Latest News :

விக்ரம் சார் தான் இந்தப்படத்தைத் தாங்கியிருக்கிறார் - ‘தங்கலான்’ பற்றி பேசிய இயக்குநர் பா.இரஞ்சித்
Wednesday November-01 2023

இயக்குநர் பா.இரஞ்சித் இயக்கத்தில், விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள ‘தங்கலான்’ திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், இன்று படத்தின் டீசர் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. விக்ரமின் நடிப்பு மற்றும் மேக்கிங் ஆகியவை மிரட்டலாக இருப்பதோடு, வியக்க வைக்கும் விதத்திலும் அமைந்திருக்கிறது.

 

ஸ்டுடியோ கிரீன் பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் கே.ஈ. ஞானவேல் ராஜா மற்றும் நீலம் புரொடக்ஷன்ஸ் சார்பில் இயக்குநர் பா.ரஞ்சித் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கும் இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா இன்று காலை சென்னையில் பத்திரிகையாளர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர்கள் கலந்துக்கொண்டு படம் குறித்து பகிர்ந்துக்கொண்டார்கள்.

 

இயக்குநர் பா ரஞ்சித் பேசுகையில், “டீசர் உங்களுக்குப் பிடித்திருக்கும் என நம்புகிறேன்.  நிறையப் பேருக்கு நன்றி சொல்ல வேண்டும், இது டீசர் வெளியீடு தான் இன்னும் பல மேடைகள் இருக்கிறது. இந்தப்படம் நாங்கள் நினைத்ததை விட பட்ஜெட் அதிகமாகி விட்டது, ஆனால் இன்று வரை அதைப்பற்றி ஒரு கேள்வி கூட ஞானவேல் சார் கேட்கவில்லை. அவருக்கு எனக்குமான உறவு 10 ஆண்டுகளுக்கு மேலானது. அட்டகத்தியில் இருந்து இப்போது வரை தொடர்கிறது. அவர் கமர்ஷியல் தயாரிப்பாளர் ஆனால் அவர் ஆர்டிஸ்டிக் படம் எடுக்கிறார் என்றால் என் கூடத்தான் செய்வார். அந்தளவு என்னை நம்புகிறார். அவர் நம்பிக்கையைக் காப்பாற்றுவேன் என நினைக்கிறேன். அவரைத் திருப்திப்படுத்துவது கஷ்டம், இந்த டீசருக்கு கூட நிறையக் கட் கேட்டார். கடைசியாக அவர் பிடித்திருக்கிறது என்று சொன்னவுடன் திருப்தியாக இருந்தது. விக்ரம் சார், ஒரு  நடிகனாக அவருக்கு நான் மிகப்பெரிய ரசிகன், அவருடன் இணைந்து வேலைப் பார்க்க வேண்டும் என்று எனக்கே ஆசை இருந்தது. சர்பட்டாவிற்கு பிறகு அவருடன் இணைகிறோம் என்ற போது, என்ன மாதிரி இருக்க வேண்டும் என்று நிறைய யோசித்தோம். இந்தக்கதை சொன்ன போது அந்தக் கதாபாத்திரமாகவே மாறி வந்தார். பொதுவாக நான் என் நடிகர்களின் கதாப்பாத்திர லுக்கை மாற்ற நிறைய உழைப்பேன், சின்ன சின்னதாக நிறைய வேலை பார்ப்போம் ஆனால் முதல் முறையாக விக்ரம் சார் எனக்கு நிறைய சாய்ஸ் தந்தார். அவர் அந்த கதாபாத்திரமாக முழுவதுமாக மாறிவிட்டார். இந்தப்படத்திற்காக அவர் பட்ட கஷ்டம் பெரியது,  இத்தனை வருடத்திற்குப் பிறகும் இத்தனைப் படத்திற்குப் பிறகும் ஏன் இவ்வளவு கஷ்டப்பட  வேண்டும்  என ஆச்சரியமாக இருக்கும் அவரிடமே கேட்பேன், நடிப்பு தான் அவருக்கு எல்லாமே. அவருக்கு அடிபட்டு விட்டது ஆனால் அதற்கப்புறம் ஒரு ஆக்சன் காட்சி எடுக்க வேண்டி இருந்தது. காட்சி எடுக்கும் போது அவரால் முடியவில்லை என எனக்குத் தெரியும்,  என்ன  சார் வலிக்கிறதா சார் என்றால் ஆமா என்பார்,  ஆனாலும் ரீடேக்கில் நடிப்பார்.  அவர் உழைப்பு பிரமிப்பானது. அவர் தான் இந்தப்படத்தைத் தாங்கியிருக்கிறார். இந்தப்படத்தில் நடிகர்கள் எல்லோருமே மிகப்பெரிய உழைப்பைத் தந்துள்ளார்கள். பார்வதி வித்தியாசமான ஒரு ரோலில் அசத்தியிருக்கிறார். பசுபதியை அவரது கேரக்டரை நீங்கள் எல்லோருமே ரசிப்பீர்கள். இந்தப்படத்தில் எல்லோருமே மிகப்பெரிய உழைப்பைத் தந்துள்ளார்கள். ஜீவியை எனக்கு ரொம்பப் பிடிக்கும் இந்தப்படத்திற்கு அவர் இசையமைக்கிறார் என்ற போது, நடிக்கப் போய்விடுவாரே என்று பயமாக இருந்தது. ஆனால் அதைத்தாண்டி ஒவ்வொரு முறையும் அவர் இசையை என்னிடம் காட்டும் போது பிரமிப்பாக இருந்தது. அவர் கையில் தான் இந்தப்படம் மொத்தமும் உள்ளது. எடிட்டர் செல்வா பார்த்து, எனக்கே பயம் விஷுவல் பார்த்து என்ன சொல்வார் என நினைப்பேன், அவர் வேலை எப்போதும் சிறப்பாக இருக்கும் இந்தப்படத்திலும் மிகச் சிறப்பாகச் செய்துள்ளார். ஸ்டண்ட் சாம் மிரட்டியிருக்கிறார்.  கிஷோர் விஷுவல்கள் கண்டிப்பாகப் பேசப்படும்.  இன்னும் சொல்ல நிறைய இருக்கிறது கண்டிப்பாக இந்தப்படம் உங்களுக்கு பிடிக்கும் நன்றி.” என்றார்.

