Latest News :

”நான் கிறிஸ்துவ குடும்பத்தில் பிறந்தவன் அல்ல” - இயக்குநர் மிஷ்கின் அறிவிப்பு
Saturday November-04 2023

‘சவரக்கத்தி’ திரைப்படத்தை இயக்கிய ஆதித்யா இயக்கத்தில் விதார்த், பூர்ணா, ஆதித் அருண், சுபரி ராயகுரு, மிஷ்கின் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘டெவில்’. மாருதி பிலிம்ஸ் மற்றும் டச் ஸ்க்ரீன் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனங்கள் சார்பி. எஸ்.ராதாகிருஷ்ணன் மற்றும் எஸ்.ஹரி இணைந்து தயாரித்திருக்கும் இப்படத்தின் மூலம் இயக்குநர் மிஷ்கின் இசையமைப்பாளர் அவதாரம் எடுத்திருக்கிறார். 

 

இந்த நிலையில், இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று மாலை சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. இதில் இயக்குநர்கள் பாலா, வெற்றிமாறன், சசி, கதிர், வின்செண்ட் செல்வா, அருண் மாதேஸ்வரன், கருணாகரன், தயாரிப்பாளர்கள் முரளி, தாணு உள்ளிட்ட ஏராளமான திரையுலக பிரமுகர்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக் கொண்டார்கள்.

 

படத்தில் இடம்பெற்ற பாடல்கள் இசையமைப்பாளர் மிஷ்கின் மற்றும் அவரது குழுவினர் மூலம் நேரடியாக பாடப்பட்டதோடு, சில பீஜியம் இசைகளும் வாசித்தது பெரும் பாராட்டப்பட்டதோடு, டிரைலரும் பிரமிக்க வைக்கும் வகையில் இருந்தது.

 

நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் பாலா, “நான் என் படத்தின் பாடல் ஒலிப்பதிவிற்காக இளையராஜாவிடம் போயிருந்தேன். அப்பொழுது இளையராஜா மிஷ்கினைப் பற்றி சொன்ன ஒரு விசயம் எனக்கு ஞாபகம் வருகிறது. அப்பொழுதெல்லாம் எனக்கு மிஷ்கின் யார் என்றே தெரியாது. அவர் எடுத்த படத்தைப் பற்றியும் தெரியாது. ஒரு ஷார்ட்ஸ் அதற்கு சம்பந்தமே இல்லாத ஒரு ஷூ மற்றும் டீ-சர்ட் போட்டுக் கொண்டு, துறுதுறுவென அங்கும் இங்கும் ஓடிக் கொண்டே இருந்தார் ஒருவர். அவர் போனதும், நான் இளையராஜாவிடம் யார் அது…? ஷார்ட்ஸ் ஷூவைப் போட்டுக் கொண்டு அங்கும் இங்கும் அலைவது என்று கேட்டேன். அதற்கு இளையராஜா, அவன் தான் மிஷ்கின், அவனை சாதாரணமாக நினைத்துக் கொள்ளாதே அவன் மிகப்பெரிய Intellectual (இன்டெல்சுவல்) என்று கூறினார். அவர் எந்த கோணத்தில் அப்படி கூறினார் என்று தெரியாது. ஆனால் உண்மையாகவே மிஷ்கின் ஒரு இண்டெலக்ஷுவல் தான்.  அவனைப் பார்க்கும் போது ஒரு டெவில் போலத்தான் இருக்கிறான். நான் என்னுடைய போனில் அவன் நம்பரைக் கூட Wolf (வுல்ஃப்) என்று தான் பதிவு செய்து வைத்துள்ளேன். 

