆம் தேதி ஒளிபரப்பாகிறது
Thursday September-26 2024

தமிழின் முன்னணி தொலைக்காட்சியான  விஜய் டிவியின், பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 8 வரும் அக்டோபர் 6 மாலை 6 மணிக்கு கோலாகலமாக துவங்குகிறது...

Recent Gallery