Latest News :

இந்த மாதிரி கதைக்காக தான் காத்திருந்தேன் - ‘சில நொடிகள்’ படம் பற்றி சிலாகிக்கும் ரிச்சர்ட் ரிஷி
Friday November-03 2023

எஸ்குயர் புரொடக்‌ஷன்ஸ் யுகே (Esquire Productions UK) மற்றும் புன்னகை பூ கீதா தயாரிப்பில், வினய் பரத்வாஜ் இயக்கத்தில், ரிச்சர்ட் ரிஷி, புன்னகை பூ கீதா, யாஷிகா ஆனந்த் ஆகியோரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘சில நொடிகளில்’. முழுக்க முழுக்க லண்டனில் படமாக்கப்பட்டுள்ள இப்படம் முக்கோண காதல் கதையாகவும், க்ரைம் சஸ்பென்ஸ் த்ரில்லராகவும் உருவாகியுள்ளது.

 

படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்து பின்னணி வேலைகளில் ஈடுபட்டுள்ள படக்குழு கடந்த வாரம் படத்தில் இடம்பெற்றுள்ள “ஆசை முகம்...” என்ற பாடலை வெளியிட்டது. அப்பாடல் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருக்கும் நிலையில், இரண்டாவது பாடலை விரைவில் வெளியிட இருப்பதோடு, படத்தின் முன்னோட்டத்தை அடுத்த வாரம் வெளியிட இருக்கும் படக்குழு, படத்தை வரும் நவம்பர் 24 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிடுவதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளது.

 

இந்த நிலையில், படம் குறித்து பத்திரிகையாளர்களிடம் பகிர்ந்துக் கொண்ட நடிகர் ரிச்சர்ட் ரிஷி, “தொடர்ந்து இரண்டு வெற்றிகளை கொடுத்த பிறகும் சிறு இடைவெளி எடுத்துக்கொண்டதற்கு காரணம், கதை தேர்வு தான். இந்த ஒரு வருடத்தில் என்னை தேடி நிறைய கதைகள் வந்தன. ஆனால், அவை அனைத்துமே ஒரே மாதிரியாகவும், இதற்கு முன்பு என் நடிப்பில் வெற்றி பெற்ற படங்களின் சாயலிலும் இருந்தது, அதனால் அந்த கதைகளை நிராகரித்து விட்டேன். வித்தியாசமான அல்லது புதிய ஜானர் கதைகளில் நடிக்க வேண்டும் என்பதில் தெளிவாக இருந்தேன். அந்த சமயத்தில் தான் வினய் இந்த கதையை என்னிடம் சொல்லி திரைக்கதையை கொடுத்தார், படித்து பார்த்ததும் வித்தியாசமாக இருந்ததோடு, ஆங்கிலப் பட பாணியில் ஸ்டைலிஷாகவும் இருந்தது. அதே சமயம், நமது கலாச்சாரத்தை தொடர்பு படுத்துவதுபோலும் கதை இருந்ததால் உடனே சம்மதம் சொல்லிவிட்டேன். இந்த மாதிரி கதைக்காக தான் ஒரு வருடம் காத்திருந்தேன்.

 

கதை முழுக்க முழுக்க லண்டனில் நடக்கிறது. இந்தியாவை விட்டுவிட்டு லண்டனை கதைக்களமாக தேர்வு செய்ததற்கு காரணம், படத்திற்கு புதிய லுக் ஒன்றை கொடுப்பதற்காக தான். அதுமட்டும் அல்ல, இந்த கதை சர்வதேச அளவில் இருப்பதாலும், என்னுடைய கதாபாத்திரம் காஸ்மட்டிக் சர்ஜன், யாஷிகா ஆனந்தின் கதாபாத்திரம் மாடல் என்பதால், இதுபோன்ற துறைகளில் லண்டன், பிரான்ஸ் போன்ற இடங்கள் தான் முன்னிலையில் இருப்பதால் கதைக்களம் லண்டனாக தேர்வு செய்தோம்.