 

வணங்கான் படத்தில் உதவி இயக்குநராக இல்லை, இயக்குநராகவே நடித்துள்ளான். அவன் நடிக்கின்ற காட்சியை அவனையே இயக்கச் சொல்லிவிட்டேன்.  இயக்கி முடித்ததும் அந்தக் காட்சியைப் பார்த்தேன். அது வித்தியாசமான முறையில் சிறப்பாக வந்திருந்தது. நான் ஓகே என்று கூறிவிட்டேன். ஆனால் மிஷ்கின் நீங்கள் மீண்டும் ஒரு முறை ஓகே வா என்று பார்த்து சொல்லுங்கள் என்றான். எனக்கு இவன் ஏன் இப்படி சொல்லுகிறான் நன்றாகத் தானே வந்திருக்கிறது என்று சந்தேகம் தோன்றியது. நான் மீண்டும் பார்த்தேன். அந்தக் காட்சியில் ஒரு 20 நடிகர்கள் இருப்பார்கள். அந்தக் கூட்டத்தில் இவன் தன் கூலிங் க்ளாஸை கழட்டி விட்டு, தலையை குனிந்து கொண்டு கையை கட்டி நிற்க வேண்டும். அப்படி நிற்கும் போதே கூட்டத்தில் ஒரு பெண் கண் சிமிட்டுவது கேமராவைப் பார்ப்பதைப் போல் இருப்பதை கவனித்து விட்டுத்தான் என்னிடம் மீண்டும் பார்க்கச் சொல்லி இருக்கிறான் என்று புரிந்தது. எனக்கு ஒரு வாரம் தூக்கமே வரவில்லை. இவன் எப்படி இந்த சிறிய பிழையைக் கூட கண்டுபிடித்தான், நாம் எப்படி அதை தவறவிட்டோம் என்று யோசித்துக் கொண்டே இருந்தேன். உண்மையாகவே மிஷ்கினுக்கு முன்னால் நான் ஒன்றுமே இல்லை.” என்றார்.

 

இயக்குநர் வெற்றிமாறன் பேசுகையில், “மிஷ்கின் தமிழ் சினிமாவிற்கு கிடைத்த அரிய பொக்கிஷம். அவரோட பெரும்பாலான திரைப்படங்கள், மனிதர்களின் இருண்மை சூழ்ந்த மனதிற்குள் ஆழ்ந்து சென்று அதில் ஒளியை தேடுவதற்கான பயணமாகத் தான் இருக்கும். அதைப் போலத் தான் அவரின் இசையும் இருக்கிறது.  “Journey into the darkness in the search of light” என்பது போலத்தான் எனக்குத் தோன்றுகிறது.  இசையமைப்பாளரும் இசைக் கலைஞர்களும் ஒரு மேடையின் மையத்தில் செண்டர் ஸ்டேஜ் எடுத்துக் கொண்டு நடத்தப்பட்ட முதல் ஆடியோ வெளியீடு இதுவாகத்தான் இருக்கும். அந்த வகையில் இந்த ஆடியோ வெளியீடு சிறப்பு வாய்ந்தது.  மிஷ்கின் பாடல்கள் பாடி அவை எந்த அளவிற்கு வைரல் ஆகியிருக்கிறது என்பதை நாம் அனைவருமே பார்த்து இருக்கிறோம். அது போல் அவருக்கு இசை மீது இருக்கும் ஆர்வமும் எல்லோரும் அறிந்ததே.  வின்சென்ட் செல்வா கூறியது போல் விஜயின் யூத் படத்தின் பின்னணி இசையில் கூட அவர் உதவி புரிந்திருக்கிறார்.  இவ்வளவு காலத்திற்குப் பிறகு இசையை முழுமையாகக் கற்றுக் கொண்டு அதை நம் அனைவர் முன்னால் மேடையில் அரங்கேற்றுவதற்கு ஒரு Courage, Confident and Commitment தேவை. இந்த மூன்றுமே மிஷ்கினுக்கு இருக்கிறது. இதனால் தான் அவர் இதை சாதித்து இருக்கிறார்.  எனவே இந்த இசை பயணத்திலும் அவர் வெற்றியடைய வாழ்த்துகிறேன். அது போல் மிஷ்கினிடம் உதவி இயக்குநராக இருந்து, அவர் ஸ்டைலிலேயே ஒரு படத்தை இயக்கி இருக்கும் இயக்குநர் ஆதித்யா அவர்களுக்கும் என் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.” என்றார்.

