Latest News :

இளையராஜா மற்றும் பாரதிராஜா இணைந்திருப்பது எனக்கு பெருமை - இயக்குநர் மனோஜ் பாரதிராஜா
Thursday September-14 2023

நடிகர் மனோஜ் பாரதிராஜா ‘மார்கழி திங்கள்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். வெண்ணிலா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் சார்பில் இயக்குநர் சுசீந்திரன் தயாரிக்கும் இப்படத்தில் ஷியாம் செல்வன், ரக்‌ஷனா, நக்‌ஷா ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். இவர்களுடன் இயக்குநர் பாரதிராஜா முக்கியமான வேடம் ஒன்றில் நடிக்கிறார். மேலும், இப்படத்திற்காக சுமார் 31 வருடங்களுக்குப் பிறகு பாரதிராஜவும், இசையமைப்பாளர் இளையராஜாவும் இணைந்துள்ளனர்.

 

இந்த நிலையில், ‘மார்கழி திங்கள்’ திரைப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று மாலை சென்னையில் நடைபெற்றது. இதில் இயக்குநர்கள் ஆர்.கே.செல்வமணி, சீமான், திரு, லிங்குசாமி, நடிகர்கள் கார்த்தி, சிவகுமார் உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் பலர் கலந்துக்கொண்டார்கள்.

 

நிகழ்ச்சியில் பேசிய படத்தின் இயக்குநர் மனோஜ் பாரதிராஜா, “18 வருட போராட்டத்திற்கு பிறகு நான் இப்போது இயக்குந‌ராக வந்திருக்கிறேன். சுசீந்திரன் சாரிடம் நான் நிறைய கதைய சொல்லியிருந்தேன். திடீரென்று ஒரு நாள் கூப்பிட்டு 'நீங்க படம் பண்ணுங்க' என்று கூறிவிட்டார். அதன் பின்னர் 15 நாட்களில் ஷூட்டிங் தொடங்கியது. என்னுடைய முதல் படத்தில் இளையராஜா மற்றும் பாரதிராஜா இணைந்திருப்பது எனக்கு பெருமை. கதாநாயகன் ஷியாம் நன்றாக நடித்துள்ளார். ரக்‌ஷனா மற்றும் அனைவரும் அருமையான பங்களிப்பை தந்துள்ளனர். இந்த திரைப்படம் நன்றாக வந்துள்ளது. கண்டிப்பாக‌ அனைவரும் பாருங்கள். என் கஷ்டங்களில் உடனிருந்த மனைவி மற்றும் குழந்தைகளுக்கு நன்றி. பத்திரிகையாளர்கள் என்றால் ஒரு குடும்பம் என்று சொல்லலாம். இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமையும்” என்றார்.

 

இயக்குநர் சுசீந்திரன் பேசுகையில், “மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இயக்குந‌ர் இமயம் பாரதிராஜா மற்றும் மனோஜ் பாரதிராஜாவை ஒன்று சேர்த்து படம் தயாரிப்பது மிகவும் சந்தோஷமாக உள்ளது.” என்றார்.

 

நடிகர் கார்த்தி பேசுகையில், “அனைவருக்கும் வணக்கம், பாரதிராஜா ஐயா அவர்களுக்கு பெரிய வணக்கம். மனோஜ் பாரதிராஜா இவ்வளவு சீக்கிரம் திரைப்படத்தை இயக்குவார் என்று நான் நினைக்கவில்லை. இதற்கு காரணமான‌ சுசீந்திரன் அவர்களுக்கு நன்றி. இளையராஜா சாரை நினைக்கும் போது மிகவும் சந்தோஷமாக உள்ளது. இப்போது வரை அவரை முன்மாதிரியாக வைத்துக் கொண்டிருக்கிறேன். அவர் தொடர்ந்து நிறைய படங்களுக்கு இசை அமைக்க வேண்டும் என்று வேண்டுகிறேன். இந்தப்படம் கண்டிப்பாக நல்லபடியாக‌ வரும் என்று ஆண்டவனை வேண்டிக் கொள்கிறேன்.” என்றார்.