 

நடிகர் சீயான்  விக்ரம் பேசுகையில், “வரலாற்றில் நடக்கும் நல்ல விசயங்களைக் கொண்டாட வேண்டும், கெட்ட விசயங்களை மறக்கக் கூடாது என்று என் தந்தை என்னிடம் சொல்லியிருந்தார். எல்லா நாட்டிலும் அவர்கள் வரலாற்றைக் கொண்டாடுகிறார்கள் பதிவு செய்துள்ளார்கள். இந்தியாவில் அது போல் நிறைய விசயங்கள் நடந்துள்ளது, ஆனால் இப்போதைய தலைமுறைக்கு அது தெரியவில்லை. டைட்டானிக் காதல் கதை என்றாலும், அதன் பின்னணி, அந்த கதை நடக்கும் இடம் கப்பல், அதன் வரலாறு அது  தான் முக்கியம், அது போல் நம் வரலாற்றில் நடந்த நிகழ்வை அந்த காலகட்டத்தை அவர்கள் வாழ்க்கையைச் சொல்கிற படம் இது, இந்தப்படத்தைத் திரையில் கொண்டு வருவது அத்தனை கடினமாக இருந்தது. இந்தப்படம் செட்டுக்குள் எடுக்கவில்லை கேஜிஎஃப்பில் போய் அங்கு தங்கி எடுத்தோம், தேள் பாம்பு எல்லாம் சர்வசாதாரணமாக இருக்கும். கல் முள்ளில் வெறும் காலில் நடந்து,  அவர்கள் உடை போட்டுக்கொண்டு நடித்தேன். முதல் முறை லைவ் சவுண்டில் நடித்திருக்கிறேன் அது இன்னும் கஷ்டம். டப்பிங்கில் நான் நிறைய மாற்றி விடுவேன், அந்நியனில்  ரெமோ எல்லாம் டப்பிங்கில் மாற்றியது தான் ஆனால் இந்தப்படத்தில் அது நடக்காது. லைவ்வில் கச்சிதமாக அதே டோனில் பேச வேண்டும்.  கேமராவும் ஷாட் கட்டாகுது ஒரே ஷாட்டில் சுற்றி வரும், ரெஸ்ட்டே இருக்காது. ஆனால் எத்தனை கஷ்டப்பட்டாலும் மறுநாள் உற்சாகம் தொற்றிக்கொள்ளும், நான் இது மாதிரி உணர்ந்ததே இல்லை, ரஞ்சித்திற்கு நன்றி. ரஞ்சித் சார்பட்டா படத்தை விட 100 மடங்கு உழைத்திருக்கிறார். நான் முன்னமே எந்தப்படத்திலும் இல்லாத மாதிரி இருக்க வேண்டும் என முடிவு பண்ணித்தான் இந்தப்படம் செய்தேன். ரஞ்சித் மிக அற்புதமான இயக்குநர், அதை இப்படத்தில் நிரூபித்திருக்கிறார். ஜீவி இந்தப்படத்தில் அட்டகாசமாக இசையமைத்திருக்கிறார்.  அவர் நடிக்க வந்தபோது வேண்டாம் நடிக்காதே,  இயக்குநர்கள் இசையமைப்பாளர்கள் நடித்தால்  எனக்கு வாய்ப்பு வராதே என நகைச்சுவையாகச்  சொன்னேன், ஜீவி நடிப்பதால் இசை நன்றாக வருமா ? என நினைத்தேன்,  ஆனால் நடித்துக்கொண்டே எப்படி இப்படி பிரமாதப்படுத்துகிறார் என்று தெரியவில்லை, அவர் நடிக்க ஆரம்பித்த பிறகு தான் பெரிய படங்களில்  அசத்துகிறார். ஞானவேல் ராஜாவுடன் முன்பே படம் செய்யப் பேசினோம், இந்தப்படம் அமைந்தது மகிழ்ச்சி. இது எல்லோருக்கும் மிக முக்கியமான  படமாக இந்திய சினிமாவில் ஒரு நல்ல படமாக இருக்கும் நன்றி” என்றார்.