 

Devil Audio Launch

 

இயக்குநர் மிஷ்கின் பேசுகையில்,  “எல்லாக் கதைகளும் ஒரே கதைகள் தான், ’டெவில்’ படத்தின் கதையும்  அதே தான். ஒரு அமைதியான வீட்டிற்குள் கருப்பு உள்ளே வரும். வீடு சின்னாபின்னமாகி சிதிலம் அடையும்,. மீண்டும் அது புத்துயிர் பெற்று துளிர்க்கும்.  அன்னா கரீனா தொடங்கி எல்லாவற்றிலும் கதை இதுதான்.  நான் கிறிஸ்துவ குடும்பத்தில் பிறந்தவன் அல்ல, ஆனால் பைபிளை பலமுறை படித்திருக்கிறேன். இப்பொழுதும் இயேசு கிறிஸ்து என் பின்னால் நிற்பதைப் போல் உணர்கிறேன். நானும் சிலுவையில் தொங்குபவன் தான். இப்படத்தில் சில பாடல்களை முயற்சித்து இருக்கிறேன். 

 

நான் அடிக்கடி என் உதவி இயக்குநர்களிடம் சொல்லும் வார்த்தை, இந்த உலகில் மிக முக்கியமானதாக நான் கருதுவது, ஒரு பேனாவையும் பேப்பரையும் தான். அதனால் தான் எழுத்தாளர் ஜெயமோகனை முதலில் பேச அழைத்தேன். இன்று எனக்கு கர்நாடக இசையும், ஹிந்துஸ்தானி இசையும் கற்றுத் தரும்  ராமமூர்த்தி எனக்கு ஒரு குருநாதர் என்றால், எனக்கு இன்னொரு குருநாதரும் இருக்கிறார். அவர் இளையராஜா, அவர் கால்களில் விழுந்து வணங்குகிறேன். ஒரு எட்டு வயதாக இருக்கும் போது என் தந்தையின் தோள்களில் அமர்ந்து சவாரி செல்லும் போது, ‘அன்னகிளியே உன்னத் தேடுதே…” பாடலைக் கேட்டு என் அப்பனின் தலைமுடியைப்  பற்றி இழுத்து நிறுத்தி அப்பாடலைக் கேட்டேன். அன்று முதல் அவர் எனக்கு குருநாதர் தான். பின்னர் ஏன் இசையமைக்க வந்தாய் என்று கேட்கிறீர்களா..? அவருடன் சண்டை போட்டுவிட்டேன்.. எனக்கு கொஞ்சம் கோபம் அதிகமாக வரும். மீண்டும் அவரிடம் போய் நிற்க முடியாது.  மேலும் மிகவும் போர் அடிக்கிறது. என்ன செய்வது என்றே தெரியவில்லை. அதனால் தான் இசையமைக்க முடிவு செய்தேன்.  இந்த இசை பயணத்தின் மூலம்  நான் எந்த இடத்திற்கும் சென்று சேர விரும்பவில்லை. அப்படி நான் சென்று சேரும் இடம் என்று ஒன்று இருக்குமானால் அது  இளையராஜாவின் காலடிகள் தான். இந்த உலகின் மிகப்பெரும் இசை ஆளுமைகள் இளையராஜாவும், ஏ.ஆர்.ரஹ்மானும். அவர்கள் தான் இசையமைப்பாளர்கள். நான் அல்ல. ஒரு தாய் குழந்தையைப் பெற்று வெளியே போடுகிறாள். ஆனால் ஒரு இயக்குநரோ அக்குழந்தையை எடுத்து தனக்குள்ளே விட்டுக் கொள்கிறான். அப்படி என்னை செதுக்கிய இயக்குநர்கள் இருவர். ஒருவர் கதிர், மற்றொருவர் வின்சென்ட் செல்வா. இருவருமே என்னுடைய குருநாதர்கள் தான்.  அவர்களிடம் இருந்து தான் நாங்கள் உருவாகி இருக்கிறோம். அவர்களுக்கு நன்றி.  அது போல் தயாரிப்பாளர் தாணு அவர்களும் என் மீது அதீத அக்கறையும் பாசமும்  கொண்ட ஒரு குருநாதர் தான். அவருக்கும் என் நன்றி. இவர்களுக்கு அடுத்ததாக என் வளர்ச்சியின்  மேல் எப்பொழுதுமே அக்கறை கொண்டு என்னை பாசத்தோடு அழைத்துக் கொள்பவர்கள் இயக்குநர் சசியும்,  தெலுங்கு படங்களை இயக்கி வரும் இயக்குநர் கருணாகரனும். அவர்களுக்கும் நன்றி. 