 

புன்னகை பூ கீதா, யாஷிகா ஆனந்த் மற்றும் என்னுடைய கதாபாத்திரம் என மூன்று பேரை சுற்றி தான் கதை நடக்கும். படம் தொடங்கி முக்கோண காதல் கதைபோல் பயணிக்கும், பிறகு மர்டர் மிஸ்டரி மற்றும் க்ரைம் சஸ்பென்ஸ் த்ரில்லர் ஜானர் திரைப்படமாக மாறும், அதாவது நொடி பொழுதில் ஒருவரது வாழ்க்கை நினைத்து பார்க்காதபடி மாறிவிடும், அதனால் தான் ‘சில நொடிகளில்’ என்று தலைப்பு வைத்திருக்கிறோம். நிச்சயம் ஒரு வித்தியாசமான படமாக மட்டும் இன்றி, ரசிகர்களை எண்டர்டெயின் பண்ண கூடிய படமாக இருப்பதோடு, என்னை வேறு மாதிரியாக காட்டும் படமாக இருக்கும்.” என்றார்.

 

Punnagai Poo Geetha

 

இயக்குநர் வினய் பரத்வாஜ் படம் பற்றி கூறுகையில், “ரிச்சர்ட் சொன்னது போல் ‘சில நொடிகள்’ ஸ்டைலிஷான படமாக மட்டும் இன்றி தொழில்நுட்ப ரீதியாக மிகப்பெரிய படமாக இருக்கும். இந்த படத்தில் ஐந்து இசையமைப்பாளர்கள் பணியாற்றியிருக்கிறார்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு ரகத்தில் பாடல்களை கொடுத்திருக்கிறார்கள். பின்னணி இசையும் பேசப்படும் விதத்தில் இருக்கும். ரிச்சர்ட் ரிஷி ஒரு காஸ்மட்டிக் சர்ஜன், அவர் வாழ்க்கையில் பல மாடல் அழகிகளை சந்திக்கிறார். அப்படி ஒருவர் தான் யாஷிகா ஆனந்த், இவருவருக்கும் பழக்கம் ஏற்படுகிறது. இந்த பழக்கம் தம்பதியான ரிச்சர்ட் - புன்னகை பூ கீதா வாழ்க்கையில் எப்படிப்பட்ட பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது, அதனால் வரும் பிரச்சனைகள் என்று படம் பயணிக்கும்.

 

ரிச்சர்ட் வலுவான கதாபாத்திரங்களை சிறப்பாக செய்ய கூடியவர். கிராமத்து பின்னணியில் வெளியான அவரது படங்களை பார்த்தேன், அதில் சிறப்பாக நடித்திருந்தார். அவரை வேறு ஒரு லுக்கில் இந்த படம் காட்டும். அவரை ஸ்டைலிஷாக இந்த படத்தில் காட்டியிருக்கிறோம், அதற்கு அவர் சரியாக பொருந்தியிருக்கிறார். யாஷிகா ஆனந்த் விபத்துக்கு பிறகு நடிக்கும் படம் இது. அவர் ஒரு மாடல் என்பதால், கிளாமராக நடித்திருப்பதோடு, தன்னை நிரூபிக்கும் வகையிலும் நடித்திருக்கிறார். ரிச்சர்ட், யாஷிகா, புன்னகை பூ கீதா இந்த மூன்று பேரை சுற்றி தான் கதை நடக்கும். இவர்களை தவிர லண்டனை சேர்ந்த சில நடிகர்கள் நடித்திருக்கிறார்கள்.

 

படத்தொகுப்பாளர், ஒளிப்பதிவாளர், ஒலி வடிவமைப்பாளர் என்று அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களையும் தேடி பிடித்திருக்கிறோம். கொரோனா காலக்கட்டத்திற்குப் பிறகு மக்கள் திரையரங்கிற்கு வந்து ஒரு படத்தை பார்க்கிறார்கள் என்றால் அது கதையளவில் மட்டும் சிறப்பாக இருந்தால் போதாது, தொழில்நுட்ப ரீதியாகவும் சிறப்பாக இருக்க வேண்டும் என்ற நிலை வந்துவிட்டது. திரையரங்கில் படம் பார்க்கும் ரசிகர்களுக்கு புதுவித உணர்வை கொடுக்க வேண்டும், அதுபோன்ற படங்களை தான் மக்களும் விரும்புகிறார்கள். அதனால், தொழில்நுட்ப ரீதியாகவும் படம் பேசப்படும் விதத்தில் இருக்க வேண்டும் என்று நினைத்தோம்.