 

தயாரிப்பாளர் ஜி. தனஞ்செயன் பேசுகையில், “இனிய மாலை வணக்கம். 'மார்கழி திங்கள்' டைட்டில் ரொம்ப அற்புதமாக இருக்கிறது. இப்படத்தில் நிறைய விஷயம் இருக்கும் என்று நம்புகிறேன். 'அலைகள் ஓய்வதில்லை' மாதிரி இப்படம் இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம். சுசீந்திரன் சாருக்கு தான் நன்றி சொல்ல வேண்டும். புதிய முகங்களுக்கு வாய்ப்பு கொடுத்திருக்கிறார். நல்ல படமாக அமைய வாழ்த்துகள்” என்றார்.

 

இயக்குந‌ர் திரு பேசுகையில், “மனோஜ் மற்றும் சுசீந்திரன் அவர்களுக்கு வாழ்த்துகள். இந்த படம் கண்டிப்பாக நல்ல படமாக அமையும் எனவும் வாழ்த்துகிறேன்” என்றார்.

 

தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பேசுகையில், “மனோஜ் கட்டாயம் இயக்குந‌ராக ஆவார் என்று நம்பினேன், அது தற்போது உண்மையாகி உள்ளது. சுசீந்திரன் மூலம் இது நடந்துள்ளது. பாரதிராஜா அவர்கள் இயக்குந‌ராக இருந்து இப்போது நடித்துக் கொண்டிருக்கிறார். மனோஜின் திறமை மீது எனக்கு மிகவும் நம்பிக்கை உள்ளது. இந்த படத்தின் வெற்றிக்கு வாழ்த்துகிறேன்” என்றார்.

 

தயாரிப்பாளர் பி.எல். தேனப்பன் பேசுகையில், “வாழ்த்த வந்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி, பாரதிராஜாவிற்காக தான் அனைவரும் வந்திருக்கிறோம். சுசீந்திரன் சார் முதல் படம் தயாரித்திருக்கிறார். மனோஜ் நிறைய படங்கள் இயக்கி வெற்றி பெறுவார் என்று வாழ்த்துகிறேன்” என்றார்.

 

இயக்குந‌ர் பேரரசு பேசுகையில், “அனைவருக்கும் வணக்கம், இயக்குந‌ர் இமயம் பாரதிராஜா அவர்களுக்கும், சிவகுமார் அவர்களுக்கும், சீமான் அவர்களுக்கும் வணக்கம். இசை என்றால் இளையராஜா தான், இயக்குந‌ர் என்றால் பாரதிராஜா தான் என்று மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் அவர்கள். இளையராஜா மற்றும் பாரதிராஜா மீண்டும் இணைந்துள்ளது மிக்க மகிழ்ச்சி. டிரைலரில் பாரதிராஜா, கதாநாயகன் மற்றும் கதாநாயகி மிகவும் நன்றாக நடித்துள்ளனர். மனோஜ் பாரதிராஜா இயக்கியிருக்கும் 'மார்கழி திங்கள்' திரைப்படம் மிகப்பெரிய வெற்றி அடையும்” என்றார்.

 

இயக்குந‌ர் சங்க செயலாளர் ஆர்.வி. உதயகுமார் பேசுகையில், “மனோஜ் இயக்குந‌ராக வரவேண்டும் என்று ஆசைப்பட்டேன். பல வருடங்களாக அவரிடம் இதை நான் சொல்லிக் கொண்டே இருந்தேன். ஒரு அற்புதமான இயக்குந‌ராக உருவாக்குவதற்கு மனோஜ் பாரதிராஜாவுக்கு வாய்ப்பு கொடுத்த திரு சுசீந்திரன் அவர்களுக்கு நன்றி. இந்த திரைப்படத்தின் டிரைலரை பார்க்கும்போது 'அலைகள் ஓய்வதில்லை' படத்தை நினைத்துக்கொண்டேன். இதன் பாடல்கள் மிக அழகாக 'காதல் ஓவியம்' பாடல்களை நினைவூட்டின‌. இசைஞானி இளையராஜா மற்றும் பாரதிராஜா அவர்களை பிரிக்க முடியாது, அவர்கள் உறவு என்றும் மறையாது. மனோஜ் பாரதிராஜா அவர்கள் புதிய அத்தியாயத்தை இப்படத்தின் மூலம் தொடங்குவார். கதாநாயகன் மற்றும் கதாநாயகிக்கு வாழ்த்துகள். இந்தப்படம் வெற்றிப்படமாக அமையும் எனவும் வாழ்த்துகிறேன்” என்றார்.