 

ஒரு படம் வெளியாகி, அது ரசிகர்களால் அமோகமாகப் போற்றப்பட்டு, அதன் 11ம் நாள் அப்படத்தை காண கிருஷ்ணவேனி திரையரங்கிற்கு சென்று இருந்தேன். படம் முடிந்ததும் ரசிகர்கள் எழுந்து நின்று கைதட்டி மரியாதை செலுத்தினார்கள். இது ஐரோப்பிய நாடுகளில் தான் வழக்கம். ஆனால் அதே மரியாதையை இங்கு ஒரு மகத்தான கலைஞனுக்கு மக்கள் கொடுத்தார்கள். என் சமகாலத்து இயக்குநரான பாலா தான் அவன். இந்த நிகழ்விற்கு வந்து சிறப்பித்த இயக்குநர் பாலாவிற்கு நன்றி. அவர் கூறலாம் என் முன் அவர் ஒன்றும் இல்லை என்று. ஆனால் உண்மை அவர் முன் நான் ஒன்றும் இல்லை என்பதே.  சினிமாவில் சிலர் கூறுவார்கள் அதிர்ஷ்டத்தால் ஜெயித்து விட்டான் என்று. இவர்களைப் பொறுத்தவரை சோவிகளை குலுக்கிப் போட்டால் உடனே தாயம் விழுந்துவிடும்,  பூவா தலையா என்று சுண்டினால் உடனே பூ விழுந்து விடும் என்று நினைக்கிறார்கள். வெற்றி அவ்வளவு எளிதானது அல்ல.  தன் வாழ்நாள் முழுக்க, 24 மணி நேரமும் சினிமா, சினிமா, சினிமா என்று ஓடிக் கொண்டிருக்கும் மகத்தான இயக்குநர் அல்ல, மகத்தான கலைஞன் அவன். அவன் தான் என் நண்பன் வெற்றிமாறன். அவனுக்கு கிடைத்த வெற்றிக்கு முழுமுதற் காரணம் அவனது அசராத உழைப்பும் ஆழ்ந்த அறிவும் தான். விழாவை சிறப்பித்தமைக்காக வெற்றிக்கு நன்றிகள்.

 

ஒரு இரண்டு நபர்களை நான் மிகவும் மிஸ் செய்கிறேன். ஒருவன் என் நண்பனும், உலகத்தில் இருக்கும் மிகச்சிறந்த இயக்குநர்களில் ஒருவனும் ஆன ராம். அவனுக்கு அங்கு ‘ஏழு கடல்’ திரைப்படத்தின் பணிகள் இருப்பதால் கிளம்பி வர முடியாமல் கையில் தம்மைப் பிடித்துக் கொண்டு தத்தளித்துக் கொண்டு இருப்பான்.,  இன்னொருவன் தமிழ் சினிமாவின் மற்றொரு மகத்தான கலைஞனான தியாகராஜன் குமாரராஜா. முதலில் வருகிறேன் என்று சொன்னவன், அதிகாலை மூன்று மணிக்கு போன் செய்து ஒன்னு சொல்லணும் என்றான், என்ன நீ இசை வெளியீட்டிற்கு வரவில்லை அதுதானே…? என்றேன்… ஆமாம் வரவில்லை எனென்றால் என்று முடிப்பதற்குள் “உனக்கு சங்கோஜமாக இருக்கிறது” அதுதானே என்று கேட்டேன், ஆமாம். தேங்க்ஸ்டா என்றவன், நான் கண்டிப்பாக வர வேண்டும் என்று  நினைத்தால் சொல். நான் வருகிறேன் என்றான். நான் நீ வராதே என்று கூறிவிட்டேன். அவன் ஒரு பூவைப் போல மென்மையானவன்.  அவன் இந்த நிகழ்வை பார்த்துக் கொண்டு தான் இருப்பான் என்று நம்புகிறேன்.