 

படத்தின் பணிகள் முடிந்துவிட்டது. தற்போது “ஆசை முகம்” என்ற பாடலை வெளியிட்டுள்ளோம், அது நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. விரைவில் இரண்டாவது பாடலை வெளியிட இருக்கிறோம். அதை தொடர்ந்து படத்தின் முன்னோட்டத்தை விரைவில் வெளியிட இருக்கிறோம்.” என்றார்.

 

Sila Nodigalil

 

தயாரிப்பாளர் டாக்டர்.முரளிமனோகர் பேசுகையில், “ரிச்சர்ட் ரிஷி நல்ல நடிகர் மட்டும் அல்ல நல்ல மனிதர், நான் சினிமாத்துறையில் பல வருடங்கள் பணியாற்றியிருக்கிறேன், பல ஹீரோக்களுடன் பயணித்திருக்கிறேன். ஆனால், நான் பார்த்த நல்ல உள்ளம் கொண்ட சிறந்த மனிதர் ரிச்சர்ட் ரிஷி. அவருக்கு இந்த படம் நல்ல எதிர்காலத்தை கொடுக்கும். இயக்குநர் விஜய் பரத்வாஜ் படத்தை தொழில்நுட்ப ரீதியாக தரமான படமாக கொடுத்திருக்கிறார். லண்டனில் இந்த படத்திற்கு நான்கு லொக்கேஷன்கள் தேவைப்பட்டது. ஆனால், அந்த நான்கு லொக்கேஷன்களும் ஒரே இடத்தில் கிடைத்தது மிகப்பெரிய ஆச்சரியம். அதுமட்டும் இன்றி படத்தில் வரும் ஒரு வீடு மிக அழகாக இருப்பதோடு, கதைக்கு மிக சரியாகவும் பொருந்தியிருக்கிறது. நிச்சயம் படம் ரசிகர்களை திருப்திப்படுத்தும் படமாக இருக்கும். நவம்பர் 24 ஆம் தேதி படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளோம்.” என்றார்.

 

“எஞ்சாமி” பாடலுக்கு ஒளிப்பதிவு செய்த அபிமன்யு சதானந்தம் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு சைஜல் பி.வி படத்தொகுப்பு செய்திருக்கிறார். மசாலா காஃபி, பிஜோன் சுர்ராவ், தர்ஷனா கே.டி, ஸ்டாக்காடோ, ரோகித் மட் ஆகிய ஐந்து இசையமைப்பாளர்கள் இசையமைத்திருக்கிறார்கள். ஷர்மிளா மண்ட்ரே கிரியேட்டிவ் தயாரிப்பாளராக பணியாற்றியிருக்கிறார்.

Related News

9325

”பெண்கள் இல்லாமல், நம் உலகம் இல்லை” - நடிகர் ஜெயம் ரவி உருக்கம்
Saturday January-11 2025

கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், ஜெயம் ரவி, நித்யா மேனன் நடிப்பில் உருவாகியுள்ள ‘காதலிக்க நேரமில்லை’ திரைப்படம் பொங்கல் வெளியீடாக வரும் ஜனவரி 14 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது...

எல்லைகளைத் தாண்டிய சினிமா அனுபவம்! - கவனம் ஈர்க்கும் 'டாக்ஸிக்' கிளிம்ப்ஸ்
Friday January-10 2025

கேஜிஎஃப் மூலம் இந்தியத் திரையுலகைத் திரும்பிப் பார்க்க வைத்து, புதிய சரித்திரம் படைத்த, ராக்கிங் ஸ்டார் யாஷ், ஜனவரி 8 ஆம் தேதி 39 வது பிறந்தநாளைக் கொண்டாடினார்...

Recent Gallery