 

கதாநாயகி நக்‌ஷா சரண் பேசுகையில், “’மார்கழி திங்கள்’ குழுவினர் அனைவருக்கும் நன்றி. பாரதிராஜா சார் அவர்கள் மிகவும் நட்பாக‌ பேசுவார்கள். எனக்கு வாய்ப்பளித்த‌ மனோஜ் பாரதிராஜா மற்றும் சுசீந்திரன் அவர்களுக்கு மிகவும் நன்றி. படம் மிகவும் நன்றாக வந்துள்ளது” என்றார்.

 

கதாநாயகி ரக்‌ஷனா பேசுகையில், “மனோஜ் பாரதிராஜா சார், சுசீந்திரன் சார் மற்றும் 'மார்கழி திங்கள்' படத்தின் அனைத்து குழுவினருக்கும் நன்றி. இளையராஜா சார் கையை வச்சா அது ராங்கா போனதில்ல. இந்த திரைப்படத்திற்கு அவர் இசை அமைத்துள்ளார், ரொம்ப நன்றி சார். இந்த திரைப்படம் உங்களுக்கு மிகவும் பிடிக்கும், கண்டிப்பாக‌ அனைவரும் பார்க்கணும்” என்றார்.

 

கதாநாயகன் ஷியாம் செல்வன் பேசுகையில், “மனோஜ் பாரதிராஜா அவர்களால் தான் நான் இந்த திரைப்படத்தில் நடித்துள்ளேன். இந்தப் படத்தில் உதவி செய்த அனைவ‌ருக்கும் நன்றி. பாரதிராஜா மற்றும் இளையராஜா சார் அவர்களுக்கு நன்றி. நிகழ்ச்சிக்கு வந்திருக்கும் அனைவருக்கும் நன்றி. என் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் நன்றி” என்றார்.

 

இயக்குந‌ர் லிங்குசாமி பேசுகையில், “தமிழ் சினிமாவில் இயக்குந‌ர் என்றால் பாரதிராஜா சார் தான். திருப்பாவையில் வரும் முதல் வார்த்தை மார்கழி திங்கள். எனவே இது மிகவும் அருமையான தலைப்பு. இந்த திரைப்படத்தின் தயாரிப்பாளர் சுசீந்திரன் அவர்களுக்கு வாழ்த்துகள். டிரைலர் சிறப்பாக இருக்கிறது. இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமையும் என நம்புகிறேன்” என்றார்.

 

பெப்சி தலைவரும் இயக்குநருமான‌ ஆர்.கே. செல்வமணி பேசுகையில், “மனோஜ் பாரதிராஜாவிற்கு வாய்ப்பளித்த சுசீந்திரனுக்கு நன்றி. பாரதிராஜாவிற்கு நன்றி. திறமையானவருக்கு வாய்ப்பு கிடைக்காமல் இருந்து கிடைத்துள்ளது. 'மார்கழி திங்கள்' என்று அழகான தமிழ் டைட்டில். இதைப் பார்க்கும்போதே மனதுக்குள் சந்தோஷம். மண் வாசனை நிறைந்த படமாக இருக்கும் என்றும், பிரம்மாண்டமாக‌ இருக்கும் என்றும் நம்புகிறேன். திரைப்படத்தில் நடித்த அனைவரும் நன்றாக நடித்துள்ளார்கள். மனோஜ் பாரதிராஜாவை பத்திரிகையாளர்கள் மிகப்பெரிய இயக்குந‌ராக மக்களிடம் கொண்டு போய் சேர்க்க வேண்டும். தந்தையை மிஞ்சிய தனையனாக‌ வருவதற்கு என்னுடைய வாழ்த்துகள்” என்றார்.