 

இரத்தம் மற்றும் கொலைகளில் நன்கு உள்ளீடாகச் சென்று அதில் வேறொரு பரிமாணத்தை தேடுபவன் அருண் மாதேஸ்வரன். அவன் ராக்கி கதையை என்னிடம் சொல்ல வந்தபோது,  “நீங்கள் ஒருவனை புல்டோசரால் தரையோடு தரையாக நசுக்கி, அவனை சுரண்டி எடுத்து மீனுக்கு உணவாக போடுகிறீர்கள் என்றான். உனக்கு ப்ரைட் ஆன எதிர்காலம் இருக்கிறது என்று ஆசி வழங்கினேன்.  டக்காஸி கிட்டானோவைப் போல் ஒரு வன்முறையை  அதன் உச்சத்தை அழகியலோடு காட்சிப்படுத்த முடியாது.  அவரிடம் டொரொண்டினோ பற்றி கேட்ட  பொழுது “அவர் ஸ்டெமினா இல்லை” என்று பதிலளித்ததாகச் சொல்வார்கள். ஆனால் நம் அருண் மாதேசிடம் அந்த திறமை இருக்கிறது. அழகியலும் வன்முறையும் ஒன்றாக அவருக்கு கை வருகிறது. அவருக்கு வாழ்த்துக்கள். 

 

ஒரு கலைஞன் என்பவன் தன்னை குறித்தான விமர்சனங்களை கூர்மையாக கவனிப்பவனாக இருக்க வேண்டும். அதை அலசி ஆராய்ந்து அதில் உண்மைகள் இருப்பின் அவற்றை திருத்திக் கொள்ள முன் வரவேண்டும்.  அந்த வகையில் என்னையும் என் படைப்புகளையும் தொடர்ச்சியாக விமர்சித்து வரும் இசை விமர்சகர் ஷாஜிக்கு என் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.  இந்த உலகத்தில் என்ன நடந்து கொண்டிருக்கிறது. மதத்தின் பெயரால் இரு நாடுகள் அடித்துக் கொள்கின்றன. மதம் அரசியல் கட்சி இரண்டும் ஒன்று தான். தினம் தினம் பெண்கள் மற்றும் குழந்தைகள் கொல்லப்படுகிறார்கள்.  இப்படி இடர்பாடுகளுக்குள் சிக்கிக் கொள்ளும் நம்மை ஒரு குழந்தையை பாதுகாப்பது போல் பாதுகாப்பவர்கள்  கவிஞர்கள் தான். அவர்களுக்கு நன்றி. அது போல் இப்படத்திற்கு கொடையாளிகளாக வந்து இப்படத்தை சிறப்பாக தயாரிக்க உதவி இருக்கும் தயாரிப்பாளர் தரப்பிற்கு நன்றி. 

 

நடிகர் விதார்த் திரைப்பட்டறையில் வார்த்து எடுக்கப்பட்ட நடிகன். அவனுக்கு சிறப்பான எதிர்காலம் இருக்கிறது. தமிழில் சிறு சிறு வேடங்களில் நடித்துவிட்டு தற்போது தெலுங்கு படங்களில் அதிகமாக நடித்து வரும் அருணுக்கும் நன்றி. வசந்த் ரவி இன்னும் ஒரு 15 ஆண்டுகளுக்கு கண்டிப்பாக  தமிழ் சினிமாவில் இருப்பான்.

 

இயக்குநர் ஆர்.கே.செல்வமணி சார் நாங்கள் சிறுவயதில் பார்த்து வியந்த ஒரு ஆளுமை. ஆரி 2 கேமராவில் தான் எடுத்திருப்பார். ஆனால் அது ஏதோ Pana Visionல் எடுக்கப்பட்டது போலத்தான் இருக்கும்.  அவர் எங்கள் அனைவருக்கும் இன்ஸ்பிரேஷன். அவரிடம் ஒரு கோரிக்கை. ஜூனியர் ஆர்டிஸ்டுகளில் 25 நபர்களுக்கு ஒரு திருநங்கை என்கின்ற ரீதியில் அவர்களை சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டு அதற்கான ஆவணங்கள் செய்து தரும் படி கேட்டுக் கொள்கிறேன். பெற்றோர்களை பாராட்டுவது,  உடன் பிறந்தவர்களைப் பாராட்டுவது என்பது சங்கோஜமான காரியம்.  என் தம்பி என்னிடம் உதவி இயக்குநராக வேண்டும் என்று வந்த போது மிக கேவலமாக  அவனிடம் நடந்து கொண்டேன். செருப்பை தூக்கி எறிந்தேன், பின்னர் இரண்டு வருடம்  பார்த்திபனிடம் பணியாற்றி விட்டு என்னிடம் வந்தான். ஏற்றுக் கொண்டேன்.