 

Thangalaan Teaser Launch

 

இசையமைப்பாளர் ஜீவி பிரகாஷ் பேசுகையில், “எனக்கு மிக முக்கியமான, வித்தியாசமான படம் தங்கலான்.  இப்படத்தின் இசையை இண்டியன் டிரைபலையும் இண்டர்னேசனலையும் மிக்ஸ் பண்ணி புதுமையாகச் செய்துள்ளோம், அதை எல்லோரும் கவனித்துப் பாராட்டுகிறார்கள். தங்கலான் ஒரு  கோல்டன் டீம், எல்லோரும் அவ்வளவு உழைத்திருக்கிறார்கள்.  எல்லோரும் அவர்களுடைய பெஸ்ட்டை தந்துள்ளார்கள்.  விக்ரம் சார் இந்தப்படத்தில் மிகப்பெரிய உழைப்பைத் தந்திருக்கிறார், ஒவ்வொரு படத்திலேயும் அவர் பாத்திரத்திற்காக மெனக்கெடுவார் ஆனால்  இந்தப்படத்தில் கதையும் அவருக்கு வித்தியாசமாக அமைந்திருக்கிறது. இந்தியாவின் கிறிஷ்டியன் பேர்ல் போல  உழைத்திருக்கிறார். என்ன கஷ்டப்பட்டாலும் அதை வெளிக்காட்ட மாட்டார்.  ஒவ்வொரு படத்திலும் பா ரஞ்சித் வேறு உயரத்தைத் தொடுகிறார், அவர் படத்தை வடிவமைக்கும் விதம் பிரமிப்பாக இருக்கிறது. அவருக்கு உலகளவில் அங்கீகாரம் கிடைக்கும், எப்போதும் கேப்டன் கூல் மாதிரி கூலாக இருக்கிறார். கலை இயக்குநர் SS மூர்த்தி இந்தப்படத்தில் அட்டகாசமாக உழைத்திருக்கிறார். எடிட்டர் மிகச்சிறப்பாக எடிட் செய்திருக்கிறார். கிஷோர் விஷுவல்கள் அருமையாக வந்திருக்கிறது. இந்தப்படம் உங்கள் எல்லோரையும் அசரவைக்கும் அனைவருக்கும் நன்றி.” என்றார்.