 

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசுகையில், “அனைவருக்கும் என்னுடைய அன்பும் வணக்கமும். என்னுடைய தம்பி இயக்குநராக ஆகியிருப்பது ஒரு மகிழ்ச்சியான தருணம். சுசீந்திரன் அவர்களுக்கு நன்றி. மிகப்பெரிய சாதனை படைத்திருப்பவர் இசைஞானி இளையராஜா. அவரது திறமைக்கு எதுவும் ஈடாகாது. உலகத்தின் தலைசிறந்த ஓவியராக‌ வரவேண்டியவர் பாரதிராஜா” என்றார்.

 

நடிகர் சிவகுமார் பேசுகையில், “திரையுலகத்தை சேர்ந்த அனைவரையும் பார்ப்பதற்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. 'மார்கழி திங்கள்' திரைப்படத்தில் ரொம்ப வருடங்களுக்கு பிறகு இயக்குநர் இமயம் பாரதிராஜாவும் இசைஞானி இளையராஜாவும் இணைந்துள்ளனர். இத்திரைப்படம் மிகவும் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன். அனைவரும் பல்லாண்டு பல்லாண்டு வாழ்க என வாழ்த்துகிறேன்” என்றார்.

 

இயக்குநர் இமயம் பாரதிராஜா பேசுகையில், “என் இனிய தமிழ் மக்களே, உங்கள் பாசத்திற்குரிய பாரதிராஜா பேசுகிறேன். மேடையில் அமர்ந்திருக்கும் அத்தனை ஜாம்பவான்களுக்கும் நன்றி. நடிகனாக இருந்து இயக்குந‌ராக மாறுவது சுலபமில்லை, என் மகன் மீது நம்பிக்கை உள்ளது. டிரைலர் தான் காட்டியிருக்கிறான், மிக அற்புதமாக செய்துள்ளான். முக்கியமாக நான் நன்றி தெரிவிக்க வேண்டியவர் யார் என்றால் சுசீந்திரன் தான். காதலை அடிப்படையாக கொண்ட இந்த திரைப்படத்தை அனைவரும் பார்க்க வேண்டும். அத்தனை இயக்குந‌ர்களும் என்னை அப்பா என்று தான் அழைத்தார்கள். மிகவும் மகழிச்சி. இங்கு வந்திருக்கும் அனைவருக்கும் நன்றி, கண்டிப்பாக இந்தப் படம் வெற்றியடையும், அப்போது என் மகனை பற்றி பேசுவேன்” என்றார்.

Related News

9237

’அமரன்’ படத்தை பார்த்து பாராட்டிய முதல்வர் மு.க.ஸ்டாலின்!
Thursday October-31 2024

ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷ்னல் சார்பில் நடிகர் கமல்ஹாசன் தயாரிப்பில், சிவகார்த்திகேயன் நடிப்பில், ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘அமரன்’...

பரபரப்பான சம்பவங்கள் பின்னணியில் உருவான ‘முரா’ பட டிரைலர் வெளியானது!
Thursday October-31 2024

‘கப்பேலா’ படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் முஹம்மது முஸ்தபா, இயக்கத்தில் உருவாகியிருக்கும் ஆக்‌ஷன் திரில்லர் படம் ‘முரா’...

ஃபேண்டஸி காதல் படமாக உருவாகியுள்ள ‘மெஸன்ஜர்’!
Wednesday October-30 2024

பி.வி.கே ஃபிலிம் ஃபேக்டரி (PVK FILM FACTORY) சார்பில் பா...

Recent Gallery