 

ஒரு படம் இயக்குநரின் உழைப்பும் அறிவும் வெளிப்படையாக தெரிவது போல் இருந்தால் மட்டுமே அப்படம் ஓடும்.  இல்லை என்றால் அது எப்பேர்ப்பட்ட திரைப்படமாக இருந்தாலும் ஓடாது. அதை மக்கள் நிராகரித்து விடுவார்கள். படத்தை பாருங்கள். அது உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் தூக்கிப் போடுங்கள். அவன் மீண்டும் அதைவிட நல்ல கதையோடு உங்களைத் தேடி வருவான். படம் நன்றாக இருந்தால் கொண்டாடுங்கள், ஆதரவு தாருங்கள்” என்றார்.

 

படத்தின் இயக்குநர் ஆதித்யா பேசுகையில், “இப்படத்தின் கதையை எழுதி முடித்துவிட்டு ஒரு இக்கட்டான தருணத்தில் நான் இருந்த போது, சேகர் மூலமாக தயாரிப்பாளர் ராதாகிருஷ்ணன் என்னை அணுகி இரண்டு இலட்சம் ரூபாய்கான செக்கை வழங்கினார்.  படப்பிடிப்பிற்கான பணிகளை துவங்கினோம். பிறகு தயாரிப்பு பணிகளில் ஹரி சாரும் தன்னை இணைத்துக் கொண்டார். தயாரிப்பாளர்கள் இப்படம் சிறப்பாக உருவாக எல்லா வகைகளிலும் உதவினார்கள் அவர்களுக்கு நன்றி. நான் முதலில் எழுதிய கதையை இயக்குநர் மிஷ்கினிடம் கொடுத்தேன். அவர் இந்தக் கதை நல்ல கதை தான். ஆனால் முதலில் நீ “அன்னாகரீனா”வைப் படி என்று கொடுத்தார்.  அது கிட்டத்தட்ட 600 பக்கம் இருக்கும்.  பின்னர் தேவி பாரதி எழுதிய சிறுகதையை வாசித்தேன். அது என்னை மிகவும் பாதித்தது. பின்னர் படத்திற்குள் பூர்ணா, விதார்த், அருண் என ஒவ்வொருவராக வந்தார்கள். பூர்ணா இப்படத்தில் மிகச்சிறப்பாக நடித்திருக்கிறார்.  அவருக்கு தேசிய விருது கிடைக்கவேண்டும் என்று விரும்புகிறேன். இப்பட

Related News

9327

’அமரன்’ படத்தை பார்த்து பாராட்டிய முதல்வர் மு.க.ஸ்டாலின்!
Thursday October-31 2024

ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷ்னல் சார்பில் நடிகர் கமல்ஹாசன் தயாரிப்பில், சிவகார்த்திகேயன் நடிப்பில், ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘அமரன்’...

பரபரப்பான சம்பவங்கள் பின்னணியில் உருவான ‘முரா’ பட டிரைலர் வெளியானது!
Thursday October-31 2024

‘கப்பேலா’ படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் முஹம்மது முஸ்தபா, இயக்கத்தில் உருவாகியிருக்கும் ஆக்‌ஷன் திரில்லர் படம் ‘முரா’...

ஃபேண்டஸி காதல் படமாக உருவாகியுள்ள ‘மெஸன்ஜர்’!
Wednesday October-30 2024

பி.வி.கே ஃபிலிம் ஃபேக்டரி (PVK FILM FACTORY) சார்பில் பா...

Recent Gallery