 

தயாரிப்பாளர் கே.ஈ. ஞானவேல் ராஜா பேசுகையில், “சீயான் விக்ரம் சாருக்கு ஸ்டூடியோ க்ரீன் பிலிம்ஸ்  நிறுவனத்துடன் முதல் படம், மிகவும் அன்பானவர், கடின உழைப்பாளி தன் வேலையை மிக அர்ப்பணிப்புடன் செய்பவர். நானும் பா ரஞ்சித்தும் விக்ரம் சாரை சந்திக்கச் சென்ற போது என்ன தேதிகள்  வேண்டும் என்றார்,  அந்த தேதிகள் தள்ளிப்போனபோது கூட அதே கெட்டப்பில் தன்னை மாற்றிக்கொள்ளாமல் இந்தப்படத்துக்காக காத்திருந்து உழைத்தார். அவர் அர்ப்பணிப்பைப் பார்த்து மிரண்டுவிட்டோம். அவரது உழைப்பு மிகப்பெரிது. இந்தப்படத்திற்காக உழைத்த அனைத்து கலைஞர்களுக்கும் நன்றி. ரஞ்சித் சார் எப்படிப்பட்ட படம் வேண்டுமானாலும் செய்யலாம், ஆனால் முதல் படத்திலிருந்து இது தான் செய்ய வேண்டும் என முடிவு செய்து மிகச்சரியாகச் செய்து வருகிறார். அதற்கான வெற்றியையும் அவர் பெற்று வருகிறார். இந்தப்படம் அவருக்கு இன்னும் பெரிய இடத்தைப் பெற்றுத்தரும். ஜீவி பிரகாஷ் எங்கள் வீட்டுப் பிள்ளைபோல இந்தப்படத்திற்காகச் சிறந்த இசையைத் தந்துள்ளார். கிஷோர் ஒளிப்பதிவில் மிரட்டியிருக்கிறார், எல்லோரும் விஷுவல் பார்த்து அவரைப்பற்றிக் கேட்டார்கள். அவர் மட்டுமில்லாமல் கலை இயக்கம், ஸ்டண்ட் என எல்லாத் துறையும் இந்தப்படத்தில் பேசப்படும். இந்த மாதிரியான ஒரு படத்தில் நானும் பங்கேற்றிருப்பது மகிழ்ச்சி. இது உலக அளவில் அனைவரும் ரசிக்கும்படியான படமாக இருக்கும். நம் தமிழ் சினிமாவின் பெயரை உலகம் முழுக்க இந்தப்படம் சொல்லும். ஸ்டூடியோ க்ரீன் பிலிம்ஸ்   ஆரம்பித்த போது பாலா சாரை வைத்து படம் எடுப்பதாக இருந்தது, அப்போது ஹீரோவாக யாரை நடிக்க வைக்கலாம் என்ற போது, சீயான் சாரை சொன்னார்.  விக்ரம் சாருக்கு அது தெரியாது. அவரை வைத்து முதல் படம் தயாரிக்க இந்த நிறுவனத்திற்கு சூர்யா சார் வைத்த பெயர் தான் ஸ்டூடியோ க்ரீன். சூர்யா சார் விக்ரம் சாருக்காக வைத்த பெயர் தான் இது. அப்போது அது நடக்கவில்லை,  இப்போது நடப்பது மகிழ்ச்சி” என்றார்.

 

பசுபதி, பார்வதி, மாளவிகா மோகனன் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ள ‘தங்கலான்’ திரைப்படம் 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 26 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

Related News

9324

’சார்’ திரைப்படம் இன்றைய காலகட்டத்தில் மிக அவசியமான படம் - இயக்குநர் வெற்றிமாறன்
Thursday September-19 2024

நடிகரும் இயக்குநருமான போஸ் வெங்கட் இயக்கத்தில், விமல் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘சார்’...

மீனா, ஷாலினி வரிசையில் லக்‌ஷனா ரிஷி மிகப்பெரிய இடத்தை பிடிப்பார் - இயக்குநர்கள் கே.பாக்யராஜ், பேரரசு பாராட்டு
Thursday September-19 2024

அப்பா மீடியா சார்பில் அனிஷா சதீஷ் தயாரிப்பில் உருவாகியிருக்கும் வீடியோ தனியிசை பாடல் ‘எங்க அப்பா’...

”கலைக்கு என்றும் உண்மையாக இருப்பேன்” - ‘வாழை’ 25 வது நாள் வெற்றி விழாவில் மாரி செல்வராஜ் நெகிழ்ச்சி
Wednesday September-18 2024

நவ்வி ஸ்டுடியோஸ் (Navvi Studios) நிறுவனத்தின் சார்பில் திவ்யா மாரி செல்வராஜ், மாரி செல்வராஜ் தயாரிக்க, டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார், ஃபார்மர்ஸ் மாஸ்டர் பிளான் புரொடக்‌ஷன்ஸ் வழங்க, ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட்ட, ’வாழை’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி மிகப்பெரும் வரவேற்பைப் பெற்று, 25 நாளைக் கடந்திருக்கிறது...

Recent Gallery